Monday, November 18, 2013

காகா மஹாஜனியின் எஜமானர் - 1

               டக்கர் தரம்ஸீ ஜேடாபாயீ என்னும் பெயர்கொண்ட, பம்பாய் நகரத்தில் வாழ்ந்த, சட்ட சம்பந்தமான ஆலோசகர் ஒருவருக்குப் பூர்வபுண்ணிய பலத்தால் ஸாயீதரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.
அவர் காகா மஹாஜனியின் யஜமானர். ஒருவருக்கொருவர் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆகவே அவர் நேரிடையாக ஷீரடிக்குச் சென்று பாபாவைப் பிரத்யக்ஷமாகப் பேட்டி காணவேண்டுமென்று நினைத்தார். 

                 
காகா மஹாஜனி, டக்கர்ஜீயின் நிறுவனத்தில் நிர்வாக குமாஸ்தாவாக உத்தியோகம் செய்துவந்தார். தம்முடைய விடுப்பு அனைத்தையும் அடிக்கடி ஷீரடி சென்று வருவதற்காகவே உபயோகித்தார். 

                
ஷீரடிக்குப் போனால் நேரத்தோடு திரும்பி வருவாரா என்ன? எட்டு நாள்கள் அங்கேயே தங்கிவிட்டுத்தான் வருவார். கேட்டால், பாபா அனுமதியளிக்கவில்லை என்று காரணம் சொல்லுவார்.  ''இதுவும் ஒரு வேலை செய்யும் ரீதியா? என்று நினைத்து யஜமானர் எரிச்சலடைவது வழக்கம்.

        ''இதென்ன ஞானிகளின் நடைமுறை? இந்த அனாவசியமான தடபுடலெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை!  இந்த ஸாயீ விவகாரத்தை ஒரு மாதிரியாக முடிவுகட்டவேண்டுமென்று தீர்மானித்து,  ஒரு பண்டிகை விடுமுறையின் போது ஷீரடிக்குக் கிளம்பினார்.

       'தான் என்ற அஹங்காரத்தாலும் பணத்திமிராலும் நிரம்பிய அந்த சேட், ''ஞானிகளும் நம்மைப்போன்ற மனிதர்கள்தாமே; அவர்களை நாம் எதற்காக வணங்கவேண்டும்? என நினைத்தார்.

          ஆயினும் அவர் நினைத்தார், ''குருட்டு நம்பிக்கை நன்றன்று; ஆகவே நானே உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்கிறேன். இவ்வாறு மனத்துள் தீர்மானம் செய்துகொண்டு அவர் ஷீரடிக்குப் போக ஆயத்தங்கள் செய்தார்.
 
ஏற்கெனவே விவரிக்கப்பட்ட சிநேகிதர் செய்ததைப் போன்று இவரும் காகா மஹாஜனியுடன் ஷீரடிக்குக் கிளம்பினார். அவரிடம் சொன்னார்,
 ''
நீர் ஷீரடிக்குப் போனால் அங்கேயே முகாம் போட்டுவிடுகிறீர்; ஆனால், இம்முறை அது சரிப்படாது. நீர் என்னுடன் திரும்பிவிட வேண்டும். இது நிச்சயம் என்று அறிவீராக.


         காகா பதில் கூறினார், ''இதோ பாரும், அது என்னுடைய கைகளில் இல்லை. இதைக் கேட்ட தரம்ஸீ, துணைக்கு இன்னொருவரையும் அழைத்துக்கொண்டார்.

         ''ஒரு வேளை காகா திரும்பிவர முடியாமற்போகலாம். துணையின்றிப் பயணம் செய்யக்கூடாது. சேட் இவ்வாறு நினைத்து இன்னொருவரையும் அழைத்துக் கொண்டார். மூன்று பேராக ஷீரடிக்குக் கிளம்பினர்.  இம்மாதிரியாக எத்தனையோ விதமான மனிதர்கள் உண்டு. அவர்களையெல்லாம் தம்மிடம் இழுத்துவந்து அவர்களுடைய சந்தேகங்களையும் தவறான நம்பிக்கைகளையும் பாபா நிவிர்த்தி செய்தார்.

       தேவர்கள், இருபிறப்பாளர்கள் (அந்தணர்), குரு, இவர்களைக் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது. ஆகவே, காகா, போகும் வழியில் இரண்டு சேர் திராட்சை (சுமார் 560 கிராம்) வாங்கிக்கொண்டார்.
திராட்சையில் விதையற்ற ஜாதியும் உண்டு. ஆனால், விதையுள்ள ஜாதிதான் அப்பொழுது கிடைத்தது. காகா அதையே வாங்கிக்கொண்டார்.

        வழியெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டே மூவர் கோஷ்டி ஷீரடி போய்ச் சேர்ந்தது. மூவரும் ஒன்றாக பாபா தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர்.  பாபாஸாஹேப் தர்கட் என்ற பக்தரும் அங்கு உட்கார்ந்திருந்தார். விஷய ஆர்வம் கொண்ட சேட் தரம்ஸீ அவரை என்ன விசாரித்தார் என்பதைக் கேளுங்கள். 

இதன் தொடர்ச்சி நாளை.....

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...