Thursday, November 14, 2013

உருவாய் அருவாய்

     தியானம் செய்வதற்கு ஓர் உருவம் கிடைக்காதபோது, பக்திபாவம் வெளிப்பட இயலாது. அவ்விதமாக பக்தி வெளிப்படாதபோது, அரும்பாக இருக்கும் மனமலர் விகசிப்பதில்லை. மலராத இவ்வரும்பால் மணம் கொடுக்கமுடியாது; தேனும் அளிக்கமுடியாது. தேன்வண்டும் இவ்வரும்பை ஒருபோதும் வட்டமிடுவதில்லை. 
     குணங்களுடன்கூடிய இறைவனுக்கு உருவம் உண்டு. நிர்குணமான இறைவனுக்கு உருவமேதும் இல்லை. உருவமுடைய இறைவனும் உருவமில்லாத இறைவனும் ஒன்றே; இங்கு வேறுபாடு ஏதும் இல்லை. நெய் கெட்டியாக இருந்தாலும், உருகிய நிலையில் ஓடும் திரவமாக இருந்தாலும், நெய், நெய்தான். உருவமற்ற இறையும் உருவமுள்ள இறையும் ஒன்றுடன் ஒன்று இசைபட்டு இப் பிரபஞ்சத்தையே வியாபிக்கிறது. கண்கள் திருப்தியடையும்வரை தரிசனம் செய்யவும், எங்கிருந்து ஞானம் மடைதிறந்தாற்போலவும் நேரிடையாகவும் பாய்கிறதோ அப்பொற்பாதங்களின்மேல் சிரத்தைத் தாழ்த்தவுமே மனம் விரும்புகிறது. 
      பக்தர்கள் அன்புடன் ஸம்பாஷணை செய்வதற்காகவும் சந்தனம் மற்றும் அக்ஷதை போன்ற பொருள்களை உபயோகித்துப் பூஜை செய்வதற்காகவும் இறைவன் உருவம் எடுக்கவேண்டியிருக்கிறது. உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. 
      நிர்க்குணமான, நிராகாரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ.
ஒருவரை சிர்டீயி­ருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை சிர்டீயிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார்.
 
      பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்துகொண் டிருக்கும்போதும் உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள். இச்செயல்பாடுகளின் நோக்கம் இதுவே. 
      நசித்துப்போகும் தன்மையையுடைய இவ்வுடல் என்றோ ஒருநாள் மரணத்தை சந்திக்கப்போகிறது. ஆகவே, பக்தர்கள் மரணத்தை நினைத்து சோகமடையாமல், ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனிடமே மனத்தை நிலைக்கச் செய்யவேண்டும். 
      பலவிதமான செழிப்புகளுடன் நம்முன் தோன்றும் காட்சிகள், தோன்றாநிலையில் இருக்கும் இறைவனின் தோன்றியதும் மாயையுமான வெளிப்பாடுகளே. தோன்றாநிலையி­ருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியவை அனைத்தும் அவனிடமே திரும்பிச் சென்றுவிடும். பிரம்மாவிலி­ருந்து புல்பூண்டுவரை, சிருஷ்டி அனைத்தையும் நாம் வ்யஷ்டியாக நோக்கினும், ஸமஷ்டியாக நோக்கினும், தோன்றாநிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியதால், மறுபடியும் அவை தோன்றாநிலையையே சென்றடைய வேண்டும். 
      ஆகவே, யாரும் எப்பொழுதும் மரணமடைவதில்லை. பாபா விஷயத்தில் மரணம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஸ்ரீ ஸாயி நித்தியசுத்தர்; புத்தர்; நிரஞ்ஜனர் (மாசில்லாதவர்); மரணமற்றவர். 

      சிலர் அவரை இறைவனுடைய அடியார் என்று சொல்லலாம்; சிலர் அவரை மஹாபாகவதர் என்று சொல்லலாம்; ஆனால், நமக்கு அவர் ஸாக்ஷாத் கடவுளின் அவதாரமே. பெருக்கெடுத்தோடும் கங்கை நதி ஸமுத்திரத்தைச் சேருமுன், சூரியனுடைய உஷ்ணத்தால் தவிப்பவர்களுக்கு வழிநெடுக இதமான குளிர்ச்சியை அளிக்கிறாள்; கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு ஜீவனை அளிக்கிறாள்; எல்லாருடைய தாகத்தையும் தணிக்கிறாள்.    அவதார புருஷர்களின் நிலையும் இதுவே. அவர்கள் தோன்றுகின்றனர்; மறைகின்றனர்; அவர்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளால் உலகத்தைத் தூய்மையாக்குகின்றனர். 


ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...