Saturday, November 16, 2013

குழந்தை வரம்

     ஸோலாபூர் நகரில் வாழ்ந்துவந்த ஸகாராம் ஔரங்காபாத்கர் என்பவர் புத்திரசந்தானம் வேண்டுமென்று விரும்பினார். ஆகவே, அவர் மனைவி ஷீரடிக்கு வந்தார்.  புனிதஞானி ஸாயீ பாபாவின் அற்புதமான வாழ்க்கைச் சரித்திரத்தைக் கேள்விப்பட்டுத் தம்முடைய சக்களத்தியின் மகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவரை தரிசனம் செய்ய வந்தார். 
      திருமணமாகி இருபத்தேழு ஆண்டுகள் கழிந்தும் அவருக்கு மகப்பேறு இல்லை. எத்தனையோ தேவர்களையும் தேவிகளையும் பிரார்த்தனை செய்துகொண்டும் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டும் பலனேதும் இல்லை; அவர் மனமுடைந்துபோனார். ஆகவே, இந்த சுமங்க­ பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷீரடிக்கு வந்தார். இருப்பினும் அவருடைய மனத்தின் ஒரு விசாரம் எழுந்தது. 
       ''அவரைச் சுற்றி எப்பொழுதும் பக்தர்கள் சூழ்ந்திருக்கிறார்களே, நான் என்னுடைய இதயத்தில் இருப்பதை அவரிடம் எப்படித் தெரிவிப்பேன்மசூதியோ திறந்தமயமாக இருக்கிறது; வெளிமுற்றமும் அவ்வாறே. பாபாவை சதா பக்தர்கள் சூழ்ந்திருக்கின்றனர். என்னுடைய மனக்குறையை எடுத்துச் சொல்லத் தனிமையில் ஒரு நிமிடம் எப்படிக் கிடைக்கப்போகிறது?”
            அவரும், விசுவநாதன் என்ற பெயர் கொண்ட, சக்களத்தியின் மகனும் பாபாவுக்கு சேவை செய்துகொண்டு இரண்டு மாத பரியந்தம் (காலம்)
ஷீரடியில் தங்கினர்.  ஒரு சமயம், விசுவநாதனோ வேறெவருமோ இல்லாதபோது அவர் மாதவராவிடம் என்ன மன்றாடிக் கேட்டுக்கொண்டார் என்பதைக் கேளுங்கள். 
     ''ஐயா, நீங்களாவது பாபா சாந்தமாகவும் ஸ்திரமாகவும் இருக்கும் நேரம் பார்த்து என்னுடைய மனத்தின் ஏக்கத்தை அவருடைய காதுகளில் போடுங்கள். இந்த விஷயத்தை அவர் பக்தர்களால் சூழப்படாது தனிமையில் இருக்கும்போது யாரும் காதால் கேட்கமுடியாத வகையில் சொல்லுங்கள்.
     மாதவராவ் பதில் கூறினார், ''இதோ பாருங்கள். இந்த மசூதி கா­லியாக இருப்பதென்பதே கிடையாது. பாபாவை தரிசனம் செய்ய யாராவது ஒருவர் வந்துகொண்டே இருப்பார். ஸாயீ தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்
     ''முயற்சி செய்வது என்னுடைய கடமை; வெற்றியை அளிப்பவர் மங்களங்களுக்கு அடித்தளமானவர். கடைசியில் அவரே சாந்தியை அளிப்பார்; உங்களுடைய கவலை விலகும்.
     ''இருப்பினும், நீங்கள் பாபா சாப்பாட்டுக்கு அமரும் நேரத்தில் ஒரு தேங்காயையும் ஊதுவத்திகளையும் கையில் வைத்துக்கொண்டு கீழே சபாமண்டபத்தில் ஒரு கல்லி­ன்மேல் உட்கார்ந்திருங்கள்.
     அவர் உணவுண்ட பிறகு, ஆனந்தமாக இளைப்பாறும் சமயம் பார்த்து நான் உங்களுக்குச் சைகை செய்கிறேன். அதன் பிறகே நீங்கள் படியேறி மேலே வரவேண்டும்.
     இவ்வாறாகக் காத்திருந்து காத்திருந்து, ஒரு சமயம் ஸாயீ உணவுண்டவுடனே பிராப்த காலம் (அடையவேண்டிய நேரம்) வந்ததும் ஒரு நல்வாய்ப்புக் கிடைத்தது.  ஸாயீ வாயைக் கழுவிக்கொண்டபின் மாதவராவ் கைகளைத் துணியால் துடைத்துவிட்டுக்கொண்டிருந்தார். ஸாயீ ஆனந்தமான மனநிலையில் இருந்தார்; அப்பொழுது என்ன செய்தார் என்று கேளுங்கள். 
       மாதவராவின்மீது பிரேமை பொங்க, அவருடைய கன்னத்தைக் கிள்ளினார் பாபா. தேவருக்கும் பக்தருக்கும் அப்பொழுது நடந்த அன்பான சம்வாதத்தைக் (உரையாடலைக்) கேளுங்கள்.
 
     எப்பொழுதும் விநயமாக நடந்துகொள்ளும் மாதவராவ் பொய்க்கோபம் ஏற்று, ''இது என்ன லட்சணமான (சிறப்பான) செயலா?” என்று கேலி­யாகக் கேட்டார். 
      ''எங்களுக்குக் கன்னத்தை அழுத்திக் கிள்ளும் குறும்புத்தனமான கடவுள் வேண்டாம்.  நாங்கள் உங்களுக்கு பந்தப்பட்டவர்களா என்ன? இதுதான் எங்களுடைய நெருங்கிய தொடர்புக்குப் பரிசோ?
     பாபா சொன்னார், ''சாமா, எழுபத்திரண்டு ஜன்மங்களாக நான் உன்னைத் தொட்டதுண்டா? ஞாபகப்படுத்திப் பார்!
     மாதவராவ் சொன்னார், ''பசிக்கும்போதெல்லாம் புதிது புதிதாக இனிப்புகள் வழங்கும் கடவுளே எங்களுக்குத் தேவை.
    ''உங்களிடமிருந்து கௌரவமோ சுவர்க்கலோகத்தின் புஷ்பக விமானமோ எங்களுக்குத் தேவையில்லை. உங்களுடைய பாதங்களில் என்றென்றும் விசுவாசம் என்னும் ஒரே வரத்தைக் கொடுங்கள்; அது போதும்.
     பாபா சொன்னார், ''இதற்காகவேதான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்களிடமுள்ள அளவுகடந்த பிரேமையால் உங்களனைவருக்கும் உணவூட்டவே வந்திருக்கிறேன்.
     இதன் பிறகு பாபா கிராதிக்கருகி­ருந்த தமது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார். மாதவராவ் பெண்மணிக்குச் சைகை காண்பித்தார். பெண்மணி தாம் வந்த நோக்கம் பற்றி உஷாரானார்.  சைகை கிடைத்தவுடனே, அவர் எழுந்து தடதடவென்று படியேறிச் சென்று பாபாவின் சன்னிதியில் மிகப் பணிவாகத் தலைவணங்கி நின்றார்.  உடனே தேங்காயை சமர்ப்பித்துவிட்டுப் பாதகமலங்களில் வணங்கினார். பாபா தேங்காயைத் தமது கைகளாலேயே கிராதியின்மேல் மோதி உடைக்க முயன்றார். 
     பாபா கேட்டார், ''இந்தத் தேங்காய் என்ன சொல்கிறது? ஏகமாக குடுகுடுவென்று ஆடுகிறதே?” கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது சாமா கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அவர் பாபாவிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள். 
      ''அதுமாதிரியாகவே இவருடைய வயிற்றிலும் (குழந்தை) உருளவேண்டுமென்று இப் பெண்மணி மனம் கனிந்து வேண்டுகிறார். இவருடைய விருப்பம் நிறைவேறட்டும். இவருடைய மனம் உங்களுடைய பாதங்களில் அகண்டமாக லயிக்கட்டும்; இவருடைய பிரச்சினைக்கு விடை கிடைக்கட்டும். உங்களுடைய கருணாகடாட்சத்தை இவர்மீது செலுத்துங்கள். இந்தத் தேங்காயை இவருடைய முந்தானையில் போடுங்கள். உங்களுடைய ஆசீர்வாதத்தால் இவருக்குப் பல பிள்ளைகளும் பெண்களும் பிறக்கட்டும்.
     பாபா அப் பெண்மணியைக் கேட்டார், ''என்ன? தேங்காய்கள் குழந்தைகளை உண்டுபண்ணுமா? இம்மாதிரியான மூடநம்பிக்கைகளை நீங்கள் எப்படி வளர்க்கலாம்? , ஜனங்களுக்கு புத்தி பேத­த்துவிட்டதுபோல் இருக்கிறது”. 
     சாமா சொன்னார், '', உங்களுடைய வாக்கின் அற்புதமான சக்தி எங்களுக்குத் தெரியும். இப் பெண்மணிக்கு வரிசையாகப் பல குழந்தைகள் சுகமாகப் பிறக்குமளவிற்கு உங்களுடைய வாக்குக்கு சக்தி இருக்கிறது. ஆனால், நீங்கள் இப்பொழுது விதண்டை செய்கிறீர்களே தவிர, மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்யவில்லை. தேவையில்லாமல் வாதம் செய்கிறீர்கள். கொடுங்கள்; , அந்தத் தேங்காயை இப் பெண்மணிக்குப் பிரசாதமாகக் கொடுங்கள்.
     பாபா சொன்னர், ''சரி, சரி, தேங்காயை உடை.
     சாமா சொன்னார், '', அதை இவருடைய முந்தானையில் இடுங்கள். இவ்விதமாக இந்த வாக்குவாதம் சிறிது நேரம் தொடர்ந்தது. கடைசியில் பாபா விட்டுக்கொடுத்தார். 
     பாபா சொன்னார், ''போ, போ, இவருக்குக் குழந்தை பிறக்கும்.
    சாமா விடுவதாக இல்லை. ''எப்பொழுது பிறக்கும்? அதை அறுதியிட்டுப் பதில் சொல்லுங்கள்.  ''பன்னிரண்டு மாதங்களில் என்று சொல்­விட்டு பாபா தேங்காயைப் பட்டென்று உடைத்தார். 
     ஒரு மூடியைப் பெண்மணியிடம் கொடுத்துவிட்டு மற்றொரு மூடியை அவர்கள் இருவரும் உண்டனர். மாதவராவ் அப் பெண்மணியிடம் சொன்னார், ''நீர் இதை சாட்சியாகக் கேட்டுக்கொண் டிருக்கிறீர்.இன்றி­ருந்து பன்னிரண்டு மாதங்கள் முடிவதற்குமுன், நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காவிட்டால், நான் என்ன செய்வேன் என்பதைக் கேளுங்கள்.
   ''நான் இதேபோன்ற ஒரு தேங்காயை இவருடைய தலையில் உடைத்து, இந்தத் தெய்வத்தை மசூதியி­ருந்து விரட்டாவிட்டால், என்னுடைய பெயர் மாதவராவ் இல்லை. அதுமாதிரி தெய்வத்தை இந்த மசூதியில் தங்கும்படி விட்டுவைக்கமாட்டேன். உமக்குச் சரியான நேரத்தில் நிரூபணம் தெரியும். இதை என்னுடைய சர்வ நிச்சயமான பிரகடனம் என்று அறிவீராக
  இவ்வகையாக உறுதிமொழி அளிக்கப்பட்ட பெண்மணி பெருமகிழ்ச்சியடைந்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, திருப்தியடைந்தவராகத் தம்முடைய கிராமத்திற்குத் திரும்பினார். பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரும் பிரேமபாசத்தால் பக்தர்களிடம் கட்டுண்டவரும் சாமாவைத் தம் அணுக்கத் தொண்டராக ஏற்றுக்கொண்டவருமான ஸாயீ, சாமாவின்மேல் எள்ளளவும் கோபப்படவில்லை.
  அண்டியவர்ளைக் காக்கும் கருணைக்கடலும் தம்மிடம் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலமுமான தயாளர் ஸாயீ, தம் பக்தனின் வாக்கைத் தவறாது நிறைவேற்றினார்.
 
      ''சாமா என் செல்லப்பிள்ளை. அவனுடைய முரட்டு பக்தியின் காரணமாகச் சில சமயங்களில் ஏடாகூடமாகப் பேசிவிடுகிறான். ஆயினும் பக்தனின் சங்கற்பத்தை நிறைவேற்றிவைப்பது ஞானியரின் விரதமன்றோ. ஆகவே, பன்னிரண்டு மாதங்களில் பாபா தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். பாபா ஆசீர்வதித்த மூன்றாவது மாதம் அப் பெண்மணி கருத்தரித்தார்.  பாக்கியவசமாக அவருக்கு ஒரு புத்திரன் பிறந்தான். ஐந்து மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு கணவரும் மனைவியும் தரிசனம் செய்ய ஷீரடிக்கு வந்தனர்.  கணவரும் ஸாயீ பாதங்களில் விழுந்து வணங்கினார். பெருமகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் பாதங்களில் ஐந்நூறு ரூபாயை சமர்ப்பணம் செய்தார்.  சிலகாலம் கழித்து அந்தப் பணத்தை உபயோகித்து, 'சியாம்கர்ண என்ற தம் செல்லக்குதிரையைக் கட்டுவதற்காக ஒரு குதிரைலாயத்தை பாபா கட்டினார். 
     ஆகவே இந்த ஸாயீயை தியானம் செய்யுங்கள். ஸாயீயை நினைவில் வையுங்கள். ஸாயீயைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள். வேறெங்கும் எதையும் தேடி அலையாதீர்கள். ஹேமாட் பந்துக்கு என்றென்றும் அவரே அடைக்கலம்.  

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 
சுபம் உண்டாகட்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...