சாயி மீது தீவிர நம்பிக்கை உள்ள தமக்கு இப்படியொரு சோதனையை பாபா அளித்து
விட்டார்; இதிலிருந்து எப்படியாவது அவரே காத்தருள வேண்டும் என ஓர் அம்மா தனது குழந்தைக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டி வந்தார்கள்.
கண்களை மூடி குழந்தைக்காகப் பிரார்த்தனை செய்த போது, “அவரை ஏதாவது ஓரிடத்தில் நம்பிக்கை வைக்கச்சொல், அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம்”
என்ற குரல் உள்ளிருந்து ஒலித்தது.
அவரிடம் இதைச் சொன்னபோது, என் குழந்தை நலம் அடைய வேண்டாத தெய்வமில்லை. இப்போதுகூட என் குழந்தையை அம்மனுக்குத் தத்துக் கொடுக்கப் போகின்றோம்.
எப்படியாவது அவன் நலமானால் சரி” என்றார்.
ஒரு தாய் அல்லது பாட்டியின் கோணத்திலிருந்து பார்த்தால் குழந்தை அனுபவிக்கிற வேதனையை சகிக்க முடியாமல் இப்படி வேண்டி நடப்பது நியாயமாகத்தோன்றும். ஆனால்,
இறைவன் இதை ஏற்பது
இல்லை. உன்னுடைய நம்பிக்கை ஒரே
இடத்தில் நிலையாக இருக்க வேண்டும்; அதுவும் என்ன நடந்தாலும் சரி,
நீயே கதி என கிடக்கவேண்டும் என தன்னிடம் சரணடைவதை அவன் எதிர்பார்க்கிறான்.
வெல்லக்கட்டியை கடித்துக்கொண்டிருக்கும் எறும்பு உயிரே போனாலும் எப்படி தான் கடித்துக் கொண்டிருப்பதை விடாதோ, அப்படி உன் நம்பிக்கையில் உறுதியாக இருந்தால், உனது வேண்டுதல்
கேட்கப்படும்.
ஒருவேளை, இந்தப் பிறவியில் கேட்கப்படவில்லை என நினைத்தால் நிச்சயம்
அது மறுபிறவிக்கு உதவும்.
இறைவனை வணங்காதவர்களையும், இறை நாமத்தைச் சொல்லாதவர்களையும் நம்பிக்கையும் பக்தியும்
இல்லாதவர்களையும் பஜனை பாடாதவர்களையும் இறைநாட்டம் உடையவர்களாகச் செய்வதற்கே ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்கிறார்கள் என்று சத்சரித்திரம் பத்தாவது அத்தியாயத்தில் (வசனம்: 150) சொல்லப்பட்டுள்ளது.
அவதாரம் செய்யாத அதாவது கால் நிலம் தோயாக்கடவுள் என்பார்களே,
தரையில் கால்
பதித்து நடக்காத கடவுளிடம் வேண்டிக் கொள்வதைவிட,
அவன் ஞானியராக அவதரித்து சேவை சாதிக்கிற காலத்தில் அவர்களை சரணடைந்துவிட்டால், இந்த பிரச்சினைகள் அனைத்திலும் இருந்து காப்பாற்றி நம்மை
இறை நாட்டம் உள்ளவராக்கிவிடுவார்கள்.
அப்படிப்பட்டவர்களை புண்ணிய நதிகளான கங்கை, பாகீரதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை போன்றவை, எப்போது இவர்கள் தங்கள் பாதங்களால் நடந்துவந்து
தங்களிடம் நீராடப் போகிறார்கள்; தங்களது பாவங்கள் தீரும் என தவம்
கிடக்கின்றனவாம்.
நாம் அப்படி காத்துக்கிடக்கத் தேவையில்லை. உங்கள் மனதை ஈர்த்த மகான் யார்? அவர் எங்கே இருக்கிறார் என்பதை தேடிக் கண்டுபிடித்து ஓடிச் சென்று சரணடைந்து விடுங்கள். இன்னல்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.
இப்படித்தான் பாபாவை ஓடிச்சென்று சரணடைந்த பக்தர்கள்
அனைவரும் மீட்சியுற்று வாழ்ந்தார்கள். சீரடி புண்ணியத்தலம் ஆயிற்று.
நான் ரமணரையும் ராகவேந்திரரையும் வணங்குகிறேன். இவரிடம்
சென்றால் பிரச்சினை தீருமா? அவரிடம் சென்றால் பிரச்சினை தீருமா?
என குழம்பாதீர்கள். இரண்டு குதிரைகள் மீது ஒரே நேரத்தில் சவாரி செய்யமுடியாது. ஒரே ஒரு குதிரையைத்தேர்வு செய்யுங்கள்.
ராம என்கிற தாரக மந்திரமாக இருந்தாலும் அதனுடன் வேறு ஒரு மந்திரத்துடன்
சேர்த்து ஜெபிக்கக்கூடாது என்பார்கள். பல தெய்வ வழிபாடு செய்கிற நாம், பல தெய்வ மந்திரத்தையும் ஜெபிப்பதால் சித்தி அடைந்துவிட முடியாது. அவை நம் மனதை எதிலும்
ஒன்றவிடாமல் செய்து பலன் வராமல் செய்யத்தான்
பயன்படுமே தவிர, பலனைத் தராது.
ஒரே இறைவன் பல வடிவில் அவதரித்து வந்துள்ளான் என்ற உண்மையை உணர்ந்து
கொண்டவர்களாக, உங்கள் இயல்புக்கும் செயலுக்கும் ஏற்ற இறை வடிவத்தை
ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த இறை நாம தியானத்தில்
ஈடுபடுங்கள். இப்படிச்செய்தால் நாம ஜெபப் பலன் கிடைக்கும்.
ஒரு நாளைக்கு ராமா ராமா என்றும் மறு நாள் கிருஷ்ணா கிருஷ்ணா என்றும் ஜெபித்து, இரண்டும் ஒன்றுதானே என்று
கூறுவதால் பலன் கிடைக்காது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதனால்தான் ஒரே குரு ஒரே இறைவன் என்று சொல்கிறார்கள்.
பகவான் கிருஷ்ணர், பார்த்தா! இந்த உலக மக்கள் அனைவரும்
என்னை அநேக அநேக ரூபங்களாய் நினைத்து
பூஜிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நான் ஆகாச
வடிவமாய் எங்கும் நிறைந்திருக்கும்
பரப்பிரம்மம் என்பதை தெரிந்து கொள்ள மாட்டார்கள் எனக்
கூறியிருக்கிறார்.
எந்த தெய்வத்தை வழிபட்டாலும், பிசாசு போன்றவற்றை தெய்வமாக வழிபட்டாலும், மனித வடிவிலுள்ளவர்களை வழிபட்டாலும் அந்த வழிபாடுகள் அனைத்தும் பரப்பிரம்மமாகிய இறைவனையே அடைகின்றன
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆகவே, தயக்கம் இல்லாமல் எந்த கடவுள் ரூபம் விருப்பம் தருகிறதோ அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். நாளடைவில் ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும்.
ஒருவர் இதை கும்பிடும்போது அதைக்கும்பிடலாமா? இது சரியா? அது சரியா என்ற விவாதத்தில் இறங்காதீர்கள். மந்திர பேதமும், கடவுள் பேதமும் மக்களைக்
குழப்புவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை.
இப்படிக்குழம்பினால்தான் இன்னும் கர்ம வாசனையில் மனிதன் இருப்பான், மீண்டும் மீண்டும் தோன்றி இறைவனை நினைப்பான். அதே
சமயம், இப்படி குழம்பித் தவிக்கிற ஜன்மத்தில் கஷ்டத்தை கண்டிப்பாக அனுபவிப்பான் என்பதை உணர்ந்து கொள்வீர்களாக.
No comments:
Post a Comment