அது ஒரு வியாழக்கிழமை. அதிகாலை நேரத்தில் பிரார்த்தனை வேளையில் பாபாவுடன் சம்பாஷணை
செய்துகொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தால் ஞானம் வரும், உன்னைத்தொட்டால் அனுபவமாகும் என்ற வார்த்தைகள் வந்தன. இது எப்படி
சாத்தியமாகும் என நான் எண்ணவில்லை, மாறாக,
என்னிடம் இனி புதிய சக்திகள் வரப்போகின்றன என நினைத்தேன்.
கூடவே ஒரு பயம், நான் என்னைத் தொட சாயி பக்தர்களை அனுமதிப்பதால் இரவு வேளைகளில்
தாங்கமுடியாத உடல் உபாதைகளை அனுபவிக்கிறேன். அழலாம் போன்றிருக்கும் அந்த நிலையில் இனி
இவ்வாறு செய்ய அனுமதிக்கக்கூடாது என நினைப்பேன்.
மறுகணம் மனம் மாறும். என்னை நம்பி வரும் இந்த பக்தர்களின் கர்மாவை வாங்குவதால்
நான் அழிந்துபோனால்தான் என்ன?
வீணே தரித்த உடல் எப்படியாவது போகட்டும். எனக்குள் நீ இருந்து
பிறரை ஆசிர்வதிப்பதாக நினைத்துக்கொள்கிறேன்,
நடத்து.. எனக் கூறுவேன்.
அன்றைய தினம் பிரார்த்தனை மையத்திற்குச்சென்றேன். சத்சங்கம் செய்யும்போது, என்னைப் பார்த்தால் ஞானம் வரும் என்ற பதத்திற்குப்பொருள் சொல்ல
ஆரம்பித்தேன்.
சத்குருவின் தரிசனம் இருதயத்தின் முடிச்சு களை அவிழ்த்து, புலனடக்கம் கிடைக்கச்செய்யும். முன்ஜென்மங்களில் சேர்த்த பாவ
மூட்டைகளையும், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களையும் அழிக்கும் (அத்: 10-9)
உடலில் நான் என்னும் உணர்வு இருக்கும் வரை மனிதவடிவில் ஒரு குரு தேவை. அந்த வடிவை
எப்போதும் மனக்கண்ணில் பார்த்து வணங்கிக்கொண்டிருக்கவேண்டும். அப்போது தான் பக்தி தோன்றும்.
குருவின் பாதங்களில் ஞானம் இருக்கிறது,
ஆகவே தலையைத் தாழ்த்தி குருவின் பாதத்தில் தலை வைத்து கண்கள்
திருப்தியடையும்வரை அதை தரிசனம் செய்தால் ஞானம் வரும்.
சுருக்கமாகச் சொன்னால் இறைவனை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கவேண்டும்.
இதுதான் பார்த்தல் ஆகும்.
எப்போதும் அவர் தொடர்பில் இருப்பதுதான் அவரைத் தொட்டுக்கொண்டிருப்பதாகும். தாய்
ஆமையின் பார்வையால் குட்டி போஷாக்கு பெறுகிறது. தாயின் பார்வையைத் தாண்டிப்போனால் போஷாக்குக்
கிடைக்காதல்லவா?
ஆகவே, எப்போதும் அவரது பார்வையில் நாம் படுமாறு இருக்கவேண்டும். பாபா
பக்தர்களின் பூஜையை விரும்பி ஏற்பவர். சிலர் அரைத்த சந்தனத்தை அவர் நெற்றியில் இரண்டு
விரல்களால் கோடுகளாக இடுவார்கள்;
சிலர் கஸ்தூரி சேர்த்து நெற்றியில் பட்டை போடுவார்கள். சிலர் பாதங்களைப் பிடிப்பார்கள், சிலர் கைகால்களை அழுத்தி விடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு
ஒரு சுகானுபவம் ஏற்படும். பரவச உணர்வில் அவர்கள் பக்தி செய்வார்கள்.
ஞானிகள் தங்களால் நினைக்க முடியாத கண்ணனின் வடிவை, கோபியர் தங்களால் மறக்க முடியவில்லை என்று கூறியது எப்படி?
அவன் உடலைத் தொட்டுத் தொட்டு அனுபவித்த பாச உணர்வு என்னும் காரணம்தான். இப்படித்தான்
சாயி பக்தர்கள் சாயியினுடைய உருவத்தைத் தொட்டு வணங்குகிறார்கள். அதை குற்றம் எனக் கருதுவதில்லை.
இவ்வாறு அவரை நினைப்பதாலும்,
அவரது தொடர்பில் இருப்பதாலும் ஒருவன் பக்தனாகி, தனது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறான்.,” இப்படித்தான் பிரவசனம் செய்தேன்.
சரி, இது பாபாவை நினைத்து அவருடைய தொடர்பில் இருப்பதால் வருவது. உன்னைத்தொட்டால், உன்னைப் பார்த்தால் என்று பாபா சொன்னாரே அதன் பொருள் என்ன என
அமர்ந்து யோசித்தேன்.
நான் என்பது ஆத்மா. எனது ஆன்மாவை நான் உற்றுநோக்கினால் எனக்கு ஆன்மிக ஞானம் வரும்
என்கிறார் பாபா. என்னைத் தொட்டால் அனுபவமாகும் என்கிறாரே அது என்ன?
இது பெரிய விஷயம். இடகலை நாடியின் வழியாக குருவருளுடன் புருவ மத்தியில் உள்ள சுழிமுனையை
அடைந்து, மூலக்கனலை எழுப்பி மும்மலம் அறுத்து மூச்சுக்காற்றான நந்தியை
இயக்கி ஆன்மஜோதியைத் தொடவேண்டும்.
அப்பா இது என்னால் முடியாது. நான் அற்பப்பாமரன், ஆளை விடும். என் ஆன்மாவாகிய
தங்களை மட்டுமே நான் தொட்டுக்கொண்டு இந்தப் பிறவித் தளையைக் கடக்க வழிவிடும் என வேண்டிக்கொண்டேன்.
என் குழந்தைகளே, ஆன்மிகத்தில் தேறும் போது அவர் போதிக்கிற விஷயங்களில் ஞான அர்த்தம்
தோன்றும். அது எல்லோருக்கும் பொருந்தாது. நீங்கள் இந்த சம்சார உலகில் வெற்றிகரமாக வாழ
அவரை எப்போதும் நினைத்து, அவரது தொடர்பில் இருந்தாலே போதுமானது. மீதியை அவர் படிப்படியாகச்சொல்லித்
தருவார்.
நான் எப்படி இறைவனை நினைத்துக் கொண்டிருக்கிறேனோ, அவரது தொடர்பில் இருக்கிறேனோ அப்படி, ஒருவன் என்னுடைய தொடர்பில் இருக்கும்போது நான் அவனுக்காக நிச்சயமாக இறைவனிடம்
பிரார்த்தனை செய்வேன். அவனது வேண்டுதல் அனுபவமாக மாறுவதற்கு என்னால் எது முடியுமோ அதைச்
செய்வேன்.
ஒருவன் என்னை நினைப்பானேயாகில்,
எப்போதும் அவனது சிந்தை ஈஸ்வரனில் லயித்துவிடும். என்னைப் போல
மாறவேண்டும் என எண்ணிக்கொண்டு செயல்பட்டால் அவன் சாயி பக்தனாகி விடுவான். இதைத்தான்
பாபா சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment