மஹராஜ் தன்னிஷ்டமாக
எவ்விடத்திற்கு நடந்து வந்தாரோ, அது மஹா புண்ணியம் செய்த
புனிதமான இடம். பூர்வ ஜன்மங்களில் ஏகமாகப் புண்ணியம் சேர்த்திராவிட்டால்
இப்பொக்கிஷம் கிடைப்பதரிது.
சுத்தமானதும் பலமானதுமான
கொட்டை, ரஸமுள்ள ருசியான பழங்களைக் கொடுக்கும் என்பது
பழமொழி; இது சிர்டீ வாழ் மக்களால் பரீக்ஷை செய்து
பார்க்கப்பட்டுவிட்டது.
பாபா ஹிந்துவுமல்லர்; முஸ்லீமுமல்லர்; வர்ணத்திற்கும்
ஆசிரமத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர். ஆனால், அவரால்
உலகியல் துன்பங்களை நிர்மூலமாக அழிக்க முடியும்.
எல்லையற்ற, முடிவேயில்லாத, பரந்த வானத்தைப் போன்ற
பாபாவினுடைய வாழ்க்கைச் சரித்திரம் எவருக்கும் புரியாதது. அவரைத் தவிர வேறு யாரால்
அதைப் புரிந்துகொள்ள முடியும்?
மனத்தினுடைய வேலை சிந்தனை
செய்வது, ஆலோசிப்பது. அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும்
சும்மா இராது. புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப்பற்றியே
சிந்திக்கும்; குருவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால்
குருவைப்பற்றியே சிந்திக்கும்.
எல்லா இந்திரியங்களையும்
செவிப்புலனில் ஒன்றுசேர்த்து குருவினுடைய மஹிமையை நீங்கள் கேட்டபோது, அதுவே குருவைப்பற்றிய ஸஹஜமான சிந்தனையாகவும் ஸஹஜமான கீர்த்தனையாகவும்
ஸஹஜமான பஜனையாகவும் அமைந்துவிட்டது.
பஞ்சாக்னி தவம், யாகம்,
மந்திரம், தந்திரம், அஷ்டாங்க யோகம் -- இந்த வழிபாட்டு முறைகள் அனைத்தும் உயர்குலத்து
ஆண்களுக்கே உரியது. மற்றவர்களுக்கு இவற்றால் என்ன பிரயோஜனம்?
ஞானிகளின் காதைகள் அவ்வாறு
அல்ல; அவை சகல ஜனங்களையும் நல்வழிப்படுத்தும். உலக
வாழ்வின் பயங்களையும் இன்னல்களையும் அழித்துவிடும். உயர்ந்த ஆன்மீக வாழ்க்கைக்கு
வழிகாட்டும்.
அக்காதைகளைக் கேட்பதாலும் சிந்திப்பதாலும் மனமொன்றிப் படிப்பதாலும்
பரிசீலனை செய்வதாலும் தியானிப்பதாலும் உயர்குலத்து ஆண்கள் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரும்
மகளிரும்கூடத் தூய்மையடைவர்.
ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment