Saturday, June 25, 2016

விளைவுகளை பக்குவமாக ஏற்றுக்கொள்!

அன்புக் குழந்தையே!
என் ஆசீர்வாதங்கள். நீ என்னிடம் கோரிக்கை வைக்கிறாய், நான் அதனை நிறைவேற்றித் தருகிறேன். இது தொடர்ச்சியாக நம் இருவருக்கும் இடையில் நடந்துவருகிற நிகழ்வு. அதற்கு மேல் ஒன்று இருக்கிறது; அது தான் விளைவு.
நீ எந்த விளைவையும் யோசித்து என்னிடம் கேட்பதில்லை, காரணம் உனக்கு விளைவுகள் பற்றிய போதிய ஞானம் இல்லை. அதனால் கேட்டது கிடைத்தும் உன்னால் திருப்தியாக இருக்க முடியவில்லை.
பலன் வேறு, விளைவு வேறு. இரண்டும் ஒன்று போலத்தான் தெரியும். மழை பெய்கிறது, அதன் பலனாக பயிர் செய்யலாம். தொடர்ந்து மழை பெய்தால் பயிர் நாசமாகிவிடும்; அல்லது போதிய அளவு பெய்தால் விளைச்சல் மிகுதியாகும்; இவை விளைவுகள். என்னிடம் வேண்டிக்கொள்ள வருகிறவர்கள் தமது பிள்ளைக்குத் திருமணத் தடை நீங்க வேண்டுகிறார்கள். அது நீங்கி திருமணம் நடை பெற்றதும் வாழ்க்கையில் பிரச்சினை ஆரம்பிக்கும்; பாபா பார்த்துக் கொடுத்தார், இது இப்படிஆகிவிட்டது; பாபா எங்கள் மீது கருணை காட்டாமல் கைவிட்டார் என உடனே என் மீது குறை சொல்வார்கள்.
நீ எதைக் கேட்டாயோ அதை நான் கொடுத்து விட்டேன்! அத்துடன் உனது வேண்டுதலும் எனது கடமையும் முடிந்தது. வேண்டுதலுக்கான விளைவை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் என்னை முழுவதுமாக நம்பியிருக்கவேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
உதாரணமாக, ராகு கேது பிரச்சினை தீர பரிகார தலத்திற்குப் போய் வந்தாய், தடை நீங்கியது. ஆனால் அது தொடர்ந்து நடைமுறையில் இருக்கவேண்டும் என்றால் அந்த கிரக தேவதைகளை வழிபட்டுத்தானே ஆகவேண்டும்?
கிரக தேவதைகளை வழிபட்டால் போதுமா? அவற்றின் தன்மை என்ன? அவற்றின் தாக்கம் நம்மை அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டாமா?
களத்திர தோஷம் என்றால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்காது, சண்டைச்சச்சரவுகள் நீடித்துக் கொண்டிருக்கும். ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வார்கள், இவர்களுக்கு மாமியாரோ, நாத்தனாரோ அல்லது வேறு யாரோ ஒரு மூன்றாவது ஆளின் தலையீடு இருந்து வாழ்வில் நிம்மதியைக் கெடுக்கும். இதுவெல்லாம் களத்திர தோஷத்திற்கு அடிப்படையாக அமையும் என்பதையெல்லாம் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப யோசித்து நடந்தால் பிரச்சினை வராது.
எதையும் கவனிக்காமல் விட்டுக்கொடுக்காமல், குறை கூறிக்கொண்டும் கோள் சொல்லிக்கொண்டும் போனால் குடும்பம் நிலைக்காது. இதுதான் தோஷத்தின் விளைவு. கேது தோஷமுள்ள ஒருவனுக்கு திருமணம் செய்தால் அவன் அலித்தன்மை உடையவனாக இருப்பான், பயந்துபோய் மனைவி பக்கம் திரும்பமாட்டான் அல்லது சந்நியாசம் பற்றி பேசுவான் என்று சொல்வார்கள். தெரிந்து பெண்ணைக்கொடுத்தால் விளைவுகளைப் பற்றி எச்சரிக்க வேண்டும், இல்லாவிட்டால் நடப்பதை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
உண்மையை மறைத்து பெண்ணுக்குக்கல்யாணம் செய்துவைத்துவிட்டால், மாப்பிள்ளை வீட்டாருக்கு எதுவும் தெரியாமல் போய்விடுமா? அல்லது மாப்பிள்ளை தன் குறையை மறைத்து கல்யாணம் செய்துகொண்டால் மனைவிக்குக்குறை தெரியாமல் போய்விடுமா? இதை மறைக்க வேறு காரணங்களைத் தேடி பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பணம் வந்தால் எல்லாம் வந்துவிடும் என சிலர் நினைக்கிறார்கள். இந்நினைப்பு பலருக்கு  ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது. நினைத்தது நடக்கவில்லையே என்ற சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. எல்லாவற்றையும் அடைந்துவிடலாம் என்றோ, சாதித்துவிடலாம் என்றோ நினைப்பது அறிவீனம்.
நம் செயல்களுக்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ அல்லது மிதமாகவோ, பூஜ்யமாகவோ பலன்கள் கிடைக்கும். சில சமயம் அதற்கு எதிர்விளைவுகள் தோன்றும். உதாரணமாக, வீடு கட்டிக்கொள்ளலாம், ஆனால் அதுவே குடும்ப மாகிவிடாது. மெத்தை வாங்கலாம்,
தூக்கத்தை வாங்க இயலாது; புத்தகத்தை வாங்கலாம், அறிவை வாங்க இயலாது. இப்படி நிறைய சொல்லலாம். இப்படிப்பட்ட நிலைகளில் விளைவுகளை நிச்சயமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
வீடு கட்டிவிட்டு ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டு தாயார் வீட்டு மனைவி பிள்ளையுடன் போய்விட்டால் குடும்பம் என்பதற்கு என்ன பொருள்? வீடு கட்டிவிட்டு கணவன் வெளியிலேயே இருந்துவிட்டால் குடும்பத்திற்கு என்ன பொருள்? கடன் வாங்கி கட்டிய வீட்டின் கதவை கடன்காரர்கள் அதிகாலை முதலே தட்டிக்கொண்டிருந்தால் எங்கிருந்து வீடு இருக்கும்? நிம்மதி இருக்கும்.
இதெல்லாம் ஏன் எனில், நாம் செயலுக்குத்தந்த முக்கியத்துவத்தை விளைவுக்குத் தராமல் போனதால் ஏற்பட்டது. ஆகவே இதை அனுபவித்தாக வேண்டும்.
இப்போது தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், நீ எதிர்பார்க்கிற எதுவும் எதிர்பாராத நேரத்தில் வந்துவிடும்; எதிர்பாராதவையும் திடீரென வந்து நிற்கும். அப்படியே நினைத்தது நடக்காமல் போவதும் நினைக்காதது திடீரெனநடப்பதும் உண்டு. இவையும் தங்களுக்குப்பின்னால் விளைவு என்கிற கொடுக்கை வைத்திருக்கும். ஜாக்கிரதையாக இருந்துகொள்.
சென்னையில் பெய்த அடைமழையை எடுத்துக்கொள்ளேன். ஐயோ பாவம் தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என யாரைப்பற்றியோ பரிதாபத்துடன் செய்தியைப் படித்த ஒருவர், அப்படி ஒரு சம்பவம் தனக்கு நேரிடப்போகிறது என்பதை உணராமல் நடக்கிறார்.
குட்டையில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி இறந்துவிடுகிறார். நமக்கும் இப்படியொரு சம்பவம் நடக்கும் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.
இது எதிர்பாராமல் நடக்கிற நிகழ்வு. விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஊரெல்லாம் வெள்ளத்தில் மிதக்கிறது ஐயோ பாவம் என நினைத்தவர்கள் வீட்டை தண்ணீர் சூழ்ந்துகொண்டபோது செய்வது அறியாது திகைத்தார்கள். தங்களுக்கும் இப்படி நேரலாம் எனத்தெரிந்திருந்தும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை.
நடக்கப்போவதை அறியும் அறிவு இருந்தாலும் தனக்கு அந்த பாதிப்பு நேரும்போது அதைத்தடுக்கக்கூடிய சக்தி இல்லாமல் போய்விடுகிறது, அல்லது செயல்படாமல் போகிறது. இதனால் ஆபத்து வரப்போகிறது எனத் தெரிந்தும் சிக்கிக்கொள்கிறோம். விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
செய்ய முடியாத நிலையும், ஆபத்துகளை அறியமுடியாத நிலையும் கட்டிப்போட்டு விடுவதால் எதிர்விளைவுகளுக்கு ஆட்பட்டு அல்லல் படுகிறோம்.
ஏன் இப்படி நடக்கிறது?
நமது அறிவும், சக்தியும் ஒரு வரம்புக்கு உட்பட்டதாக இருக்கின்றன. கேடுகளைப் பற்றி முன்னதாக அறியும் சக்தியிருந்தாலும் அதிலிருந்து தப்பிக்கொள்ள நம்மால் முடிவதில்லை.
எப்படித்தான் தப்பித்துக் கொள்வது?
உனது வாழ்வில் எது வந்தாலும் போனாலும் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அவை எனது பிரசாதங்கள் என எடுத்துக்கொண்டால் உனக்கு நன்மை நடக்கும்.
எதையும் அனுபவிக்கத் தயாராகிவிட்டால், என்னிடம் விளைவுகளின் பொறுப்பை முழுதும் ஒப்படைத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அப்பா இந்த மாதம் எனக்கு எதையும் சரியாக சொல்லவில்லையே என்று நினைக்காதே. உனக்கும் சேர்த்துதான் இதில் சூட்சுமமான விஷயங்களைக் கூறியிருக்கிறேன்.
என் பக்தர்களின் கடந்தகால வாழ்க்கை முழுவதும் அவர்களுடன்தான் இருந்திருக்கிறேன் என்பதை அவர்கள் யோசித்துப் பார்த்தால்புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு நிலையிலும், செயலிலும் நான் அவர்கள் பக்கத்திலேயே இருந்திருக்கிறேன். அவர்கள் துன்பங்களைக்களைந்து நன்மை செய்திருக்கிறேன். கர்ம வசத்தால் அனுபவிக்க வேண்டிய துன்பங்களைக்கூட, சிரமம் இல்லாமல் என் பக்தர்கள் அனுபவிக்கும் வகையில் திருப்தியுடன் அனுபவிக்கவே செய்திருக்கிறேன். இதனால்தான் என் பக்தர்கள் என் மீது நன்றி உணர்வுடன் இருக்கிறார்கள்.
உனது எதிர்காலத்தில் தவறுகள் நேர்ந்து விடக்கூடாது என்பதால்தான் கடந்த காலத்தில் உன் வாழ்க்கையை தவறுகள் சூழ்ந்து கொள்ளாத வாறு தடுத்துக் காப்பாற்றிவந்தேன். நீ விரும்பிய பலவற்றைத் தவிர்த்து தேவையானவற்றைத் தேவை அறிந்து கொடுத்தேன்.
உன்னுடைய தாயும் தந்தையும் உனக்கு வேண்டியதை முழுவதுமாகத் தரவில்லை.  ஆனால் நானோ உன்னை என் இதயத்திலேயே சுமந்துகொண்டு உன் தேவைகளை முழுவதுமாகஅறிந்து பூர்த்தி செய்தேன்.
உனக்கு அவசியமானது, எதிர்காலத்திற்குத்தேவையானது என்று நினைத்ததை நான் அப்புறப் படுத்தியபோது நீ என்னை கோபித்துக்கொண்டாய், வெறுத்தாய், ஒதுக்கினாய்.
அப்போதும் உன்னைவிட்டு ஒதுங்காமல் உன்னுடனேயே இருந்து உனக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்தேன். சுற்றத்தார் உனக்கு எதிராகக் கிளம்பிய போதும், உனது சொத்துக்களை அபகரித்துக்கொண்டபோதும் அவற்றை உன் பக்கம் சாதமாக்கினேன். உன்னுடைய உடைமையை அபகரித்த போது எதிராளியிடம் சண்டை போட்டு அவர்களின் கன்னத்தில் அறைந்து உன்னுடையதை திருப்பித்தந்திருக்கிறேன்.
மிகக் குறுகிய காலத்திற்குள் உனது வாழ்வா சாவா போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வாழவேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினேன்.
உனது விருப்பங்களை உனது மனதிற்குள் வைக்காமல் எனது விருப்பங்களை உனது  மனதில் பதியச்செய்து அதன்படி நடக்க உன்னை  ஏவத் தூண்டினேன். ஆனால் அதை உணர்ந்து  கொள்ளாமல் உதாசினப்படுத்திவிட்டாய்.
உன்னிடம் பொறுமையில்லை, மற்றவர்கள் முன்னிலையில் என் விஷயத்தில் மரியாதை தேடுகிறாய். அது ஆபத்தானது, தீமையைத்தரக்கூடியது என்பதால் உடனடியாக அந்த எண்ணத்தை மாற்றிக்கொள். கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்துடன் சேவையைத் தொடர்ந்து செய்து வந்தால் தாமாக அனைத்தும் நடக்கும்.
பிரிந்தவர்களை நினைத்து பரிதவிக்காதே, மீண்டும் உங்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பேன். என்னுடைய கூட்டில் குருவிக் குஞ்சுகளாகிய நீங்கள் புகலிடம் அமைத்து நன்றாக வாழ்வீர்கள்.
நான் உங்கள் இறைவனாகவும் நீங்கள் என் பிள்ளைகளாகவும் எப்போதும் இருக்கும் வகையில் நன்மையைத் தேடித் தர நான் சித்தம் கொண்டிருக்கிறேன்; என் குழந்தாய் வேறு வழியைத் தேடி நேரத்தையும் காலத்தையும் பணத்தையும் விரையம் செய்யாதே!
எனது திருவடிகளில் அமைதியும் சாந்தியும் உள்ளது. திருப்தியும் நிறைவும் இருக்கின்றன.இதை மட்டுமே பார்க்கும்போது எண்ணச்சிதறல்கள் ஏற்படுவது இல்லை. ஐயோ என எதற்கும் பரிதவிக்கவும், புலம்பவும் தேவையில்லை. கவலைகொள்ளத் தேவையில்லை.
தன்னை ஒளித்து என்னை முன்னிலைப் படுத்துகிறபோது நீ பாக்கியவான் ஆவாய். உன் தேவைகளை குறைவின்றி நிறைவேற்றி, செயலையும், பலனையும், அதற்கான விளைவையும் நான்கவனித்துக் கொள்வேன்.
என் குழந்தாய்! இதுவரை அனுபவித்துவருவதை இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக அனுபவித்து வா. என் சேவையில் முழுமையாக     மனதைச் செலுத்து, உன்னைத் தேடி எல்லாம் திரும்ப வருகிற நாட்கள் இதோ என்னருகில்உள்ளன. விளைவுகளோடு பலன் தருவதாகச்சொன்னேன், சொன்னதைச் செய்வேன்.
அன்புடன்
அப்பா சாயிபாபா

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...