Wednesday, May 14, 2014

இரவும் பகலும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

Image





சத்சரித்திரத்தில் பாபா நான் இரவும் பகலும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
பகவான் பக்த ஸ்மரணை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது எப்படி சாத்தியமாகும்?
ஒரு பசு, வயிறு முட்ட புல்லைத் தின்று நீர் அருந்தியது. மடி கணக்க ஆரம்பித்தது.. உடனடியாக தன் கன்றைத் தேடி வீடு திரும்பியது. அப்போதுதான் தெரிகிறது பசு சாப்பிட்டது தனக்காக அல்ல, தன் கன்றுக்காக என்று.
ஒரு அப்பா மிக முயன்று சம்பாதித்தார். தனது சம்பாத்தியத்தையெல்லாம் தன் பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்துவிட்டுப் போனார். அப்பா இவ்வளவு தூரம் உழைத்தது அவருக்காக அல்ல நமக்காக என பிள்ளைகள் உணர்ந்தார்கள்.
பசுவும், ஒரு மனிதனும் தான் உருவாக்காத ஒன்றுக்கு, தானொரு காரணியாக மட்டுமே இருந்துகொண்டு செய்யும் போது, இந்த உடம்பை உருவாக்கி,அதற்குள் உயிரையும் ஆன்மாவையும் திணித்து வைத்திருக்கிற, உண்மையான தந்தையாகிய பகவான் எப்படி உன்னை மறக்க முடியும்?
பாண்டவருக்குப் பங்கு கொடுக்க வேண்டும் என்ற தர்மம் தெரிந்தவன் திருதராஷ்டிரன். அதன்படியே தந்தானா? என்றால், இல்லை. பிறர் வற்புறுத்தலாலும், பிறருக்கு அஞ்சியும் தன் தம்பிப் பிள்ளைகளுக்குக் கொடுத்தாலும் அவன் மனம் முழுவதும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தது.
குந்திக்கு கண்ணனை யார் என்றே தெரியாது. விஷயம் வெளியாகி, அவன் தனது அண்ணன் பிள்ளை என்பதையும், பலசாலி, புத்திசாலி என்பதையும் அறிந்த பிறகு, அவனிடம், ”கண்ணா, எனக்கு எப்போதும் கஷ்டத்தையே கொடு.. அப்போதுதான் நான் உன்னை மறக்காமல் இருப்பேன். நீயும் என்னோடு இருப்பாய்” என்று கேட்டாள்.
இந்த வரத்தை அவள் தன் பிள்ளைகளுக்காகக் கேட்டாள். கண்ணன் தன்னோடு இருந்தால், தன் பிள்ளைகளுக்கு எந்தத் துன்பமும் வராது என்ற கணக்கும், கண்ணன் தன்னை நம்பிய யாருக்கும் துன்பம் தரமாட்டான் என்ற தெளிவும் அவளுக்குள் இருந்தது..
அதனால், கண்ணனை தன் பிள்ளைகளோடு இருக்க, இப்படி வரம் கேட்டாள். பலரது திறமைகளைப் பயன்படுத்தி ராஜாவாக மாறிவிட்ட ஒருவன், தனக்குப் பிறகு வாரிசை நியமிக்க விரும்பினான்.
அவன் பிள்ளைகள் புத்தியில்லாதவர்கள், பலமில்லாதவர்கள். இந்நிலையில் நாட்டைக் காப்பாற்ற வெளியிலிருந்து ஒரு திறமை சாலியைத்தான் நியாயமாகத் தேர்வு செய்யவேண்டும். ஆனால் செய்வானா? செய்யமாட்டான். தன் இடத்திற்குத் தன் பிள்ளைதான் வரவேண்டும். திறமைசாலிகள் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பான்.
நம் காலத்திற்கு வருவோமே.. சில அரசியல்வாதிகள் கட்சியை ஆரம்பிக்கும் போது, என் குடும்பத்தார் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள்.. பொது மக்கள்தான் அப்பதவிக்கு வரவேண்டும் என்பார்கள்.
கட்சி வளர்ந்த பிறகு? எப்படியாவது தன் பிள்ளைகளை அதனுள் புகுத்தி அவர்கள்தான் இந்திய விடுதலைக்குப் போராடிய தலைவர்கள் போலக் காட்டி, தலைமைப்பொறுப்புக்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஆன்மீகத்திலும் இப்படித்தான்.
ஆக, எல்லாவற்றிலும் இப்படித்தான் நடக்கும். இதுதான் மனித இயல்பு. ஏன் இப்படி?
ஏனென்றால், ”அப்பாவாகி விட்டவர்கள் எப்போதும் தன் பிள்ளைகளையே நினைத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்காகவே அனைத்தையும் செய்கிறார்கள்”
மனிதர்கள் என்பவர்கள் இறைவனின் பிம்பங்கள் என்பார்கள். பிம்பங்களே இப்படி நினைக்கும்போது நிஜமான அப்பாவாகிய கடவுள் நினைப்பது எவ்வளவு அதிகம்?
பகவான் தன் படைப்புகளை ஸ்மரணம் செய்கிறான். அதாவது தான் படைத்த உயிர்களை எப்போதும் நினைத்து துதிக் கிறான்,போற்றுகிறான்..அவற்றின் பெயர்களையே திரும்பத் திரும்பச்சொல்கிறான் என எங்கும் கூறப்படவில்லை. மாறாக, பக்த ஸ்மரணம் செய்கிறான் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது சும்மா இருப்பவனின் பெயரை அவன் ஸ்மரணம் செய்வதில்லை.
யார் ஒருவன் தன்னை மறக்காமல், தன் மீது அன்பு செலுத்தி, பக்தி வளர்க்கிறானோ, அவன் நினைவாகவே இருப்பதோடு, அவனது பெயரை மந்திரமாக உச்சரித்துக் கொண்டிருக்கிறான்.
தாணே மாவட்டத்தில் டகாணூ என்ற இடத்தைச்சேர்ந்த பி.வி. தேவ் என்பவர், பாபாவை தனது இல்லத்துக்கு வருமாறு அன்புடன் அழைத்தார். அப்போது பாபா என்ன சொன்னார் பாருங்கள்:
”என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ, அவனிடம் ஓடிச் சென்று நானே வெளிப்படையாகக் கலந்து கொள்கிறேன்.”
பாபா, கருணாம்ருதச் சாகரம். ஒருவனை எப்போதும் சாகாமல் காக்கிற அம்ருதமாகிய கருணைக் கடல். தன் பிள்ளை தன்னை எந்த நிலையில் வைத்துக் கும்பிடுகிறான்.. எப்படி துதிக்கிறான்.. எவ்வளவு காலம் விரதம் இருந்தான்? என்னை விட்டு எவ்வளவு தூரம் பிரிந்துபோனான்? என்றெல்லாம் பார்ப்பதில்லை.
தாய் ஆமையைப் போல, தன் பக்தன் மீது கண்ணை வைத்து, எப்போதும் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான்.
தன்னைச் சுற்றி திரைபோட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தை கஷ்டம், கவலை என்று கதறும்போதெல்லாம், பயப்படாதே..அதெல்லாம் ஒன்றுமில்லை. நானிருக்கிறேன் என்று நாம் சொல்வதில்லையா?
அப்படித்தான், நமது கடவுளும் நாம் சோதனை, வேதனை, பிரச்சினை எனத் துடிக்கும்போதெல் லாம், இதெல்லாம் இயல்பாக நடக்கிற விளையாட்டுக்கள்தான்.. பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று கூறுகிறான்.
நமது புண்ணிய காலம் மேலெழுந்து வரும் போதும், நாம் கஷ்டத்தால் அமுக்கப்படும்போதும் அவன் உடனடியாகக் கைதூக்கி விடுகிறான்.
பாபாவிடமிருந்து நன்மை பெறுபவன் எப்படி இருக்க வேண்டும் என்றால், தீட்சித்தைப் போல இருக்கவேண்டும்.
அவர் தூய பிராமணர். உயிர்க்கொலை செய்யாதவர், இரக்கமே வடிவானவர். அப்படிப்பட்டவரிடம், பாபா கத்தியைக் கொடுத்து, இந்த ஆட்டை வெட்டு என்று சொன்னபோது, தயங்காமல் வெட்ட முனைந்தார்.
”இதெல்லாம் சரியா தப்பா எனத் தெரியாது. தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டம். எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தை தியானிக்கிறோம். காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை. குருவின் கட்டளைகளை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியுடனும் பணிவுடனும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொன்னார்.



No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...