Friday, June 17, 2016

எளிய மோட்ச மார்க்கம் பாகம் 3

இனி நான் செய்ய வேண்டுவன:
உயர்ந்த ஜாதியான் என்று சொல்லிக் கொண்டு, என்னிலும் தாழ்ந்த ஜாதியான் என்ற நிலையில் தோன்றியிருந்தாலும் குருவே, உன்னிடம் பேதம் பார்க்காமல் என்னிலும் உயர்ந்தவராகவே உணர்கிறேன். எனது ஆசிரமங்களை விட தங்கள் ஆசிரமங்கள், ஆசார பேதங்கள் குறைவானதாக எனக் கருதாமலும், தங்களது எளிமையை அற்பமாக நினைக்காமலும், தங்கள் குலம், கோத்திரம் முதலியவற்றைப் பற்றிக் கருதாமலும் தங்கள் திருவடிகளைச் சரண் அடைந்து தாங்கள் அளிக்கிற ஞானத்தைப் பருகுவேன்.
வித்யையாகிய ஞானத்தைப் பெறுவதற்கு பெரு முயற்சியுள்ளவன், முதன்மையான ஞானத்தை சூத்திரனிடத்தில் இருந்தாகிலும், மோட்ச மார்க்கத்தை சண்டாளனிடத்தில் இருந்தாகிலும், குணவதியான பெண்ணை தாழ்ந்த குலத்திலிருந்தாகிலும் பெறலாம் எனவும், இவற்றால் எவ்வித தோஷங்களும் இல்லை எனவும் மநு தர்மம் கூறியிருப்பது போல ஏற்று, தாங்கள் எந்த வடிவிலிருந்து ஞானத்தை போதித்தாலும் ஏற்கிறேன்.
தத்துவ விசாரணை இல்லாதவர்களிடம் இறைவன் கண் காது மூக்கு முதலியவை உள்ளவன் போலவும், சம்சார தளைகளுக்கு உட்பட்ட படைத்தல் காத்தல் அழித்தல் என்பனவும், முக்குண தோஷம் உள்ளவனாகவும் தெரிகிறான். தத்துவ விசாரணை செய்தவர்களிடம் உருவம் அற்றவனாக எங்கும் நிறைந்த வடிவினராகத்தோன்றுகின்றான். தத்துவ விசாரணை இல்லாத பாமரர்களுக்குத் தூரமாகவும், விசாரணையால் தேடுகிறவர்களுக்கு அருகிலும் தோன்றுகிறான்.
எல்லா ஜீவர்களின் உடலிலும் சாட்சியாய்இருப்பவனாகிய இறைவன், அனைத்திலும் ஆத்மாவாய் வியாபித்து, மாயா பிரபஞ்சத்தில் உள்ளும் புறமுமாக நிறைந்திருக்கிறான். அப்படிப்பட்ட நிறையே இறையே சத்குரு தேவா,உன் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்.
குருவே உன்னைக் குறிக்கிற இந்த இரண்டு எழுத்துக்களில் கு என்பதை இருள் எனக்கூறுகிறார்கள். கு என்றால் வெட்ட வெளியாய் இருப்பது என்றும் அவயவங்கள் ஏதும் இல்லாதது என்றும், ரூபமற்றது என்றும் பொருள் உள்ளதை பிறருக்குப் புரியச் செய்யுங்கள். ரு என்றால் அஞ்ஞானத்தை அழிப்பது என்பதும், பரஞ்சோதி என்றும் பிறர் உணரச் செய்யுங்கள்.
நான் ஆத்ம விசாரணை செய்யும் அளவு தேர்ச்சியுள்ளவனாக என்னை மாற்றுங்கள். விசாரணை செய்யாததால் பந்தமும், விசாரணை செய்வதால் மோட்சமும் உண்டாகும். எனக்கு மோட்ச மார்க்கத்தை அநுக்கிரகம் செய்யுங்கள்.
(தொடரும்)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...