Wednesday, November 6, 2013

சத்சங்கம்



      குரு சரித்திரத்தின் ஸத் ஸங்கத்தை நாடுங்கள்; உலகியல் சங்கி­களிலி­ருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். இதில்தான் உங்களுடைய ஆன்மீக முன்னேற்றமே இருக்கிறது. இதைப்பற்றி யாதொருவிதமான சந்தேகமும் வேண்டா. 
      உங்களுடைய சாதுரியமான வாதங்களையெல்லாம் விட்டுவிடுங்கள். அதற்குப் பதிலாக, ஸாயீ ஸாயீ என்று ஸ்மரணம் (நினைத்தல்) செய்யுங்கள்; அக்கரைக்கு எவ்வளவு சுலபமாக நீந்திச் செல்கிறீர்கள் என்று பாருங்கள்õ இதைப்பற்றி எந்த சந்தேகமும் வேண்டா.
      இவை என்னுடைய வார்த்தைகளல்ல; ஸாயீயினுடைய திருவாய்மொழியாகும். இவை வெறும் வார்த்தைகளல்ல; எடை போடவும் முயற்சி செய்ய வேண்டா. 
      துர்ச்சங்கம் என்றும் கெடுதலையே விளைவிக்கும்; நீங்கள் அறியாமலேயே உங்களைத் தடம் புரளச் செய்யும்; மஹா துக்கங்களின் இருப்பிடம்; எல்லா சுகங்களையும் விரட்டிவிடும். 
      ஸத்குரு ஸாயீநாதரைத் தவிர வேறு யாரால் அம்மாதிரியான துர்ச்சங்கத்தினால் நமக்கு விளையக்கூடிய கெடுதல்களை விலக்க முடியும்?   கருணையால் விளைந்து, ஆதங்கத்தினால் வெளிவந்த, ஸாயீயின் திருவாய்மொழிகளை சிரத்தையுடன் பத்திரப்படுத்துங்கள். பக்தர்களே! இது துர்ச்சங்கத்தால் விளையக்கூடிய இன்னல்கள் வராது தடுக்கும்.
     சிருஷ்டி செய்யப்பட்ட இவ்வுலகத்தைக் கண்களால் பார்த்தவுடனேயே, மனம் சௌந்தரியத்தினால் ஈர்க்கப்பட்டு ரமித்துப்போகிறது. அதே கண்களை அகமுகமாகச் செலுத்தினாலோ, மனம் ஞானிகளின் ஸத்ஸங்கத்தில் ஈடுபடுகிறது. 
    
  நம்முடைய அஹங்காரத்தை நிர்மூலமாக அழிக்குமளவுக்கு ஸத்ஸங்கம் மஹிமையுடையது. வேறு எந்த மார்க்கத்திற்கும் ஸத்ஸங்கத்தைப்போல சாதனை புரியும் திறமை கிடையாது. 
      ஞானிகளின் ஸங்கத்தையே எப்பொழுதும் நாடுங்கள்; மற்ற ஸங்கங்கள் அனைத்துமே குறையுடையவை. ஸத்ஸங்கமே மருவில்லாதது; எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூய்மையானது. 
      ஸத்ஸங்கம் உங்களை உட­ன்மேல் வைத்த ஆசையி­ருந்து விடுவிக்கும். ஸம்ஸார பந்தங்களி­ருந்து விடுதலை அளிக்கக்கூடிய அளவுக்கு பலமுடைய ஸத்ஸங்கத்தில் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும். 
      ஸத்ஸங்கம் கிடைக்கும் பாக்கியம் இருந்தால், உபதேசங்கள் ஸஹஜமாக வந்து சேரும். அந்தக் கணமே துர்ச்சங்கம் மறைந்தோடிவிடும். மனம் ஸத்ஸங்கத்தில் மூழ்கிவிடும். 
      உலகவிஷயங்களில் விரக்தி ஏற்படுவதே ஆன்மீக வாழ்வில் நுழைவதற்கு உபாயமாகும். ஸத்ஸங்க நாட்டமென்னும் பலமான உந்துதல் இன்றி, 'நான் யார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியாது. 
      சுகத்திற்குப் பிறகு துக்கம் விளைகிறது; துக்கத்திற்குப் பிறகுதான் சுகம் விளைகிறது. ஆனால், மானிடன் எப்பொழுதும் சுகத்திற்கு இன்முகம் காட்டுகிறான்; துக்கத்திற்குக் கடுமுகம் காட்டுகிறான். 
      வரவேற்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும். ஞானிகளுடைய சங்கம்தான் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டுசெல்ல முடியும். 
      ஸத்ஸங்கம் தேஹாபிமானத்தை நாசம் செய்கிறது. ஸத்ஸங்கம் ஜனன மரணச் சுழலை உடைக்கும். ஸத்ஸங்கம் உலக பந்தங்களைப் பட்டென்று அறுத்து, இறைவனை அடைய வழிவகுக்கிறது. 
      உத்தமமான கதியை அடைவதற்கு ஸத்ஸங்கமே புனிதத்தை அளிக்கக்கூடியது. வேறெதிலும் கவனம் செலுத்தாது ஞானிகளை சரணடைந்துவிட்டால், நிஜமான விச்ராந்தி கிடைக்கிறது. 
      இறைவனை வணங்காதவர்களையும் நாமத்தைச் சொல்லாதவர்களையும் நம்பிக்கையும், பக்தியும் இல்லாதவர்களையும் பஜனை பாடாதவர்களையும் இறைநாட்டமுடையவர்களாகச் செய்வதற்கே ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்கிறார்கள். 
      கங்கை, பாகீரதி, கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, காவிரி, நர்மதை ஆகிய புண்ணிய நதிகள் ஸாதுக்களுடைய பாதங்களைத் தொடவேண்டுமென்று ஆவல் கொண்டு, அவர்கள் ஸ்நானம் செய்வதற்கு வருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. 
      இப்புண்ணிய நதிகள் உலகத்து மக்களுடைய பாவங்களையெல்லாம் அடித்துச் சென்றாலும், தங்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்துகொள்ள ஸாதுக்களின் பாதங்களையே நாடுகின்றன. 
      பல ஜன்மங்களில் செய்த பாக்கியங்களாலேயே நாம் ஸாயீயின் புனிதமான பொன்னடிகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஜனனமரணச் சுழல் நிறுத்தப்பட்டு விட்டது. பிறவிப்பயம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. 
      நன்மக்களான வாசகர்களேõ சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு ஏற்கெனவே கேட்ட கதைகளை அசை போடுவோம். மேற்கொண்டு பிரவசனம் பிறகு தொடரும். 
      ஹேமாட் ஸாயீயிடம் சரணடைகின்றேன். நான் அவருடைய பாதரக்ஷைகளே. மேலும் மேலும் அவருடைய காதைகளைச் சொல்லி­க்கொண்டே போவேன்; அதுவே, எனக்கு மேலும் மேலும் சுகத்தை அளிக்கும்.
      ஆஹா! என்ன கவர்ச்சியான உருவம் ஸாயீ மஹராஜுக்கு! மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு, பக்தர்களுடைய நல்வாழ்வையே மனத்திற்கொண்டு அவர்களுக்கு உதீ பிரஸாதம் விநியோகிப்பார். 
      எவர் 'இந்த உலகமே ஒரு மாயை என்றறிந்தவரோ, எவர் பிரம்மானந்தத்தில் இடைவிடாது லயிப்பவரோ, எவர் முழுமையாக விகசித்த (மலர்ந்த) மலர் போன்ற மனம் படைத்தவரோ, அவர் முன்னே நான் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 
      எவர் ஞானமென்னும் மையைக் கண்களில் தடவி பிரம்ம ஞானத்தை 

வழங்குகிறாரோ, அந்த மஹிமை வாய்ந்த ஸாயீயை நான் ஸாஷ்டாங்கமாக 

நமஸ்காரம் செய்கிறேன்.

ஸ்ரீ சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...