பகவான் தன் பக்தனை எல்லாவிதத்திலும் மெச்சிக் கொண்டாடுபவன். தன் பக்தனின் பாத தீர்த்தத்தை
புனித நீராகக் கருதி தனது தலையில் தெளித்துக் கொள்பவன். அவர்கள் தரும் எதையும் விருப்பமாக ஏற்று உண்பவன். உதாரணம் குசேலர் கதை.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் ஒரே குருகுலத்தில் படித்தவர்
குசேலர். மிகவும் ஏழையான அவர் குடும்பத்தை
நடத்த முடியாமல் அவதியுற்றார்.
மனைவியின் வற்புறுத்தலால் பகவானைக் காண
வந்தார்.
நான் ஏழை, பகவான் செல்வத்தில் திளைக்கிறார் என்னை எப்படி
ஏற்பாரோ என்ற தயக்கம்
இருந்திருக்கலாம். ஆனால் பகவானைப் பார்க்கப்
புறப்பட்டபோது அந்தத் தயக்கம் இல்லை. அவரை தரிசிக்கப் போகிறோம் என்ற உணர்வே இருந்தது, அந்த உணர்வுடன் அவர் துவாரகையை அடைந்து
மாளிகையில் நுழைந்தபோது, ருக்மணியுடன் கட்டிலில் அமர்ந்திருந்த கண்ணன், ஓடி வந்து குசேலரை கட்டிப்பிடித்துக்கொண்டான்.
அன்பின் மிகுதியால் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக பிரவாகித்தது.
பீறிட்ட அன்பால் தொண்டை அடைத்துக்கொள்ள, குசேலரை கட்டிலுக்குக் கைதாங்கலாக அழைத்து வந்து அமர்த்தினான். குசேலரின் பாதங்களைத் தட்டில்
தூக்கி வைத்து நீரால் அலம்பி அந்த நீரை தன்
தலையில் தெளித்துக்கொண்டான். ஆசையோடு எனக்காக என்ன கொண்டுவந்திருக்கிறாய்? எனக் கேட்டு, அவர் தராத முன்பே அவரது மடியிலிருந்த அவலைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். அறுசுவை விருந்துடன்
உபசரித்தான். உறங்கவைத்து கால்பிடித்தான். மறுநாள்
அவர் விடைபெற்ற போது, பாதி வழி வரை வந்து
அனுப்பினான்.
பகவான் எதையும் தனக்குக்கொடுக்கவில்லை என அவர் நினைக்கவில்லை. பகவான் நம் மீது எவ்வளவு
உயர்ந்த பாசம் வைத்திருக்கிறார் என
நினைத்தபடியே வீட்டிற்கு நடந்தார். (வீடு
சொர்க்கமாக மாறியிருந்தது தனிக்கதை)
No comments:
Post a Comment