உண்மையான சாயிபக்தராக தன்னை நினைப்பவர் எக்காலத்திலும் கவலைப்படக்கூடாது. மரணம் வரை கவலைப்பட வேண்டா,
கடவுள் அருளைப்
பெறும் வழியும் அதுவே என்று பாபா போதித்திருக்கிறார்.
கவலைப்படாதிருந்தால்தான் கடவுள் அருளைப்பெறலாம் என்பது
பாபாவின் கூற்று.
ஆனந்தமே கடவுள் என தைத்திரீய உபநிடதம் அறுதியிட்டுக் கூறுகிறது. இன்பத்தை மட்டுமே அனுபவிக்க அறிந்தவர்கள் எப்போதும் கடவுளிடம் இருப்பவர்கள் ஆகிறார்கள். எனவே இதை நாடுங்கள் என்கிறார்
பாபா.
இன்பத்தை எப்படி அடைவது?
கவலைப்படாதே என்று சொன்னால் எப்படி? அது இயல்பாக வந்துவிடுகிறதே!
இதை நிவர்த்தி செய்ய எனக்கு எப்போதும்
இன்பம் தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்தால்தானே
என்னால் இன்பமாக இருக்கமுடியும் என மனம்
சொல்லிக்கொள்ளும்.
இன்பமும் துன்பமும் மன உணர்வுகளே தவிர, இன்பம் என்றால் மனம்
மலர்ச்சியடையவேண்டும், துன்பம் என்றால் மனம் தளரவேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இன்ப நேரத்தில் சிரிப்பதும், துன்பத்தில் அழுவதும்
அந்நிலைகளை அனுபவிப்பதால் ஏற்படும் விளைவுகள்.
அடிபட்டால் வலியாக உணர்வு வெளிப்படுகிறது. இதைத் தாங்க
அழுகை என்ற தன்மையை பயன்படுத்துகிறோம்.
கிச்சுகிச்சு மூட்டும்போது இன்பமான கூச்சம்
ஏற்படுகிறது. இதை தாங்கிட சிரிப்பு என்ற தன்மையை
பயன்படுத்துகிறோம்.
சிரிக்கும்போது களிப்பாக உணர்வு வெளிப்படுகிறது; துன்ப நேரத்தில் அழுகையாக
வெளிப்படுகிறது. அனுபவித்து முடித்தவுடன் தாமாகவே அந்த உணர்வுகள் போய் விடுகின்றன. தாமாக வருவதும் போவதும்
நியதி. அது எப்போதும் இருப்பதாக நினைவில்
தொடரவைத்துக் கொள்ள வேண்டா என்று ஞானிகள்
கூறுகிறார்கள்.
உதாரணமாக, இன்று சொர்க்க லோகத்தில் இதுவரை அனுபவிக்காத இன்பத்தை
அனுபவிக்கிறீர்கள்; நாளைக்கு பூமிக்குத் திரும்ப வேண்டியுள்ளது. பூமியில் நாளைக்கும் அதே இன்பம் இருக்காது; அந்த இன்ப உணர்வும் இருக்காது அல்லவா? ஆனால் அதைப் பற்றிய நினைவுகள் இருக்கும். இந்த நினைவுகள் மீண்டும் நிதர்சனமாகிவிடாது;
ஆனால் அதையே உண்மை
என நம்பி மயங்கி ஏமாந்து
கொண்டிருக்கிறோம்.
நிதர்சனமில்லாத ஒன்றை நினைத்து நினைத்து காலத்தை விரையம் செய்யாதே! அடுத்து என்ன ஆகப் போகிறது என்பதில் கவனம் செலுத்தி இன்பத்தைப் பெற முயற்சி செய்
எனக் கூறினர் முன்னோர்.
கடன்காரன் கழுத்தைப் பிடித்தான் என கதறி அழுவதில் என்ன வந்து விடப்போகிறது? கணவனை நொந்து கொள்வதினாலோ,
மனைவியை நொந்து கொள்வதாலோ ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்வதாலோ என்ன கிடைத்து விடப்போகிறது?
பிரச்சினையை நினைத்துப் புலம்புவதால் என்ன கிடைத்துவிடப் போகிறது?
என்ன கிடைக்கவேண்டும் என்றால், கடனில் இருந்து விடுதலை; பிரச்சினையில் இருந்து தீர்வு. இதைப்பெற என்ன செய்யவேண்டும்
என்பதை யோசித்து அந்த முயற்சியில்
இறங்கு. அது உனக்கு இன்பத்தை தரும்.
கடன் என்பது ஓர் உதாரணம்தான். எந்தப்பிரச்சினையாக
இருந்தாலும் நடந்ததை எண்ணி வருந்தாமல்
நடக்கவேண்டியதற்கு தயார்படுத்து. அது ஆனந்தத்திற்கு
வழியாகும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே
நடக்கிறது; எது நடக்குமோ அதுவும் நன்றாகத்தான் நடக்கும் என கீதை கூறுகிறது. இதை நன்றாக சிந்தித்துப்பார்த்தால் இன்பம் துன்பம் என
நீங்கள் எதிர்கொண்டாலும் அது நன்மைக்கே என்பதை முடிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்கின்றன நமது சாஸ்திரங்கள்.
கவலை என்பதும் இன்பம் என்பதும் ஒன்றும் இல்லை என்றாலும் நாம் விரும்பாத ஒன்றில் இருக்க நாம் பிரியப்படுவதில்லை. விரும்புகிற ஒன்றை நாடுகிறோம். இந்த விரும்புகிற விஷயம் தான் கடவுள். ஆகவே, அதை அடைய தொடர்ந்து செல் என நமது
முன்னோர்கள் சொன்னார்கள்.
அனைத்துக்கும் முடிவுரை போன்றதான உபநிஷத்து இந்த உண்மையை
உணர்ந்து நமக்கு போதிக்கிறது. பாபாவும்
இதைத்தான் போதித்தார்.
நாம் கவலையை விட்டுவிட்டு ஆனந்தம் தரும் நிலைக்கு மாறிக்கொள்ள வேண்டும்.
இந்த ஆனந்த நிலையை அடைவதற்கான மார்க்கத்தில் முதன்மையானது மறதி. அடுத்துமனக்கட்டுப்பாடு, மூன்றாவதாக நமது மனதை அந்த விஷயத்திலிருந்து மாற்றுவது. இவை அனைத்தும் நமக்குள் இருந்து வரவேண்டும்.
மறதி:
பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு மறதிதான் என்பார்கள். நல்லதோ கெட்டதோ எதுவாயினும் நடந்து அதை அனுபவித்துத் தீர்த்தபின் அதை மறந்துவிடவேண்டும். எதுவும் நடக்காததுபோல இருந்துகொண்டு புதிய ஒன்றைத் தேடவேண்டும். அந்தப் புதிய ஒன்று ஆனந்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டியது அவசியம்.
நிறைய விஷயங்களில் மறதி இல்லாததால் தான் நிம்மதி என்ற உணர்வு நம்மிடம் இல்லாமல் போகிறது. எதிர்பார்ப்பு என்ற ஒன்று தோன்றி நிம்மதியை குலைக்கிறது.
ஏமாற்றம் என்ற பாதிப்பு நிலை நம்மை திசை
திருப்பி நிம்மதி என்ற உணர்வை பறித்துக்கொள்கிறது.
படபடப்பு, பதைபதைப்பு, கோபம், பழிவாங்கும் எண்ணம், மனமாச்சர்யம், பொறாமை போன்ற வற்றை அது தூண்டிவிடுகிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் நேற்றைய சூழலை இன்றைக்கு மறந்துவிட வேண்டும். யதார்த்தத்தில் மட்டும் வாழவேண்டும்.
மனக்கட்டுப்பாடு:
மறதி கைகூடாத நேரத்தில் மனக்கட்டுப்பாட்டை பிரயோகிக்கக் கற்கவேண்டும்.
விஷய பாதிப்புகளை நினைத்துக் கொண்டிருக்காமல் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு பிடிக்காத ஒன்று நடந்தால் உடனே எதிர்ப்பை வெளிக்காட்டும் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும். கசப்பை
வெளிப்படுத்தும் விதமாக பழிவாங்குதல்
போன்றவற்றைச் செய்வதை தவிர்க்க வேண்டும்.
விமர்சனம் செய்வதை விட்டு விட வேண்டும். இப்படி
விடவேண்டியவற்றை விட்டால் மட்டுமே வரவேண்டியது வரும்.
நமது இந்த செயல்களால் என்ன நன்மை கிடைத்துவிடும் என யோசித்தால் நாம் பிறரை பாதிப்புக்கு ஆளாக்க மாட்டோம், நாமும் பாதிக்கப்பட மாட்டோம். இல்லாவிட்டால் விஷய பாதிப்புகள் நமது மனதை கொந்தளிக்கச் செய்து ஆனந்தம் என்ற உணர்வையே அடியோடு சாய்த்துவிடும்.
மனதைத் திருப்புதல்
மூன்றாவதாக மனதை வேறு வழிகளில் செலுத்த வேண்டும் என்று பார்த்தோம். நடந்ததை நினைத்துக்கொண்டிருந்தால் நிம்மதி எப்போதும் கிடைக்காது. மனதில் தெளிவு பிறக்காது. எனவே, நமது மனதை விஷயத்திலிருந்து
மாற்றிக்கொள்ள வேண்டும்.
என்றாவது ஒருநாள், அட போடா, போனால் போகட்டும் என நினைக்கத்தான்
போகிறோம். அது நடந்து வெகு
காலத்திற்குப் பிறகு இப்படி நினைக்காமல் உடனே நினைத்தால்
விளைவு நன்றாக இருக்குமே!
வாழ்நாளில் எத்தனையோ அனுபவங்களை நாள்தோறும் அனுபவித்துக் கொண்டே வருகிறோம். இதை நினைவில் வைத்திருந்தால் நல்லது நடக்குமா? அது அதை அப்படி அப்படியே விட்டுவிட வேண்டும். இதற்கு மனதை மாற்றுவதே ஒரு மகத்தான வழி.
வெளியிலிருந்து கடவுளைப்
பெறுதல்
வெளியிலிருந்து ஆனந்தமாகிய கடவுளைப்பெற ஏதேனும்
வழியிருக்கிறதா என்றால் பாபா சுலபமான இரண்டு வழிகளைக்
காட்டுகிறார்.
முதலாவது இதமான வார்த்தைகளைப் பேசுதல்.
இரண்டாவது பரோபகாரம் செய்தல்.
திருக்குறள் “இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்” என்கிறது; இனியவை கூறல் என ஓர் அதிகாரத்தையே
வைத்திருக்கிறது; பரோபகாரம் செய்வது பற்றி அறத்துப்பால்
என ஒரு பிரிவையே உள்ளடக்கிவைத்திருக்கிறது.
இதமான வார்த்தைகளைப் பேசினால் உடனே இன்பத்தை அடையமுடியும். எதையும் எதிர்பார்க்காமல் உபகாரம் செய்தால் உடனே
இன்பம் கிடைக்கும். செய்த நன்றியை
மறக்காமல் திரும்ப நன்மை செய்தால் இருவருக்குமே
நன்மை கிடைக்கும். அதன் மூலம்
ஆனந்தம்பிறக்கும். இந்த ஆனந்தம் என்கிற
நிலைதான் கடவுள் நிலை. ஆனந்தம் தருகிற
உணர்வுதான் கடவுள் உணர்வு. இதில்
திளைத்திருக்கும் வழிகளை மட்டுமே நாடினால் இறுதிவரை
துன்பம் இருக்காது, கவலைத் தொடராது.
மனம் செயல்படுவதற்கான வழிகள் தெரியும். முன்னேற மார்க்கம் கிடைக்கும். அதன் வழியாகச்செல்லுங்கள் என
பாபா போதிக்கிறார். இதை உணர்ந்து செயல்படலாம்.
No comments:
Post a Comment