சாயி பக்தராக ஞானமும் பக்தியும் தான் அடிப்படைத் தேவை.
(சீரடியில் காலை வைக்கிற சிந்தனையாளர்கள் துக்கப்படுவ
தில்லை (ஞானம்); சதா சாயி சாயி என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஏழு கடலுக்கு அப்பாலும் கொண்டு போய்ச் சேர்ப்பேன் என்பது பக்தி))
இந்த இரண்டுமே சத்யம் தர்மம் உள்ளவர்களுக்கே சித்தியாகும். இவை சித்தியாகாமல் பார்த்துக்கொள்ள காமம், கோபம், துவேஷம், பொறாமை ஆகிய குணங்கள் நமக்குள்ளிருந்தே
போராட்டத்தை ஆரம்பிக்கும். இந்த குணங்கள்
போகவேண்டுமானால் மனதை நிர்மலமாக வைத்துக்கொள்ள
வேண்டும்.
இது எப்படி சாத்தியம் என்பதைப் பார்க்கலாம்.
பாபா பக்தர் என்கிறார்கள், பாபாவுக்குக் கோயில் கட்டுகிறார்கள்; சத்சங்கம் - பிரார்த்தனை செய்கிறார்கள், சாயி ராம் சாயிராம் என்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சாயி பக்தர்கள் தானா? என்று கேட்டால் பலரை இல்லை என்று
அவர்கள் மனமே சொல்லிவிடும். பக்தியை அடையாளச் சின்னமாக
வைத்துக் கொண்டு லவுகீக நாட்டத்துடன்
இஷ்டப்படி நடக்கிறவர்களாக இவர்கள் இருப்பதைப்
பார்க்கமுடியும்.
இன்னொரு பிரிவினர் பாபா பாபா என்று கூறுவார்கள், விழுந்துவிழுந்து
வேண்டுவார்கள். அவர்கள் வேண்டுதல்
கேட்கப்படுவதில்லை. காரணம் இவர்கள் சத்யம் தர்மம் என்ற
இரண்டு அடிப்படையான தர்மங்களைக் கூட பின்பற்றாதவர்களாக
இருப்பார்கள்.
நம் குணங்கள் எல்லாமே இயல்பாக அமைந்தவை. பிறந்தபின் பார்த்துப் பார்த்துப் பழகிக்கொண்டவை; நமக்கு நமக்கு என சிந்தித்து
நாமாக உருவாக்கி உடன் வைத்துக்கொண்டவை;
சூழ்நிலையின்
காரணமாக ஏற்படுகிறவை. நம் செயல்களும் இப்படித்தான் இயல்பாக ஏற்பட்டவை. பிறரைப் பார்த்துக் கற்றுக்கொண்டவையும், பிறரது செயலுக்கு ஏற்ப
பிரதிச்செயல் செய்யவும், கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையாலும் தீர்மானிக்கப்படுகிறவை.
எப்படியெனில், குழந்தை நடக்கும் முன் தானாக எழுந்து நிற்கத் தொடங்கும்; ஒரு அடியை எடுத்து வைத்தவுடன் விழுந்துவிடும்.
பலமுறை விழுந்த அனுபவத்தில் விழாமல் இருக்க
அருகில் உள்ளதைப்பிடித்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கும். எதையாவது பிடித்துக் கொண்டால் விழாமல் இருக்கமுடியும் என்ற அடிப்படை அறிவு அதற்குப் பிறக்கிறது.
நடக்கும்போது விழத்தொடங்கினால் உடனே சுதாரித்துக்கொண்டு
அருகிலுள்ள சுவரைப் பிடித்துக்கொண்டு நடக்கும். எதையோ ஒன்றை தனக்கு ஆதரவாக
வைத்துக்கொண்டால் விழாமல் நடக்கமுடியும் என்று உணரும்போது
குழந்தையின் நடையின் அடிகளின்
எண்ணிக்கையும் அதிகமாகும். இப்படி பழகிப்
பழகி தானாக நடக்க- ஓட ஆரம்பித்த பிறகு அதைப் பிடிக்கவே முடியாது.
“இதை சமாளிக்க இந்த வழி” என குழந்தை தெரிந்துகொள்வதுதான் ஞானம். இது இயல்பால்
ஏற்பட்டது.
அடுத்து, அம்மா அப்பா சொல்லிக்கொடுக்கிற பழக்கங்கள் மூலமாக இது சரியானது, இது தவறானது எனத் தீர்மானிக்கும். பெண் குழந்தையானால்
அம்மாவை தீர்க்கமாக கவனித்து உபசரிக்கிற குணங்களை
வளர்த்துக்கொள்ளும். ஆண் குழந்தையானால் அப்பா போன்று
ஆளுமைக்கான விஷயங்களில் கவனம்
செலுத்தும்.
ஒருவர் அடித்தால் குழந்தை திருப்பி அடிக்கும். அடிக்கச் சொல்லிக்கொடுத்தால் அடிப்பது சரியானது தான் என நினைத்து அடிக்க ஆரம்பிக்கும். திருப்பி அடி வாங்கினால் வலிக்கும் அல்லவா? ஆகவே, திருப்பி அடிவாங்கக் கூடாது
என அடங்க நினைக்கும். இதேபோல வணக்கம், உபசரிப்பு, நல்ல பண்புகள் என ஒவ்வொன்றையும் தரம் பிரித்து குழந்தை அறிந்துகொள்கிறது.
சுயநலம், கோபம், பொறாமை, துவேஷம் போன்ற குணங்களையும் அந்த இளம்
வயதில்தான் அதுவும் அம்மா சோறூட்டும்போதே
கற்றுக் கொள்கிறது.
குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டுவார்கள். சாப்பிடாவிட்டால்
நிலா வந்து பிடுங்கிக்கொள்ளும் என்று அம்மா சொல்வதை நம்பி
குழந்தை தானே அனைத்தையும் சாப்பிட ஆரம்பிக்கும்.
இப்படி ஆரம்பித்த சுயநலம், தனது உடன் பிறந்தவர்கள் தட்டு வைத்து சாப்பிட உட்காரும்போது தட்டிவிடுவதில் தொடங்கும்.
அம்மா தன்னை இடுப்பில் வைத்துக்கொண்டு தன்னிடமுள்ள ஒரு பொருளை பிறருக்குப் பகிர்ந்து தரும்போது, குழந்தை என்ன செய்யும்? அவனுக்குத்தராதே! அது எனக்கு வேண்டும், அதை எனக்குத்தராவிட்டால்
அழுவேன், அவனுக்குத் தந்தால் அழுவேன் என அடம் பிடிக்கும்.
இந்த அடமானது சுயநலத்தின் அடிப்படை குணம். அது
அப்படியே விரிவடைந்து அடாவடியாக மாறும்.
இந்த சுயநலத்தினால் கோபம் வருகிறது, பொறாமை வருகிறது, நான் நீ என்ற வேறுபாடு அதாவது துவேஷம் தோன்றுகிறது. அதே
சமயம் எல்லாவற்றையும் தானே அனுபவிக்க முடியாது அல்லவா?
எனவே, ஓர் அளவு வரை பிறருக்கு சிறிதுவிட்டுக் கொடுக்க சம்மதிக்கிறது. இதுதான் எல்லைப் பிரச்சினைக்கு அஸ்திவாரம். இது எனக்கு அது உனக்கு என்ற சமரசம் தோன்றுகிறது, நிபந்தனைகளையும்
விதிக்கிறது. இவை மீறப்படும்போது
எதிர்ச்செயல்களில் ஈடுபடுகிறது.
இப்படி ஒவ்வொரு விஷயமும் குழந்தை முழு அறிவு பெறும் முன்பே அதன் மனதில்
விதைக்கப்பட்டு விடுகிறது. இதனால் குழந்தை வளரவளர சுயநலத்தின் மொத்த உருவமாக வளர்கிறது. அதனோடு கோபம், பொறாமை, துவேசம் போன்றவை
கவசங்களாகச்சேர்ந்துகொள்கின்றன.
இந்த இடத்தில் சத்தியமும் தர்மமும் எப்படி ஆரம்பிக்கின்றன என்பதையும் யோசிக்கலாம். சத்யம் என்பது செய்வதை தவறாமல் செய்வது; தர்மம் என்பது பிரதிபலன்
எதிர்பார்த்து தன்னிடம் உள்ள ஒன்றை விட்டுத் தருவது.
நான் சாப்பிட்டதில் மீதியைத் தருகிறேன் என்ற தியாகம் தர்மச் செயல் என்றால், அதை தினமும் தருவேன் என்பதை வழக்கமாக வைத்துக்கொள்வதும், இந்த நியதியில் இருந்து
மாறாமல் இருப்பதும் சத்யம். ஒழுங்கு என வகுத்துக்
கொண்டதற்கு மாறாக நடப்பது தவறு, தனக்குத் தேவையற்றதை,
தனது தேவையை முற்றிலும் குறைக்காத ஒன்றை பிறருக்கு விட்டுத்தருவதால் குறைந்துவிட மாட்டோம் எனத்தெரிந்துகொள்வதே
சத்தியம் தர்மம் ஆகியவை என குழந்தை புரிந்துகொள்ளும்.
இந்தப் புரிதலின் காரணமாக அதைச் சுற்றி சிலர் சேர்ந்திருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள், சுற்றம் என பெயர் வைத்துக்கொள்ளும். இவர்களுக்குத் தரும் போது மட்டும் சுயநலம், கோபம், பொறாமை,துவேஷம் போன்றவை சற்று மறைந்திருக்கும். வெளியில் இருந்து யாராவது தனக்கு அடுத்ததை எடுக்க நினைத்தால் நிச்சயமாக சண்டை போட ஆரம்பிக்கும், ஏனெனில் அங்கே தனக்கு- தன்னைச் சார்ந்தவர்களுக்கு என்ற விரிவடைந்த சுயநலம் இருப்பதால். இதனால் புதியன வற்றை வரவும் விடாது, வாழவும் விடாது.
ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களையும் வாழ விடுவதும், அவர்களுக்கும் நன்மை செய்வதும் தான் சத்தியம் தர்மம் என்
உணரும். இப்படி ஒவ்வொரு கட்டமாக தனது குணங்களை
விரிவடையச் செய்து கொள்ளும். இவ்வாறு விரிவடைய
வைக்கிற புரிதலுக்கு ஞானம் என்று பெயர். புரிதல்
விரிவடையத் தேடுவதே ஞானத் தேடல்.
ஞானத்தேடலின் ஒரு பகுதியாகத்தான் எதுவும் நம்மிடம் இல்லை, நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது எனப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும். அந்த சக்திக்குக் கடவுள்
என பெயரிட்டு வணங்க ஆரம்பிக்கும். வணக்கத்தின்
பரிணாமம்தான் பக்தி. பக்தியில் ஏற்படும்
ஈடுபாடுதான் பிரேமை. ஈடுபாட்டு டன் வணங்கும்போது
வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றங்கள் அற்புதம் அல்லது
மிரக்கில் எனப்படுகிறது.
சரி, நமது குணங்களுக்கும் சாயி வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது; இதில் இறங்கி நடக்க, மேலே ஏறிவர சில உபகரணங்கள்
தேவை. அவற்றைப் பெறுவதற்கு சுயமுயற்சி மட்டும்போதாது,
பிறரிடமிருந்து
எதையேனும் பெற்றாக வேண்டும் என்ற நிலையில்
சிலவற்றை இனாமாகப்பெறுகிறோம், சிலவற்றை பணமோ பொருளோ தந்து பெறுகிறோம்.
சிலவற்றைக் கடனாகப் பெறுகிறோம். இதன் மூலம் நம்மால்
ஓரளவு இயல்பாக வாழமுடியும் என நினைக்கிறோம்.
நாம் மட்டுமே தனியாகப் போனால் பிரச்சினை வராது. நம்முடன் குடும்பம், தேவை, அந்தஸ்து என சிலவற்றையும் அழைத்துக் கொண்டு போகிறோம். இதனால் தேவையின் அளவு அதிகமாகிறது, சுமையும் ஏறுகிறது. இந்த சுமையை சமாளிக்கத்தான் மேலும் கடன், அதிக உழைப்பு, வேறுவித பரிவர்த்தனைகள் என ஈடுபடுகிறோம். சிக்கலில்
சிக்கிக் கொள்கிறோம்.
நமது தேவைக்காக பிறரது உரிமையில் தலையிடுவது தவறு என
உணர்ந்துகொள்ளாமல், நாம் தப்பிப்பதற்காக பிறரை
ஏமாற்றுதல், பிறரிடம் பொய் கூறுதல், களவாடுதல், வஞ்சித்தல், அபகரித்தல், லஞ்சம் பெறுதல் போன்றவற்றில்
ஈடுபடுகிறோம்.
நமக்குக் கிடைக்காத ஒன்றை பிறர் வைத்திருக்கும் போது அவர் மீது தேவையற்ற கசப்புணர்வு தோன்றுகிறது, இது பொறாமையாகும். நமக்கு
அவரிடமிருந்து கிடைக்காத போது
தேவையில்லாமல் அவரை பகைக்க ஆரம்பிப்போம், இந்த பொறாமை குணத்தால் கோபம், துவேஷம் போன்றவை தோன்றுகிறது; பகை உண்டாகிறது. இத்தகைய செயல்கள்
யாவும் நமது தரப்பில் இருந்து செய்யப்படுகிறது,
இது ஒரு வகை.
எந்த நிலையிலும் தன் சொந்த உழைப்பின் மூலம் மட்டுமே இவற்றை அடைய நினைப்பது என உள்ளதே அது
இன்னொருவகை, இவர்கள் துன்ப நேரத்திலும் பிறரைக்
கெடுக்கவோ, பிறரது பொருளை அபகரிக்கவோ,வஞ்சிக்கவோ, பிறர் மீது கோபம் கொள்ளவோ மாட்டார்கள்.
முதல் வகையினர் தனது தேவை பூர்த்தியடைய பிறரை நாடுவார்கள். இரண்டாவது வகையினர் தனது தேவை நிறைவேற தன்னை மீறிய சக்தியை நாடுவார்கள். இரண்டாவது வகைப் பாட்டில்தான் நாம் இருக்கிறோம். நமக்கு மீறிய சக்தியான பாபாவை நாடுகிறோம், அவர் நமக்குப் பலன் செய்வார் என எதிர்பார்க்கிறோம்.
அது நடக்கும். இப்படியில்லாமல் முதல்வகையினராக
இருந்துகொண்டு, தன்னை மீறிய சக்தியையும் தெரிந்துகொண்டு
அதனிடம் நாடுவது என்பது, மற்றவரை ஏமாற்றியதைப் போலவே
அந்த
சக்தியை யும்
ஏமாற்றுவது ஆகும். இதனால் நன்மை நடக்காது.
நீ இரண்டாவது வகை பக்தியுள்ளவனாக இருந்தால் சாயி பாபா உன்னை வழிநடத்துவார். உன்னிடம் உள்ள ஒரே குறைபாடு, இது நடக்குமோ நடக்காதோ என்ற சந்தேகம், அதனால் ஏற்படுகிற நம்பிக்கையின்மை. இதன் தொடர்ச்சியாக
உன்னிடமிருக்கிற கவலை. இவற்றை மட்டும் நீக்கிவிட்டு,
பாரத்தை முழுமையாக அவர் மீது போட்டுவிட்டு, மனதை அமைதிப் படுத்தி கவலை நீங்கியிரு. காரணமில்லாமல் காரியமில்லை, சமயத்தில் அவர் உதவி செய்வார்.
முதல் வகை பக்தியுள்ளவனாக இருந்தால், பாபாவிடம் நீ செலுத்துகிற
பக்தி போலியானது, இதனால் உனக்கு நன்மை பிறக்காது,
உனக்கு நன்மை நடக்கவேண்டும் என்றால் முதலில் உனது செயல்களை திருத்திக்கொள்; தவறுக்குப் பிராயச்சித்தம் தேடு; மனதை நிர்மலமாக வைத்துக்கொள்.
இப்போது வேண்டினால் பாபா நிச்சயமாக
உதவி செய்வார்.
என்னால் முடியவில்லை என கையைத் தூக்கினால் போதும் அவர், தனக்கு ஏற்றார் போல உன்னை மாற்றி அமைத்துவிட்டு, பிறகு உதவி செய்வார். பண்பட்ட நிலத்தில் உடனே
பயிர் முளைக்கும். கரம்பு நிலத்தை உழுது
பண்படுத்திய பிறகுதானே பயிர் முளைக்கும்? அப்படி உன்னை சுத்தம் செய்த பிறகு பாபா தருவார். அவர் சுத்தப்படுத்த உன்னை ஒப்புக்கொடு. ஒப்புக்கொடுத்த பிறகு வருகிற சிரமங்களை தாங்கிக்கொள்.
உண்மையான சாயி பக்தனாக மாறு; தொடர்ந்து அவர் பக்தனாகவே இரு. எல்லாம் நன்மையாக நடக்கும்.
No comments:
Post a Comment