இறைவன் எல்லாருக்கும் அருளுவாரா? மற்றவர்கள் கூறுவதைப் போல
பக்தர்கள் அல்லாதவர்களை விட்டு
விடுவாரா?
எல். கமலநாதன், புளியந்தோப்பு
சாயி
புத்ரன் பதில்கள்
உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது மாணவ இயக்கம் ஒன்றை ஆரம்பித்து போட்டி வைத்தார். ஒரு கிலோமீட்டர்
தொலைவிலுள்ள இலக்கை நிர்ணயித்து, அந்த இடத்திற்கு விரைந்து வருபவர்களுக்கு நூறு ரூபாய் பரிசு தரப்படும் என அறிவித்தார்.
வேகமாக ஓடிய மாணவர்கள் முதலாவது இரண்டாவது மூன்றாவது என
முதலில் வந்தவர்களைப்பிரித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் தங்களுக்கு ஏதும் கிடைக்காது என நினைத்தார்கள்.
ஆசிரியர் வந்ததும், எல்லோரும் வந்தாயிற்றா? எனக் கேட்டபோது, இதோ இப்போதுதான் தாமதமாக ஒரு
மாணவன் வந்து சேர்ந்திருக்கிறான் என ஒருவனை சுட்டிக்
காட்டினார்கள். ஏன் தாமதம்? எனக் கேட்டார் ஆசிரியர்.
எல்லோரும் ஓடினாலும் யாரோ ஒருவருக்குத்தான் நீங்கள் பரிசு
தரப்போகிறீர்கள். நமக்குக்கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துதான் நான் தாமதமாக வந்தேன் என்றான்.
ஆசிரியர் கூறினார்: “குழந்தைகளே, யார் முந்தி யார் பிந்தி என அறிவதற்கான போட்டி இது அல்ல. யாரெல்லாம் இலக்கை அடைகிறார்கள் என்பதை அறிவதற்கானப்
போட்டி. எல்லோரையும் இலக்கை அடையச் செய்வது
மட்டுமே நமது நோக்கமே தவிர யார் முந்தி
யார் பிந்தி என்பது விஷயம் அல்ல. முந்தி
வந்தாலும் பிந்தி வந்தாலும் இலக்கை அடைந்திருக்கிறீர்கள்.
ஆகவே இலக்கை அடைந்த அனைவருக்கும் பரிசு
உண்டு” என்றார்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களும் ஆசிரியரிடம்
நாங்கள்தான் முதலில் வந்தோம், எங்களுக்கும் அதே பரிசுதானா? எனக் கேட்டார்கள். குழந்தைகளே, முதலில் வந்த
உங்களுக்குத்தருவதாகச் சொன்ன பரிசில் நான் எதையும் குறைக்க வில்லையே, உங்கள் பங்கு உங்களுக்குக் கிடைத்ததைப் போல பிறரும் இதில் பயனடையவேண்டும். அதுதான் உண்மையான இயக்கமாக மலர முடியும். உங்களுக்குள் போட்டி இருக்கக்கூடாது, எல்லோரும் பலன் பெற வேண்டும்
என்பதாக இருக்க வேண்டும்” எனக் கூறி தான் அறிவித்தபடி
அனைவருக்கும் தலா நூறு ரூபாய் பரிசு தந்தார்.
இறைவனும் இப்படித்தான், யார் அனுக்கத்தொண்டன்,
யார் கடைநிலை பக்தன்
எனத்தரம் பிரித்து இவர் தகுதியற்றவர் என யாரையும் தள்ளிவிட மாட்டார். தகுதியற்றவர்களையும் தகுதிபடுத்துவார். கடைசி பக்தன்
அனுக்கிரகம் பெறும் வரை அவர் அமைதியடையமாட்டார்.
No comments:
Post a Comment