ஸத் சரித்திரத்தின்
பாதை எளிமையானது; நேர்மையானது. இது
படிக்கப்படும் இடமெல்லாம் துவாரகாமாயீ. ஆகவே, ஸாயீயும் அங்கு
நிச்சயம் வாசம் செய்கிறார்.
அவ்வாறே அங்கும் கோதாவரிக்கரை
இருக்கிறது. அருகில் ஷீரடி கிராமமும் இருக்கிறது. அவ்விடத்திலேயே துனீயருகில் ஸாயீ
அமர்ந்திருக்கிறார்; அவரை நினைப்பவர்களை சங்கடங்களிருந்து விடுவிக்கும் ஸாயீ.
எங்கு ஸாயீ ஸத்
சரித்திரம் படிக்கப்படுகிறதோ, அங்கு ஸாயீ எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடனும்
விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பாவங்களுடனும்
அங்கு வாசம் செய்வார்.
ஆத்மானந்தத்தில் திளைக்கும் ஸாயீயை
மனத்திற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜபங்கள், தவங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான
சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை.
அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து
நித்திய நியமமாக உதீயைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும்; அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு
புருஷார்த்தங்களையும் அடைவர்; வாழ்க்கையில் நிறைவு பெறுவர். உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக
விஷயங்களிலும் சூட்சும்மாக மறைந்திருக்கும் அர்த்தங்கள் அவர்களுக்கு
வெளிப்பாடாகும்.
உதீயின் சம்பந்தம் அவர்களுடைய பஞ்சமஹா
பாவங்களையும் அவற்றைச் சார்ந்த கிளைப்பாவங்களையும் ஒட்டுமொத்தமாக
நிர்மூலமாக்கிவிடும். உள்ளும் புறமும் தூய்மையடையும்.
கதை கேட்பவர்களுக்கு
இதுவே என் பிரார்த்தனை. ஸாயீயை வழிபடுங்கள்; உங்களுடைய அனுபவத்தை நீங்களே காணலாம். என்னுடைய பேச்சை ஒருமுறையாவது
கேளுங்கள்.
இங்கு காரணவாதமும்
தர்க்கமும் செல்லாது; பூஜிக்க வேண்டுமென்ற பாவமே தேவை. புத்தியின் சாதுர்யமும் இங்கு
எடுபடாது; உன்னதமான சிரத்தையே
தேவைப்படுகிறது.
சிரத்தையில்லாத தர்க்கவாதிகளும்
அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும் உரித்துப்
பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் ஞானிகளிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள்.
சுத்தமான பாவம் உடையவரே ஞானம் பெறுவார்.
No comments:
Post a Comment