Saturday, June 25, 2016

கையைத் தூக்கு காப்பாற்றுகிறேன்!

நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும் ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களானால் இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மை பத்திரமாக இட்டுச் செல்வார்கள். (அத்:10)
ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு முறையும் பக்தர்கள் எப்படி துன்பங்களை வெல்லலாம் என்பதையே வலியுறுத்திக்கூறுகிறோம். இங்கு சத்சரித்திரம் பத்தாவது அத்தியாயம் வலியுறுத்துகிற இதே விஷயத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பொதுவாக இறைவனிடம் பக்தி செய்து அழுது கேட்டால்தான் கிடைக்கும் என்பார்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது என்பவர்களும் பலன் பெறத்தான், “நீங்கள் இதையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஞானிகளின் பாதங்களை பிடித்துக்கொள்ளுங்கள், அவர்கள் உங்களை கரை சேர்த்து விடுவார்கள்என்று போதனைசெய்கிறார்கள்.
இங்கே ஞானிகள் என்றால் யார் என்றசந்தேகம் வரும். சாயி பாபா. ராகவேந்திரர். ரமணர், வள்ளலார், படேசாகிபு போன்று எண்ணற்ற மகான்களைத்தான் ஞானிகள்என்று சொல்கிறார்கள்.
அவர்கள்தான் இறந்துவிட்டார்களே! என சந்தேகப்படக்கூடாது. ஞானிகள் எப்போதும் இறப்பதில்லை. சமாதியடைகிறார்கள். சமாதி என்பது ஆழ்ந்து உறங்குவது போன்ற அமைதி நிலை. உடம்பை விட்டுவிட்டு அவர்கள் சமாதி நிலையில் இருப்பார்கள். அவர்களைப் போய் எப்படி எழுப்புவது? என சந்தேகம் வரலாம்.
கடவுளிடம் நெருங்குவதற்கே வழிபாடு, பக்தி போன்ற சாதனைகள் அவசியம். ஆனால் மகான்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. அவர்களுடைய கோட்பாடுகள் என்னவாக இருந்தது என கொஞ்சம் தெரிந்துகொண்டால் போதும்.
அன்னதானம் செய், பொறுமையுடன் இரு, எல்லோர் மீதும் அன்பு செலுத்து, பிறர் கஷ்டப்படும்போது உதவி செய், முடியாவிட்டால் பிரார்த்தனை செய் என்று பாபா சொன்னால், அந்தக் கோட்பாட்டை பின்பற்றினால் போதும். பாபா மனம் உருகிவிடுவார். ஒருமுறை நண்பர் அருளாளர் சுரேஷ் அவர்களுடன் மைலாப்பூர் அப்பர் சுவாமி கோயிலுக்குப் போயிருந்தபோது சுவாமிக்கு சார்த்தியிருந்த ஆளுயர மாலை, லிங்கத்தின் மீதிருந்து எதிரே வந்து விழுந்தது. மாலை சரிந்து விழுவதற்கும் தூக்கி போட்டது போல விழுவதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா? இதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன்.
ஏதோ தவறு செய்திருக்கிறேன், அல்லது எனக்கு ஏதோ அபவாதம் நடக்கப்போகிறது என பயந்து சுரேஷிடம் அதைக் காட்டியபோது அவரும் இதைப் பற்றி குருக்களிடம் கேட்கலாம் என்றார்.
நாங்கள் அணுகி கேட்டபோது, “இது சித்தர் சமாதியுள்ள இடம். தனக்கு யார் பிடித்தமானவரோ அவர் வரும்போது இப்படிப்பட்ட  விளையாட்டுகளை அவர் செய்வார். மற்றபடி பயப்பட ஒன்றுமில்லைஎன்று கூறி, அந்த மாலையை என்னிடமே தந்துவிட்டார்.
அப்போது எனக்கு இந்தளவு பக்தியில்லை, வழிபாடும் தெரியாது. ஆனால் தான தர்மம் செய்வதை, பிறருக்கு உதவுவதை இளம் வயதிலிருந்து பழக்கமாக வைத்திருந்தேன்.
தேர்வு நேரத்தில் என் பென்சில் பேனாவைக் கொடுத்துவிட்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் நின்றபோது, என்னுடைய தமிழாசிரியர் சிவ. சண்முக சுந்தரம் அவர்களால், “தன்னாயுதமும் தன் கையிற் பொருளும் பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே  என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அவர் சொன்னபோதும் இந்தப் பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை. பிறருக்காக ஓடி ஆடி உழைப்பதும், பலன் வரும்போது ஒதுங்கிப் போவதும் எனது இயல்பாக இருந்தது.
அந்தப் பழக்கங்கள் கனிந்து இன்று நான் பிறருக்கு ஆன்மிகத்தைப் போதிக்கும் அளவு உயரக் காரணமாக இருந்தது. எல்லோரும் பாபாவுக்கு பக்தராக இருக்கிறார்கள், நான் மட்டும் பிள்ளையாக இருக்கிறேன். அம்மா நான் வந்திருக்கிறேன் என்றால், அம்பிகை திரை விலக்கி காட்சி தருகிறாள். ஐயாவோ அடியேனுக்கு காட்சி தந்து திரையை மூடிக்கொள்கிறார்.
பலமுறை எழுதியிருக்கிறேன். பாபா, எனக்கு வேறு போக்கிடம் கிடையாது. பக்தியும் வழிபாடும் தெரியாது. பிறரைப் போல என்னை மாற்றிக்கொள்ளவும் முடியாது. உன்னை முழுவதுமாக நம்புகிறேன்.. நீ விட்ட வழிஎன்று நின்றேன்.
அதன்பிறகுதான் என் வாழ்க்கையில் நட்டம் மாறியது, கஷ்டம் விலகியது, பக்தி அதிகம் ஏற்பட்டது; பக்தர் கூட்டம் அதிகரித்தது. இன்று நீங்கள் அறிய உயர்ந்த ஸ்தானத்தில் நின்று கொண்டு இருக்கிறேன்.
எத்தனையோ அற்புதங்கள் நடப்பதாகச்சொல்கிறார்கள். அனுபவங்களைச் சொல்லி என்னை வணங்குகிறார்கள். அவற்றுக்கு நான் சொந்தக்காரனில்லை என்பதால், அவர் சார்பாக ஏற்றுக்கொள்கிறேன். அதன் பலன்கள் அனைத்துக்கும் அவரே உரிமையாளர் என நினைக்கிறேன். இப்படி சிக்கிக்கொள்ளாமல் போவதால்தான் எந்த சிரமமும் இல்லாமல் இறைவனுடன் நெருக்கமாக இருக்கிறேன். உங்களையும் இப்படி இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சுவாமி என் தகுதியை பார்க்கவில்லை, படிப்பை பார்க்கவில்லை. பக்தியை பார்க்கவில்லை, மனதைப் பார்த்தார். சுட்டால் உருகும் வெண்ணெய் போலன்றி நினைத்தால் உருகும் நிலையைத் தந்தார். காசிலி சுவாமி வந்தபோது, ஒரு மிரக்கில் என சம்பவம் ஒன்றைச் சொன்னார். இது மிரக்கில் அல்ல, நிகழ்வு; அவ்வளவுதான்.
மகான்களின் வாழ்வில் நடக்கிற நிகழ்வை மிரக்கில் எனக் கூறக்கூடாதுஎன்றேன். சாயிபாபா தன் பக்தருக்கு நொடிக்கு நொடி அற்புதம் செய்கிறார். இதை தின வாழ்வின் ஒரு பகுதியாக்குகிறார். பிறகு எப்படி அற்புதம் எனத் தனியாகக் கூறுவதுஇதைப் பட்டியல் போட முடியாது,
நான் பாபாவிடம் சரண் அடைந்தவிதம் என்னை மாற்றியது, அது என்னவிதம்? முழு இதயத்தோடு அவரையே புகலாகக்கொண்டேன். அவர் காப்பாற்றுவாரா? கை விடுவாரா? என்ற பேச்சுக்கே இடமில்லை.  இது நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்கு இடமில்லை. எது நடந்தாலும் அது அவரால் நமக்கு என்ன? என்றிருப்பேன்.
மற்றவர்களைப் போல எடுத்து ஒளித்து வைத்துக்கொள்ளும் போக்கு என்னிடம் கிடையாது. முழு இதயத்தோடு மட்டும் அல்ல, முழு சக்தியோடும், முதன்மையான பங்களிப்போடும் சேவை செய்கிறேன். ஆனால்பலனுக்கு நான் தூரமாகவே நிற்கிறேன்.
இதைப் பிடித்ததால்தான் சாயி என்னைப்பிடித்தார். நான் அவரைப் பிடித்தேன். நீங்களும் பிடியுங்கள், உயருங்கள். இந்தப் போக்குதான் வெற்றியைத் தந்தது. இது உங்களுக்கும் பலன் தரும்.
தொழுத கை தலை மேலேற துளும்பும் கண்ணீருள் மூழ்கி  திருவடியில் வீழ்ந்து பணிந்தால் திருவருள் நிச்சயம் தானே!

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...