Wednesday, June 8, 2016

என்னிடம் உன்னை இழுக்கிறேன்!

என் பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக் குருவியைப் போன்று சீரடிக்கு இழுக்கப்படுவான். (அத் 28)        
                                                                (தமிழாக்கம்: சொக்கலிங்கம் சுப்பிரமணியன்)
என்னுடைய பக்தன் வேறு தேசத்திலிருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் சரி, சிட்டுக் குருவியின் காலில் நூல் கட்டி இழுப்பது போல் அவனை என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பேன். (அத்:28-15)
                                                                                                                        (தமிழாக்கம்: மணி)

இரண்டு தமிழாக்கத்திலும் இருவிதமான பொருள் கொள்ளும் வகையில் சிட்டுக்குருவி பற்றி எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே காலில் நூல் கட்டப்பட்டுள்ள சிட்டுக்குருவி என்ற பொருளில் சொக்கலிங்கம் சுப்பிரமணியன் எழுதியிருக்கிறார்.
சிட்டுக் குருவியின் காலில் புதிதாக நூல் கட்டி அதை இழுப்பது போன்ற பொருளில் மணி அவர்களின் தமிழாக்கம் இருக்கிறது.
இந்த சாராம்சங்களை தியானிக்கலாம்.
முன்ஜென்மத் தொடர்பு இல்லாமல் யாரும் சாயியை அடையமுடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒருவன் எந்த தேசத்தில் இருந்தாலும் முன் ஜென்மத் தொடர்பு என்கிற நூல் கட்டப்பட்டவனாக இருந்தால், அவனை பாபா இழுத்துக் கொள்கிறார் என்பது ஒரு பொருள்.
முன் ஜென்மத் தொடர்பு இல்லாவிட்டாலும் விதிவசத்தால் பாபாவை ஒரு தரம் சந்தித்தால் அதன் பிறகு அவர் நமது காலில் தொடர்பு  -  பக்தி என்கிற நூலைக் கட்டி இழுத்துக் கொள்கிறார் என்பது இன்னொரு பொருள்.
எத்தனையோ குருவிகள் இருக்க, பாபா சிட்டுக்குருவியை ஒப்பிட்டுக் கூறுவானேன்?
எல்லா குருவிகளும் மனிதர்களை நெருங்குவதில்லை, அவர்கள் அவற்றை விரும்புவதும் இல்லை. சிட்டுக்குருவிகள் எளிதில் மனிதனை நெருங்குகின்றன. அவை மனிதரால் விரும்பப்படக்கூடியதாகவும் உள்ளன. சிறுவர்கள் சிட்டுக்குருவியைப் பிடித்து அதன் காலில் நூல்கட்டி பறக்கவிடுவார்கள். அது தப்பிக்க நினைத்துப்பறக்கும். நூல் உள்ள அளவே அதனால் பறக்க முடியும், அதற்கு மேல் பறக்கமுடியாது. உடனடியாக அதை தம்மிடம் இழுத்துக் கொள்வார்கள்.
மனிதன் எளிதில் விஷய சுகங்களுக்கு, உலக போகங்களுக்கு ஆசைப்பட்டு சிக்கிக் கொள்கிறான். தமோ -  ரஜோ -  சத்வம் என்கிற மூவகை குணங்களால் பிடிக்கப்பட்டு இவற்றின் தாக்கத்தால் அலைக்கழிப்புக்கு ஆளாகிறான். அறியாமல் செய்து சிக்கிக்கொள்வது தமோ குணத்தினால்தான். இக்குணம் உள்ளவர்கள் இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லையே என்பதும், தெரியாமல் செய்துவிட்டேன் என்று கூறுவதும் தமோ குண அடையாளங்கள்.
ஆசை -  தேவை ஆகியவற்றின் மீதுப் பேராசை கொண்டு ஒன்றை அடைய முயன்று சிக்கிக்கொள்வது ரஜோ குண அடையாளம்.
தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்தும், தான் நல்லவன் என நம்பியும் ஏமாந்துபோகிற நிலை சத்துவ குணத்தால் வருபவை.
இந்த குணங்கள் என்கிற நூல் கட்டப்பட்டுள்ளதைத் தெரியாமல் நஷ்டப்பட்டு பாபாவிடம் வரும்போது அதை அவர் சரி செய்து இழுத்துக் கொள்கிறார்.
கஷ்டப்பட்ட ஒருவன் தனது துன்பத்தைப்போக்க சாயி பாபாவிடம் போனால் நன்மை நடக்கும் என நினைத்து வருகிறான் என்றால் அவன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உண்டு. அவை:
பாபாவால் நான் இழுக்கப்பட்டிருக்கிறேன் என்ற உண்மை.
என்னுடைய பாவங்கள் அழிந்துவிட்டன, பூர்வ புண்ணிய பலன் எழும்பி வர ஆரம்பித்திருக்கிறது என்ற உண்மை.
எனக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பித்திருக்கிறது. என் துன்ப நாட்கள் முடிந்துவிட்டன என்ற உண்மை.
இந்த உண்மைகள் நடைமுறையாகும் காலத்தில் தான் ஒருவருக்கு பாபாவின் நினைவு வரும். உங்களுக்கு அந்த நினைவு வந்திருப்பதால் நீங்கள் பயப்படவே வேண்டாம், பாபா உங்கள் பிரச்சினைகளை சரி செய்துவிடுவார்.
சாயி வீரமணி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...