Sunday, June 26, 2016

எப்போதும் உன்னை பாதுகாத்துக்கொண்டே இருப்பேன்!

சியாமாதாஸ் என்ற சாயி பக்தர் இருந்தார். பாபா மீது தீவிர பக்தியுள்ளவர். இவர் யந்திரப் படகு மூலமாக கிருஷ்ணனின் நகரான துவாரகை செல்வதற்காக புறப்பட்டார். படகில் ஏறும்போது இவரது டிக்கெட் மற்றும் பணம் அடங்கிய பணப்பை கடலில் விழுந்துவிட்டது. இதுபற்றி அதிகாரிகளுக்குத்தெரித்தபோது, அவருடை வேண்டுதலை ஏற்று பயணிக்க அனுமதித்தார்கள். ஆனால் மற்ற விஷயங்களுக்குப் பணம் வேண்டுமே? என்ன செய்வது எனக் குழம்பினார்.
அன்றிரவு அவரது மகன் கோபால் கிரிதருக்கு ஒரு கனவு. முஸ்லிம் பக்கீர் ஒருவர் வந்து, உன் தந்தையாருக்கு உடனே பணம் அனுப்பி வை என்று சொல்வது போலிருந்தது. திடுக்கிட்டு எழுந்து கொண்ட கோபால், சுற்றும் முற்றும் பார்த்தார். கனவு என்பதை உணர்ந்த பிறகு திரும்பவும் படுத்துக்கொண்டார்.
ஆழ்ந்த உறக்கத்தின்போது மீண்டும் அதே கனவு. இந்த முறை அதே பக்கீர் கோபத்துடன் நான் சொல்வது கேட்கவில்லையா? உன் தந்தையாருக்கு உடனே பணம் அனுப்பு எனஅவனைத் தட்டி எழுப்பிக் கூறினார்.
திடுக்கிட்டு எழுந்து சுற்றும்முற்றும் பார்த்த கோபால், கதவருகே சென்றார். கதவு தாழிடப்பட்டு இருந்தது. இது கனவுதான் என்றாலும் அவருக்கு அதன் பிறகு உறக்கம் வரவில்லை. அப்பாவுக்கு ஏதோ பிரச்சினை போலிருக்கிறது என நினைத்து, விடியலுக்காகக் காத்திருந்தார்.
பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு வரவேண்டிய இன்சூரன்ஸ் தொகை அன்று வந்து சேர்ந்தது. உடனடியாக ஐம்பது ரூபாயை துவாரகைக்கு மணியார்டர் செய்தார்,
பணத்தைக் கண்ட சியாமாதாசுக்கு திகைப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. துவாரகை யாத்திரையை முடித்துக்கொண்டு வீடு வந்தபோது மகனிடம் இதைப் பற்றி கேட்டார். மகன் விஷயத்தைச்சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

சியாமாதாஸ் சீரடிக்கு வந்தபோது கோபர்காமில் இறங்கி கோதாவரியில் குளித்து பூஜை செய்து கொண்டிருந்தார். சீரடி வரை செல்வதற்கு வண்டி கிடைக்கவில்லை. பாபாவிடம் வேண்டினார்.
உடனடியாக ஓர் குதிரை வண்டி அருகில் வந்து நின்றது. அதிலிருந்த இருவர், தங்களோடு சீரடிக்கு வருமாறு அவரைக் கூப்பிட்டார்கள். சீரடிக்கு வந்ததும் குதிரை வண்டிக்காரன்அவரிடம் ஒரு ரூபாய் கட்டணம் கேட்டான். மற்றவர்களிடம் ஐந்து ரூபாய் பெற்றுக்கொண்டான்.
துவாரகா மாயியில் பூட்டி, சிஞ்சினிகர், சாமா போன்ற பக்தர்கள் சூழ பாபா அமர்ந்திருந்தார். சியாமாவைக் கண்டதும் சாமா பாபாவிடம், தேவா, சியாமாதாஸ் வந்திருக்கிறார் பாருங்கள் என்று கூறினார்.
ரொம்ப காலமாக அவனது நலனை பாதுகாத்து வருகிறேன். எதிர்காலத்திலும் அப்படியே பாதுகாப்பேன் என்று கூறிய பாபா, “ என்ன சியாமா நான் சொல்வது சரிதானே! நீ கடலில் பணத்தை விட்டுவிட்டபோதுகூட உன்னைக் காப்பாற்றினேன் அல்லவா?” எனக் கேட்டார்.
இதைக் கேட்டு முற்றிலும் மெய்மறந்த சியாமாதாஸ் ஓடிவந்து பதினைந்து நிமிடங்கள் பாபாவின் திருவடிகளில் தனது தலையை வைத்து அப்படியே படுத்திருந்தார். பாபா அவரது தலையைத்தட்டிக்கொடுத்து, எழுந்திரு சியாமா, என் அருகில் கொஞ்ச நேரம் உட்கார் என்று கூறினார்.
சியாமாதாசின் நினைவுகள் துவாரகைக்குச்சென்றன. அன்றைய தினம் அவர் தியானேஸ்வரி நூலை பாராயணம் செய்வதற்காக எடுத்த போது தான் அவருடைய டிக்கெட், பணம் உள்ள பை கடலில் விழுந்துபோனது. அன்றைக்கு எதிலும் மனம் நாட்டம் கொள்ளவில்லை.
இனி பாபா சொல்லாமல் எந்த போதியையும் படிக்கமாட்டேன் என முடிவு செய்துவிட்டார். இரண்டு மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகும் அவர் எதையும் படிக்கவில்லை. நீண்ட நாள் கழித்து சீரடிக்கு வந்தபோதும் பாபா எதையும் படிக்குமாறு சொல்லவில்லை. எனவே பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினார்.
சியமாதாஸ் ஏகாதசி தினத்தன்று இதுபற்றி பாபாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை சிதம்பர் கேசவ் காட்கில் என்ற பக்தர் பாபாவுக்கு படித்துக் காட்டினார். பாபா, அவனை சீக்கிரம் சீரடிக்கு வரச்சொல்லி கடிதம் எழுதுங்கள் எனக் கூறினார். கடிதம் கிடைத்த நான்காவது நாள் சியாமாதாஸ் சீரடியில் இருந்தார்.
பாபா மாலை 3.30 மணிக்குத்தான் பெரும் பாலும் பக்தர்களிடம் தட்சணை கேட்பார். சியாமாதாசிடம் பாபா தினமும் பதினோறு ரூபாய் வீதம் பத்து நாட்களுக்கு தட்சணை தரவேண்டும் எனக்கேட்டார். சியாமா ஒப்புக்கொண்டார்.
பதினோறாவது நாள், சியாமாவிடம் எனக்குப் பதினோறு ரூபாய் தட்சணை கொடு எனக்கேட்டார். சியாமாவிடம் பணமில்லை. பாபா என்னிடம் பணமே இல்லை, எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டுவிட்டீர்கள். என்னுடைய பத்து இந்திரியங்களையும் தங்களுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன் என்றார்.
அவை ஏற்கனவே என்னுடையவை, நீ யார் அதை எனக்குத் தருவதற்கு? போய் பாபு சாகேப் புட்டியிடம் கேட்டுப் பெற்றுவா என அனுப்பினார். சியாமாதாஸ் அதை வாங்கிக்கொண்டு சபாமண்டபத்திற்கு வந்தபோது, பாபா அவரிடம், “ஹரே சியாமா, நான் பதினோறு ரூபாயைப் பிறகு பெற்றுக் கொள்கிறேன், ஆனால் அதை பாபு சாகேப் ஜோக்கிடம் போய் வாங்கி வா என்று அனுப்பினார்.
இதை சியாமா மறந்துபோனார். அன்று மாலை பாபாவை தரிசிக்கப் போனபோது, “போய் ஜோக்கிடம் பணம் வாங்கி வா எனக் கூறினார்.
சியாமா சென்றபோது ஜோக் ஏகநாத பாகவதம் படித்து சில பக்தர்களுக்கு விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரிடம் பாபா பணம் கேட்ட விவரத்தை சியாமா சொன்னதும், தாமதிக்காமல் அவருடன் கிளம்பி ஜோக் பாபாவிடம் வந்தார்.
அவர்களை பாபா ஆசிர்வதித்தார், தட்சணை ஏதும் கேட்கவில்லை. இப்படியே நான்கு நாட்கள் நகர்ந்தன. ஜோக்கைப் பார்த்த பாபா, “ஜோக், இன்று யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தாய்?” எனக் கேட்டார்.
மொத்தம் அறுபத்தோறு ரூபாய் கொடுத்து இருக்கிறேன்; பூட்டிக்கு ஐம்பது, சியாமாதாசுக்கு பதினோறு ரூபாய் என்றார் ஜோக்.
அவர் சொன்னது ஏதும் புரியவில்லை, இவர் காசும் வாங்கவில்லை. ஆனால் பாபா கேட்டதும், ஆமாம் பாபா வாங்கிக்கொண்டேன்  என்று பதில் சொன்னார் சியாமா.
இல்லை, நீ வாங்கவில்லை. போய் நாளைக்கு வா என அனுப்பிவிட்டார். சியாமாதாசுக்கு இருப்பு கொள்ளவில்லை. பதினோறு ரூபாய் என்றால் என்ன எனக் கேட்டுக்கொண்டார்.
இதைப் பற்றி சக பக்தர்களிடம் விசாரித்தபோது, ஏக்நாத் பாகவதம் படிப்பதற்கும் தட்சணைக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை உணர்ந்தார். அப்போதுதான் அவருக்குப் புரிந்தது, இதுவரை தான் எதையும் படிப்பதில்லை என்று சொன்னது. அன்று பாபா தரிசனத்திற்குச் சென்றார். பாபா ஒரு கதை சொன்னார்:
நானும் என் சகோதரனும் பயணம் செய்து கொண்டிருந்தோம். என் சகோதரன் முன்னால்நடந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு நாகம் தீண்டி அவன் இறந்துபோனான். நான் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். அப்போது ஆறு பேர் என்னை சந்தித்து, எங்கே உனது சகோதரன் எனக் கேட்டார்கள். பாம்பு தீண்டி இறந்ததை சொன்னதும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை.
தாங்கள் சென்று அவனை அழைத்து வருவதாகச்சொன்னார்கள். அது கொடிய பாம்பு எனத்தடுத்தேன், கேளாமல் போனார்கள். அவர்களும் பாம்பு தீண்டி இறந்து விட்டார்கள். அவர்களைப்புதைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தபோது, வலிமையான ஒரு பெண் வந்து, எங்கே உனது சகோதரன் எனக் கேட்டாள். அவளிடம் விவரம் சொன்னதும், அவளும் நம்பாமல் தான் போய் அவர்களை அழைத்துவருவதாகச் சொன்னாள். நான் தடுத்தும் கேளாமல் சென்றாள், பாம்பு கடித்து இறந்தாள். நான் நடந்து கொண்டிருந்த போது, சில முஸ்லிம்கள் வந்து எனக்குத் தாங்கள் வெட்டிய ஆட்டை சாப்பிடுமாறு கொடுத்தார்கள்.
நான் தூய பிராமணன், ஆட்டை சாப்பிடுவது இல்லை என்று கூறினேன். இவர்கள் வற்புறுத்தினார்கள். சற்று பொறுங்கள், கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிடுகிறேன் என்று கூறி, அந்த மாமிசத்தைத் தொட்டேன். அவை ரோஜா மலர்களாக மாறியிருந்தன.
சற்று தூரம் நடந்தேன், அங்கே தெள்ளிய நீரும் சிறிய வழியும் இருந்தது. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன்.. நாலா பக்கமும் தண்ணீர் சூழ்ந்துகொண்டது. வழியே தெரியவில்லை. இது ஏழைகளைக் காப்பவனான அவனுடைய லீலை என்று சொல்லிக் கொண்டேன்.
இந்தக் கதையைச் சொன்னார். இதன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.
மறுநாள் பாபா கோபமாக இருந்தார். காலை முதல் பதியம் வரை கோபம் தணியவில்லை. மாலை மூன்றரை மணிக்கு பக்தர்கள் வந்தனர். சியாமாவும் வந்தார். அவரிடம் பதினோறு ரூபாய் பெற்றுக் கொண்டாயா? எனக் கேட்டார் பாபா.
போதி படிப்பதைப் பற்றித்தான் பேசுகிறார் என்பதை அறிந்த சியாமாதாஸ், ஆம் என்றார். அதில் உனக்கும் எனக்கும் உள்ள பூர்வ தொடர்பு பற்றி இருப்பதைப் படி என்றார்.
உடனே கீதையைப் படிப்பதா? தியானேஸ்வரி படிப்பதா? எனக் கேட்டார் சியாமா தாஸ். அரே தாஸ், ஜோக் இப்போது எதைப் படித்துக் கொண்டிருக்கிறாரோ அதைப் போய் படியும் என்று கூறினார். சியாமா ஓடிச் சென்று பார்த்தபோது ஜோக், ஏகநாத பாகவதம் பதினோறாம் அத்தியாயம் படித்துக் கொண்டிருந்தார்.
இதைத்தான் பாபா பதினோறு ரூபாய் தட்சணை எனக் கேட்டுக்கொண்டிருந்தாரா? எனத் திகைத்து பாபாவுக்கு வணக்கம் செலுத்தினார் சியாமா.
பாபா சொன்ன கதைக்கு பொருள் ஏதேனும் தெரியுமா?
நானும் சகோதரனும் என்பது ஆத்மாவும் உடம்பும் ஆகும். பெரிய பாம்பு கடித்தல் என்பது குண்டலினி சக்தியை எழுப்பி நான் என்ற உணர்வை இறக்கச் செய்தலாகும். புதைத்தல் என்பது யோக சக்தியைப் பயிற்சி செய்து ஆறு ஆதாரங்கள் வழியாக சக்தியைப் பயன்படுத்தி இந்த உணர்வை மறையச் செய் என்பதாகும்.
ஆறு பேர் என்பது ஐந்து பஞ்சேந்திரியங்கள் ஒரு நானேந்திரியம் ஆகியவற்றால் வரும் ஆறு வாசனைகள். இவற்றையும் அழிக்க வேண்டும்.
பலமுள்ள பெண் என்பது மாயை ஆகும். இவற்றையும் தன் ஆன்ம சக்தியை அதிகரித்து தன்னை உணர்தல் மூலம் புதைத்து விட வேண்டும். மாமிசம் என்பது ஐம்புலன் சார்ந்த வாசனைகள். இவற்றையும் இறைவனுக்கு ஏற்ற மலர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
சுத்தமான ஜலமும் வழியும் என்பது சாதனை மூலம் இறைவனை அடையும் மார்க்கமாகும். எல்லா பக்கங்களிலும் நீர் சூழ்ந்துகொள்வது என்பது பரமபதத்தை அதாவது முற்றிலும் பகவானால் ஆக்கிரமித்துக் கொள்ளப்படும் நிலையாகும்.
பாபாவிடம் வந்தவர்கள் வேத ஞானம் உள்ள பெரியவர்கள். இவர்களுக்கு மறை பொருளாக பாபா ஆன்மிகத்தைப் போதித்தார்.
உங்களுக்குப் புரிகிறதா? புரியாவிட்டால் பயப்படவேண்டாம். எளிமையான நாம ஜெபம் மூலம் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.
சாயி வரதராஜன்

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...