Tuesday, November 12, 2013

ஸ்ரீராமஜன்மோற்சவம்










ஸ்ரீராமஜன்ம உற்சவம் முதன்முத­ல், பிரபலமான கீர்த்தங்கர் கிருஷ்ண ஜாகேச்வர் பீஷ்மா என்பவரால் கருத்துருவாக்கப்பட்டது. எல்லாருடைய நலனுக்காகவும் ஸ்ரீராமஜன்ம உற்சவம் கொண்டாடப்படவேண்டும் என்று அவர் நினைத்தார். 

    அதுவரை உருஸ் திருவிழா மட்டுமே ஸ்ரீராமஜன்ம தினத்தன்று வருடாவருடம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. ஸ்ரீராமஜன்மோற்சவம் அவ்வருடம் (1911) கொண்டாடுவது என்னும் அற்புதமான யோசனை இதி­ருந்தே எழுந்தது. 

    பீஷ்மா ஒருநாள் வாடாவில் தெளிந்த மனத்துடன் ஓய்வெடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். காகா மஹாஜனி5 அந்நேரத்தில் பூஜைக்கு வேண்டிய சாமான்களுடன் மசூதிக்குப் போகத் தயார் செய்துகொண் டிருந்தார். 

    ஸாயீ தரிசனம் செய்வதற்காகவும் உருஸ் பண்டிகையின் கோலாகலத்தை அனுபவிப்பதற்காகவும் காகா சிர்டீக்கு ஒருநாள் முன்னதாகவே வந்துவிடுவார். 

    இதை ஒரு உசிதமான நேரமாகக் கருதி, பீஷ்மா காகாவைக் கேட்டார், ''என்னுடைய மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியிருக்கிறது. நீர் அதை நடத்திக்காட்ட உதவி செய்வீரா?

     ''உருஸ் பண்டிகை இங்கு வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் ஸ்ரீராமஜன்ம தினமாகவும் இருப்பதால், மேற்கொண்டு ஏதும் பிரயாசைப்படாமலேயே ஸ்ரீராமஜன்மோற்சவத்தையும் கொண்டாடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது

     காகா இந்த யோசனையை விரும்பினார். ''பாபாவினுடைய அனுமதியைப் பெறவேண்டும். எல்லாமே அவருடைய ஆக்ஞையில் தான் இருக்கிறது. ஆக்ஞை கிடைத்துவிட்டால் அதன் பிறகு தடங்கலோ தாமதமோ ஏதும் இருக்காது.

      ஆனால், ஸ்ரீராமஜன்ம உற்சவத்தைக் கொண்டாடவேண்டுமென்றால், கதாகாலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்யப்படவேண்டுமே? இந்தக் குக்கிராமத்தில் காலட்சேபம் செய்யும் திறமையுள்ள ஹரிதாஸர் எப்படிக் கிடைப்பார்? இது ஒரு பிரச்சினையாக இருந்தது. 

பீஷ்மா இவ்வாறு சொன்னார், ''நான் கதாகாலட்சேபம் செய்கிறேன்; நீங்கள் ஆர்மோனியம் வாசியுங்கள்; ராதாகிருஷ்ணபாயீ இந்நிகழ்ச்சிக்குப் பிரஸாதமாக சுக்குவெல்ல உருண்டை செய்துவிடுவார்.

     ''வாருங்கள், பாபாவிடம் போகலாம்; சுபகரமான காரியங்களில் தாமதம் எப்பொழுதுமே பிரச்சினைகளை விளைவிக்கும்; சுபமான காரியத்தில் சீக்கிரமாகச் செயல்படுவது சுலபமாக வெற்றியைத் தரும்.

    ''வாருங்கள், இப்பொழுதே போய்க் கதாகாலட்சேபம் செய்வதற்கு பாபாவிடம் அனுமதி கேட்கலாம் என்று சொல்லி­க்கொண்டே இருவரும் மசூதியை நோக்கிச் சென்றனர். 

     காகா பூஜையைச் செய்துகொண் டிருந்தபோது பாபாவே முதற்கேள்வியாகக் கேட்டார், ''ஆக, வாடாவில் என்ன நடந்தது? ஆனால் அந்நேரத்தில், சம்பந்தப்பட்ட கேள்வியை எழுப்பவேண்டுமென்று காகாவுக்குத் தோன்றவில்லை. 

     உடனே பாபா கேள்வியின் உருவத்தை மாற்றி, ''புவா, நீர் என்ன சொல்கிறீர்? என்று பீஷ்மாவைக் கேட்டார். 

      காகாவுக்கு உடனே விஷயம் ஞாபகத்திற்கு வந்து, அவர்கள் என்ன செய்ய விரும்பினார்கள் என்பதை எடுத்துச் சொன்னார். பாபா அவர்களுடைய யோசனைக்கு அனுமதி தந்தார்; உற்சவம் நிச்சயமாகிவிட்டது. 


ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...