Friday, June 17, 2016

தேர்வு எப்படி.....



ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும்.
              இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
            அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம் ரகசியமான குரலில் , "தம்பி. நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் . எனவே போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்" என்றான். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
         சமையல்காரன் மீண்டும் சொன்னான். "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால் காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி. இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?" என்றான்.
           சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன் அவசரமாய்ச் சொன்னான் , " ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய பதவி . தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால் நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி வேண்டாம்.  அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என் உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்" என்றான்.
             சமையல்காரன் புன்னகைத்தபடி , " கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக  நான் உனக்கு நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
              இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்காரனின் உதவியாளன் , மற்றுமுள்ள போட்டியாளனிடம் அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக் கொண்டான்.
             போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும் கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான். உதவி சமையல் காரனும் , " காரியத்தை சிறப்பாக முடிப்பேன். நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி "  என்றான்.
               இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள். பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில் எழுந்து போட்டிக்குக் கிளம்பினான். அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட யாருமே வந்திருக்கவில்லை.
                மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து ,
" புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித் தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார் . அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல் தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.
            மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.
"மகனே! நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா ? உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது. காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப் பதவியைக் கொண்டு மேலும்  சம்பாதிக்கத்தான் முயல்வார்கள். தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில் அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே விரட்டப்பட்டான். அந்தச் சூழலிலும்  உண்மையாய் நடந்து கொண்ட நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்" என்றார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...