Saturday, June 11, 2016

நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!



அன்புக் குழந்தாய்!
நேர்மையானவர்கள் புறக்கணிக்கப்படும் போதும், ஏமாற்றப்படும் போதும் அவர்கள் என்னை நோக்கிக் கதறி, “சுவாமி எங்கள் நேர்மையை மற்றவர்கள் சந்தேகிக்கும்போது நாங்கள் அடைகிற வேதனை உங்களுக்குத் தெரியவில்லையா?  நேர்மையான எங்கள் மீது பிறர் இல்லாததும் பொல்லாததும் செய்து அவமானப்படுத்துவது போல தாழ்த்தி விடுகிறார்களே, இதைப் பற்றி நீங்கள் எதுவும் பேசாமல் இருக்கிறீர்களேஎன்று வேண்டுதல் செய்கிறார்கள்.
உதாரணமாக, நீ ஒரு பள்ளியில் வேலை பார்க்கிறாய், மிக நேர்மையாக உழைத்து, பணிக்காக உன்னை தியாகம் செய்திருக்கிறாய். அந்தப்பள்ளியும் என்னுடைய பள்ளி என ஆத்மார்த்தமான சேவை செய்தாய். என் அடியார்கள் மூலம் உனக்கு மிக உன்னதமான நிலையில் கவுரவமாக வைத்திருந்தேன். இது நான் உனக்கு செய்தது.
இப்போது நிர்வாகம் மாறி வேறு யாரோ வந்திருக்கிறார்கள். உன்னைப் பற்றி உன்னைப்பிடிக்காதவர்கள் பொறாமையால் பொய் தகவல்களைச் சொல்லி உனக்கு தாங்க முடியாத அவமானங்களைச் செய்து வருகிறார்கள். உயர் நிலைக்குப் பாடம் நடத்திய உன்னை முதல் வகுப்புக்கு பாடம் நடத்தச் சொல்லி அனுப்புவார்கள். அதனால் நீ இப்போது தலைகுனிந்து நடக்க வேண்டிய நிலை உண்டாகி இருக்கும்.
நீ என்ன நினைப்பாய்?
எனக்கு நியாயம் கிடைக்கவில்லையே! என்று நினைப்பாய். உண்மையாக உழைத்ததற்கு பலன் இதுதானா? என்று குமுறுவாய். எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயப்படுவாய்..
உண்மை என்னவெனில், குழந்தைகளுக்குப்பாடம் சொல்லித்தர நான்தான் உன்னை பதவி இறக்கம் செய்தேன். அந்தப் பிள்ளைகளின் பாச உணர்வில் நீ நனைந்து இன்னும் சில காலம் தாய்மையின் மாண்பை அனுபவிக்கவேண்டும் என்பதற்காக! இது உனக்கு தெரியுமா? தெரியாது.
உன்னுடைய எதிர்காலமே நான்தான் என்னும் போது எதற்காக நீ தனியாகக் கவலைப்பட வேண்டும்? நான் பார்த்துக்கொள்ளமாட்டேனா? உனக்கு தாயாய் தந்தையாய் மட்டுமா இருக்கிறேன்? குழந்தையாகவும் நான்தானே இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
என்னை கவனிக்கிறாய், ஆனால் நான் சொல்வதை கவனிப்பதில்லையே! குழந்தாய்.
இந்த உலகம் பொருளின் பின்னால் போகிறது, கோள் சொல்கிறவர்களும், கோமாளிகளும்தான் எல்லா இடங்களிலும் அதிகாரம் செலுத்துகிறார்கள். நல்லவர்கள் புறக்கணிக்கப்படுவதை யாரும் கவனத்தில் வைத்துக் கொள்வதில்லை. அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படவேண்டும்? எங்கிருந்தாலும் நான் உன்னோடு இருக்கிறேன், நான் உன்னைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று அந்த நல்லவர்களுக்குச் சொல்வேன். மனதை திடப்படுத்து, வரவேண்டிய தொகையை தானாகக்கொண்டு வந்து தருவேன், பயப்படாதே-
நல்லவர்கள் கடன்படும்போதும் நான் இப்படித்தான் உருகிவிடுவேன். கந்து வட்டிக்காரனிடம் உனக்காக கதறி அழுதேன். என் குழந்தையை வறுமையில் தள்ளிவிட்டீர்கள்; மன உளைச்சலில் அவள் குடும்பத்தோடு கதறுகிறாள், கருணை காட்டு என்று.
அவனோ தன் போக்கில் பிடிவாதமாக இருந்து கொண்டிருக்கிறான். என்ன செய்யமுடியும்? நான் வேறு வழியை யோசிக்கவேண்டியிருக்கிறது. உனது வருமானத்தைப் பெருக்க தொழில் ஒன்றை புதிதாக தருகிறேன். தைரியமாக ஈடுபட்டு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கடனை அடைத்துவிடு. தைரியமாக இரு, நடப்பவை அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று என் குழந்தைக்குச் சொல்வேன். வாழ்க்கைப்பட்டு எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் என் குழந்தை பிரிந்து வந்துவிடும்போது மற்ற வர்கள் அவளைக் குறைகூறி தூற்றினாலும் நான் தாங்காமல் கதறத்தான் செய்கிறேன். உண்மை என்னவென எனக்குத் தெரியும். எல்லோரும் சுயநலமாக சிந்திக்கிறார்கள், நான் அப்படி செய்யாமல் நீதியைச் செய்வேன்.
எப்படி என் வாழ்க்கை அமையப் போகிறதோ, என்ன ஆகுமோ என்று என் அறியாக் குழந்தை தவிக்கும்போது, குழந்தாய்! அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்; கவலையை விடு. நீ விரும்புகிற மாதிரி, உன்னை முன்னேற்றுகிற மாதிரியான வாழ்வை நான் உறுதி செய்கிறேன். என் நாமாவை உறுதியோடு பற்றிக்கொண்டு பக்தியில் நில் எனக் கூறுவேன்.
எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
இன்னும் சிலர் தங்கள் குழந்தைக்காக, பேரக்குழந்தைக்காக கதறிக்கதறி வேண்டுதல் செய்வார்கள். அவர்கள் ஒவ்வொரு இடமாக அலைந்து அலைந்து பரிகாரம் தேடிக்கொண்டிருக்கும் வரை நான் பலனை கைகூடி வரச் செய்யமாட்டேன். என்னை திடமாகப் பிடித்துக்கொள், அப்போது தான் உனக்கு உதவமுடியும் எனக் கூறிவிடுவேன். காரணம் என்ன தெரியுமா? அவர்கள் அலைவதையும் குணம் கிடைக்காத இடங்களை நாடுவதையும் நான் பார்த்துக் கொண்டிருப்பதால்தான்-
ஓர் அம்மா என்னை நோக்கி தினமும் ஒரு வேண்டுதல் வைக்கிறார், அதாவது அவரை யாரும் கண்டு கொள்வதில்லையாம்; காசு பணம் இருந்தும் நிம்மதியில்லையாம்; வாழ்ந்து என்ன பயன்? என்னை எடுத்துக்கொள் என வேண்டுகிறார்.
இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து இவர் எதை கற்றுக்கொண்டார் எனத் தெரியவில்லை. இந்த உலகம் முதியவர்களைக் கண்டுகொள்வது கிடையாது. நாம் நம் குழந்தைகளை நேசிக்கிறோமே தவிர, நம்மை நேசித்த நமது பெற்றோரை அவ்வளவாக நேசிப்பதில்லை.
நமது குழந்தைக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் உயிரும் உடம்பும் உருக உருக வேண்டுதல் செய்வதும், அவர்களுக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என நினைத்து சொத்து பத்துக்களையும் இழந்து பார்க்கிறோம். ஆனால், அதே குழந்தை வளர்ந்து தனக்கொரு குழந்தை வந்துவிட்ட நிலையில் நமக்கு ஒரு பிரச்சினை என படுத்துவிட்டால், இனி தேறமாட்டார்கள், எப்போது போய்ச் சேர்வார்கள் என நம்மைப்பற்றி நினைக்கும். இயலாமையாலும் வலியாலும் நாம் கதறும் போது, வாயை மூடிக்கொண்டிரு. எதற்காக இப்படி கத்தி ஊரைக் கூட்டுகிறாய் எனப் பேசும். தன் குழந்தை என்றால் நாம் நமது குழந்தைக்காக செய்ததைப் போலவே இதுவும் செய்யும்.
இவையெல்லாம் உலக இயல்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால், குழந்தை இல்லாதவர்களின் நிலையைச்சொல்லித் தெரியவேண்டியதில்லை. படுத்த படுக்கையாகக் கிடக்கும் நேரத்தில் கிடைக்கிற திட்டுகளும், ஒருவேளை உணவுக்காகக் காத்துக்கிடக்கிற நிலையும் சொல்லி மாளாது.
குழந்தாய்! இவை எல்லா காலத்திலும் இந்த உலகத்தில் இருந்து வருகிற நிலைகள் என்பதால் தான் இந்த வயதில் எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டு எனது நாமத்தின் மீது கவனத்தைச்செலுத்து என முதியோருக்கு நான் அறிவுரை கூறுவதை வழக்கப்படுத்தினேன்.
வலித்தாலும் சாயி, வலி பொறுக்கவும் சாயி, அழுதாலும் சாயி, அழுகையை அடக்கவும் சாயி எனக் கூறுமாறு கட்டளையிடுகிறேன்.
இளம் வயதுள்ளவர்கள் செய்கிற நாம ஜெபத்திற்கும் முதியவர்கள் செய்கிற நாம ஜெபத்திற்கும் வித்தியாசம் உண்டு. இளம் வயதில் செய்கிற நாம ஜெபம் பெரும்பாலும் எதையாவது உத்தேசித்ததாக இருக்கும், ஆனால் முதிர் வயதில் அது என்னை மட்டுமே உத்தேசித்து செய்யப்படும்.
மோட்ச மார்க்கத்திற்குச் செல்லவிரும்புவோர் என் நாமத்தை மட்டுமே பந்த பாசங்களை நீக்கிச்செய்யவேண்டும் என வலியுறுத்துவது இதனால் என்பதை தெரிந்துகொள்ள அந்த அம்மாவால் முடியவில்லை.
வயதாகிவிட்டால் இளம் தலைமுறையினர் அவர்களை கவனிக்கமாட்டார்கள். இது ஏன் என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கும். எனது பாதங்களே சரணாம்ருதம் என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த நிலையை உருவாக்கிவைத்து இருக்கிறேன்.
ஆகவேதான் மோட்ச மார்க்கத்திற்கு அந்த வயதில் அவர்களைத்தயார் படுத்தி பற்றுகளை சிறிது சிறிதாக அகற்றிவிட்டு எனது நாம தியானத்தில் ஈடுபட வலியுறுத்துகிறேன்.
இன்னும் ஒரே ஒரு விஷயத்திற்காக நான் புறப்பட வேண்டியிருக்கிறது. இந்தக் கதையைப்பற்றியும் கூறிவிடுகிறேன்.
ஒரு நல்லவன் இருந்தான், அவன் எனது பக்தனல்ல; ஆனால், நேர்மையானவன். சிரமப்பட்டு நல்ல நிலைக்கு உயர்ந்தான்; உயர்ந்த பதவி வகித்தான்; நாலு பேர் அவனது கீழ் வேலை பார்த்தார்கள். கிடைக்கிற சம்பளத்தை வைத்து ஓரளவு பிள்ளைகளைப் படிக்க வைக்கிற சக்தியில் வாழ்ந்துவந்தான்.
தனது பதவியை அவன் தவறாகப் பயன்படுத்தவில்லை. இதனால் அவனால் சொத்து சேர்க்க முடியாமல் போய்விட்டது. காலம் மாறியது, நிறுவனம் கை மாறியது, வேலையும் போனது. வாழ்வாதாரத்திற்காக வேறு நபரிடம் வேலைக்குப் போனான். அந்த நிறுவனமும் போனது. இப்படியே ஒவ்வொரு வேலையும் போன பிறகு, தனக்குத் தெரிந்த வேலையை தனியாகச் செய்து சிறிய அளவில் பொருள் தேட நினைத்தான்.
அதற்காக அவன் கைப்பொருளை இழக்க ஆரம்பித்தான். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது செலவுகளைப் பற்றி கவலைப் பட வேண்டியிருக்காது, அதே வேலையை நாம் சொந்தமாகச்செய்யும்போது முதலீடு போட்டு உழைக்க வேண்டும். சின்னச் சின்ன முதலீடு என்றாலும் நிறைய பணத்தை அது சாப்பிட்டு விடும். இதனால் நம்மையும் மீறி கடன் சிறிது சிறிதாக வீட்டிற்குள் நுழையும்.
இதுதான் அவனது வாழ்க்கையிலும் நடந்தது; அவன் கடன்பட ஆரம்பித்தான்.
யாராவது உதவுவார்களா என அவர் தன்னை சந்தித்தவர்கள் அனைவரிடமும் உதவியை எதிர்பார்த்தான். ஏமாற்றம்தான் மிச்சம்.
அவனது மனைவி நல்லவள், நேர்மையானவள். உன்னை மாதிரி அரசுத் துறையில் சிறிய பதவியில்  இருப்பவள். நான் செய்த அற்புதங்களால் கவரப்பட்டு என் பக்தையானவள்.
நானும் அவள் வீட்டிற்குப் போனேன். அவளது பிள்ளைகளுக்கு நல்லதைச் செய்தேன், அவளது பக்தியில் திளைத்திருந்தேன். இருந்தாலும் கணவன் செய்த செயல்களால் தனது குடும்ப நிம்மதி போய்விட்டது என்ற நினைப்பு அவள் மனதில் வெறுப்பு உணர்வை தோற்றுவிக்க, இப்போது கணவனை விட்டுப் பிரியும் அளவுக்கு மனதைக்கொண்டு போய்விட்டாள்.
என் மீதும் கோபம் அவளுக்கு, இருக்கட்டும் எனப் பொறுத்திருந்தேன். ஆனால் நாளுக்கு நாள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சகிக்க முடியாமல் இப்போது நேரடியாக நானே போக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
என் பக்தை நிஜமாக என்னை நேசித்தால், காலம் செய்த தவறுக்காக கணவன் மீது பழி போடாமல் இருக்கட்டும். இந்தத் தொழிலை நிறுத்தவும், வேறு வழியில் யோசிக்கவும் ஏதேனும் செய்து பிரச்சினைகளை சமாளிக்கவும் புத்தி சொல்லட்டும். உயிர் போகும் நிலையிலும் தனது கணவனை அவள் பிரியக்கூடாது, பிரச்சினைகளை பெரிது படுத்தக் கூடாது.
புத்தக வரிசை களைந்துவிட்டால் அடுக்கி வைப்பதுபோல, குடும்பத்தில் பிரச்சனை வந்தால் அதை நிவர்த்திக்கும் மார்க்கத்தையும் செய்ய வேண்டும். என்னிடம் மீண்டும் வந்தால் நான் நிச்சயம் உதவி செய்வேன். அதுவும் உன்னுடைய புதுப்பெருங்களத்தூர் ஆலயத்தில்தான் உனக்குத்தீர்வு என எழுதி வைத்திருக்கிறேன். என்னை உதாசினப்படுத்த நினைக்காதே.
நேரம் இல்லை, காலம் இல்லை என சாக்கு போக்குச் சொல்லாதே! நீயும் வா, உனது கணவனையும் வரச் சொல். சின்னச் சின்னதாக வேலை பார்த்து கடனை அடைத்து நிம்மதியாக வாழும் வழியை நான் கற்பிக்கிறேன். எனது உதியை எடுத்துக்கொடுக்கிறேன், அது உனது  விதியை மாற்றும் என சொல்லப் போகிறேன்.
நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்பது நிச்சயம் அவளுக்குத் தெரியும். அம்மணி, உன்னிடம்தான் பேசுகிறேன். நம்பிக்கையைத் தளர விடாதே! நிச்சயம் உனக்கு நன்மை செய்வேன்.
ஏனெனில் நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். யாருக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறதோ, யாருடைய துன்ப காலங்கள் ஒழிந்துவிடும் காலம் கனிந்து வந்திருக்கிறதோ அவர்கள் கண்களுக்கு மட்டுமே நான் புலப்படுகிறேன். அவர்கள் மட்டுமே என்னை வழிபட அனுமதிக்கிறேன். இதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.
என் பக்தன் என்னை மீறி எதையேனும் செய்ய நினைத்தால் எவ்வளவு தூரம் போக முடியுமோ போகட்டும் என விட்டு விடுகிறேன். கடைசியில், என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவனை என் வழிக்குக் கொண்டு வருகிறேன்.
இது எப்படியிருக்கும் எனில், தேர்வு எழுத ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டு, அதைத் தவறாகப்புரிந்துகொண்ட மாணவன் பக்கம் பக்கமாகத் தனக்குத் தெரிந்த பதிலை எழுதுவது போலவே இருக்கும். சிரமப்பட்டு எழுதி முடித்த தாளை வாங்கிய ஆசிரியர் அதில் குறுக்காக ஒரே ஒரு கோடு போடுவார்.
இவ்வளவு தூரம் எழுதியதும், நீ பிரயாசை பட்டதும் வீண்; இந்த பதில் தவறானது, நான் கேட்ட கேள்விக்கு உரியதல்ல என்பதுதான் அந்தக்கோட்டுக்கான பொருள். அப்படித்தான் என்னை விட்டுத் தன்னிச்சையாகப் போக முயலும் பக்தனுக்கும் ஒரு கோடு போட்டு, மீண்டும் என்னிடம் கொண்டுவருவேன். ஏனெனில் நான் எல்லா வற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன் அப்பா
சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...