Sunday, June 26, 2016

என்னிடம் வா!

முத்தோஷங்களால் அவதிப்படுபவர்களும் சுயமுயற்சியால் மேன்மையுற வேண்டும் என்ற ஆவலால் உந்தப் படுபவர்களும் ஆன்மிக சிந்தனை உடையவர்களும் முனிவர்களின் பாதங்களைச்சரணடைகிறார்கள்; சுய அனுபவத்தால் மேன்மையுறுகிறார்கள்.
(சத்சரித்திரம் அத்: 1 - 108)
இன்றைக்கு நீ எப்படியிருக்கிறாய் என்பதை சற்று யோசித்துப் பார். கடன், கஷ்டம், பிரிவு, வருத்தம், நோய், இழப்பு இப்படி எண்ணற்ற வழிகளில் தொல்லைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறாயா?
இனி தேறவே முடியாது? என்ற முடிவுக்கு வந்துவிட்டாயா? அல்லது தேறுவதற்கு என்ன வழி என யோசித்துக் கொண்டிருக்கிறாயா?
உனக்கு சத்சரித்திரம் சொல்கிற தீர்வு, உடனடியாக முனிவர்களின் பாதங்களைச் சரணடை என்பதுதான். இங்கே முனிவர்கள் எனக் கூறப்படுவது மகான்களாக நீ நினைக்கிற குரு ராகவேந்திரர், பகவான் ரமணர், வள்ளலார், அக்கல் கோட் மகராஜ், ராமகிருஷ்ண பரமஹம்சர், சாயி பாபா போன்றவர்களைத்தான்.
யாராவது ஒருவருடைய பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள், அப்போது நீ தேறுவதற்கான மார்க்கம் உனக்குக் கிடைக்கும். யாரைப் பிடித்துக்கொள்வது எனச் சொன்னால் எளிதாக இருக்குமே என நினைக்காதே, உன் மனம் யாரில் லயிக்கிறதோ, யார் மீது பக்தி கொள்கிறதோ அவரைப் பிடித்துக்கொண்டால் முன்னேற்றம் நிச்சயமாக வந்துவிடும்.
நான் சாயி பாபாவைப் பிடித்துக்கொள்ள விரும்புகிறேன், அவரைப் பின்பற்றும் மார்க்கம் பற்றி சொல்லுங்கள் என்றால் நான் சொல்லித்தருகிறேன்.
முதலில் பாபாவிடம் வருபவர் எப்படியிருப்பார் என்றால், மூன்று தோஷங்களால் பாதிக்கப்பட்டவராக இருப்பார். அந்த மூன்று தோஷங்களில் முதன்மையானது பிணி; அதாவது நோய். உடல் நோயாக இருக்கலாம், மன நோயாக இருக்கலாம். குழந்தைப்பேறு சார்ந்த உடலியல் ரீதியான பிரச்சினையாக இருக்கலாம். இதற்கு ஆத்யாத்மிகம் என்று பெயர்.
இப்படிப்பட்ட பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருந்தால் பாபாவைப் பிடித்துக்கொள். மழை வெள்ளத்தாலோ, இயற்கைச் சீற்றங்களாலோ பாதிக்கப்பட்டி க்கிறாயா? சரியான விளைச்சல் இல்லையா? விவசாயம் போன்ற தொழிலில் நஷ்டமா? இப்படியிருந்தால் நீ பாபாவைப் பிடித்துக்கொள். இந்தப் பிரச்சினை ஆதி தைவிகம் ஆகும்.
ஆதிபவுதிகம் என்ற பிரச்சினை இருக்கிறது: பிராணிகளால் உண்டாகிற துன்பம் என இதைக்கூறுவார்கள். இப்போதெல்லாம் பிராணிகளால் தொல்லைகள் இல்லை. எனவே, நான் இந்தப்பிராணிகளை எப்படி வகையறுக்கிறேன் என்றால், நாகம் என வைத்துக்கொள்ளுங்கள் அதை ராகு -கேது -  கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் எனக் கூறுகிறேன்.
ஜாதகத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மிருக வகை சொல்லப்படுகிறது அல்லவா? அந்த நட்சத்திர பாதிப்பு என எடுத்துக்கொள்கிறேன். அதாவது கிரக பாதிப்புகள். இவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக பாபாவைப்பற்றிக்கொள்ளுங்கள்.
இன்னொரு விதமான முக்குற்றம் இருக்கிறது, அவைதான் நமது குணங்களால் விளையும் தீமைகள். தாமசம், ராஜசம், சாத்விகம் என்ற குணங்கள் அவை.
நல்லது கெட்டது தெரியாமல் ஒன்றில் ஈடுபட்டு விட்டு சிக்கிக்கொள்கிறவரா நீங்கள்? கபடு சூது தெரியாதவரா? முன்கோபியா? முரட்டுத்தனம் உள்ளவரா? எப்படி முன்னேறுவது எனத் தெரியாதவரா? நீங்கள் தாமச குணம் கொண்டவர். உடனடியாக பாபாவைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எப்படியாவது மேலேறி வர வேண்டும் என நினைக்கிறவரா? தொழில் செய்து அதனால் நட்டத்தை அடைந்தவரா? பிறரால் ஏமாற்றப்பட்டவரா? ஏமாற்றியதால் ஏற்பட்ட இழப்பில் அவதிப்படுபவரா? நீங்கள் ராஜச குணம் உள்ளவர்.
நீங்கள் பாபாவிடம் வரலாம்.
அடுத்து, நீங்கள் தெய்வ பக்தி உள்ளவரா? மென்மையான மனமும் இரக்க குணமும் உள்ளவரா? மற்றவர்களால் ஏமாற்றப்பட்டவரா? நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவரா? கோயில் குளம் அமைத்தும் கொஞ்சமும் நிம்மதியில்லாமல் தவிப்பவரா?
நீங்களும் பாபாவிடம் வாருங்கள். அவர் உங்களுக்குப் புகலிடம் தருவார். இந்த மூன்று வித குணங்களால் கெட்ட மனிதர்கள்தான் பாபாவிடம் வருகிறார்கள். நீயும் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு பாதிப்புக்கு ஆளாகியிருந்தால் பாபாவிடம் வந்துவிடு. அவர் உன்னை மீட்டு எடுப்பார்.
எப்படி?
உன்னுடைய மனம் உண்மையாகவே அவர் மீது பக்தி செய்யவேண்டும். முழுமையாக அவர் மீது உனக்கு நம்பிக்கை வரவேண்டும். கெட்ட நடத்தைகளை விட்டு மனம் திருந்தி அவரைப் பின்பற்றத் தொடங்கவேண்டும். பிறரைப் புண்படுத்தாமல் வாழ்வதற்கு தயார் செய்துகொள்ள வேண்டும். சுயபரிசோதனை செய்து சரிப்படுத்திக் கொண்டால் போதும், பாபா உதவி செய்ய உடனே வந்துவிடுவார்.
பிரச்சினைகளை தடுப்பார்
உனது எல்லைக்குள் பிரச்சினை வராமல் தடுப்பார். இதுதான் பாபா செய்கிற முதல் பணி. ஊரெல்லாம் காலரா வந்து மக்கள் பயத்தில் இருந்தார்கள். பாபா அமைதியாக கோதுமை மாவு அரைத்துக் கொண்டிருந்தார்,.
யாருக்கும் அவருடைய செயலைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. மாவை அரைத்து அதை ஊர் எல்லையைச் சுற்றிலும் கொட்டச் செய்தார். காலரா ஊருக்குள் நுழைய முடியாமல் போனது. இது சத்சரித்திரத்தில் வருகிற சம்பவம்.
இப்படித்தான் உனது பிரச்சினை எல்லை தாண்டாமல் முதலில் தடுத்துவிடுவார். அதை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வந்து விடுவார்.
கர்ஜித்து அடக்குவார்:
இடியுடன் பெருமழை பெய்தது, ஊரெல்லாம் வெள்ளக்காடாகி மக்களும் மாடுகன்றுகளும் இடமிழந்து தவித்து மசூதியில் தஞ்சம் புகுந்தார் கள். இரக்கம் கொண்ட பாபா, வானத்தைப்பார்த்து அமைதி கொள் என கத்தினார். அது அவர் பேச்சை கேட்டது. தணிந்து மழையை நிறுத்தியது. இயற்கையை அடக்கி மக்களைக் காத்தார் என சத்சரித்திரம் கூறுகிறது.
இப்படி உனது பிரச்சினை மேலே எழும்பி வரும்போது பாபா அதை அடக்குவார்.
சாமா என்ற பக்தரை பாம்பு கடித்து விஷம் மேலே ஏறி வந்தபோது, மேலே ஏறாதே, ஏறினால் தெரியும் சேதி என அதட்டி அடக்கினார்.
அப்படித்தான் உனது பிரச்சினை உன்னைக்கொன்றுவிடும் என்ற அச்சத்தை உனக்குத்தந்தாலும் அதை அதட்டி அடக்கிவிடுவார்.
தானே ஏற்றுக்கொள்வார்:
பிளேக் வியாதி சீரடியில் பரவியது. அக்கம் பக்கத்தில் பலர் மடிந்தார்கள், பலர் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டார்கள். ஒரு பெண்மணி தனது குழந்தை பிளேக்கால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவானோ என்ற பயத்தில் பாபாவிடம் ஓடிவந்தாள். அவளிடம் தன் தொடைப்பகுதியைக்காட்டி, இதோ அதை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினார்.
இப்படித்தான் உன் பிரச்சினை எதுவாக இருந்தாலும் பாபா ஏற்றுக்கொள்வார். உன்னை காப்பாற்றிவிடுவார்.
பிறரை அனுப்பி காப்பாற்ற வைப்பார்:
டாக்டர் பிள்ளை என்பவருக்கு சிலந்திக்கட்டி ஏற்பட்டு துயருற்றார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியவில்லை. இறந்துவிடலாமா என கதறும் அளவுக்கு வேதனை. படேமியா என்ற அன்பரை அனுப்பி கட்டியை மிதிக்கச் செய்து உடைத்து குணமாக்கிவிட்டார் பாபா. அப்படியே உனக்கும் செய்வார்.

நானா மகள் மீனாத்தாய் பிரசவ வேதனைப்பட்டபோது ஒருவர் மூலம் உதியைக் கொடுத்து அனுப்பி சுகப்பிரசவத்தை அனுமதித்தார். இப்படி யார் மூலமாவது உனது பிரச்சினை தீர வழி செய்வார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொன்றையும் அவர் செய்வார். அதுதான் உனது தலையில் கையை வைத்து ஆசீர்வதித்து உதியைப்பிரசாதமாகத் தருவது. இதைப் பெற்றுக்கொண்டால் உனது பிரச்சினை அனைத்தும் தீர்ந்துவிடும்.
ஒரே ஒரு நிபந்தனை. பாபாவின் செயல் முறைகள் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும் என்பதால் அவர் எப்படி செய்வார்? என்ன செய்வார் என்று விசாரிக்கக்கூடாது. அவர் மீது உண்மையான பக்தியையும் நம்பிக்கையையும் செலுத்தி அனைத்தையும் அனுபவத்தால் அறிந்து கொள்ளலாம்.
என்றைக்கு உனது பக்தியும் நம்பிக்கையும் அனுபவமாக மாறுகிறதோ அன்றிலிருந்து உனக்கு வாழ்வு ஏறுமுகமாக மாறும். இவ்வளவு சுலபமாகவா செய்வார்? எனக்கேட்கலாம். உண்மையிலேயே அப்படித்தான் செய்வார். ஆனால் நீ அவரைத் தொடர்ந்து நம்புகிறாயா? அவர் மேல் பக்தி செய்கிறாயா என்பதை சோதிக்க பரீட்சை வைப்பார்.
அத்தியாயம் 29 அழகாகச் சொல்கிறது: அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்ப காலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால்போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும். அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும்.  மனம் சுலபமாக சந்தேகங்களால் அலை பாய்ந்து சாயி ஏன் இந்தக் காட்டுவழிப்பாதைக்கு நம்மை கொண்டுவந்தார் என்று நினைக்கும்.
அந்தச் சூழ்நிலையில்தான் மனத்தை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள். அசைக்கமுடியாத திடமான நம்பிக்கை வேரூன்றும் வழி இதுவே.
இந்நிலையில் இடைவிடாமல் சாயி நாமத்தை ஜெபித்துக்கொண்டு, சங்கடங்களை நேருக்கு நேருக்கு நேர் சந்தித்தால் எல்லா ஆபத்துகளும் பறந்தோடி விடும்.
சாயி ராம் இதெல்லாம் உங்களுக்கு வந்ததா? என என்னிடம் கேட்கலாம். நிச்சயமாக வந்தது, எனக்கு மன உறுதி எதுவும் கிடையாது. அதையும் அவர்தான் கொடுத்து அனைத்தையும் எதிர்த்து நிற்கச் செய்து வெற்றி பெறச் செய்தார்.
நானும் என் குடும்பமும் அவரால் நிம்மதியாக வாழ்கிறோம். அவருடைய லீலைகளை எழுதியும் அவருடைய புகழைப் பரப்பியும், அவருக்குக்கோயில்கள் எழுப்பியும் நன்றிக்கடன் செலுத்திக்கொண்டு வருகிறோம்.
இன்றைக்கு சாயி வரதராஜன் என்றால் சாயி பாபாவின் செல்லப்பிள்ளை என்றும், தவிர்க்க முடியாத சீடன் என்றும் சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறோம். உனக்கும் அந்த நிலை நிச்சயமாக உண்டாகும். சந்தேகமிருந்தால் நேரில் வந்து என்னிடம் விளக்கம் பெற்றுச் செல்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...