Tuesday, June 14, 2016

நம்பினால் அற்புதம் கிடைக்கும்

அன்புள்ள குழந்தாய், ஒரு குட்டிக்கதை சொல்கிறேன் கேள்.
அது ஒரு நீர்நிலை, அங்கு நிறைய மீன்கள். கரையில் கொக்குகள், நண்டுகள் மற்றும் ஆமை போன்றவை இருக்கின்றன. தண்ணீரில் உள்ள மீன்கள் இவற்றைப் பார்த்து தன் குஞ்சுகளுக்கு இவையெல்லாம் ஆபத்துமிக்கவை இவற்றை விட்டு விலகி இருக்கவேண்டும் என எச்சரிக்கைச்செய்கின்றன. அவை எச்சரிக்க மறந்துவிட்ட ஒரு விஷயம், உங்களைப் போல மீன் குஞ்சுகளை எங்களைப் போல வளர்ந்த மீன்கள் பிடித்துத்தின்றுவிடும் என்பதுதான்.
விஷயம் தெரியாத ஒரு மீன் குஞ்சு தன்னை வளர்த்துக்கொள்ள இரை தேடிக் கொண்டிருக்கிறது. இதை சாப்பிட்டால்தான் பசிபோகும் என நினைத்த ஒரு பெரிய மீன், இந்த சிறிய மீனைப் பிடிக்கப் பாய்கிறது. தனக்கு என்ன நேரிடப்போகிறது என்பதை உணர்ந்த மீன் குஞ்சு தப்பிக்க விரைந்து ஓடுகிறது. இதுதான் கதை.
அந்த மீன் குஞ்சு தப்பித்ததா? இல்லையா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
தன்னைப் பிடிக்க வரும் ஆபத்திலிருந்து தப்பி ஓடினால் உயிர்பிழைக்கலாம் என அந்த மீன் குஞ்சு நம்பி ஓடுகிறதே அந்த நிலைக்குப்பெயர்தான் நம்பிக்கை. அந்த நம்பிக்கை அதற்கு அதிகம் இருந்தால் நிச்சயம் தப்பித்துவிடும்.
சற்று தளர்ந்து இனி ஓடமுடியாது என நினைத்து சோர்ந்துவிட்டால் இரையாகி மடிந்துவிடும். மீன் குஞ்சு மாதிரி இருக்கிற உன்னுடைய நிலை எப்படி?
பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஓடுகிற நீ வெற்றிகரமாக ஓட்டத்தை முடிப்பாயா? அல்லது இடையில் துவண்டுவிடப் போகிறாயா?
ஒரு சிறிய மீன் குஞ்சுக்கும் நம்பிக்கையைக்கொடுக்கிற நான், உன் பின்னே இருக்கும்போது, உன்னைப் பிடிக்க வருகிற பிரச்சினை என் பின்னே இருக்கிறது என்பதை உணர்ந்துகொள். உனக்கும் பிரச்சினைக்கும் நடுவே நான் இருக்கிறேன். என்னைக் கடந்துதான் பிரச்சினை உன்னை பாதிக்கமுடியும். ஆனால், நான் அவ்வாறு அது உன்னைத் தாக்க விட்டுவிடுவேனா என்ன?
ஒருபோதும் விடமாட்டேன். ஏனெனில் நீ என் குழந்தை. நான் உனக்குப் பெயர் சூட்டினேன். உன்னைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறேன். உன்னைப் பாதுகாத்துப் புடம்போட்டு வந்து இருக்கிறேன். கிரக மாற்றங்களில் இருந்து உன்னைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்.
நம்பிக்கையை விட்டுவிடாதே, இனியும் அப்படித்தான் காப்பாற்றுவேன். உனக்கு இன்னொரு கதையைச் சொல்கிறேன், அதையும் கவனத்தோடு கேள்.
ஒரு தம்பதியர் கூட்டாகப் பேசி ஒரு தொழில் தொடங்க ஆசைப்பட்டார்கள். பெரிய அளவில் முடியாது, சின்ன அளவில் செய்யலாம் என யோசித்துத் தொடங்கினார்கள். முடிவெட்டுகிற ஒரு கடையை ஆரம்பித்தால் குறைந்த பட்சம் முகச்சவரம் செய்யவாவது ஆட்கள் வருவார்கள்.
பக்கத்தில் பெரிய நகரம் இருக்கும்போது ரெடிமேட் துணிக்கடை வைக்கிறேன் என்று வைத்தால், எப்போதாவதுதான் ஆட்கள் வருவார்கள்.
காரணம் என்னவெனில், விலையை ஒப்பிட்டுப்பார்ப்பார்கள், அவர்களுக்கு தூரம் முக்கியமல்ல, விலைதான் முக்கியம். அங்கே நூறு ரூபாய்க்குத்தருகிறார்கள், இங்கே அதைவிட பத்து ரூபாய் அதிகம் என்பார்கள்.
இப்படி ஒவ்வொன்றையும் வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதால் நமது தொழில் வளர்ச்சி அடைவது கஷ்டம். இதே மாதிரிதான் கவரிங் நகைக்கடை வைப்பது. இதெல்லாம் அரிதாக ஒருமுறை வாங்கிச் செல்கிற விஷயங்கள்.
இப்படி மற்ற இடத்தில் மலிவாகக் கிடைக்கிற பொருட்களை நாமும் விற்பனை செய்யலாம் என நினைத்து ஆரம்பித்த தொழில் முதலில் நன்றாகப் போவது போலத் தெரிந்து பிறகு இழுத்துக்கொண்டது. அந்தத் தம்பதியர் தொழிலை பெருக்குவதற்காக என கடனை வாங்கினார்கள். வயிறு இருக்கிறதே, அதை சரிக்கட்டவும் இதிலிருந்தே எடுத்தார்கள்.
இப்படி செய்யச் செய்ய சிறுக சிறுக வட்டி கட்டி, கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு மீதி என்ன இருக்கிறது என்று பார்த்தால் போட்ட முதல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருந்தது. கொஞ்சம் கடன் வாங்கலாம் என நினைத்து அவர்கள் மேலும் மேலும் கடன்பட்டு கடனை அடைக்க முடியாத நிலையிலும், தொடர்ந்து தொழிலை நடத்தமுடியாத நிலையிலும் வந்து நின்று கொண்டார்கள். கடன் வாங்குகிற வாய்ப்பு போய், திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை வந்த பிறகு, எதை விற்கலாம்? எப்படி பிழைக்கலாம்? இனி என்ன செய்யலாம் என அஸ்திவாரமே ஆட்டம் கண்ட நிலைக்குப் போய்விட்டார்கள்.
வீட்டில் நிம்மதியில்லை, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்கிற நிலை. உங்கள் வீட்டு ஆட்கள் என்ன செய்தார்கள் என மாற்றி மாற்றி கேட்கிற நிலை என போய்க்கொண்டிருக்கிறது. அடிப்படைத் தேவைக்கு பற்றக்குறை வரும் போதுதான் தவறுகளின் அளவு தெரியவரும்.
இதற்குத் தீர்வு என்ன? வேறு வழியில்லை.. என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர்கள் கேட்டதும் உடனே தூக்கிக் கொடுக்க முடியுமா? அவர்களது தகுதியை மேம்படுத்திய பிறகுதான் தருவேன்.
அதற்கு முன் அவர்கள் தங்கள் தவறுகளை குடும்பத்தோடு உட்கார்ந்து பேசி, தவறுக்கு வருந்தி இனி இந்தத் தவறு நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பது வரை பேசி, அதன் பிறகு என்னிடம் சரணடையவேண்டும்.
நான் உடனே வேலையை ஆரம்பித்துவிட்ட பிறகு அடிக்கடி என்னிடம் வந்து, “அப்பா.. அப்பா என புலம்பக்கூடாது. பொறுமை காக்கவேண்டும்.
இன்னொரு கதையையும் சொல்கிறேன். ஓர் ஊரில் இரக்க சுபாவமுள்ள மனிதன் இருந்தான். ரொம்ப நல்லவன். வாழ்ந்துகெட்டு பிறகு நல்ல நிலையை நோக்கி முன்னேறி வருபவன். அப்படியில்லாவிட்டால், உன்னைப் போல ரொம்ப நல்லவள் என வைத்துக்கொள்ளேன்.
யாராவது கெஞ்சிக் கேட்டாலோ, அழுது புலம்பினாலோ மனம் இரங்கி இருப்பதைக் கொடுத்து விடுவதும், கடன் வாங்கித் தருவதும் வாடிக்கை. இவரிடம் போய்க் கேட்டால் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி விட்டநிலையில், பிறர் என்ன செய்வார்கள்?
கொஞ்சம் வாங்கினால் திருப்பித் தருவார்கள், நாணயமானவர்கள் என்ற நம்பிக்கையில் அவர் அதிகம் கேட்டதும் உடனே பெரிய தொகையை அல்லது நகையைக் கொடுத்தால் அதோடு இவர் கதை முடிந்தது என்று சொல்லும் வகையில் அந்த நல்ல மனிதனை மோசம் செய்துவிட்டார்கள்.
நான் ரொம்ப நல்லவனாயிற்றே எனக்கா இந்த கதியைக் கொடுத்தாய்? எப்படியாவது என் பணத்தை, என் பொருளைத் திருப்பிக் கொடு என என்னிடம் வந்து அடிக்கடிக் கேட்டால் நான் என்ன சொல்வது?
நல்லவனுக்கு செய்வேன், முட்டாளுக்கு எப்படி செய்வது? என நான் காதை பொத்திக்கொண்டு விடுவேன்.
என்னப்பா இது, இரக்க மனம் உள்ளவன், நல்லவன் என சொல்லிவிட்டு முட்டாள் என நீங்களே சொன்னால் எப்படி? எனக் கேட்கலாம்.
தன்னுடைய ஆயுதத்தையும் தனது கைப்பொருளையும் பிறரிடம் தருகிறவன் பேதை, ஒன்றுக்கும் உதவாத பதர். அவன் ஒருவருக்கு ஒரு பொருளை தரும் முன்பு தன் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்கவேண்டும். அதிகாரியாக இருந்தால் சக அதிகாரிகளிடம் பேசி, வாங்குபவர் தகுதியை ஆராய வேண்டும். அவருக்குத் திருப்பித் தரும் சக்தியிருக்கிறதா? வேறு வகையில் பொருள் இருந்தால் ஜப்தி செய்ய வழியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இதையெல்லாம் பார்க்காமல் நல்லவர் என்று மட்டும் நம்பிக் கொடுத்தால் நீ கெட்டவன் ஆகி விடுவாய் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வெறும் ஐம்பது ரூபாய் தேவை என அடகுக்கடைக்குப் போனால்கூட, ஐம்பது ரூபாய்தானே இந்தா வைத்துக்கொள் என எடுத்துக் கொடுத்து விடமாட்டார்கள். அதற்கு ஈடான ஒரு பொருளை வாங்கிக்கொண்டு, அதற்கு கையெழுத்து, சாட்சி கையெழுத்து என வாங்கி வைத்துக்கொண்டு அதன் பிறகுதான் தருவார்கள்.
வெறும் ஐம்பது ரூபாய்க்கே இப்படிஎனில், லட்சக்கணக்கிலோ, லட்சக் கணக்கில் மதிப்பு உடைய பொருளையோ தரும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்? வட்டியை நாணயமாகத் தந்துவிடுவார்கள் என நம்பிக் கொடுத்தால் முதலீட்டை இழந்து விட வேண்டியதுதான்! பணம் போனால் போவது ஒரு பக்கம் இருக்கட்டும். வாங்கியவர் ஆணாக இருந்து கொடுப்பவர் பெண்ணாக இருந்தால், எனக்கும் அவளுக்கும் ஒரு தொடர்பு இருந்தது, அதனால்தான் இவ்வளவு தொகையைத் தந்தாள் என சொல்லிவிடுவான்.
பணமும் போய் மானமும் போய்விடும். பணம் வாங்கியவள் பெண்ணாக இருந்து, தந்தவன் ஆணாக இருந்தால், என்னிடம் அவர் தகாத முறையில் நடக்கப் பார்த்தார் என ஒரு பொய்யை போட்டுவிட்டால், நீ பணத்தையும் மறந்துவிட வேண்டியதுதான், மரியாதையையும் இழந்துவிட வேண்டியதுதான்.
அப்பாவும் பிள்ளையும் ஏமாற்றிக் கொள்கிற இந்தக் காலக்கட்டத்தில் பிறரை நம்புபவன் நல்லவன் கிடையாது. அவன் இந்த வேலையைச் செய்திருக்கக் கூடாது. செய்தாகிவிட்டது, இனி என்ன செய்வது அப்பா என என்னிடம் ஓடி வந்தால், உடனே செய்துவிட மாட்டேன். நாம் செய்தது தப்பு என மனதார ஒப்புக்கொள்ளும்வரை வேலையைத் தொடங்க மாட்டேன். ஒப்புக்கொண்டதும் சிறிது சிறிதாக எதிராளியை மாற்றி பொருளை மீட்டுத் தருவேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அப்பா தப்பு செய்து விட்டேன் என தப்பை என்முன் சொல்லத்தான் வேண்டும். அப்போதுதான் அடுத்தமுறை தப்பு செய்யத்தயக்கம் வரும்.
சரி குழந்தாய், உன்னிடம் ஒரு விஷயத்தைப்பேசி இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன். ஒரு மீன் எப்படி தூண்டில் முள்ளில் சொருகப்பட்ட கண்ணியை இரை என்று அறியாமையால் நம்பி விழுங்கி விட்டுத் தவிக்கிறதோ அப்படித்தவிக்கும் மக்களைப் பார்க்கும்போது, இறைவா இவர்களை இந்த நிலையிலிருந்து மீட்டு எடுத்துவிடு என வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.
அவர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட தெரியாமல் செய்துவிட்டேன் என்று கூறுகிற விஷயங்கள் பல உண்டு. இவற்றின் பலன் கஷ்டம், பிரச்சினைகள், கடன் என்றாகிவிடுகிறது.
இவர்கள் இதிலிருந்து விடுதலையாவதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி உன்னப்பன் சாயியின் திருவடிகள் மீது மாறாத நம்பிக்கை வைத்து, அதை இறுகப் பிடித்துக்கொள்வதுதான்.
சாயியின் திருவடிகளை இறுகப் பிடித்துக்கொள்ள மூன்று உபாயங்கள் உள்ளன. என்னை மனதாற ஏற்றுக்கொண்டு என் மீது நம்பிக்கை வைப்பது, நம்பிக்கை கலந்த பக்தி செலுத்துவது, நான் செய்கிற அற்புதத்தைப் பெற பொறுமையோடு காத்திருப்பது ஆகியவையே இந்த மூன்று உபாயங்கள்.
கழுத்துவரை வெள்ளம் வந்துவிட்ட பிறகு எப்படி அவர் மீது நம்பிக்கை கொள்வது எனக்கேட்கலாம். கழுத்துவரையல்ல, தலையை மூழ்குகிற அளவு வெள்ளம் வந்தபோதுகூட மூச்சை அடக்கிக்கொண்டு சாயி, என்னைக் காப்பாற்று என மனதில் வேண்டினால் நிச்சயம் நான் காப்பாற்றுவேன்.
இந்த நேரத்தில் காப்பாற்று எனக் கதறும் நிலைதான் நம்பிக்கை உருவாகிற நிலை. நான் உன்னை வெளியே எடுத்த பிறகு அடுத்து வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க, சுவாமி என்னைக் காப்பாற்று எனத் திரும்பத் திரும்பக் கதறுங்கள்.
வெள்ளத்தை வடியச் செய்த பிறகு என்னைக்கூப்பிடுகிற நிலைதான் பக்தி. வெள்ளம் வடியும் வரை அவசரப்படாதே. நான் உங்களை விட்டு வெள்ளத்தை வடியச்செய்து முற்றிலும் காப்பாற்றுவேன். அதுவரை பொறுத்துக் கொண்டும் சகித்துக் கொண்டும் இருப்பதுதான் பொறுமை.
இப்போதெல்லாம் புதிதாகக் கல்யாணம் ஆகிற பெண்களுக்கு முதலிரண்டு மாதங்களிலேயே வருகிற பிரச்சினைகள் வித்தியாசமான கோணத்தில் பயணித்து அவர்களுக்கு குடும்ப வாழ்வில் ஒரு பயத்தை உண்டாக்கிவிடுகிறது.
எப்படியெனில், திருமணம் ஆனதும் தம்பதியர் மகிழ்ச்சியாக தனிமையில் இருக்கவிரும்புவார்கள். அப்பா, அம்மா, அக்கா, தம்பி போன்ற உறவுகள் இருக்கும் போது இதற்கு இடையூறு ஏற்படும்.
இதைத் தவிர்க்க, கணவனோடு நடைபெறும் சம்பாஷணைகளில் புதுப்பெண் எதையாவது சொன்னால் அதை அப்படியே புதுக்கணவன் தன் தாயாரிடம் ஒப்புவித்துவிடுவான். மகனைப் பிரிக்க இப்போதே சதி செய்கிறாள் என்பது போன்ற பிரச்சினைகள் எழும்பி, பையனின் பெற்றோர் மட்டுமின்றி உறவினர்களும் அந்தப்பெண்ணை குற்றவாளி போல விசாரிக்க ஆரம்பிப்பார்கள். அவளை காமத்திற்கு அலைபவள் என்பது போலப் பேசுவார்கள். அல்லது குடும்பத்திற்கு லாயக்கற்றவள் என்பதுபோலக் கூறுவார்கள். பெரிய பஞ்சாயத்தே நடக்கும்.
இந்த நிலையில் அப்பெண்ணிற்கு ஆயிரம் ஈட்டிகளால் குத்துகிற அவமானம் ஏற்படும். இது என்ன வாழ்க்கை என நினைத்து அந்த வாழ்க்கையை விட்டு ஓட நினைப்பாள். பிரச்சினை மேலும் பெரிதாகும்.
இப்படிப்பட்ட நிலையை அனுபவிக்கும் பெண்களுக்கு நான் கூறுகிற உபாயம் என்னவெனில், மகளே, திருமணமான புதிதில் இதெல்லாம் சகஜம். புதுப்பையனுக்கு ஏற்படுகிற பயம், தன் குறையை வெளியே காட்டினால் தன்னைப்பற்றிய தவறான அபிப்பிராயம் உருவாகிவிடும் என்ற எண்ணம், தன் விருப்பத்தை மனைவி சொன்னதாகச் சொன்னால் பெற்றோர் அனுமதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு போன்றவை அந்த விஷயத்திற்குள் இருக்கும்.
இதைப் புரிந்துகொள்ளாத பெற்றோர், தங்கள் குழந்தைகளின் சந்தோஷத்தை சந்தேகத்துடன் பார்த்து இடையூறு செய்யும் விதமாக பெண்ணை குற்றவாளி கூண்டில் நிறுத்துவார்கள்.
இதனால் உனக்கு உனது கணவன் மீது கோபம் ஏற்படும். கையால் ஆகாதவன், கோழை, ஆண்மையில்லாதவன், அம்மாவின் பிடிக்குள் கிடப்பவன் என்றெல்லாம் நினைக்கத் தோன்றி அவன் மீது வெறுப்பு உண்டாகிவிடும்.
இப்படிப்பட்டவனுடன் வாழ்வதைவிட, உடனே விவாகரத்து வாங்கிக்கொள்ளலாம் என நினைத்து பெற்றோர் வீட்டுக்கு வந்துவிடுவாய்.
உனது இந்த நிலையைப் பார்த்து உனது பெற்றோர் தவிப்பார்கள், தவறு செய்து விட்டோம் எனப் புலம்புவார்கள். அதன் பிறகு உனது எதிர் காலம் எப்படியாகுமோ என பயப்படுவார்கள்.
ஆகவே, நீ பொறுமையாக இரு. இதெல்லாம் சகஜமப்பா என்பார்களே, அப்படி அவற்றை சகஜமாக எடுத்துக்கொள்ள உனது மனத்தைப்பழக்கு.
நீ என்னதான் நேசித்து நேசித்து உருவாக்கிய வாழ்க்கை என்றாலும் கணவனுடன் சேர்ந்து வாழ, கண்டிப்பாக ஒரு வருட காலமாவது ஆகும்.
அதுவரை நீ அந்த வீட்டாரைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கு. யார் எப்படி என அறிந்துகொள். அவர்களுக்கு ஏற்ப உன்னை மாற்று. உறவுகள், தெரிந்தவர் போன்றவர்களை நீ மதிக்க வேண்டும் என்ற நினைப்பில் அவர்கள் உன்மீது அதிகாரம் செலுத்த நினைப்பார்கள். நீ கொஞ்சம் தயக்கம் காட்டினாலும் உன்மீது குறை சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.
இந்த மாதிரி தொல்லைகள் தொலைந்திட சுமார் ஒரு வருட காலமாவது ஆகும். நீயும் உன் வீட்டாரை விட்டுக்கொடுக்க முடியாது என்பதால் உனது நிலை மாறவும் நேரம் எடுக்கும். இதையெல்லாம் சரிப்படுத்தி வாழ்வதற்கு முயற்சி செய். அவசரப்பட்டு வாழ்க்கையை விட்டு ஓடிவிடலாம் என நினைக்காதே. உனது வாழ்க்கையை யாரும் பறித்து விட முடியாது என்பதில் நம்பிக்கைக் கொள்.
இதெல்லாம் உருவாகி உனது வாழ்க்கை தப்பிக்க உன் தந்தையாகிய இந்த பாபா மீது நம்பிக்கை வை. அப்பா, என் வாழ்க்கையைக்காப்பாற்று, என் மானத்தை காப்பாற்று. இவர் களிடம் எனக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதை தவிர்த்துவிடு என வேண்டிக் கொள்.
அப்போது சர்வ ரட்சகனான இந்த சாயிபாபா உன்னை குடும்பச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றிவிடுவார். புத்தகத்தில் படிக்கிற நிலையும், சினிமாவில் பார்க்கிற நிலையும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது. எதையும் நேரடியாக எதிர்கொள்ளும் போது ஏற்படுகிற பயம், நடுக்கம், தோல்வியில் முடிந்துவிட்டால் நம்மை மதிக்கமாட்டாளோ என்ற அச்சம் ஆகியவற்றால் ஆண் மகன் தன்னை அம்மா பிள்ளை போல ஆரம்பத்தில் காட்டிக்கொள்வான். அந்த உணர்விலிருந்து அவன் மீண்டு வரும்வரை பொறுமையோடு காத்திரு. இது உனக்குப் பெருமை சேர்க்கும்.
அன்புடன் அப்பா
சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...