எங்களுக்கு இரண்டு குழந்தைகள். முதலில் பெண், இரண்டாவது பையன். மகளுக்கு வரன் பார்த்து வந்தோம். நல்ல வரனாக அமைவதற்கு பாபாவிடம் பிரார்த்தனை செய்து வந்தோம். எங்கள் வேண்டுதல்படியே, மாப்பிள்ளை குடும்பத்தார் தீவிர சாயி பக்தர்களாக அமைந்தார்கள்.
திருமணம் நல்லமுறையில் நடக்க வேண்டுமே என பிரார்த்தித்தோம். அத்துடன், எனது வேலையிலும் சரிவர சம்பளம் வராத நிலை. என்னால் எந்த வித கடனுக்கும் ஏற்பாடு செய்ய முடியாத நிலை.
பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சி பிரார்த்தனை செய்தோம். அவர் செய்த லீலைகளை நினைத்து இன்றளவும் புல்லரிக்கிறது.
நாங்கள் நினைத்துப் பார்க்காத இடத்திலிருந்து எல்லாம் எங்களுக்கு பண உதவியாகவும், பொருள் உதவியாகவும் கிடைத்து நல்ல படியாக மகளின் திருமணம் நிறைவேற உதவியது.
அது மட்டுமல்ல, மாப்பிள்ளை வீட்டார் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நாங்கள் என்ன செய்தோமோ அதையே பெரிதாக நினைத்து மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.
மகளுக்கு வரன் பார்க்க துவங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் பாபா என் மகளுக்கு நல்ல மாமனார் - மாமியாரைத் தாருங்கள் என வேண்டுவேன்.
அவர் இப்போது அவளுக்கு எங்களை விட நல்ல தாய் - தந்தையரையே தந்திருக்கிறார்.
இதற்கு நன்றி சொல்லவும், என் சம்பந்தி வீட்டார் சகல சவுபாக்கியங்களையும் பாபா அருளால் பெற்று வாழவும், உறவுகள் நல்லமுறையில் தொடர அவர் உறுதுணையாக இருக்கவும் பிரார்த்தனை செய்ய ஜனவரியில் சீரடி சென்றுவந்தோம்.
ராஜேஸ்வரி சீனிவாசன்,
மீனம்பாக்கம்., சென்னை
No comments:
Post a Comment