நவசக்தி பாபா ஆலயம் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்திற்கு அருகில்
ஆதம்பாக்கம் நகரில் மேட்டுக்கழனி தெருவில் கட்டப்பட்டுள்ளது.
இதைக் கட்டியவர் ராஜேந்திரன் என்ற சாயி பக்தரும் அவருடைய குடும்பத்தாரும் ஆவர்.
நண்பர் ஒருவர் பாபாவின் அற்புதங்களை எடுத்துச் சொன்னதையடுத்து பாபா மீது நம்பிக்கை
ஏற்படுத்திக் கொண்டவர் ராஜேந்திரன்.
பாபாவின் மகிமைகளை அனுபவப்பூர்வமாக அனுபவிக்க வேண்டி இவர் மடிப்பாக்கம் பைரவர்
சாயி பாபா கோயிலுக்குப் போவார். பாபா மூலம் பல நேரடி அற்புதங்களை அனுபவித்தார்.
ஒருநாள் கைவண்டியில் பொம்மைகளை விற்றபடி ஒருவன் வந்தான். அந்த வண்டியில் இருந்த
பாபா விக்ரகம் ஒன்று, என்னை உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லேன் என்று கூறுவது போலவே
இருந்தமையால் அதை வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்தார்.
அன்றே அவரது பெண்ணின் திருமணம் நிச்சயம் ஆனது. தொடர்ந்து வீட்டில் நல்ல விஷயங்கள்
நடந்தேற ஆரம்பித்தன. இதனால் தீவிரமான சாயி பக்தராகிவிட்டார்.
ஒருநாள் இவரது கனவில் தோன்றிய பாபா,
உன் வீட்டிலுள்ள இடத்தில் எனக்கு கோயில் அமைத்துத் தா எனக் கேட்டார்.
கோயில் கட்டுவது என்றால் பெரிய விஷயமாயிற்றே என நினைத்து அதை அப்படியே விட்டுவிட்டார்.
ஆனால் பாபா அடிக்கடி கனவில் தோன்றி இதையே வற்புறுத்தி வந்தார். இதற்கிடையில் நண்பர்களுடன்
சீரடி சென்று வந்த இவர், தான் கோயில் கட்டும் எண்ணத்திலுள்ளதை தெரிவித்தபோது, அவர்களும் உதவி செய்வதாகக்கூறினார்கள்.
ஜெய்பூர் சென்று ஒன்னரை அடி பாபா விக்ரகம் வாங்கி வந்தார். இதன் பிறகு ஏற்பட்ட
மாற்றங்களைத் தொடர்ந்து 2010 ஜனவரி 27
ல் புதிதாக சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டு பாபா பிரதிஷ்டை
செய்யப்பட்டார். பைரவ சாயி கோயில் நிர்வாகியான மீனாட்சி சுந்தரம் குடமுழுக்குச் செய்து
வைத்தார். கோயில் சிறியது என்றாலும் பாபாவின் கீர்த்தி பெரியது.
இக்கோயில் தியானமண்டபம் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.
மக்கள் பாபாவை தியானிப்பதற்கும் சத்சரித்திர பாராயணம் செய்யவும் மண்டபத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
ஞாயிறு தோறும் பாலவிகாஸ் என்ற குழந்தை அமைப்பு சிறுவர்களுக்காக பாபாவின் கதைகள், பஜனைப் பாடல்கள்,
பாட்டுகள் போன்றவற்றை கற்பித்து வருகிறார்கள்.
இக்கோயில் காலை ஆறு மணிக்குத் திறக்கப்பட்டு காகட ஆரத்தி தினமும் நடைபெறுகிறது.
தினந்தோறும் ஏழரை மணிக்கு பாலபிஷேகம் நடைபெறுகிறது, பகல் 12 மணிக்கு நடை சார்த்தப்பட்டு மாலை ஐந்தரை மணிக்கு திறக்கப்படுகிறது.
வியாழன் தோறும் மாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்பதரை மணிவரை திறந்திருக்கும்.
பக்தர்கள் வேண்டுகோள் படி பஜனை முடிந்தபிறகு கூட்டுப் பிரார்த்தனையும் செய்யப்படுகிறது.
கோயிலில் வருடந்தோறும் ஆங்கில வருடப்பிறப்பு, ஸ்ரீராம நவமி, குரு பூர்ணிமா,
விஜய தசமி,
மற்றும் குடமுழுக்கு நடைபெற்ற நாள் விழா போன்றவை வெகு சிறப்பாக
நடைபெற்று வருகிறது. அன்னதானமும் நடைபெறுகிறது. இங்குள்ள விக்ரகத்திலிருந்து சில வேளைகளில்
உதி வருவதுண்டு. இதை பக்தர்களுக்குப்பிரசாதமாக அளித்து வருகிறார்கள்.
சனிக்கிழமை தோறும் லலிதா சகஸ்ரநாமம்,
விஷ்ணு
சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்று வருகிறது.
புனரபி ஜனனம், புனரபி மரணம். மானிடப்பிறவியில் தன்னைக் கருவியாகப் பயன்படுத்தி
மக்கள் அனைவரும் பாபாவின் பூரண அருளைப்பெற கோயில் கட்டச் செய்த பாபாவுக்கு எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் சேவை செய்ய அருள் புரிய வேண்டும் என பாபாவிடம் ராஜேந்திரன் வேண்டுகிறார்.
பக்தர்கள் ஒருமுறையேனும் இவ்வாலயம் வந்து பாபாவை தரிசித்து அருள்பெற அன்புடன் அழைக்கிறோம்.
தகவல்: ரா, வனஜா,
மரகதசெல்வி
ஆதம்பாக்கம், சென்னை - 88
No comments:
Post a Comment