சுமார் பத்து ஆண்டுகளாக அழைத்திருந்த அஜீதா குடும்பத்தாரை தரிசிக்க, சாயி ஸ்ரீதரன், சாயி ஆறு முகம் ஆகியோருடன் நாகர்கோயில் மண்ணை முதன்முறை தரிசித்தேன்.
இராமபிரான் இலங்கைக்குப் போகும் முன்பும், வென்றுவந்த பின்பும் தடம் பதித்த மாவட்டம் கன்யா குமரி. இறைவனை வழியனுப்பி வைத்ததும், வரவேற்று வெற்றிக்
கொண்டாடியதும் இம்மாவட்டம்.
இந்த மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் புராண காலச் சிறப்புடையது. நம் சாஸ்திர நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்குவது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையின் வெற்றிக்கும், வீழ்ச்சிக்கும் அடிப்படையாக
விளங்குபவை நாகங்கள்என்ற நம்பிக்கை இந்துக்களாகிய நமக்கு ஆதிகாலம் முதற்கொண்டே உள்ளது. நாக தோஷத்தினால் விவாகத்தடை, குழந்தைப் பேறு வாய்க்காமை,
நோய், வறுமை, கைப்பொருள் இழப்பு, கண்டம், வழக்கு போன்றவை ஏற்படும் என்பர்.
இதனால்தான் ராகு கேது தோஷங்கள், கால சர்ப்ப தோஷம் போன்றவை இருக்கும் பிள்ளைகளுக்குத்திருமணத் தடை
ஏற்படுகிறது. இந்த தோஷமிருந்தால் யாரும் பெண் தரவோ,
பெண் எடுக்கவோ
விரும்பமாட்டார்கள். தோஷ நிவர்த்திக்கு நாகத்தை வழிபடுவதும், புற்றுக்குப் பாலூற்றுவதும்
வழக்கம்.
அக்காலத்திலேயே ஐநூற்றுக்கும் மேற்பட்ட நாகஆலயங்கள்
இருந்ததாலேயே நாகர்கோயில் என்ற பெயரைப்
பெற்றிருக்கிறது இவ்வூர்.
இந்த ஊரில் புகழ்பெற்றிருப்பது நாகராஜா ஆலயம். இதைப்பற்றிய கர்ண பரம்பரைக் கதை ஒன்றுள்ளது.
புல் அறுக்கப் போன சிறுமியின் அரிவாள் பட்டு தரையிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. என்னவென சிறுமி குனிந்து பார்த்தபோது, ஐந்து தலைநாகத்தின் படத்தின் மீதிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்து பயந்துபோனாள்.
ஓடிப்போய் அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் இதைப்பற்றிச்
சொல்ல, அவர்கள் ஓடிவந்து
பார்த்தார்கள். நாக ராஜாவாகிய வாசுகி அடிபட்ட
நிலையில் இருந்தார். தங்களைக் காத்தருள வேண்டி,
வாசுகி என்கிற அந்த நாகத்திற்கு சிறியதாகக் கோயில் அமைத்தார்கள்.
அக்காலத்தில் களக்காடு என்ற இடத்தை ஆண்டு வந்த மன்னர் ஒருவருக்கு குஷ்ட ரோகம் என்ற நோய் பற்றியது. எந்த வழியாலும் இந்த நோயை அவரால் நீக்கிக்கொள்ள முடியவில்லை. மன்னர் ஆவணி மாதம் ஒரு ஞாயிறு அன்று நாகராஜா கோயில் வந்து வேண்டியவுடன் நோய் குணமடைந்துவிட்டது.
நாகராஜனின் அற்புதத்தை வியந்த மன்னர், பெரிய கோயில் அமைத்தார். அந்தக் கோயில் தான் இன்று உள்ள நாகராஜா கோயில். இக்கோயிலைத்தொடர்ந்தே ஊருக்கு நாகர்கோவில் என்ற பெயரும் ஏற்பட்டது. இதனுடைய பழைய பெயர் கோட்டாறு.
ஞாயிறு தோறும் அந்த மன்னர் தனது குடும்பத்துடன்
இவ்வாலயத்திற்கு வந்து வணங்கிச் செல்கிறார் என்ற நம்பிக்கை
இருப்பதால்தான் ஞாயிறு தோறும் மக்கள் கூட்டம் இக்கோயிலில்
அதிகமாக இருக்கிறது.
நாகம் என்றாலே ஆதிசேஷன்தானே நினைவுக்கு வருவார். இது என்ன வாசுகி என்கிறீர்கள். அதுவும் பெண் பெயர் அல்லவா? எனத் தோன்றும்.
நாகங்களில் புனிதமானவை என எட்டு வகை நாகங்கள் வணங்கப்படுகின்றன. இவற்றுக்கு அஷ்ட நாகங்கள் என்று பெயர். அவை: சேஷன். உலகைத்தாங்குகிற இவர் மீதுதான் விஷ்ணு யோக நித்திரை செய்கிறார்.
வாசுகி (இவர்தான் பாற்கடலை கடைவதற்குக் கயிறாக இருந்து அமிர்தம் வரக் காரணமாக இருந்தார். இவருடைய விஷம்தான் ஈஸ்வரனின் தொண்டையில் இருப்பது, இதனால் அவர் நீலகண்டன் என்ற பெயர் பெற்றார். இந்த
நாகத்தைத்தான் நாகராஜா என்றுவணங்குவர். தட்சகன் (பரீட்சத்து ராஜனைத் தீண்டியவர்), கார் கோடன் (திருநள்ளாறு ஆலயம் வரக் காரணமாக இருந்த நளமகாராஜனை
கடித்தவர்), சங்கபாலன், குளிகன், பதுமன் அல்லது பத்மா, மகாபதுமன் அல்லது மகாபத்மன் ஆகியவை
மற்ற நாகங்கள்.
வாசுகியின் நிறம் முத்துப் போன்ற வெள்ளை. தட்சகன் நிறம் சிவப்பு, கார்கோடன் நிறம் கருப்பு அவரது நெற்றியில் மூன்று வெள்ளைக் கோடுகள் இருக்கும். பதுமன் நிறம் செந்தாமரை வண்ணமான இளஞ்சிவப்பு. இவருடைய நெற்றியில் வெள்ளைநிறக்கோடுகள்
இருக்கும்.
மகாபதுமனுடைய நிறம் வெள்ளை, படத்தின் நிறம் கருப்பு. சங்கபாலன் என்ற நாகத்தின் நிறம் மஞ்சள், படத்தின் நிறம் வெள்ளை.
குளிகன் என்ற நாகம் சிவப்பு நிறத்தில்
இருக்கும். படம் பிறைவடிவமாக இருக்கும்.
கன்யாகுமரி மாவட்டம்தான் நாகங்களின் பிறப்பிடம் எனச் சொல்லப்படுவதும் உண்டு. நாகத்தை குல தெய்வமாக வணங்கியவர்களை நாகர்கள் என்று அழைப்பார்கள். (மணிமேகலை இலக்கியத்தில் வரும் நாகர்கள் அல்லர்) பயமும் புனிதமும்
மிக்க இந்த வழிபாட்டின் பயனால் தான் நாகர்கோயில்
மக்கள் செல்வ வளம், மனவளம் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
நம்பியவர்களுக்கு நல்லவர்களாகவும், துரோகம் செய்பவர்களுக்கு
எதிரி களாகவும் இருப்பது
இம்மண்ணின் இயல்பு.
இத்தகைய மண்ணுக்கு மித்திரனாகவே நான் சென்றிருக்கிறேன். என்னுடைய குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள்; அவர்கள் பாபாவுக்கு ஆலயம் எடுத்து வாழ்விலும்
தாழ்விலும் பக்தியை மட்டுமே பிடித்துக்கொண்டு நடைபோட்டு வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் என்னை பத்தாண்டுகளாக வலி யுறுத்தி அழைத்துக்கொண்டிருந்த அஜீதா தம்பதியர், பாபு குடும்பத்தார், சிவகுமார் ஆகியோர்.
நான் நாகர்கோயிலை அடையும்போது நண் பகல் வேளையாகிவிட்டது. பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்கும் எங்களுடன் சீரடிக்கும் தொடந்து வருகை தரும் தம்பி சிவகுமார் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு
எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.
நம் பத்திரிகையின் விற்பனைப் பிரதிநிதியான தம்பி சுரேஷ் அவர்களைத் தொடர்புகொண்டு நாகர்கோயில் வந்துள்ள தகவலை கூறினோம்.
குமாரசாமிப் பிள்ளை என அன்புடன் அழைக்கிற பாபு மற்றும் அவருடைய துணைவியார் டாக்டர் சாந்தி ஆகியோர் எங்களை வரவேற்க தொலைபேசியில்
தொடர்புகொண்டிருந்தனர். அவர்கள் மகள் ஷானுவின்
திருமணத்திற்கு பல அலுவல் காரணமாக செல்ல இயலாமல் போய்விட்டது.
இதை நிறைவு செய்யவும் இந்தப் பயணம்.
சுரேஷ், அவருடைய நண்பர்கள் ஆகியோருடன் சிறிது நேரம்
இருந்துவிட்டு, அஜீதா வீட்டுக்குப்புறப்பட்டோம். போகும் வழியில் மணிமுத்தாறு அணையிலிருந்து
நீர் வரும் கால்வாய் ஒன்றில் குளித்து வழிபாட்டை முடித்தோம். இறைவா இந்த
நாகர்கோயில் மக்கள் அனைவரும் நன்றாக
இருக்கவும், அவர்கள் பிரச்சினைகள் அனைத்தும்
நீங்கவும் பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறியபடியே
நீருக்குள் மூழ்கி எழுந்தபோது, அங்கு காவல்காத்துக்
கொண்டிருந்த காவலர் ஒருவர் எங்களைப்
பார்த்து சிரித்தார்.
விஷயம் தெரியாமல் குளித்து முடித்து கரை ஏறிய பிறகுதான் தெரிந்தது, அது குளிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்பது. எங்கள் செயலுக்காக மன்னிப்புக்கேட்டபோது,
வெள்ள காலத்தில்
சிறுவர்கள் குளித்து ஆபத்தாக முடிவதைத்
தவிர்க்கவே இந்த எச்சரிக்கை அட்டை வைக்கப்பட்டிருப்பதாக
தெரிவித்தார்கள்.
அங்கிருந்து நேராக முட்டைக்காடு என்ற இடத்திற்குச்
சென்றோம். வழி முழுக்க இயற்கை அப்படியொரு அழகை வாரி இறைத்திருந்தது. மலைகளும் சுனைகளும், பச்சைப் பசேல் என்ற
மரங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்த
அப்பகுதி கேரளாவுக்குள் நுழைவது போன்ற உணர்வைக்
கொடுத்தது.
பகல் பன்னிரண்டே கால் மணிக்கு அஜீதா குடும்பத்தார் கட்டியுள்ள
பாபா ஆலயத்திற்குச் சென்றோம். இருபதுக்கு அறுபது
விஸ்தாரணம் இருக்கும் என நினைக்கிறேன். அதில் பாபா
மேடை போட்டு அமர்ந்திருந்தார். நாங்கள்
போகும் வேளையில் மதிய ஆரத்தி ஆரம்பமாகி
இருந்தது.
பக்தர்கள் வரிசையில் நின்று ஆரத்தி செய்தபிறகு எனது வருகையை அறிமுகப்படுத்தி கூட்டுப் பிரார்த்தனை செய்ய
கேட்டுக்கொண்டார்கள். பிரார்த்தனை முடிந்த பிறகு
அன்னதானம் நடைபெற்றது.
அற்புதமான உணவு, தட்டில் வைத்துப் பரிமாறி பிரமிக்கவைத்தார்கள். அஜீதா மகள் சாயி பாரதி வியாழன் தோறும் விரதமிருப்பாளாம். அன்று நான் அவளுக்கு எனது தட்டிலிருந்து ஒரு கவளம் உணவு கொடுத்து, இனி இப்படி விரதம் இருக்கவேண்டாம்; நன்றாக சாப்பிடு எனக் கூறினேன்.
அங்கு வந்திருந்த பக்தர்கள் மிகவும் நல்லவர்கள். ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கிறவர்கள், ரப்பர் தோட்டம் வைத்திருப்பவர்கள் என அவர்களுள் பலர் இருந்தார்கள். ராதா அம்மா போன்ற ஆசிரியப்பெருமக்களும் இருந்தனர். அவர்களுடன்
நீண்ட நேரம் இருந்தேன். பழைய
நினைவுகள் நிழலாடின. பத்தாண்டுகளுக்கு முன்பு
ஆலயம் அமைக்க பிரார்த்தனைக்காக அஜீதா தம்பதியினர் பெருங்களத்தூர் வந்திருந்தார்கள். ஆலயம் அமைய வாழ்த்தினேன்.
ஆனால் பல பிரச்சினைகளுக்கு இடையில் ஆலயம் அமையும் என்பது அப்போது எனக்குத் தெரியாது. பல பிரச்சினைகளுக்கு ஆளாகி முப்பது லட்ச ரூபாய் வரை இழந்து நீதிமன்றப் படிகளில் ஏறி, பாபாவுக்கு ஆலயத்தை உருவாக்க
சிரமப்பட்டு இருக்கிறார்கள்.
தங்களுடைய ஓர் இடத்தை விற்பனை செய்து விட்டு அந்தத் தொகையைக் கொண்டு கோயில் கட்ட முற்பட்டபோதும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்திருக்கிறது.
பாபாவுக்கு கோயில் அமைய இடம் கிடைக்காத போது தங்கள் வீட்டையே இடித்து அப்புறப்படுத்திவிட்டு,
கோயில்
அமைத்திருக்கிறார்கள்.
இடைப்பட்ட ஒரு காலத்தில் தாங்கமுடியாத பிரச்சினை யில் தவிக்கிறோம். குடும்பத்தோடு இறந்துவிடலாம் என தீர்மானித்திருக்கிறோம். கடைசியாக தங்கள் ஆசீர்வாதத்தைக்
கோருகிறோம் என ஒருமுறை அவர்கள் எனக்கு போன் செய்திருந்தார்கள்.
இந்த வாழ்க்கை வாழ்வதற்காக இறைவனால் தரப்பட்டுள்ளதே தவிர, கோழைகள் போல தோற்று தற்கொலைசெய்துகொள்வதற்காக
அல்ல. எதையும் எதிர்த்து வெற்றி
பெறவேண்டும். உன் பிரச்சினை தீர்ந்துவிடும். இதற்கு
அடையாளமாக கோயில் கட்டப்போகிறாய், நானே நேரில் வந்து ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டுவேன்
என்று கூறினேன்.
பிரச்சினை தீர்ந்ததா எனத் தெரியாது, நானும் அடிக்கல் நாட்டச் செல்லவில்லை. இதோ அதோ என நாட்களை தள்ளிப் பேர்ட்டுக் கொண்டே இருந்தேன்.
காசிலி சுவாமி வந்திருந்தபோது நான் நாகர்கோயில் செல்வதாக இருந்தது. சுவாமியைச் சேர்ந்தவர்கள் நான் வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால் அந்தப் பயணத்தையும் தள்ளிப் போட்டேன்.
இந்த முறை அங்குச் செல்லத் தீர்மானித்துச் சென்று விட்டேன். நான் போனது அங்கிருக்கும் பாபாவை தரிசனம் செய்வதற்காக அல்ல, எவ்வளவு துன்பங்கள், கஷ்டங்கள் வந்தாலும் எடுத்த
சேவையை முடிக்காமல் ஓய மாட்டோம்
எனப் போராடிய இத்தம்பதியரின் இறை சேவையைப் பாராட்டுவதற்காக.
அதேபோல பாபாவைத் தவிர கனவிலும் வேறு ஒன்றை நினைக்காமலும், நாடாமலும் இருந்து குடும்பமாக அவரது நினைவில்
வாழ்கிற அற்புத பக்தர்களை தரிசிப்பதற்காகவே
சென்றேன்.
எனக்கு அப்பா மீது கோபம்; பத்து ஆண்டுகளாக வரவேண்டும் என கெஞ்சினேன். வரவேயில்லை. இப்போதுதான் வந்திருக்கிறார் என அஜீதா கூறினார். சமீபத்தில்தான் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தார்களாம்; மெலிந்திருந்தார்.
அந்தக் குடும்பத்தாரை மனம் நிறைந்து ஆசீர்வதித்தேன்.
அவர்களுக்குள்ள பக்தியில் பத்து சதவீத மாவது
எனக்குத் தாருங்கள் பாபா என வேண்டிக் கொண்டேன். அஜீதா
அரசுப் பணியிலிருப்பதால் யாரிடமும் நன்கொடை வாங்காமல் ஆலயத்தை அமைக்குமாறு கணவரிடம் கூறியிருந்தார்.
மூன்று அடுக்காக அமையும் வகையில் அடித்தளம் போடப்பட்டு,
கீழ்ப்பகுதி மட்டும்
சீரான நிலையில் பாபாவை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அவர்களிடம் விடைபெற்று சுரேஷ் அவர்களைத்தேடிப்
புறப்பட்டேன். சுரேஷ் தனது சகாக்களுடன் வடிவீஸ்வரம் என்ற
இடத்தில் பாபாவுக்கு ஆலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை பூமி பூஜை போடுகிறோம்; நீங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என
கேட்டுக் கொண்டனர்.
அவ்வளவு நாட்கள் இருக்கமுடியாது என்பதால் அந்த இடத்தை காண்பிக்கக்
கூறினேன். அவர்கள் காட்டிய இடத்துத் தரையில்
விழுந்து வணங்கி பாபா இங்கே பேராலயம் அமைத்து
பக்தப் பரிபாலனம் செய்வார் என ஆசீர்வதிதேன்.
அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு, சாந்தி பாபு வீட்டுக்குச்
சென்றேன்.
காலையிலிருந்து எனக்காகக் காத்திருந்த அவர்களை நமஸ்கரித்து,
அவர்கள் வீட்டில்
உணவு ஏற்றுக்கொண்டேன். வீட்டை கோயில் போல வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே மகள்
ஷானுவின் மணநாள் ஆல்பத்தைக்
காட்டினார்கள். மாப்பிள்ளை பண்பானவராக இருப்பார்;
குழந்தைகள் நலமோடு வாழ்வார்கள் என ஆசிர்வதித்தேன்.
அவர்களிடம் ஒரு பழக்கம் எப்போது வந்தாலும் கோயிலுக்கு காணிக்கை தருவார்கள். இந்த முறை பாபாவிடம் வேண்டிக்கொண்டேன்; நான் அவர்களை ஆசீர்வதிக்கவே வந்திருக்கிறேன், காணிக்கை பெறுவதற்காக அல்ல;
எனவே நான் தான்
தட்சணை தருவேன்!” இப்படி வேண்டிக் கொண்டு
அவர்களுக்கு தட்சணை அளித்து விட்டு
புறப்படத் தயாரானேன்.
குமாரசாமிப்பிள்ளையின் அண்ணன் என்னைத்தொட்டு இரண்டு முறை பரவசமடைந்தார்.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய
போது பொற்றையடி கோயிலுக்குப் போய் அதன்
பிறகு செல்லுங்கள் எனக்கூறியதோடு அவரும் துணைவியாருடன் உடன் வந்தார்.
கோயிலைப் பார்த்தபிறகு பிரம்மிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டிலேயே
பிரம்மாண்டமான கோயில் இது வாகத்தான் இருக்கவேண்டும்.
மிகப் பெரிய பரப்பளவில் அமைந்திருக்கிறது, இன்னும் பாபாவுக்கு இடம் நிறைய இருக்கிறது.
பாபா தத்ரூபமாக பார்க்கிறார். அவருடைய கண்களைக் காண
நமக்குக் கோடிக் கண்கள் வேண்டும். பார்த்துப் பார்த்து
ஒவ்வொன்றையும் செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீதர் இதைப் பார்த்து வியந்தவராக, “சாய் ராம், இதைப் பார்த்த பிறகும்
நாமும் பாபாவுக்குக் கோயில் கட்டுகிறோம் என சொல்லத் தான்
வேண்டுமா?” எனக் கேட்டார்.
உண்மைதான். பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தைப்போல ஆயிரம் மடங்குக்கு பெரியது இந்தக் கோயில். ஒவ்வொரு
அங்குலத்திலும் இதில் பக்தி தெரிகிறது.
அர்ப்பணிப்பு தெரிகிறது. இதுவும் என் கோயில் தான்..
எனக்கு வேறுபாடு இல்லை.
இங்கே என் ஆத்மா செல்வத்தால் கோயில் கட்டியுள்ளது. அங்கே
வறுமையால் கட்டியுள்ளது. இதுதான் வித்தியாசம்”
என்றேன்.
நாங்கள் சென்ற பிறகு தான் ஆரத்தி ஆரம்பமாயிற்று.
அங்கிருந்தவர்கள் நன்றாக உபசரித்து மகிழ்ச்சியைப்
பரிமாறிக்கொண்டார்கள். கிளம்பும்போது, “இவ்வளவு பிரம்மாண்டமான கோயிலை ஒரு சாதாரண பக்தனால் கட்டியிருக்க முடியாது. இதைக் கட்டியவர் யார்?” எனக் கேட்டேன்.
நேப்பாள் ராஜ் என்ற அடியார் என்று குமார சாமி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் பாபாவுக்கு பல ஏக்கர் பரப்பளவில் கன்யாகுமரியில்
பிரம்மாண்டமாகக் கோயில் கட்டியிருக்கிறார் என மற்ற பக்தர்கள் சொல்லத்தான் கேள்வி. எதிர்பாராமல் அந்த ஆலயத்திலேயே நிற்கிறேன் என்பதை அறிந்து பரவசப்பட்டேன்.
பாபா இது தகாது. அவருடைய மகனை அகாலத்தில் எடுத்துக்கொண்டு
இவ்வளவு பிரம்மாண்டமாக நீங்கள் வந்து
அமர்ந்திருக்கிறீர்கள். அந்த மகனை யும் அவருக்குத்
தந்திருந்து அவருடன் சேர்ந்து இந்த சேவையை செய்ய
வைத்திருந்தால் எவ்வளவு இன்பமாக இருந்திருக்கும்.
தனக்கென எதையும் எண்ணிப்பார்க்காமல் இறைசேவை செய்கிற ஒரு
பக்தனுக்குத் துன்பத்தைத்தந்து, மற்றவர்களுக்கு இன்பம் சேர்ப்பது என்னைப் பொறுத்தவரையில் ஏற்புடையது அல்ல. அவர் நீடூழி வாழட்டும் என வேண்டிக் கொண்டேன். அவருக்குப் போன்
போட்டுத் தருகிறேன் என்றார் குமாரசாமி. வேண்டாம்,
எந்த விளம்பரமும்
தேவையில்லை, அவருக்காக வேண்டிக் கொள்வோம் எனக்கூறி விடைபெற்றுக் கொண்டேன்.
அடுத்து எங்கே செல்வது என தம்பி சிவக்குமார் கேட்டார். தென்காசி போய் விட்டு பிறகு
சென்னைக்குச்செல்கிறோம், எங்களுக்கு விடைகொடுங்கள் எனக்கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அவரும் அவரது தம்பி மணிகண்டனும் தங்கள் காரில் தென்காசி வரை வந்து, அறையெடுத்துக் கொடுத்தார்கள்.
பத்து கிலோமீட்டர் பத்து கிலோமீட்டர் எனக்கூறியவாறே இருநூறு
கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் வந்து எங்களை விட்டுச் சென்ற
அந்தத் தம்பிக்கு கைம்மாறு செய்யமுடியாது.
மறுநாள் அதிகாலையிலேயே குற்றாலம் சென்று அருவியில் நீராடி, குற்றாலீஸ்வரரை தரிசித்த பிறகு, இனி யாரையும் நான் தேடிப் போய் தரிசிக்க மாட்டேன்.
என் உணர்வுகள் உள்ளிழுக்கின்றன,
மனம் தியானத்தில் மூழ்கத் தொடங்குகிறது. இங்கேயே இருக்கலாம் எனக் கூறிவிட்டேன்.
குற்றாலத்தை தரிசித்த பிறகு தென்காசிக்கு வந்து, பராக்கிரம பாண்டியன் கட்டிய
ஆலயத்தைத் தரிசித்து சென்னைக்குத் திரும்பினோம்.
நாகர்கோயில் மக்கள் எல்லாவற்றிலும் பிரம்மாண்டமானவர்கள்;
அன்பிலும்
பிரம்மாண்டமானவர்கள். துன்ப நேரத்திலும் மலர்ந்த
முகம் கொண்டவர்கள். இளகியவர்கள், இனியவர்கள் என்பதை நேரில் அனுபவிக்க வாய்ப்பு தந்த பாபாவுக்கு நன்றி கூறிக்கொண்டேன்.
அடுத்த முறை நாகர்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தால் மிகப்பெரிய மாற்றங்களுடன் அந்த இடத்தைத் தரிசிப்பேன்.
- ஸ்ரீ சாயி வரதராஜன்
No comments:
Post a Comment