மனம் என்றாவது குழம்பும்போதும், இனம் புரியாமல் வருந்தும்போதும்,
விரக்தி நிலை தோன்றும்போதும் பாபா
மாஸ்டருக்கு போன் செய்து பேசுவது உண்டு. அதுபோல என்னிடம் வரத்தோன்றினால் உடனே மனம்விட்டுப் பேச அவரும் புறப்பட்டு வந்துவிடுவார். இந்த முறை பாண்டிச்சேரி பாபா மாஸ்டரை தரிசித்து வருவதாகக் கூறிவிட்டு ஸ்ரீதரனுடன் சென்றிருந்தேன்.
பிள்ளைகளுக்கு உடைமைகளை அளித்துவிட்டு தனிமையில் வாழ்வதற்காக அவர்
வேறு இடம் குடிபெயர்ந்த பிறகு
முதன்முறையாக தரிசிக்கச்செல்கிற பயணம் இது. பயணமல்ல யாத்திரை. அந்தக் காலத்தில் இப்படி வானப்பிரஸ்த நிலையைக் கடந்தவர்கள் காட்டுக்குச் செல்வர்.
இப்போது காடேது? ஆகவே, பந்த பாசங்களை சற்று தள்ளி வைத்துவிட்டு இறைவன் மீது இணைப்பு ஏற்பட ஞானியர் ஒதுக்குப்
புறமாக இடம் அமைத்து வாழ்வர். அப்படித்தான் பாபா மாஸ்டர். தூரத்திலிருந்து தனது
இல்லத்தை அடையாளம் காட்டுவதற்காக மாடியிலிருந்து கை அசைத்தார். தெருவுக்கு வந்து அழைத்துச்
சென்றார். இந்த முறை அம்மா
உணவு தயாரித்து எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர்களை தரிசித்த பிறகு ஆன்மிக விஷயங்களை
போதித்தார்.
இறைவன் தனது சேவைக்கு எல்லோரையும் தேர்வு செய்வதில்லை. பூர்வ
புண்ணியத்தால் மட்டுமே ஒருவன்
இறைசேவைக்கு வரமுடியும். அப்படி வருகிறவன் சுயநலம் இல்லாதவனாக, தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சுற்றம் எனக்கருதாதவனாக இறைவனையே அனைத்துமாக நினைத்து, அவனுடைய உருவங்களாக உயிர் அனைத்தையும் நினைத்து சேவை
செய்வதற்குத்தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
காசு பணத்திற்காகவும், புகழுக்காகவும் சிலர் உடனிருந்தே துரோகம் செய்வதாக
நினைத்துக்கொண்டு உலா வருவார்கள். அவர்கள் மீது எந்த வருத்தமும் அடையக்கூடாது. நம் மீது ஏற்படும் பாவச்சுமைகளை ஏற்க ஒருவரை
இறைவன் நியமிக்கிறார்
என்றால் அது அத்தகையவர்கள் என்பதை புரிந்து அவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளவேண்டும்.
விமர்சனங்கள் வரும்போது காதைக் கொடுத்து கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது.
அதை சரிசெய்ய முயல்வதாக
நினைக்கவும் கூடாது. நம் வழியை நாம் பார்த்துக்கொண்டு செல்லவேண்டும்.
ஒருவர் செல்வத்தால் சேவை செய்ய முன்வரும் போது அவரை ஏற்றுக்கொள்;
ஆனால்
முக்கியத்துவம் தரக்கூடாது. ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க பணக்காரர் ஒருவர்
பூர்வ புண்ணியம் காரணமாக கயிலாயம் வந்தார். அப்போது நந்தி தேவர் வழியில் அமர்ந்திருக்க,
அவரிடம் நான் சிவனைத் தரிசிக்க வந்திருக்கிறேன்
என்று போய்க் கூறுங்கள் என்றார்
பணக்காரர்.
“ஐயா அவர் ஒரு முக்கியமான வேலையில் நீண்ட நேரம்
ஈடுபட்டிருக்கிறார், சற்று பொறுத்து இருங்கள்; வேலை முடிந்ததும் வருவார்” என்று நந்தி தேவர்
கூறியதைத் தொடர்ந்து நீண்ட நேரம் காத்திருந்தார் பணக்காரர்.
பொறுமை இழந்தவராக, “அப்படி என்னதான் வேலை செய்கிறார் அவர்?” எனக் கேட்டார்.
“ஊசியின் காதில் ஒரு யானையை நுழைத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் அந்த வேலை முடிந்தபாடில்லை” என்றார் நந்தி தேவர்.
பணக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. என்ன ஊசியின் காதில் யானையை
நுழைப்பதா? இது சாத்தியமா? இதனால்தான் இந்த சிவனை
பித்தன் பைத்தியம் என்றும்
கூறுகிறார்கள். இவனை நான் பார்க்கவந்ததே வீண் வேலை என்று திரும்பிச்சென்றுவிட்டார்.
இறைவனால் எல்லாம் முடியும் என்ற தெளிவு இருக்க வேண்டும். தெரியாமல்
வந்துவிட்டால் இப்படி திரும்பிப்
போகத்தான் வேண்டும். அதை உணரவும். இறைவனை அடையவும் பொறுமை மிக அவசியம். இதை செல்வந்தரிடம் காண்பது அரிதாகையால் அவர்களோடு
சேர்ந்திருப்பதை விரும்பக் கூடாது..
ஞான கர்வத்தோடு உலா வரும் மூடன் தன் ஆன்மாவுக்கே கேடு தேடிக்
கொள்கிறான். எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மேதாவியை பக்கத்தில் வைத்திராமல் தவிர்க்கவேண்டும்.
இப்படி நிறைய விஷயங்களை பழம் பாடல்கள் மூலம் மேற்கோள் காட்டி
விளக்கியவாறு பஞ்ச நாதன் என்ற சாயி பக்தர் உருவாக்கியிருக்கிற கோயிலுக்குப் போய்வரலாம் என
அழைத்துச்சென்றார், வெங்கட் ராயலு காரை ஓட்ட, ஸ்ரீதர், மாஸ்டர் ஆகியோருடன் சென்றேன்.
பெருங்களத்தூர் ஆலயத்தைப்போல சிறியதாக இருந்தாலும் அற்புதமான
கோயில். மனிதர் பார்க்க சாதாரணமாகத்
தெரிவதால் அவருக்கு நன்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. பாபா மாஸ்டரை தொடர்பு கொண்டு பக்தர்கள் இந்த ஆலய வளர்ச்சிக்கு எதேனும் செய்யலாம்.
மனிதர் ஆத்மார்த்தமாக பாபாவுக்குச் சேவை செய்கிறார் என்பது
தெரிந்தது. சாயி பக்தர்கள் இரண்டு மணியளவில்கூட வந்து பாபாவை தரிசித்துச் சென்றது அற்புதம். எனது வருகை பற்றி கேள்விப்பட்டு வந்த
சாயி பக்தர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள், அவற்றுக்குப் பதில் கூறினேன்.
திருப்தியான இந்த ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டு ஐயா
மற்றும் பஞ்சநாதனிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.
No comments:
Post a Comment