Thursday, June 16, 2016

எளிய மோட்ச மார்க்கம் பாகம் 2



வழிபாடும் நோக்கமும்
வழிபாடுகளை நான்கு விதமாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை: புறவழிபாடு, அக வழிபாடு, புற - அக வழிபாடு, அக-புற வழிபாடு. விக்ரஹத்தில் இறைவனை பூசிப்பது புற வழிபாடு, மனதில் தியானிப்பது அகவழிபாடு, விக்ரஹத்திலும் மனதிலுமாக பூஜிப்பது புற அக வழிபாடு, தியானநிலையிலிருந்து இறங்கி வந்து சிலையில் இறைவனை வழிபடுவது அக புற வழிபாடு எனக் கூறலாம்.
இந்த வழிபாடுகளின் நோக்கம் ஆன்மாவை அறிந்து முக்தி பெறுதல். இதற்கு முக்கியத் தேவை தத்துவ விசாரணை. ஒரு குழந்தை எப்படி தான் பார்க்கிற அனைத்தையும் தொட்டு அறிந்து தெளிகிறதோ அப்படி அனைத்தையும் விசாரித்து அறிந்துகொள்வது ஆத்ம மோட்சம் பெற முக்கியத் தேவையாகும்.
இவ்விஷயத்தில் ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஒருவர் தேவைப்படுகிறார், அவரே குரு. அவர் மூலமாக அடைய வேண்டிய விஷயங்களை மனதிலும் பிறர் வாக்கு வழியிலும் தெளிவு செய்யும் நிலையில் சத்குரு என்றாகிறார். அதாவது அவரே இறைவனாக- அன்னை தந்தையாக, பந்துவாக- அனைத்துமாக ஆகிறார் என்பதாம்.
இதுவரை சாயி பாபாவை சத்குரு என அறிந்தும் லவுகீக விஷயங்களாக சார்ந்திருந்த நிலையிலிருந்து ஞான மார்க்கம் போதிக்கும் நிலைக்கு நாம் பார்க்கலாம்.
இது எல்லோருக்கும் சாத்தியமாகுமா எனில், சம்சாரத்திலிருப்பவர்களுக்கும், உலக விஷய பற்று உடையவர்களுக்கும், இறை ஞானத்தின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கும், விஷயத்தைப்புரியாமல் குழப்பம் அடைகிறவர்களுக்கும் இது சாத்தியப்பட்டு வராது.
என்னிடம் கேள்வி கேட்காமல் தன்னிடமே கேள்வி கேட்டுத் தெளிவைப் பெற முயல்வோர் பயனடையவே இப்புதிய பகுதி. தன்னிடமே கேள்வி கேட்டு பதில் அறியத் தொடங்குவதற்குப்பெயர்தான் தத்துவ விசாரணை. இதைச் செய்யச் செய்யத்தான் ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். உணராதவர் விசாரணை செய்யும்போது ஆன்மிக முன்னேற்றத் தடையும் ஏற்படும்.
உங்களுக்கு எதுவரை ஜீரணிக்க முடியுமோ அதுவரை இதைத் தருகிறேன். பெற்று ஒரு படி மேலே வந்துவிடுங்கள்.
சத்குரு வணக்கம்
ஸச்சிதா நந்தரூபாய வ்யாபிநே பரமாத்மநே
நமஸ்ரீ குருநாதாய ப்ரகாஸாநந்த மூர்த்தயே!
யேநசே த யதாஹீதம் சித்தம் சே தயதே நரஹ
ஜாக்ரத் ஸ்வப்ந ஸஷூப்த்யாதி தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!
சத்-சித்-ஆனந்த வடிவம் உள்ளவனும் எங்கும் நிறைந்திருப்பவனும், சதாநந்தனும், பரமாத்ம வடிவினனும் ஆகிய ஸ்ரீ சத்குரு ஸ்வாமியை வணங்குகிறேன்.
எவனது சக்தியினால் ஜட சொரூபமாகிய இந்த மனம் ஆத்ம சொரூபமாகத் தோன்றிச்சகல காரியங்களையும் செய்கிறதோ, எவனது சத்தாமாத்திரத்தினால் ஜீவன் சேதன வடிவமாய் ஜாக்கிரதை, சொப்பன, சுஷூக்தி என்னும் அவஸ்தை போன்ற பல நிலைகளை அடைந்து சகலத்தையும் அனுபவிக்கிறதோ, அப்பேற்பட்ட நிலையைச் சாட்சியாக இருந்து அளித்துக்காக்கிற வடிவினராகிய ஸ்ரீ சத்குருவை வணங்குகிறேன்.
சைதந்யம் ஸாஸ்வதம் ஸாந்தம் வ்யோமாதீதம் நிரஞ்ஜநம்
நாதபிந்து களாதீதம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:
தானே ஒளிரக் கூடியதும், நித்தியமானதும், சாந்தமானதும், ஆகாயத்தை விட அதிகமானதும் எந்த தோஷங்களும் இல்லாததும், நாத பிந்துகள் என்பதற்கும் அதிகமானதும், சைதன்ய வடிவம் உடையதுமாகிய பிரத்யகாத்மா என்னும் ஸ்ரீ சத்குருவாகிய இறைவனை வணங்குகிறேன்.
(இனி சத்குரு போற்றி பற்றிய சுலோகம் இல்லாமல் பொருளை மட்டும் கூறுகிறேன்)
பிரம்மா விஷ்ணு, மகேஸ்வர வடிவினரும், சாட்சாத் பரப்பிரும்மமுமாகிய என் சத்குரு தேவரை வணங்குகிறேன்.
பிரபஞ்சமெல்லாம் வியாபித்து அதையும் கடந்து பரிபூரணமாய் எங்கும் விளங்குகிற பரமாத்மா இப்பேர்பட்டதென்று அதன் லட்சணங்களை உணர்வுப் பூர்வமாய் போதித்து வெளிப்படுத்திய சத்குருவை வணங்குகிறேன். தாவர ஜங்கமத்துள் ஜீவாத்ம சொரூபம் இப்பேற்பட்டது என்றெல்லாம் விவரித்துணர்த்திய சத்குருவை வணங்குகிறேன்.
பரமாத்ம வடிவமாகவும் ஜீவாத்ம வடிவமாயும் இவ்விரண்டும் பேதமற்ற பரப்பிரம்மம் என்றும் போதித்தருளுகிற சத்குருவை வணங்குகிறேன்.
என் சத்குருவே சாயி தேவா! நீயே லோகப்பிரபு, நீயே லோக குரு, என் ஆத்மா சகலத்திலும் வியாபித்துள்ளதை உணர்த்திய பரப்பிரம்மமே உன்னை வணங்குகிறேன்.
எனது இந்த உடலே பிரபஞ்சமாயுள்ளது என்பதையும், நானே சர்வத்திலும் பரிபூரணமாக விளங்குகிறேன் என்பதையும் உணர்த்தி, எனது நிஜ வடிவத்தைக் காட்டியருளிய குரு தேவா, தாங்களே சகல அவதாரங்களாகவும், அவதாரத்திருமேனியுள்ளவராகவும் இருப்பதால் தங்கள் மேன்மையான திருவடிகளை வணங்குகிறேன்.
பிரம்மா முதல் புல்பூண்டு வரை அனைத்தும் பரப்பிரம்ம மயம், நீயோ அந்த பரப்பிரம்மம், பரப்பிரம்மமாகிய நீயே குரு ஸ்வரூபம். அப்படிப்பட்ட உன்னை நமஸ்கரிக்கிறேன்.
வேதங்களாலும் சாஸ்திரங்களாலும், சப்த கோடி மகாமந்திரங்களாலும், யந்திரங்களாலும் அறிய முடியாத பிரம்ம ஞானத்தை உன்னுடைய அருள் பார்வை ஒன்றினாலேயே அளித்து விளங்கச் செய்வதால், மெய்யான இறையே, சத்குருவே நின்னையே வணங்குகிறேன்.
(தொடரும்)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...