Sunday, May 25, 2014

உனது பக்தியே சிறந்த பக்தி!

srisai



காகா சாகேப் தீட்சிதர் தினமும் தவறாது பாகவதம் வாசித்து வந்தார். கூடியிருந்தவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



சாமாவும் காகா மகாஜனி என்ற சாயி பக்தரும் கூட இதை ஆர்வத்துடன் கேட்டனர்.



ஏகநாத பாகவதத்தின் இரண்டாவது அத்தியாயம் வாசிக்கப்பட்டது. அதில் ரிஷப குலத்தில் தோன்றியவர்களான கவி, மூரி, அந்தரிக்‌ஷர், ப்ரபுத்தர், பிப்பலாயனர், ஆவில்ஹோத்ரர், த்ரமீளர், சமஸர், கரபாஜனர் என்ற நவ யோகிகள் பற்றிய பகுதி அது.



தெய்வ ரூபிகளான அவர்கள் எல்லையற்ற பக்தியுள்ளவர்கள். இவர்கள் ஜனக மகரிஷியின் அரசவைக்கு ஒருமுறை சென்று, இறை அடியார்கள் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கம் பற்றி போதனை செய்தார்கள்.



கடவுளை வணங்காதவர்கள் சர்வ நாசம் அடைவார்கள் என்றும், எந்த யுகத்திற்கு எப்படி கடவுளை வணங்க வேண்டும் என்றும் அவர்கள் ஜனகருக்கு சொல்லிக் கொடுக்க, இதை ஆச்சரியத்தோடு ஜனகர் கேட்டுக்கொண்டிருந்தார். நவயோகிகளில் கடைசியானவரான கரபாஜனர், கலியுகத்தில் ஹரி பாதத்தையும், குரு பாதத்தையும் மனத்தில் இருத்துவது ஒன்றே பிறவி பயத்தை அழிக்கும் என்று போதித்தார்.



இந்தப் பகுதியை படித்து முடித்த தீட்சிதர், சாமாவை நோக்கி, ”அத்தகைய பக்தி எவ்வளவு கடினமானது. மூடர்களாகிய நாம் எவ்வாறு அந்த சக்தியைப் பெறுவோம்!  ஓ, எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் இது நிறைவேறப்போவது இல்லை. புகழ் பெற்றவர்களாகிய நவநாதர்கள் எங்கே? பிறவிப் பாவிகளாகிய நாம் எங்கே? அத்தகைய பக்தி சுலபமா என்ன?



சத்தியமும் ஞானமும் சேர்ந்து உருவெடுத்தார் போன்ற நவநாதர்கள் பாக்கியவான்கள். அத்தகைய பக்தியை நாம் என்றாவது பெறுவோமா? அதை அடைவதற்கு உண்டான உபாயந்தான் என்னவோ? எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. மனோதிடத்தையும் இழந்துவிட்டேன். ஜன்மம் எடுத்து என்ன பிரயோஜனம்?”  என்று கேட்டார்.



பாபா மீது மிகவும் அன்புள்ள பக்தரான தீட்சிதர் இவ்வாறு சொல்வது சாமாவுக்குப் பிடிக்கவில்லை. சாயியைப் போன்ற ஓர் ஆபரணத்தை அணியும் பாக்கியம் பெற்றவர் எக்காரணத்துக்காக முகம் கவிழ வேண்டும்?



அவர் உயிரோடு இருப்பது வீண். சாயி பாதங்களில் அமோகமாக சிரத்தை இருக்கும் போது மனத்தில் ஏன் இந்தக் கலக்கம்?



நவநாதர்களுடைய பக்தி பிரபலமாக இருக்கலாம். நம்முடைய பக்தியும் பிரேமையை அடித்தளமாகக் கொண்டது அன்றோ? இறைவன் நாமத்தையும் குருவின் நாமத்தையும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பது பாபா உங்களுக்கு இட்ட கட்டளையல்லவா? நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்? என்றார்.



இதைக் கேட்டு தீட்சிதர் ஆறுதல் அடைந்தார்.



நீங்கள் மற்றவர்களுடைய பக்தியைப் பார்த்தோ, நினைத்தோ கலக்கம் அடையாதீர்கள். எங்கே பக்தியுடன் பாசம் கலந்திருக்கிறதோ, அங்கே பகவான் இருக்கிறான். எங்கே சடங்காச்சாரங்களுடன் அன்பற்றத் தன்மை இருக்கிறதோ, அங்கு இறைவன் இருக்கமாட்டான்.



எனவே, இப்போதுள்ள உங்கள் பக்தியே உயர்வான பக்தி. இதுவே போதுமானது. நீங்கள் முடிந்தவரை எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக்கொண்டிருங்கள். சாயி மீது அன்பு செலுத்துங்கள். சாயியைப் போலவே மற்றவர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். உங்கள் பாக்கியத்தை சொல்லித் தெரியவேண்டியதில்லை என்ற அளவில் நீங்கள் உயர்வீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...