Sunday, June 19, 2016

கோயம்புத்தூர் பயணம்தமிழகத்தின் சிறந்த மக்கள் வாழ்வதும், சாயி பாபா வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிப்பதுமான கோயமுத்தூருக்கு ஸ்ரீ சாயி வரதராஜன் கடந்த மாதம் சென்றிருந்தார்.
கோவை மக்கள் மிக நல்லவர்கள் என்ற எண்ணம் சாயி வரதராஜனுக்கு உண்டு. அவர் மிகவும் மதிக்கிற கு.ராமச்சந்திரன், பத்மாவதி அம்மா, புஷ்பா, சிவநேசன் சுவாமிகள் என பலர் கோவையைச் சார்ந்தவர்கள். ஸ்ரீ சாயி தரிசனம் இதழுக்கு அதிக சந்தாதாரர்கள் உள்ள இடமும் கோவைதான்.
வேணுகோபால் (அடியேன்), ஸ்ரீதரன், ஆறுமுகம் அவருடன் ரயிலில் பயணித்தோம். அதிகாலையிலேயே கோவை சென்றடைந்த நாங்கள் எந்த பக்தரின் வீட்டிலும் தங்காமல் அறை எடுத்துத் தங்கி குளித்து முடித்து, காலை எட்டு மணியளவில் நாகசாயி மந்திர் சென்று பாபாவை தரிசனம் செய்தோம்.
தமிழ்நாட்டில் பாபாவுக்கு அமைந்த முதல் திருக்கோயில் இதுதான். பாபா நாக வடிவில் வந்து நின்ற இடத்திலேயே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தை தரிசிப்பதே மிகப் புண்ணியம் ஆகும் என்று கோயில் பற்றி கூறிய சாயி வரதராஜன், இங்கு எந்த பக்தரையும் பார்க்கவேண்டாம், நேரடியாக புஷ்பா அம்மா வீட்டுக்குப் போகலாம் எனக் கூறினார்.
சாயி தரிசனம் இதழை விற்பனை செய்து தரும் ஞானதேசிகன் என்ற பெரியவர் கோயில் வளாகத்தில் கடைவைத்திருக்கிறார். அவரைப்பார்க்கச் சென்றபோது, தூரத்தில் பெருங்களத்தூரிலிருந்து எனக்குத் தெரிந்த டிரைவர் ஒருவர் அங்கிருப்பதைப் பார்த்து, என்ன இவ்வளவு தூரம் எனக் கேட்டேன்.
மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக சென்றிருந்த காபி கடை மாமி குடும்பத்தார் நாகசாயி மந்திரில் சாயி தரிசனம் செய்வதாகச் சொன்னார். அவர் காட்டிய திசையில் பார்த்தபோது மாமி வீட்டர் பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சாயி வரதராஜனைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த மாமி வீட்டார், வேகமாக அவர் இருக்கும் இடத்திற்கு ஓடிவந்தார்கள். அவர்களுடைய மகளுக்குக் கோவையைச் சேர்ந்த மாப்பிள்ளையை மணமுடிக்க, சாயி வரதராஜனிடம் கேட்டபோது, நல்ல பையன், தாராளமாக முடிக்கலாம் எனக் கூறியிருந்தாராம்.
திருமணம் தடையின்றி நடைபெறுவதற்காக ஆயிரத்தோறு ரூபாயை பெருங்களத்தூரில் ஆசிர்வதித்துத் தந்து விட்டு வந்த அவர், மாப்பிள்ளை வீடு பார்க்க வந்திருக்கும் இடத்திலும் வந்து இருப்பது பாபா தங்களைத் தொடர்வது போலிருக்கிறது எனப் புல்லரித்தார்கள்.
இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் சிந்திய மாமி, பாபா எங்களைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?” எனக் கேட்டு நெகிழ்ச்சியடைந்தார்.
அவர்களை ஆசிர்வதித்துவிட்டு அருகில் பிஎஸ்என்எல் குடியிருப்பில் சாயி பக்தை புஷ்பா அவர்களது வீட்டிற்கு வந்தோம்.
சாயி வரதராஜன் வருகைக்காகக் காத்திருந்த புஷ்பா அம்மையார், தன் குடும்பம் சார்பாக வரவேற்று உணவு அளித்து உபசரித்தார். கீரப்பாக்கம் மலைக்கோயிலுக்கு தண்ணீர் இறைக்கும் புதிய மோட்டார் ஒன்றை வாங்கித் தந்தார்.
துடியலூரிலிருந்து பத்மாவதி அம்மையார் தனது குடும்பத்தோடு சாயி வரதராஜனை தரிசிக்க வந்திருந்தார். சென்னை திரு.வி.க. நகரிலுள்ள சாயி அடியார் சக்குபாய் அம்மா அவர்களின் அக்காவான பத்மாவதியைக் கண்டதும் அவர் திருவடிகளை வணங்கி ஆசிபெற்றார்.
கோவை பக்தர்களை அங்கேயே சந்தித்து விட்டு, மருதமலை அடி வாரத்தில் இருக்கும் சாயி பாபா ஆலயத்திற்குச் சென்றார். நாங்களும் உடன் சென்றோம்.
அந்த ஆலயத்தை உருவாக்கிய தவத்திரு. லட்சுமணன் அவர்கள் சமீபத்தில்தான் சமாதி அடைந்துவிட்டார் என்ற தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். உன்னதமான சேவை சாதித்துவந்த அந்தப் பெரியவர், பாபாவுக்காக தனது இல்லத்தைத் துறந்து, தான் உருவாக்கிய ஆலயத்திலேயே துறவி போன்று வாழ்ந்துவந்தார்.
தினந்தோறும் காலை முதல் அன்னதானம் வழங்கவேண்டும் என்பதை நியதியாக வைத்து இருந்த இவர், பக்தர்கள் வயிறாற உண்ண வேண்டும் என்பதற்காக பலவித காய்கறி கூட்டு, பொறியல், ரசம், மோர் சகிதம் தினமும் அன்னதானம் செய்து வந்தார்.
பெற்றோரை விட்டு வந்து கல்லூரியில் தங்கிப்படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்த உணவு அமிர்தமாகும்.
இப்படி சேவை சாதித்த அவர், சாயி வரதராஜனை தங்கள் ஆலயம் வந்து செல்ல வேண்டும் எனக் கேட்டிருந்தார். அவர் வரும்போது தெய்வநிலைக்குப் போய்விட்டது சற்று வருத்தம் தருவதாக இருந்தது.
முன்னதாக இந்த ஆலயப் பொறுப்பை நிர்வகிக்கும் நிர்வாகி ஐயா அவர்கள் சாயி வரதராஜனுக்கு ஆலயம் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
அங்கு சத்சங்கம் பிரார்த்தனை ஆகியவற்றை நிகழ்த்திய குருஜி சாயி வரதராஜன், ஆலய வளர்ச்சிக்குத் தன்னாலான உதவிகளைச்செய்வதாக வாக்களித்துவிட்டு, பெரிய நாயக்கன் பாளையத்திற்குப் புறப்பட்டார்.
பெரிய நாயக்கன் பாளையம் மிகப்புண்ணியம் செய்த பூமி. சாயி பாபா போன்று சீரடியில் மிக நீண்ட காலம் சேவை சாதித்த சிவநேசன் சுவாமிகள் பிறந்த ஊர். அந்த ஊரில் பாபாவுக்கு ஆலயம் அமைத்து இருக்கிறார்கள். அதிலுள்ள சிவநேசன் சுவாமிகள் விக்ரஹம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவநேசன் சுவாமிகள் பயன்படுத்திய சலங்கை இங்கே வைக்கப்பட்டுள்ளது. பழைய சாவடி எப்படியிருக்குமோ அதேபோன்ற தோற்றத்தில் இந்த ஆலயத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
சாயி பக்தர்கள் சிவநேசன் சுவாமிகள் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திருப்பார் என்று தான் சாயி பக்தர்கள் நினைத்திருப்பார்கள். உண்மையில் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சுவாமிகள்.
அவருக்குப் பெரிய அளவில் தோப்புத் துரவுகள் அந்த ஊரில் உள்ளன. இவை அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் துறவு மேற்கொண்டு இருக்கிறார். பல கஷ்டங்களை அனுபவித்து, சத்குரு நிலைக்கு உயர்ந்தார் சுவாமிகள்.
சிவநேசன் சுவாமிகள் பற்றி மிகப் பெரிய அளவில் வெளிக்கொண்டு வந்தது சாயி தரிசனம் மாத இதழ். அதுவும் சாயி பக்தர் கு. இராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால்தான் தமிழகம் மட்டுமின்றி உலக மக்கள் வரை அவரது சமாதி மந்திருக்குப் போகிறார்கள்.
சத்சரித்திரம் போல சுவாமிகளின் வரலாற்றை உருவாக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தார் ராமச்சந்திரன். திடீரென அவரது மகன் அகாலத்தில் போய் விட்டதால் சற்று அயர்ந்து இருக்கிறார். பாபா மீண்டும் இவரைக் கொண்டு வந்து சேவையை வாங்கிக் கொள்வார் என சாயி வரதராஜன் அங்கு கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.
சுவாமிகள் பிறந்த ஊரையும், சுவாமிகளின் அண்ணன் மகன் ராஜூ அவர்களையும், இந்த ஆலய வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகிற சாயி பக்தர்களையும் தரிசித்து நீண்ட நேரம் அளவளாவினார்.
அனைவருக்கும் உதிப்பிரசாதம் அளித்துக்கிளம்பும்போது ஒரு பெண்மணியிடம், நீங்கள் என்னென்ன சமைப்பீர்கள்? எனக் கேட்டார். ஏன் கேட்கிறீர்கள்? என அந்த அம்மையார் கேட்ட போது, நீங்கள் நன்றாக சமைப்பீர்கள் என்கிறார் பாபா என சாயி வரதராஜன் கூறியதும், அனைவருக்கும் ஆச்சரியமாகிவிட்டது.
பாபா ஆலயம் அமைந்ததிலிருந்து அந்த அம்மையார்தான் பாபாவுக்குத் தினமும் நைவேத்தியம் செய்துபடைக்கிறாராம். இதைக் கேட்டு மகிழ்ந்த சாயி வரதராஜன், அந்த அம்மையாரை அழைத்து உச்சி மோர்ந்து வாழ்த்தினார்.
அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்ட பிறகு, இன்னொரு சாயி பக்தை இல்லம் சென்று பிரார்த்தனை செய்தார்.
அவருக்காக நாங்கள் எடுத்திருந்த சாதாரண விடுதி அறையில் இரவு தங்கினார். அதி காலை யில் சுந்தராபுரம் என்ற இடத்தில் சிவ ராம கிருஷ்ணன், குணசேகரன், ராமராஜ் ஆகிய பக்தர் இல்லங்களில் பிரார்த்தனை செய்தார்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சாயி பக்தை பவானியின் 96 வயது தாயார், கற்பகம் பாட்டி கோவை வந்திருப்பதை அறிந்து அவரைச்சென்று தரிசித்து நமஸ்காரம் செய்தார்.
இந்த வயதிலும் பாட்டி தீவிரமான சாயி பக்தையாக இருக்கிறார். சாயி வரதராஜன் எழுதிய அனைத்து புத்தகங்களையும் படித்துக்கொண்டிருக்கிறார். சாயி ராஜ் மூலமாகத்தான் நான பாபாவை அறிந்தேன். சாயி வரதராஜனால் ஆழமான பக்தியை அடைந்தேன் என பாட்டி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகுமாறு கேட்டதாலே இப்போது அவரையும் தரிசிக்க முடிந்தது.
பாட்டியின் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு அவரது மூத்த மகள், மருமகன், பேரப்பிள்ளை ஆகியோரை தரிசித்துக் கொண்டு ஜெயவேலு என்கிற சாயி பக்தர் வீட்டிற்குச் சென்றார்.
ஜெயவேலு அவர்கள் பெருங்களத்தூரைச்சேர்ந்தவர். தீவிர சாயிபக்தரான இவரது மகள் அருணாவும் சாயி பக்தை. சாயி வரதராஜனின் அன்புக்கு பாத்திரமான இந்த பக்த குடும்பத்தைத்தேடிச் சென்று தரிசித்து ஆசி வழங்கிய பிறகு, அவர்களுடைய காரிலேயே உடுமலைப்பேட்டைக்கு அனுப்பிவைத்தார்.
மூன்று ஆண்டுகளாகப் பிரார்த்தனை செய்தும் தொழில் சிறப்பாக நடைபெற வில்லை எனத் தெரிவித்த சேதுராமன் வீட்டிற்குச் சென்று, என்ன பிரச்சினை என நேரில் பார்க்கலாம் என அழைத்துச் சென்றிருந்தார்.
முன்னதாக கோபியைச் சேர்ந்த சாயி பக்தர் சந்திரன் அவர்களை அனுப்பி வைத்தார். சேதுராமனின் கடை பழைய கடை போன்று இருப்பதை மாற்றுமாறு தெரிவித்த அவர், முதலில் கடையை சுத்தம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.
சேது ராமனின் அனுமதியோடு, அங்குள்ள சாயி பாபா பிரார்த்தனை மையத்தில் சத்யநாராயண விரத பூஜையை நடத்தி வைத்தார்.
பிரார்த்தனை மைய நிர்வாகி அவர்கள் ஏற்கனவே சாயி வரதராஜனை செந்தூரனுடன் திருக்கோயிலூர் பாபா ஆலயத்தில் தரிசித்து இருப்பதாகவும், என்னை யாரென்று அறிமுகம் செய்துகொள்ளாத நிலையிலேயே கட்டிப்பிடித்து ஆசி வழங்கினீர்கள் என்றும் தெரிவித்த அந்த நிர்வாகி, சாயி வரதராஜனுடன் இருக்கும் வீடியோவைப் போட்டுக் காண்பித்தார்.
பிரார்த்தனை மையத்திற்கு இடம் வாங்கவும். பிரார்த்தனை மைய நிர்வாகியின் மகளுக்குக்குழந்தை பிறக்கவும் இந்த பூஜையைச் செய்து வைத்து ஆசிர்வதித்த பிறகு, சென்னைக்குத்திரும்பிவந்தார்.
கோவையில் தனக்கு தட்சணையாக அளிக்கப்பட்ட காணிக்கைகளை அங்குள்ள ஏழை சாயி பக்தர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வதே உண்மையான சாயி சேவை எனக் கூறி எங்களைப் பேசவிடாமல் செய்துவிட்டார்.
புஷ்பா அம்மா, சேதுராமன் குடும்பத்தை மையப் படுத்திய இந்த கோயமுத்தூர் பயணம் நெகிழ்ச்சியாக இருந்தது.
இதில் இன்னொரு நெகிழ்ச்சியான விஷயம் என்னவெனில், சாயி வரதராஜன் சென்ற இடம் எல்லாம் அவரை நிழல்போலத் தொடர்ந்து வந்து சேவை சாதித்த கோபியைச் சேர்ந்த சந்திரன் அவர்கள்.
மிக அற்புதமான இந்த மனிதர் நீடூழி வாழ வேண்டும், இவருடைய வேண்டுதல்கள் யாவும் பாபாவால் நிறைவேற்றப்பட வேண்டும் என சாயி ராம் வேண்டிக்கொண்டே வந்தார். மனதை உருக்குகிற நிகழ்வுகளும் அங்கு நடந்தன. அவை எழுதுவதற்கல்ல, சாயி பக்தியை உணர்வதற்கு!
வி. வேணுகோபால்

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...