பாபா சொன்னார்: ”நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன். உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவராக நினைக்காதீர். தம்மிலிருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மகா பாக்கிய சாலி.”
இந்த வார்த்தைகளை சாயிபாபா உங்களுக்காக சொன்னார்.
என்ன சாயி ராம்- ஒரு இடத்தில் நாமஸ்மரணம் செய்யுங்கள் எனக்கூறுகிறீர்கள். இன்னொரு இடத்தில் அது கூட தேவையில்லை, பக்தி செய்ய வேண்டாம், சடங்குடன் வழிபட வேண்டாம் என்கிறீர்கள்..எதைச் செய்வது? எதை ஏற்றுக்கொள்வது? குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா! நாம் செய்கிற பக்தி முழுமையானதுதானா? வழிபாட்டை பாபா ஏற்றுக்கொள்கிறாரா? என்று சந்தேகப்படலாம்.
கொஞ்ச நேரம் அவரது நாமத்தை சொல்கிறேன், உடனே மனம் வேறு ஒரு எண்ணத்தை நோக்கிச் சென்றுவிடுவதால் கவனம் சிதைகிறது. ஒருமையான மன உணர்வு இல்லாமல் இறைவனை மன உணர்வு இல்லாமல் இறைவனை அடைய முடியாது என்பது எனக்கே தெரிவதால், நான் திகைக்கிறேன்.
மாதக் கணக்கில் எனக்கு இந்தப்பிரச்சினை உள்ளது என்று நினைப்பவர்களுக்குக் கூட எளிமையான வழியை சத்சரித்திரம் பத்தாவது அத்தியாயம் சொல்லித்தருகிறது.
நீங்கள் ஒரு ஞானியை சரணடைந்துவிடுங்கள். அப்போது மேற்சொன்ன பக்தி, வழிபாடு, நாமஸ்மரணம் ஆகியவை செய்த பலன் கிடைக்கும்.
நீங்கள் ஒரு மகானைச் சென்று சந்திப்பது என்பது, நீங்களாக எடுத்த முடிவு அல்ல. கடவுளின் அருளாகும். கடவுள் உங்களுக்கு நன்மை செய்யத் தீர்மானித்து விட்டால், உடனடியாக ஒரு அடியாரின் நினைவை உண்டாக்கி, அவரைப் போய் பார். உன் பிரச்சினை சரியாகும் அல்லது உனக்குத் தெளிவு கிடைக்கும் என மனதில் எண்ணத்தை தருவார். இப்படி கடவுள் அனுப்பிய பிறகுதான் நாம் ஒருவரைச் சென்று தரிசிக்க முடியும்.
சத்சரித்திரம் குறிப்பிடுகிற ஞானிகள் என்பவர்கள் என்னைப்போன்று பக்தியைப் பற்றி எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் கிடையாது. நாங்கள் யாரைப் பற்றி கூறுகிறோமோ அவர்கள்...
நான் சாயியைப் பற்றிக் கூறுகிறேன்.. என் நண்பர் பகவான் ரமணரைப் பற்றிக் கூறுவார். இன்னொருவர் மந்த்ராலய மகான் பற்றி சொல்வார். வேறு ஒருவர் பகவான் ராமகிருஷ்ணரைச் சுட்டிக்காட்டுவார்.. விவேகானந்தரைக்காட்டுவார். இவர்கள்தான் மகான்கள், ஞானிகள் என சொல்லப்பட தகுதியானவர்கள்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு என்னைப்பார்க்க வேண்டும் என்று நினைத்தால், இவர்தான் பாபா என ஓடி வருகிறீர்கள். காசிலியில் இருந்து சுப்ரமண்யம் சுவாமி கூப்பிட்டால் அவரை தரிசிக்க வேண்டும் என ஓடுகிறீர்கள்..இது தவறு..
என்னிடம் சரணாகதி அடைந்தால், என் சொத்துக்களை எழுதிக்கொடுத்துவிடுவேனா, என்ன? நீங்கள் பட்ட கடனை நான் அடைத்துவிடுவேனா? செய்யமாட்டேன். காசிலி சுவாமி செய்வாரா? யார் ஒருவர் தனது பக்தர் நலனுக்காகத் தியாகம் செய்யாமல் இருக்கிறாரோ அவர் ஞானியல்ல. யார் ஒருவர் தன் பக்தனுக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கிறாரோ அவரே ஞானி. அவர் லட்சத்தில் ஒருவராக - கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
தற்போது உள்ளவர்களில் அவர்களை அடையாளம் காண்பது கடினம். அவர்களைப் பற்றிய விமர்சனங்கள் வரும்போது நாம் இவரையா நம்பினோம் என நினைத்து வருந்துவோம்.இந்த மாதிரி நிகழக்கூடாது என்பதற்காகத்தான் அப்பழுக்கற்ற மகான்களை இறைவன் நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறான்.
நாம் சாயி பக்தர்கள். இறைவன் நமக்கு சாயி என்ற ஞானியை - குருவை நமது வழித்துணையாக அனுப்பியிருக்கிறான்.அவர் என்ன சொல்கிறார்..
உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவராக நினைக்க வேண்டாம்..என்கிறார். இப்படிப்பட்ட நினைப்பு, உறுதி எப்போது வரும். அவரை முழுமையாக நம்பினால்தானே வரும்?
அப்படி முழுமையாக நம்புவதற்குத் தயாராகுங்கள் என்றுதான் சொல்லித் தருகிறேன்…எனக்கு சாயியை பிடிக்காது, ராகவேந்திரரை வழிபடுவேன்.. ரமணரைத் தான் கும்பிடுவேன்...இப்படி எதைச் சொன்னாலும் சரி.. அதை மட்டும் செய்யுங்கள்.ஒருவரை தாழ்த்தி, இன்னொரு மகான் பற்றி உயர்த்திப் பேசிட வேண்டாம்.
எங்கள் வீட்டில் எல்லோரது போட்டோவையும் மாட்டி வைத்திருக்கிறேன்.. அவர்களை கும்பிட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்வேன் என தத்துவம் பேசாதீர்கள்.யாரேனும் ஒருவரை பிடித்துக்கொள்ளுங்கள். ஒரு பெயரை உங்களுடைய மந்திரமாக ஏற்று அதை உச்சரிக்க ஆரம்பியுங்கள்.
ஒருவரை மட்டும் குருவாக ஏற்றுக்கொண்டு முழுமையாக சரண் அடையுங்கள். அப்போது உங்களுக்கு அனைத்தும் சித்தியாகும்.ஒருவரை பிடித்துக்கொண்டு மற்றவரை எப்படி தள்ள முடியும்? அவரும் மகான்தானே என்ற இன்னொரு கேள்வி எழும்பும்.
உனது பார்வைக்கும், சிந்தனைக்கும்தான் அவர்கள் வேறு வேறு பெயர் உள்ள மகான்களாகத்தெரிகிறார்கள். உண்மையில் அவர்கள் தனித்தனியானவர்கள் கிடையாது. ஒரே இறைவன் பல ரூபங்களில் - பல பெயர்களில் உங்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி வந்திருக்கிறான்.
தகுதிக்கு ஏற்ப பலன் தருவதற்காக எளிய வழியை போதித்து, தன்னிடம் சேர்த்துக்கொள்ள, அவன் இப்படி பல ரூபங்களில் வருகிறான் என்பதை உணருங்கள்.
நான் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். காரணம், உங்களைப் போல நானும் ஒரு பக்தன். இறைவன் மகான்கள் வடிவில் அமர்ந்து தன்னை நாடி வருவோருக்கு நன்மை செய்கிறான்.அவன் எதிர்பார்ப்பது உங்களிடம் முழுமையான சரணாகதி.
இதைச் செய்வதற்கு தைரியம் தேவை. இந்த தைரியம், நம்பிக்கை இருந்தால்தான் வரும். நம்பிக்கை என்பது ஒரே நாளில் வராது.. பொறுமையோடு காத்திருந்தால்தான் வரும்..இதை வைத்துக்கொண்டு செயல்படுங்கள், அனைத்திலும் ஜெயித்தவர்கள் ஆவீர்கள்.
ஜெய் சாய் ராம்.;.
No comments:
Post a Comment