Sunday, November 17, 2013

ஒரு பக்தையின் அனுபவம்




         மாற்று வேலை தேடி முயன்றும் ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல வேலை கிடைத்தால் ஷீர்டி வருவதாக வேண்டிக் கொண்டேன். ஒன்றும் அமையாததால் இந்தியா செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன். அப்போது பாபாவின் பெரிய சிலை இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்லும் வரிசையில் நான் நிற்பதாக ஒரு கனவு கண்டு, இது பாபாவின் அழைப்பு என எண்ணி, ஷீர்டி செல்ல முடிவு செய்தேன்.
           எனது ஷீர்டி அனுபவங்களை இப்போது சொல்லுகிறேன். இந்தத் தளம் உட்பட பல்வேறு வலைத்தளங்களில் படித்ததன் மூலம் சமாதியைத் தொடும் வாய்ப்பு கிட்டாது என்றே நினைத்தேன். நேரடி ஒளிபரப்பை தினம் பார்ப்பதால், சமாதிக்கு முன்பாக கம்பிகள் போட்டுத் தடுத்திருப்பதையும், இருந்தும் ஒரு சிலர் மட்டும் பாபா சமாதியைத் தொட்டு வணங்கும் பாக்கியம் பெறுவதையும் கண்டிருக்கிறேன்.  வியானன்றுதான் அங்கு செல்ல நான் விரும்பினாலும், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், செவ்வாய், அல்லது புதனன்று செல்லலாம் எனவும் முடிவெடுத்தோம். ஆனால், பாபாவின் கட்டளை வேறு விதமாக இருந்தது.  புதன் காலை 10 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இறங்கினோம்.
       எனது நண்பர் ஒருவரின் துணையோடு காரில் ஷீர்டி செல்ல ஏற்பாடு செய்திருந்தும், மதியம் 3 மணி வரை விமான நிலையத்திலேயே சிக்கிக் கொண்டோம். எனது பிள்ளைகளுக்கு சோர்வாக இருந்தது. இவ்வளவு தூரம் வரவழைத்த பின்னர் ஏன் பாபா என்னைக் காத்திருக்கச் செய்கிறீர்கள் என எனக்கு அழுகையே வந்து விட்டது.  ஒரு வழியாக இரவு 9 மணிக்கு ஷீர்டி சென்றடைந்தோம். கோவில் வழியாகச் செல்லும்போது உள்ளே சென்று தரிசனம் பார்த்துவிட்டு விடுதிக்குச் செல்லலாம் என என் கணவர் கூறினார். மிகவும் களைப்பாக இருந்ததால், நான் குழந்தைகளுடன் விடுதிக்குச் செல்வதாகக் கூறினேன். இருந்த போதிலும், அனைவரும் இறங்கி உள்ளே சென்றோம்.
      கூட்டம் அதிகமில்லை. எங்களுக்கு முன் சென்றவர்களைப் பின்தொடர்ந்து வழி தெரியாமல் நடந்தோம். சமாதி ஹாலுக்குள் சென்று அங்கிருந்த மிகப் பெரிய பாபா உருவச்சிலைக்கு வெகு அருகில் சென்று, சமாதியைத் தொட்டு முத்தமிடும் வாய்ப்பு கிடைத்தது!  அங்கிருந்த சேவாதல் ஒன்றுமே சொல்லவில்லை. என் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய பொன்னாள் இது! எங்களை எப்போதும் வழிநடத்திச் செல்லுங்கள் என பாபாவிடம் வேண்டிக் கொண்டோம்.  அப்போது எங்களுக்கு முன் சென்றவர்கள் விரைவாகச் செல்வதைப் பார்த்தேன். இரவு ஆரத்திக்காக அவர்கள் செல்கின்றனர் என அறிந்து, அவர்களுடன் சென்று, முழு ஆரத்தியையும் கண்டு களித்தோம். இந்த நல் வாய்ப்பை அருளிய பாபாவுக்கு எங்களது இதயபூர்வமான வந்தனங்களைத் தெரிவித்தோம். 
             மறுநாள் வியாழக் கிழமை என்பதால் கூட்டம் அதிகமிருக்கும் எனத் தெரிந்தும், ஒரு பெரிய ரோஜா மாலையை வாங்கிக்கொண்டு  தரிசனத்துக்குச் சென்றோம்.  பாபா அருகில் நெருங்கியபோது கூட்டம் என்னை அங்குமிங்கும் தள்ளியது.  அப்போது ஒரு வயதான சேவாதல் என்னைப் பார்த்துச் சிரிக்கவும், அவரிடம் ரோஜா மாலையைக் கொடுத்தேன். அதை அவர் சமாதியின் மீது இட்டார். ஒரு பூவை எடுக்கலாம் என‌க் குனிந்தபோது, அவர் என் தோளை இழுத்து சமாதியிலிருந்தே ஒரு ரோஜாப்பூவை எடுத்து என் கையில் தந்தார்.
      எனது ஷீர்டி பயணத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் பாபாவின் அன்பும், கருணையுமே என் நினைவில் வந்து சந்தோஷப் படுத்துகிறது. நமது கோரிக்கை நிறைவேறாதபோது, நம்மை பாபா அலட்சியப் படுத்துகிறார் என நினைக்காமல், நமது பொறுமையை அவர் சோதிக்கிறார் எனப் புரிந்து, தொடர்ந்து வேண்டினால் நிச்சயம் பாபா நமக்கு உதவி செய்வார்.

          ஜெய் ஸாயிராம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...