Wednesday, June 15, 2016

எளிய மோட்ச மார்க்கம் பாகம் 1

எனது அனுபவங்களை சொல்லும்போது அது சிலருக்குக் கேலியாகத் தோன்றும், என் உருவைப் பார்த்தவர்களுக்கு இவனுக்கா இது சித்தியாயிற்று என நினைக்கத் தோன்றும். அதை நீங்களே அனுபவித்தால் உண்மையைப்புரிந்துகொள்ளலாம்.  உதாரணமாக, திரையம்பகேஸ்வரம் சென்ற போது, ஒரு ஜீவ சமாதியில் அமர்ந்தேன். அந்த நேரம் என் உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போலிருந்தது, துடித்தேன். இதை பிறரிடம் கூறிய போது நம்ப மறுத்தார்கள்.
என்னுடன் வந்திருந்த ஆறுமுகம் என்ற நண்பர் எலக்ட்ரீசியன். பெருங்களத்தூரில்தான் வசிக்கிறார். அவர் எதையும் உணராமல் நம்பமாட்டார். அவர் என்னுடன் அமர்ந்தபோது இதே உணர்வை அடைந்து, சார் இங்கே மின் கசிவு ஏற்பட்டு எர்த் பாஸ் ஆகிறது என்றார். இதைப்பற்றி சீரடிக்கு வா என்ற புத்தகத்தில் நான் எழுதி இருக்கிறேன்.
இதே அனுபவத்தை பிப்ரவரி மாதம் என்னை பார்க்க வந்த கும்பகோணம் வக்கீல் ஒருவர், அதே திரையம்பகேஸ்வரத்தில் தனக்கு நிகழ்ந்த நிகழ்வாகக் கூறியபோது, என் மனைவி அருகில் இருந்தாள். நான் அப்போது கூறியதை இப்போதாவது நம்புகிறாயா? எனக் கேட்டேன்.
இதேபோன்று செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள சிரார்த்த பெருமாள் கோயிலுக்குச் சென்று அன்னதானம் சாப்பிட்டபோது, என் தேகம் மறைந்து சதுர்புஜங்களோடு பெருமாள் சாப்பிட்ட காட்சியை அனுபவித்தேன். இதை எழுதியும் இருந்தேன், நம்பத்தான் ஆளில்லை.
15-2-2016 அன்று அதிகாலை இரண்டு மணி அளவில் என் வீட்டு மொட்டை மாடியில் சாயி நாம ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, பாபாவின் கல்யாண குணங்களைப் போற்றிக் கொண்டிருந்தேன். அப்போது உடல் சிலிர்த்தது. பரவச உணர்வு தோன்றியது, அதே போற்றுதல் வார்த்தைகளோடு நடந்தேன், நடப்பது நானல்ல, சதுர் புஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்திய பெருமாள் என்பதை உணர்ந்தேன்.
என்னை நானே பார்த்தேன், கம்பீரமானத்தோற்றத்துடன் சங்கு சக்கரமேந்தி மஞ்சள் பீதாம்பரம் தரித்து நடந்தபடியிருந்தேன். சியாமள ரூபம் என்னுடையது என என்னை நான் தரிசித்தேன். இந்த அனுபவங்கள் கற்பனையல்ல, பாவனையும் அல்ல, உண்மைதான். ஆனால், இது என்னுடைய அனுபவமாக இருக்கும் வரை அது பொய்யான கற்பனையாகத்தோன்றும்.
எனவே, இதை அனைவரும் அல்லது ஆன்மிக ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர் பெற்றுவிட்டால் எனது நிலைப்பாடு மெய்யாகும் எனக் கருதியே, சத்குரு வழிபாட்டின் மேன்மையை சகலருக்கும் போதிக்கும் புதிய முயற்சியில் ஈடுபடுகிறேன்.
இதற்காகத்தான் இந்தப் பகுதியைத் தொடங்கி இருக்கிறேன். கடைநிலை பக்தனான எனக்கே இந்த அனுபவங்கள் என்றால், உயர்நிலை பக்தர்கள் எத்தகைய நிலையை அடைந்திருப்பார்கள் என நினைத்துப் பார்த்துப் பிரமிப்பு அடைகிறேன்.
இனி ஞானத்திற்குப் போகலாம், வாருங்கள்.
(தொடரும்)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...