Wednesday, November 20, 2013

காகா மஹாஜனியின் எஜமானர் - 3

நேற்றைய தொடர்ச்சி....

 சாது என்பதற்குண்டான இந்த அறிகுறிகளும் பிறர் மனம் அறியும் சக்தியும் தரம்ஸீ சேட்டுக்கு பாபாவை சாதுவாக ஏற்றுக்கொள்ளப் போதுமான முகாந்தரங்களாக அமைந்தன.  மாதவராவும் அப்பொழுது அங்கு இருந்தார். விளக்கம் சொல்வது போன்று அவர் பாபாவிடம் சொன்னார், ''காகாவின் யஜமானர் ஒரு சேட் உண்டே, அவர் இவர்தான்”.

         ''யார்? யாரென்று சொன்னாய்? இவர் எப்படிக் காகாவின் யஜமானராக இருக்க முடியும்? காகாவின் யஜமானர் வேறு யாரோ ஆயிற்றே என்று பாபா உடனே பதிலளித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட காகாவின் இதயம் பூரித்தது.  இதில் விநோதம் என்னவென்றால், பாபா துனீயருகே நின்று கொண்டிருந்த ஆப்பா என்று பெயர்கொண்ட ஒரு சமையற்காரரை இதில் இழுத்துவிட்டதுதான்.

          பாபா சொன்னார், ''இந்த சேட் இவ்வளவு தூரம் வந்திருப்பதென்னவோ உண்மைதான். இந்த சிரமத்தை இவர் எனக்காகப் படவில்லை. ஆப்பாவின்மேல் கொண்ட பிரேமையால்தான் இவர் ஷீரடிக்கு வந்திருக்கிறார்.

          பேச்சு இந்த ரீதியில் நடந்தது. தரம்ஸீ தாம் நிச்சயம் செய்துகொண்டுவந்ததை எல்லாம் விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தம்மிச்சையாகவே விழுந்தார். பிறகு இருவரும் வாடாவிற்குத் திரும்பினர்.

          மதிய ஆரத்தி நடந்து முடிந்தது. இருவரும் வீடு திரும்பும் பயணத்திற்குத் தயார் செய்ய ஆரம்பித்தனர். பாபாவிடம் அனுமதி கேட்கும் நேரம் நெருங்கியது. இருவரும் மசூதிக்குச் சென்றனர்.   தரம்ஸீ அப்பொழுது காகாவிடம் சொன்னார், ''நான் வீடு திரும்ப அனுமதி வேண்டப் போவதில்லை. அனுமதி உமக்குத்தான் வேண்டும். ஆகவே நீர்தான் அனுமதி கேட்கவேண்டும். இதைக் கேள்வியுற்ற மாதவராவ் சொன்னார்,

           ''காகா வீடு திரும்புவது என்பது நிச்சயமில்லை. ஒரு முழுவாரம் கழிந்தாலொழிய அவருக்கு அனுமதி கிடைக்காது. நீங்களே அனுமதி கேட்பதுதான் நல்லது

           ஆகவே, மூவரும் மசூதிக்குச் சென்று அமர்ந்தபோது, அவர்களின் சார்பாக மாதவராவ் அனுமதி கேட்டார். ஆனால், பாபா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அமைதியான மனத்துடன் கவனமாகக் கேளுங்கள்.

         ''சஞ்சல புத்தியுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய இல்லத்தில் தனமும் தானியங்களும் மற்றப் பொருள்களும் ஸம்ருத்தியாக (ஏராளமாக) நிரம்பிக் கிடந்தன. உட­லும் மனத்திலும் வியாதியோ வெக்கையோ ஏதும் இல்லை. ஆயினும் அவன் உபாதிகளைத் தேடினான்.
அவசியமில்லாமல் தலைமேல் பாரத்தை ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் அலைந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. ஒரு நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான்; உடனே அதைத் தூக்கிக்கொள்வான். அவனால் மனத்தைச் சலனமில்லாமல் செய்ய முடியவில்லை.

          அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது. நான் அவனிடம் சொன்னேன், 'உன்னுடைய மனத்தை நிலைபெறச்செய்து ஏதாவதொன்றில் நிறுத்து; அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ அனாவசியமாக அலைகிறாய். உன்னுடைய மனத்தை ஏதாவது ஒன்றில் நிலைபெறச்செய்.இந்த வார்த்தைகள் தரம்ஸீயைத் தேள்போல் கொட்டின. அது தமக்காகச் சொல்லப்பட்ட அறிவுரையே என்று புரிந்துகொண்டார். 


      எத்தனை வைபவங்கள் இருந்தபோதிலும், எக் காரணமும் இன்றிக் கவலையால் பீடிக்கப்பட்டவராகத் தமக்குத் தாமே இன்னல் தேடிக்கொண்டார்.  செல்வமும் சமூக கௌரவமும் ஏராளமாக இருந்தும் மனத்தில் அமைதி இல்லை. துக்கங்களையும் இன்னல்களையும் கற்பனை செய்துகொண்டு கவலையில் மூழ்கிவிடுவார்.  இந்தக் கதை ஸாயீயின் திருவாய்மொழியாக வெளிவந்தவுடன் சேட்ஜீ மிகுந்த வியப்படைந்தார். இதுதான் என்னுடைய மனோநிலை, என்றெண்ணி மிகுந்த பயபக்தியுடன் இக் கதையைக் கேட்டார்.

இதன் இறுதிப்பகுதி நாளை.....

ஸ்ரீ சாய்சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...