Wednesday, June 22, 2016

விக்ரக பூஜை தேவையா...

சிலை வழிபாட்டைத் தாண்டிவிட்டதாகவும், அதன் அவசியம் இல்லாமல் மனதில் இறைவனைப் பார்ப்பதாகவும் கூறியிருந்த நீங்கள், விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்து கோவில் அமைக்கிறீர்களே, இது முரண்பாடாகத் தெரியவில்லையா?
வி.முருகவேல், காஞ்சிபுரம்
சாயிபுதரன் பதில்கள்
தசரதனின் பிள்ளையாகப் பிறந்திருக்கும் ராமனே பரந்தாமன் என்பதை அறிந்து கொண்டு முனிவர்கள் பக்தி செலுத்தினார்கள். அவர் வனவாச காலத்தில் தண்டகாரண்யம் என்ற இடத்திற்கு வருகை தந்தார்.
ராமர் வரப்போகிறார் என்பதை அறிந்த அகத்தியரின் சீடரான சுதீஷ்ணர் என்ற பக்தர், ராமரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்.
பகவான் மீதுள்ள பக்தியால் தன்னை மறந்துஏதேதோ கற்பனை செய்துகொண்டிருந்தார். பக்தி மயக்கத்தில் பாதையை மறந்துவிட்டு அப்படியும் இப்படியுமாக நடந்துகொண்டே இருப்பார். சிலவேளை தன்னை மறந்து பாடி ஆடுவார். எப்படியும் ராமரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் மனதில் இருந்தது.
தண்டகாரண்யத்திற்கு வந்த ராமர், மறைவாக நின்று இதை கவனித்து சுதீஷ்ணரின் உள்ளத்தில் தோன்றினார். இதுவரை நடந்துகொண்டிருந்த ரிஷி, நிலையாக அமர்ந்துவிட்டார். தன்னுள் இருக்கும் ராமரை அப்படியே பார்த்துப் பார்த்து சிலிர்த்துக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் ராமர் தனது தம்பியுடனும் மனைவியுடனும் முனிவர் முன் வந்து நின்று, நெடு நேரம் அவரை எழுப்பிக்கொண்டிருந்தார். உள்ளத்தில் ராமர் மீது கவனம் இருந்ததால் வெளியே எதுவும் கேட்கவில்லை.
ராமர் அவருடைய உள்ளத்திலிருந்து வெளியே வந்ததும், முனிவரின் நிஷ்டை களைந்தது. கண் விழித்தார். தன் எதிரில் இப்போது ராமர் நிற்பதைப் பார்த்துப் பரவசப்பட்டார். தனது தவம் பலித்ததாகப் பூரித்தார்.
உள்ளத்திலிருந்த இறைவனை தியானிக்கும்போதும் பரவசம், அவனையே உருவச்சிலையாக வெளியே பார்க்கும்போதும் பரவசம். இதுதான் பக்தனின் நிலை. உள்ளத்தில் உள்ள இறைவனே உருவச்சிலையாக நிற்கும் நிலையில் அதை சிலையென்று பார்ப்பதில்லை, இறைவன் என்றே உணருகிறேன். ராமன் என்றோ, சாயி என்றோ இரண்டு நிலை என்று எதுவும் தெரியவில்லை. இரண்டும் ஒன்றாகவே உணருகிறேன்.
இறைவனைத் தேடிப்  போக நினைப்பேன். அவரை சிலையாகப் பார்த்தபிறகு, இங்கிருக்கும் போது எங்கு போய் அவரைத் தேடுவது என வாளாயிருந்து விடுவேன். சிலையாய்ப் பார்க்க முடியாத நேரத்தில் எனது மனதில் பார்த்துக் கொள்கிறேன்.
ராமனை தரிசித்தவர்கள் 24 மணி நேரமும் ராமனுடன் இருக்கவில்லை. ஆனால் நாள் முழுக்க அவனையே நினைத்துக்கொண்டிருந்தார்கள்.     சிலையாய்ப் பார்ப்பது தரிசனம்; மனதில் பார்ப்பது தியானம்.
பகவானுக்கு சகுணம், நிர்குணம், உருவம், அரூவம் என்று பல நிலைகள் உண்டு. எனக்கு அவசியம் இல்லை என்றுதான் சொன்னேனே தவிர, அவை இல்லை என்று சொல்லவில்லையே! நான் மேல் நிலைக்கும் போவேன், கீழ் நிலையிலும் இருப்பேன். இது சகஜ யோகம், எல்லோருக்கும் சாத்தியமாகாது.
கோயில்களை நான் எனக்காக நிர்மாணம் செய்யவில்லை, மற்ற பக்தர்கள் பலனடைய வேண்டும் என்பதற்காகவே செய்கிறேன். இதை உணர்ந்துகொண்டால் போதும். குழப்பம் தீர்ந்து விடும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...