Friday, June 17, 2016

முதலில் மனம் மாறு



பிரார்த்தனையின் போது தலையில் கை வைக்கும்போதோ அவர்கள் கையைப்பிடித்து எனக்குள் உள்ள சக்தியைப் பரிமாற்றம் செய்ய முற்படும்போதோ, சிலநேரம் பலமான எதிர்ச்சக்தி எனக்குள் பரவுவதை உணர்வேன்.
இதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக - தன்னம்பிக்கை இழந்து முற்றிலும் பயந்தவர்களாக, மனச்சோர்வு அடைந்தவர்களாக இருப்பதுதான்.
மன சாட்சி உள்ளவர்களே இந்த நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அவர்கள்தான் போராடிப் போராடி இந்த நிலைக்கு வந்திருப்பார்கள். மனசாட்சியே இல்லாதவர்களுக்கு பிரச்சினை கிடையாது.
இவர்களுக்கு சக்தி பாத் எனப்படும் சக்தியை உள்ளுக்குப் பாய்ச்சுவதால் மட்டும் பலன் வந்து விடாது, அவர்களின் உணர்வுகளையும் மாற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன்.
நிறைய பேர் இந்த உலகம் அழகானது, வாழ்க்கையும் அழகாகப் போகும் என நினைத்துக்கொள்கிறார்கள். அதன் பிறகுதான் இது ஒரு கடல்! நீச்சல் தெரியாவிட்டால் பிழைக்கமுடியாது; இது ஒரு மலை! உறுதியில்லாவிட்டால் ஏறிக்கடக்கமுடியாது; இது ஓர் உளைக்குழி! பிடித்துக்கொள்ள ஒரு பற்றுறுதியை வைத்திராவிட்டால் மீள முடியாது என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.
தெரிந்துகொண்ட பிறகு சிலர் சோர்ந்து விடுகிறார்கள், சிலர் சோர்வின் காரணமாக தமது வாழ்வை முடித்துக்கொள்ளவோ, முடித்துக்கொள்ள முயற்சிக்கவோ செய்கிறார்கள்.
வெகு சிலரே இதை எதிர்கொண்டு ஜெயிக்கிறார்கள். இவர்கள் எப்படி ஜெயித்தார்கள் எனப் பார்த்தால், தங்களிடமுள்ள பெரிய மனோதிடத்தைக் கொண்டு ஜெயித்தது தெரியும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடி தர்மமே வெல்லும் என்பார்கள். ஆனால், கடைசி வரை தர்மவான்களால் பொறுமையாக இருக்க முடியாதபடி பிரச்சினைகள் துரத்தும். நல்லதைக்கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் மாற்றுகிற காலக்கட்டத்தில் வாழ்கிறோம். ஆகவே மனோதிடம் அவசியம்.
நான் சாயி பக்தன் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிற ஒவ்வொருவரையும் சோதித்தால், எண்பது விழுக்காடு பேர், பெயரளவில்தான் சாயி பக்தராக இருப்பார்கள். காரணம், பாபா சொல்லிக்கொடுத்த சாயி பக்த இலக்கணம் அவர்களுக்குத் தெரியாமல் போவதுதான்.
சாயி பக்தராவதற்கு பாபா இலக்கணம் வகுத்திருக்கிறாரா? என்ன?
நம்பிக்கை மற்றும் பொறுமை. இந்த இரண்டும்தான் சாயி பக்தராவதற்கான இலக்கணம். நம்பிக்கை உள்ளதாக நினைத்தால், எந்தளவு நம்பிக்கை இருக்கிறது என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ளுங்கள்.
முதலில் சுகமாகத் தோன்றுகிற பயணத்தின் நடுவே, முன்னும் பின்னும் வழி தெரியாதபடி புதர்களும் காடுகளுமாக வழியை மறைத்துவிடும்.
பயங்கரமும் திகிலும் பயமுறுத்தும். தவறான வழியைத் தேர்வு செய்துவிட்டோமோ என நினைக்கும் அளவுக்கு சோதனைகள் இருக்கும் என்று சத்சரித்திரம் எச்சரிக்கிறது. இதுதான் உண்மையான சோதனைக்காலம். இதை மட்டும் சகித்துக்கொண்டுவிட்டால், அதன் பிறகு வாழ்க்கைப் பாதை தெளிவாகும்.
ஏன் பாபா இப்படி ஒரு பக்தனை இழுத்து விடுகிறார் என்றால், தனது பக்தன் எல்லா நிலைகளிலும் வாழவேண்டும் என்ற காரணத்தால். வானம் பற்றி எரிகிறது, பூமி வறண்டுவிட்டது. கள்ளிச் செடிகள் மட்டும்தான் ஆங்காங்கே காணப்படுகிறது என்ற நிலை வந்தாலும், நீ கள்ளிப்பாலை சாப்பிட்டு காலம் கழிக்கவேண்டும், கள்ளிப் பால் சாப்பிட்டு சாகக்கூடாது என உனக்கு அந்த நச்சுத் தன்மையை சிறிது சிறிதாக ஊட்டி உடலையும் மனதையும் உரமாக்கச் செய்வதால் இப்படி ஏற்படுகிறது.
தன் பக்தன் எல்லாவற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும் என அவனை எல்லா சோதனைகளுக்கும் உட்படுத்துகிறார். ஒருவரையும் கைவிட மாட்டார், நிச்சயமாகக் காப்பாற்றிவிடுவார்.. இந்த உறுதியான நம்பிக்கையையும் சோதனையின் மத்தியில் தருவார். அவர்தான் பாபா. நம்பிக்கையோடு கூப்பிட்டால், உடனடியாக ஓடிவந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டு உதவி செய்வதுதான் பாபாவின் சிறப்பு இயல்பு. நம்பிக்கையை உண்டாக்க சோதனையைத் தருவார்.
ஒருவருக்கு நம்பிக்கை எப்போது ஏற்படும்? பொறுமை எப்போது ஏற்படும்?
நம்பிக்கை தோன்ற முடியாத நிலையிருக்கும் போதுதான் நம்பிக்கைக்கான அவசியம் தேவைப்படுகிறது. தோல்வி தொடர்கதையாவது போலத்தெரிந்து நாம் வதைப்படும்போதுதான் பொறுமை என்ற சகிப்புத் தன்மையின் தேவை உருவாக்கப்படுகிறது. இந்த இரண்டையும் உருவாக்க வேண்டுமானால், அதற்குரிய சூழ்நிலைகளை முதலில் உருவாக்க வேண்டும் அல்லவா? ஆகவே அவர் அதைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்.
நம்பிக்கையில் நிலைத்திருந்தால் ஜெயம் தான். தோற்றாலோ மீண்டும் சோதனையான நிலைமை துவங்கும்.
ஐயா, இப்படியெல்லாம் சொல்லி எங்களை பயமுறுத்தாதீர்கள். நம்பிக்கையும் பொறுமையும் இப்படிப்பட்ட சோதனைகள் இல்லாமல் எப்படி ஏற்படும் என்பதை சொல்லித் தாருங்கள் எனக்கேளுங்கள், கூறுகிறேன்.
இதற்கான அடிப்படைதான் மனமாற்றம் நீங்கள் இப்போது எப்படியிருக்கிறீர்களோ அதிலிருந்து மாறவேண்டும். இதைப் பற்றி நான் சற்று விரிவாகச் சொல்லித் தந்துவிடுகிறேன்.
சோதனையானது நம்மை அழிக்க வந்ததாக நினைக்காமல், நம்மை மாற்றி அமைக்க வந்ததாக நம்பவேண்டும். இது நமக்குப் புதுவாழ்க்கையை புதிய கோணத்தில் எடுத்துச் செல்ல வந்திருக்கிறது என நம்ப வேண்டும். இந்த நம்பிக்கைக்கு ஏற்ப மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நாம் நல்லவர்கள் என நம்பு:
நாம் நல்லவர்கள் என நம்பவேண்டும். இந்த நம்பிக்கை வளரும்போது, நல்லவர்களாக ஆக முடியாதபடி செய்கிற சின்னச் சின்னக்குறைகளும் நம்மை விட்டு நீங்குவதை நம்மால் உணரமுடியும்.
கெட்டவர்களாகவோ, மனசாட்சி இல்லாதவர்களாகவோ இருந்தால் பாபா பக்கம் வந்திருக்க முடியாது. ஆகவே, நிச்சயம் நாம் நல்லவர் தாம். நாம் நல்லவர்களாகும் போது, நாம் பார்க்கிற அனைத்துமே நல்லவைகளாக, நாம் பார்க்கிற அனைவரும் நல்லவர்களாகத் தெரிவார்கள்.
நமக்குக் கெடுதி செய்தவர்கள், துரோகம் செய்தவர்கள் ஆகியவர்களைப் பார்க்கும்போது கூட, சூழ்நிலை காரணமாகவோ, தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாகவோ நம்பித்தான் இவர்கள் இப்படி செய்தார்களே தவிர, நம்மை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இவர்களுக்கு இல்லை என்ற எண்ணத் தோன்றும். நாம் அவர்களை மன்னிக்கும் பக்குவத்திற்கு வந்து விடுவோம். இந்தப் பக்குவம் மனதில் தோன்றும் போது உண்மையாகவே நாம் நல்லவர்கள் என நம் மனம் நமக்கு சான்று தரும்.
வேலையில் நமக்கு மேலதிகாரியாக இருப்பவர் நம்மை திட்டும்போது, கடுமையாக வேலை வாங்கும்போது நம் மனம் புண்படாது, வலிக்காது, மனச்சோர்வு அடையாது. மாறாக, தனது கடைமையை அவர் செய்கிறார், நாம்தான் அவர் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என எண்ணத் தோன்றும். இதனால் கோபம் வராது, வஞ்சனை எண்ணம் மனதில் உருவாகாது, சொல்வது ஒன்று செய்வது வேறு ஒன்றாக இருக்காது, பயம் வராது, பழிக்குப் பழி வாங்குகிற உணர்வு தோன்றாது. அவர் மீதும் வெறுப்பு தோன்றாது.
இது நல்லவராக மாறும்போது ஏற்படுகிற நிலைமைகள். யானைக்கும் எறும்புக்கும் உருவத்தில்தான் வித்தியாசம் இருக்கிறதே தவிர, அவற்றின் செயல்கள் யாவும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனதன் சக்திக்கு ஏற்ப செயல்படுகிறது, அவற்றுக்குள் இருக்கிற பிராணன் என்கிற ஆன்மா ஒன்றுதான், சமமானதுதான் என்பதை நாம் நல்லவர்களாக இருக்கும்போது தான் உணர்வோம்.
யானைக்கும் எறும்பும் சமத்துவத்தைப் பார்க்கிற நாம், நம்மிடையே வசிக்கிறவர்களிடம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசத்தை பார்க்க மாட்டோம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை யும், கற்றவன் பாமரன் என்ற பேதத்தையும் பார்க்கமாட்டோம். யாரையும் வெறுக்கமாட்டோம், யாரையும் துன்புறுத்த மாட்டோம்.
இப்படி எந்த ஒன்றையும் பாசிட்டிவ்வாக மாற்றிக் கொள்ள, முதலில் நாம் நல்லவர்கள் என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நாம் நல்லவர்களாக மாறும்போது பிறர் பொருளுக்கு ஆசைப்படமாட்டோம், திருட வேண்டிய அவசியம் இருக்காது, விட்டுக் கொடுக்கிற மனப்பக்குவம் வரும். எல்லோரும் நம்மவர்கள், எல்லோருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைக்க வேண்டும். எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.
விதியின் மீது நம்பிக்கைக் கொள்
எது உனக்கு நேரிடுகிறதோ அது விதிப்பயனால் நேரிடுகிறது என்பதை உணர்ந்துகொள். நான் சொல்கிற விதி என்பது பூர்வ வினையின் விளைவால் நிர்ணயிக்கப்பட்டது மட்டுமல்ல, நம்முடைய செயலால் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட நிலையும் விதிதான். விதி என்பது வினையின் விளைவு என்பதை தெரிந்துகொள்.
நல்ல வினை அதாவது நல்லசெயல் நன்மையை தரும், கெட்ட செயலுக்கான பலன் கெட்டதாகவே இருக்கும்.
தெரிந்தோ தெரியாமலோ செய்கிற அனைத்துக்கும் பலன் உண்டு என்பதை புரிந்து கொண்டால் உண்மையான சாயி பக்தனாக நீடிக்க முடியும்.
தீய விதியை மாற்ற முயற்சி செய், நல்ல விதி தொடர அயராமல் பாடுபடு. அப்போது உன் ஆன்மா விழித்துக்கொண்டு உனக்குத்தேவையானதைப் பெற்றுத் தரும்.
குடும்பஸ்தனாக வாழ்
சாயி பக்தனாக விரும்புகிறவன் முதலில் தனது குடும்பத்திற்கு உண்மையானவனாக இருக்கவேண்டும். குடும்ப நலனைப் பேணவேண்டும். தந்தையாக இருந்தால் பிள்ளைகளுக்கு உரிய கடமையைச் செய். பிள்ளையாக இருந்தால் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நட. அவர்கள் மனம் கோணாமல் நடந்தால் சாயி உன்னுடைய கடவுளாக அல்ல, உன் அடிமையாக இருப்பார்.
உன் குடும்பத்தை சரிப்படுத்தினால் உன்னைப்பார்க்கிற மற்றவர்கள் தங்கள் குடும்பத்தை சரிப்படுத்த ஆரம்பிப்பார்கள். இப்படி உன்னால் ஒரு சமுதாய மாற்றமே உண்டாகும். சமுதாய மாற்றம் வளமான நாட்டை உருவாக்கும். இந்த அடிப்படை உனது மன மாற்றத்திலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். இதைச் செய்.
நல்ல குடும்பஸ்தனாக இருக்க, முதலில் கோபத்தை, எரிச்சலை விட்டுவிடு. தேவையற்ற பொய்களைத் தவிர், மனம் விட்டு குடும்பத்தாருடன் பேசு, பிள்ளைகளானாலும் அவர்களின் குடும்பம் சம்பந்தமாக விவாதித்து ஆலோசித்து முடிவு செய். அளவோடு செல்வம் சேர், வீண் அலைச்சலை விட்டுவிடு, அன்றாட தேவைக்கு அவசியமில்லாததை வாங்குவதைத் தவிர், தவறான நம்பிக்கைக்கு இடம் தராதே.
சோம்பல் மற்றும் செயலின்மையைத்தவிர்த்து விடு. விழிப்புணர்வு கொள்.
ஆன்மிகத்தை அனுசரி
போலியான வேடங்கள், பொய்யான உபதேசம் போன்றவை உனக்கு எந்தவிதத்திலும் உதவாது, ஆகவே, முதலில் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொள். இதுதான் ஆன்மிக வாழ்க்கையின் ஆரம்பப் பாடம்.
யார் என்ன சொன்னாலும் அவர்கள் பின்னே ஓடாதே. உட்கார்ந்து சரியா? தவறா? என ஆலோசி. உனது நோக்கம் ஆன்மிக முன்னேற்றமா? லவுகிகமா என்பதை முடிவு செய்துகொள்.
அப்போதுதான் உண்மையான ஆன்மிகத்தில் ஈடுபடமுடியும். உனக்கு நம்பிக்கையும் பொறுமையும் ஏற்பட்டு விட்டால், சுதந்திர உணர்வு வந்து விடும். உன் மதத்தை, நீ வணங்கும் கடவுளை மட்டுமே உயர்வு எனக் கருதும் பொய்யான எண்ணம் நீங்கும். எல்லாவற்றினுள்ளும் உன் கடவுளே இருக்கும் உண்மை விளங்கும்.
உனக்கு ஒருவழி அவருக்கு வேறு ஒரு வழியை உயர்வடைய இறைவன் கற்பிக்கிறான் என்பது புரியும். அகிம்மை குணம் பொறுமையால் பிறக்கும், இது பிறரை உன்னோடு கூடி வாழ வைக்கும். இப்படி நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தப் பாடம் உனக்கு இன்றைக்குப் போதும் என நினைக்கிறேன்.
ஸ்ரீ சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...