Thursday, June 2, 2016

உண்மையான பக்தி செய்ய வா!

எறும்பு, சிலந்தி, மாடு, நாய், யானை, புலி என மனிதனைவிடக் கீழ்நிலையிலுள்ள உயிரினங்கள் பக்தி செய்த வரலாறு தமிழகத்தில் அதிகம். அவற்றின் பெயராலேயே ஊர்கள் ஆணைக்காவல், திருபாம்புரம், திருவானைக்கா, திருப்புலிவனம், திருநாரையூர் என்பன போன்று விளங்குகின்றன. இறைவன் அவற்றின் பெயர் தாங்கி நின்று அருள்பாலிக்கிறான். உதாரணத்திற்கு எறும்பீசர்(திருச்சி), உடும்பீசர் (மாகறல்), வியாக்ரபுரீஸ்வரர் (புலி வணங்கிய ஈசன், திருப்புலிவனம், வடபழனி) போன்றவை.
யாரெல்லாம் பக்தி செய்யலாம் என்றால், உயிருள்ள அனைத்தும் பக்தி செய்யத் தகுதியுள்ளவையே என்பதை அறிந்துகொள்ளலாம். ஓரறிவு முதல் ஆறறிவுள்ள அனைத்து உயிரினங்களும் இறைவன் மீது பக்தி செய்யத் தகுதியுள்ளவை என்றாலும், உயர்ந்த நிலையிலுள்ள மனிதர்கள் பக்தி செய்வதே சாலச் சிறந்தது ஆகும்.
பக்தனாக என்ன செய்ய வேண்டும்? சாஸ்திர நம்பிக்கையுள்ளவனாக இருப்பது அவசியம்.
சாயி பக்தனாக விரும்பும் ஒருவன் முதலில் சாயி பற்றிய சாஸ்திரங்களில் நம்பிக்கையுள்ளவனாக வேண்டும். திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என முஸ்லிம் பெருமக்கள் நம்புகிறார்கள்.  இப்படி அவரவர் தம் மதத்தின் சாஸ்திர நூல்கள் அனைத்தும் இறைவனால் அருளப்பட்டவை என்பதை ஆணித்தரமாக நம்புதல் முதலாவது அவசியமாகும்.
சாஸ்திரங்கள் முன்னிலைப்படுத்தும் இறைவன் மீது நம்பிக்கை கொள்வது இரண்டாவது அவசியமாகும். பல சாஸ்திரங்கள் பல தெய்வங்களைப் பற்றி பேசுகின்றன, எது உண்மையான தெய்வம் என்ற சந்தேகம் எழுவது இயல்பு. இப்படிப்பட்ட மயக்கங்களைத் தெளிவித்து நமக்குள் இருக்கிற அறியாமையை நமக்குள் இருக்கிற அறிவைக்கொண்டு விளக்குகிற குருவின் மீது நம்பிக்கை எழுவது மூன்றாவது அவசியம்.
பக்தி மீது ஆர்வத்தை உண்டாக்கிக் கொள்வது  நான்காவது அவசியம். ஆர்வம் இல்லாவிட்டால் எந்த ஒன்றையும் நாம் சுலபத்தில் பெற்றுவிட முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அன்பு ஆர்வத்தை உண்டாக்கும்; ஆர்வம்தான் நட்பு என்கிற சிறந்த வட்டத்தை நமக்குத் தரும்.  பக்தியில் ஏற்படுகிற ஆர்வம் நமக்கு இறைவனை மிக அருகில் கொண்டு வந்து தந்துவிடும். எனவே பக்தி செய்வது அவசியம்.
பக்தி என்பது என்ன?
பகவானிடம் ஏற்படுகிற உத்தமமான அன்பே பக்தி. உத்தமமான அன்பு தாய்ப்பால் போன்றது. அதற்கு அடையாளங்கள் மனதில் அகங்காரம், சுயநலம் இல்லாமலிருப்பது; வேறு எந்த ஒரு விஷயத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் இறைவனையே நினைத்துக் கொண்டிருப்பது; தன்னை மறந்திருக்கும் நிலை ஆகியவை.
பக்திக்கு வயது வித்தியாசம் கிடையாது. சுகர், துருவன், பிரகலாதன் போன்றவர்கள் குழந்தைகள். பக்திக்குக் கல்வித் தகுதி தேவையில்லை. பிருந்தாவனத்து கோபியர் எந்தக்கல்வியும் பெறாதவர்கள். அவர்களுடைய பக்திக்கு இந்த உலகமே இணையாகாது. இறைவனை எப்போதும் நினைக்கமுடியவில்லையே என முனிவர்களும் துக்கப்படும்போது, கண்ணனை மறக்கமுடியவில்லை என்றவர்கள் கோபியர்.
கிருஷ்ண பக்தியில் திளைத்த கோபி ஒருத்தி பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றை விற்கப் போனாளாம். கிருஷ்ணனையே மனதில் நினைத்துக் கொண்டிருந்த அவள், “பால், தயிர், வெண்ணெய்என்று கூவாமல் தன்னை மறந்து கோவிந்தா, தாமோதரா, மாதவா என்று கூவிக்கொண்டிருந்தாளாம். இதை
விக்ரேது காமாகில கோபகன்யா முராரி
பாதார்ப்பித சித்தவ்ருத்தி:
தத்யாதிகள் மோஹ வசா- தவோசத்
கோவிந்த தாமோதர மாத வேதி
என்கிறது கிருஷ்ண கர்ணாமிருதம்.
நமக்கு எது கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் மனதில் கிலேசம் தோன்றாமல் எப்போதும் திருப்தியாக இருக்கிறதோ அப்போது மனதில் பக்தி உறுதியாகிவிட்டதை உணரலாம்.
மனம் நம்மை மனிதனாக்கவேண்டும், மனமே மனதை அடக்கக் கற்றுத் தந்து நம்மை சித்தனாக்க வேண்டும், நிலையாமை என்ற நிலையைத் தாண்டி நாம் சாவாமை உள்ளவர்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும், விஷயங்கள் பூர்த்தியாவதால் திருப்தி யடைகிறோமே அப்படியில்லாமல் ஆசையே வராமல் திருப்தியுடன் இருக்கவேண்டும். இந்நிலை எப்போது நமக்கு சாத்தியப்படுகிறதோ அப்போது பக்தி உறுதிப்பட்டுள்ளதை உணரலாம்.
துக்கம்- துயரம், இன்பம் - துன்பம், உறவு - பகை, விஷயங்களில் ஆர்வம் - வெறுப்பு, மகிழ்ச்சி-இகழ்ச்சி இப்படிப்பட்ட எந்த ஒன்றையும் ஒருவன் எப்போது பொருட்படுத்துவது இல்லையோ, அப்போது அவன் பக்தி முழுமை பெற்றுள்ளதை அறிந்துகொள்ளலாம்.
உலகத்தின் கோட்பாடுகளில், சாஸ்திரங்களின் கோட்பாடுகளில் மூழ்கிக் கிடப்பதை விட்டு விட்டு, இந்த உடலைப் பற்றி எண்ணத்தையும் விட்டுவிட்டு யார் ஒருவன் இறைவன் மீது நாட்டம் செலுத்துகிறானோ அவனது பக்தி முழுமை பெற்றிருக்கும்.
எவன் ஒருவன் தனது பழைய சுபாவங்களைப்பின்பற்றி பல இடங்களுக்குப் போவதைத்தவிர்த்து பகவான் இருக்கும் இடத்தைத் தேடிப் போக ஆரம்பிக்கிறானோ அவனது பக்தி முழுமையாக ஆரம்பித்துவிட்டதை அறியலாம்.
பக்திமான் பிறர் நம்பிக்கையை வீணாக்கக்கூடாது. பிறர் சாஸ்திர நம்பிக்கையைக் குறை கூறக்கூடாது. ஒருவரை நல்வழிப்படுத்த இந்த முறைகள் குறிப்பிட்ட காலம்வரை தேவை என உணர்வது அவசியமாகும்.
ஒருவன் முழுமையான பக்தனாக இருப்பினும், பிறருக்காக, பிறரை நல்வழிப்படுத்தி அவர்களை முக்தி நெறிக்கு அழைத்துவருவதற்காக கோயில் கட்டுதல், அறவழிகளை போதித்தல், சாஸ்திரம் கற்பித்தல், பிறருக்கு சுகத்தைத் தரும் வேள்வி போன்றவற்றைச் செய்தல் ஆகியவற்றை பிறருக்காக மேற்கொள்ளலாம்.
எதைச் செய்தாலும் அதில் தனக்கு ஒரு பெயர் வேண்டும் என நினைக்காமல் கடலில் கலந்து அடையாளமிழந்த நதிபோல இருக்கவேண்டும். முக்கியத்துவத்தை எதிர்பாராமல், குலம், கல்வி, மேன்மை, செல்வம், தகுதி போன்றவற்றின் அடிப்படையைத் துறக்கும் போதுதான் இறையருளைப்பெற்று நாம் பக்தராக நீடிக்கமுடியும்.  இல்லாவிட்டால் பாதியிலேயே நம் பக்தி முடிவடைந்துவிடும்.
சாயி பக்தன் பிறருக்காக வாழ்பவனாக இருக்க நினைக்கவேண்டும். பிறருக்குச் செய்யும் சேவையே சாயி வழிபாடு. பிறரை நேசிக்க நாம் வெளிப்படுத்தும் அன்பே சாயி பக்தி.

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...