Sunday, November 10, 2013

டாக்டரின் சகோதரியின் மகன்

           நாசிக் ஜில்லாவில் மாலே காங்வ் என்னும் ஊரில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் அண்ணன் மகனுக்கு எந்தச் சிகிச்சையாலும் குணப்படுத்தமுடியாத ஒரு வியாதி இருந்தது.  அவரே ஒரு பட்டம் பெற்ற, தேர்ச்சி பெற்ற டாக்டர். அவர் நண்பரும் ஒரு டாக்டர். இருவருமே திறமை வாய்ந்த, புகழ்பெற்ற அறுவை மருத்துவ நிபுணர்கள். பலவிதமான அணுகுமுறைகளைக் கையாண்டும், கடைசியில் களைத்துப்போய் செய்வதறியாது திகைத்தனர். 
            வியாதி, எலும்பில் புரையோடிய ஆறாத ரணம். ஹாட்யாவ்ரணம் என்று இந்த வியாதிக்கு மராட்டி மொழியில் பெயர்; இச் சொல் திரிந்து ஹாட்யாவர்ணம் என்றாகியது. இது எந்த மருந்துக்கும் கட்டுப்படாத ஒரு விசித்திரமான, தீராத வியாதி. 
             மனத்திற்குத் தோன்றிய உள்நாட்டு, வெளிநாட்டு வைத்தியமுறைகளனைத்தும் கையாளப்பட்டன; எதுவும் பலனளிக்கவில்லை. அறுவை மருத்துவமும் செய்யப்பட்டது; அதுவும் டாக்டருக்குப் பெருமை தேடித் தரவில்லை. 
             அண்ணன் மகன் சிறுவயதினன்; வேதனையைப் பொறுக்க முடியாது தவித்தான்; பிராண அவஸ்தைப்பட்டான். இதைக் கண்ட நெருங்கிய உறவினர்கள் மனமுடைந்து போயினர்.  எல்லாவிதமான உபாயங்களும் செய்யப்பட்டன; வியாதி சிறிதளவும் குறையவில்லை. ஆகவே, நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் சம்பந்திகளும், ''தேவதைகளை ஆராதனம் செய்யலாம் என்று கூறினர்.  தெய்வமும் தேவதைகளும் குலதேவதையும் திருப்திசெய்யப்பட்டன. இவற்றில் எதுவும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுதுதான் டாக்டருக்கு சிர்டீயில் ஓர் அவ­யா வசித்துவந்தது தெரிந்தது. 
             அவர் ஸாயீ மஹராஜ்; யோகீசுவரர்; ஞானிகளில் தலைசிறந்தவர்; அவருடைய தரிசனம் ஒன்றே வியாதிகளைப் பரிஹாரம் செய்கிறது. இதைத்தான் டாக்டர் கேள்விப்பட்டார்.   ஆகவே ஸாயீ தரிசனம் செய்ய விருப்பம் ஏற்பட்டது. தாயும் தந்தையும் தெய்வத்தின் பெயரில் இந்த நிவாரணத்தைச் செய்து பார்க்கலாம் என்று நிச்சயித்தனர்.  அவர் மிகப் பெரிய அவ­யா என்றும் அவருடைய கையால் உதீ தடவினால், தீராத கொடிய வியாதிகளும் குணமடைகின்றன என்றும் கேள்விப்படுகிறோம். இதை முயன்று பார்ப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்?
          ''வாருங்கள் போவோம்; அவருடைய பாதங்களை வந்தனம் செய்வதற்கு. இந்தக் கடைசி முயற்சியையும் செய்துபார்த்துவிடுவோம். இந்த வழியிலாவது அபாயம் விலகட்டும். இதுவே கடைசி உபாயம்.
          ஆகவே தாயும் தந்தையும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டு ஸாயீ தரிசனம் செய்யும் ஆவலுடன் சிர்டீக்கு உடனே சென்றனர். 
 
சிர்டீ வந்து சேர்ந்தவுடன் ஸாயீதரிசனம் செய்து பாதங்களை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய சன்னிதியில் நின்றுகொண்டு பாலனின் துக்கத்தை விவரித்தனர்.  கூப்பிய கைகளுடன் கூம்பிய முகங்களுடனும் சோகம் ததும்பிய குர­லில் ஸாயீயைப் பிரார்த்தனை செய்தனர்,
            ''இந்த பாலன் வியாதியால் பீடிக்கப்பட்டு வேதனைப்படுகிறான். இவனுடைய துக்கத்தைப் பார்க்க எங்களுக்கு சகிக்கவில்லை; அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எங்களுக்கு கதிமோட்சம் என்னவென்று தெரியவில்லையே?
            '', ஸமர்த்த ஸாயீயேõ புத்திரன் படும் பாட்டைப் பார்த்து துக்கப்பட்டுக் களைத்துவிட்டோம். உங்களுடைய அருட்கரத்தை இவன் தலைமேல் வைத்து, இவனுடைய வியாதியை நிவாரணம் செய்யுங்கள்.-- 
            ''உங்களுடைய மஹிமையைக் கேள்விப்பட்டு நாங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம். அனன்னிய பாவத்துடன் உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு இவனுடைய உயிரை தானமாகக் கொடுங்கள்.
           கருணாமூர்த்தியான ஸாயீ அவர்களுக்கு ஆறுதல் சொன்னார், ''இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்கதி (கெடுகதி) அடையமாட்டார்கள்; யுகம் முடியும் காலம்வரை.
இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துக்கொண்டு போய் ரணத்தின்மீது தடவுங்கள். எட்டு நாள்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.
           இது சாதாரணமான மசூதி அன்று; ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் காலெடுத்து வைத்தவர் உடனே க்ஷேமத்தையும் ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்.
           இங்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக.
            பிறகு, பாபாவின் ஆணைப்படி வியாதியால் பீடிக்கப்பட்ட சிறுவன் பாபாவின் எதிரில் உட்காரவைக்கப்பட்டான். பாபா அவனுடைய காலைத் தடவிவிட்டார்; அவன்மேல் தம்முடைய அருட்பார்வையைச் செலுத்தினார். 
           இது தேக சம்பந்தமான வியாதிதான். ஸாயீதரிசனம், விதியால் விளைவிக்கப்பட்ட ஆபத்துகளையும், நிவாரணமே இல்லாத மனோவியாதிகளையுங்கூட நிர்மூலமாக்கிவிடுகிறது.   ஸாயீயின் முகத்தைப் பார்க்கப் பார்க்க, சிறுவனின் சகல துக்கங்களும் குறைந்தன. அவருடைய திருவாய்மொழியைக் கேட்டு ரோகத்தி­ருந்து விடுபட்டுப் பரம சுகம் அடைந்தான். 
             பிறகு, நான்கு நாள்களுக்கு அவர்கள் சிர்டீயில் தங்கினர். வியாதி படிப்படியாகக் குறைந்தது; ஸாயீயின் மீதிருந்த விசுவாசம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர் அவர்கள் மூவரும் பாபாவின் பரிபூரணமான அனுமதியுடன் ஆனந்தம் நிறைந்த மனத்தினராகவும் திருப்தியடைந்தவர்களாகவும் கிராமத்திற்குத் திரும்பினர். 
              இது என்ன அற்பசொற்பமான அற்புதமா? புரையோடிப்போன ரணம் மறைந்து போயிற்று; செய்யப்பட்ட அபூர்வமான வைத்தியம், பாபாவின் அருட்பார்வையும் உதீயுமே. இதுவே ஒரு மஹாபுருஷரின் தரிசன மஹிமை. ஒரு மஹாபுருஷரின் ஆறுதல் மொழியையும் ஆசிகளையும் பெறும் பாக்கியம் யாருக்காவது கிடைத்தால், அவருடைய வியாதி நிர்மூலமாகிவிடும். 
              இவ்வாறு சிலநாள்கள் கழிந்தன. உதீ ரணத்தின்மீது தடவப்பட்டுக் குடிப்பதற்கும் நீருடன் கலந்து அளிக்கப்பட்டது. ரணம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறி உலர்ந்துவிட்டது. சிறுவன் ஆரோக்கியமான வாழ்விற்குத் திரும்பினான். 
              மாலே காங்வில் இருந்த சிறுவனின் சிற்றப்பா (டாக்டர்) இதைப்பற்றிக் கேள்விப்பட்டு, ஸாயீதரிசனம் செய்வதற்கு உற்சாகங்கொண்டார். பம்பாய் செல்லும்போது சிர்டீக்குச் சென்று மனவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தமக்குள்ளேயே தீர்மானித்தார்.  ஆனால், பின்னர் அவர் பம்பாய்க்குப் புறப்பட்டபோது, மாலேகாங்விலும் மன்மாடிலும் சிலர் அவருடைய மனத்தில் விகற்பத்தைக் கிளறிவிட்டனர். டாக்டர் சிர்டீ செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார். 
                எந்த நல்ல காரியத்திற்கும் இதுவே ரீதி. ஆரம்பத்திலேயே கெடுமதியாளர்கள் சில தடங்கல்களை உண்டாக்குவர். அவர்கள் சொல்வதை லட்சியம் செய்யாதவர்களே கடைசியில் நல்ல பாதையில் சென்று நன்மையடைவர். 
                டாக்டர், ஞானியை தரிசனம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு நேராக பம்பாய்க்குச் சென்றார். மீதியிருந்த விடுப்பை அலீபாக்கில் கழிக்கலாம் என முடிவெடுத்தார்.  இவ்வாறு அவர் முடிவு செய்தபின், தொடர்ச்சியாக மூன்று இரவுகளில், ''இன்னும் என்மேல் அவநம்பிக்கையா? என்ற குரல் அவருக்குத் தூக்கத்தில் கேட்டது.  தொடர்ச்சியாக மூன்று இரவுகளில் தோன்றிய அந்த அசரீரிச் செய்தியைக் கேட்டு டாக்டர் வியப்படைந்தார். அந்தச் செய்தியைப் பொருள் செறிந்ததாக ஏற்றுக்கொண்டு அவர் சிர்டீ பிரயாணத்தை நிச்சயம் செய்துகொண்டார். 
              ஆயினும், அவர் அந்த சமயத்தில், டைபாய்டு ஜுர நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண் டிருந்தார். அவருக்குச் சிறிது குணமேற்பட்டவுடனே சிர்டீ செல்லலாம் என நினைத்தார். 
நோயாளிக்கோ ஜுரம் அதிகமாக இருந்தது; எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. நோயாளி லவலேசமும் (சிறிதளவும்) குணமடையவில்லை. ஆகவே சிர்டீ செல்வதற்கு முடியவில்லை. டாக்டர் தமது மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார், ''இந்த நோயாளியின் நிலைமையில் இன்று ஏதாவது முன்னேற்றம் தெரிந்தால், மேலும் ஒரு கணமும் தாமதியாது நாளை நான் சிர்டீ செல்வேன். இந்த திடமான சங்கேதத்தை (குறிப்பை) ஏற்றுக்கொண்டபின், ஆறு மணி நேரத்திற்குள்ளாக ஜுரம் கொஞ்சங்கொஞ்சமாக இறங்கியது. அவருடைய வேண்டுதல் நிறைவேறியதால் டாக்டர் உடனே சிர்டீக்குக் கிளம்பினார். 
            சங்கற்பம் செய்துகொண்டவாறே டாக்டர் சிர்டீக்குச் சென்றார். பக்தியுடன் பாபாவின் பாதங்களை வணங்கினார். இவ்விதமாக, பாபா அவருக்கு அகமுகமான அனுபவத்தின் மூலம் விசுவாசம் ஏற்படச் செய்து, அவரை குருசேவைக்கு இழுத்தார்.  டாக்டரின் தலைமேல் அருட்கரத்தை வைத்து உதீ பிரசாதமும் அளித்தார். ஸாயீயின் அளப்பரிய சக்தியைக் கண்டு டாக்டர் பிரமித்துப்போனார். 
           டாக்டர் சிர்டீயில் நான்கு நாள்கள் தங்கியபின் ஆனந்தமான மனத்துடன் வீடு திரும்பினார். பதினைந்து நாள்கள்கூட முடியவில்லை; விஜாபூருக்குப் பதவி உயர்வில் அனுப்பப்பட்டார். வேதனை மிகுந்த ஹாட்யாவ்ரணம் ஸாயீதரிசனத்திற்கு வழிவகுத்தது. தரிசனம் ஞானியின் பாதங்களின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வீர்ப்பு என்றும் குறையாத ஆனந்தத்தை அளித்தது. 
ஸ்ரீ சாயியைப் பணிக

அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்

மூலம்: ஸ்ரீ சாய் சத்சரிதம் அத்தியாயம் 34

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...