Friday, May 13, 2016

சாவடித்திருவிழா – ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து


 ஒருநாள் விட்டு ஒருநாள் நியமமாக பாபா சாவடியில் உறங்கினார்.       ஒருநாள் மசூதியில் உறங்கினார்; மறுநாள் சாவடியில் உறங்கினார். மஹாசமாதி அடையும்வரை பாபா இரவில் உறங்கும் கிரமம் இவ்வாறு இருந்தது. 
       1909 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதியி­ருந்து சாவடி வழிபாடும் பஜனையும் பூஜையும் தொடங்கின.
     சாவடியில் உறங்கும் முறை நாளன்று பஜனை ­ மசூதிக்கு வரும். பிற்பகல் வேளையிலி­ருந்தே சபாமண்டபத்தில் பஜனை ஆரம்பித்துவிடும்.   பின்புறத்தில், துளசி பிருந்தாவனத்திற்கு இடப்பக்கத்தில் ஒளிவீசும் ரதம் நிற்கும். பாபா முன்னால் அமர்ந்திருப்பார். மத்தியில் பஜனை பாடும் பக்தர்கள் அமர்ந்திருப்பர். 
  ஹரிபஜனையில் ஈடுபாடுகொண்ட ஆடவரும் பெண்டிரும் நேரத்தோடு வந்து சபாமண்டபத்தில் தம் தம் இடங்களில் அமர்ந்துகொள்வர்.        சிலர் சேகண்டியைக் கையில் எடுத்துக்கொள்வர்; சிலர் சப்பளாக்கட்டையால் கைத்தாளம் போடுவர். சிலர் மிருதங்கத்துடனும் வேறு சிலர் கஞ்சிராவுடனும் பஜனையில் சேர்ந்துகொள்வர். இவ்வாறாக, பஜனை கோலாகலமான கூட்டிசையாக அமையும். 
 ஸமர்த்த ஸாயீ தம்முடைய காந்தசக்தியால் இரும்பு உலோகமான பக்தர்களை அவர்கள் அறியாதவாறு இழுத்தார்.        தீவட்டி ஏந்துபவர்கள் முற்றத்தில் தங்களுடைய தீவட்டிகளைத் தயார் செய்துகொள்வர். சிலர் பல்லக்கை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருப்பர். வாயில் காப்போர் ஜயகோஷமிட்டுக் கட்டியங்கூறுவர்.  மக்கள் கூடுமிடம் மாவிலைத் தோரணங்களாலும் உயர்ந்து பறக்கும் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். சிறுவரும் சிறுமியரும் புத்தாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் ஜம்பமாக நடமாடுவர். 
  மசூதியைச் சுற்றி வரிசைவரிசையாக தீபங்கள் ஏற்றிவைக்கப்படும். 'சியாம்கர்ண என்ற பெயர்கொண்ட அருமையான குதிரை பூரணமாகச் சிங்காரிக்கப்பட்டு வாயி­ல் தயாராக நின்றுகொண் டிருக்கும். 
 தாத்யா பாடீல் தம்முடைய நண்பர்களுடன் திடீரென்று வந்து, பாபாவுக்கு அருகில் அவருடன் கிளம்புவதற்குத் தயார் நிலையில் உட்கார்ந்துகொள்வார்.  பாபா தாம் கிளம்புவதற்குத் தயாராகிவிட்டாலும், தாத்யா பாடீல் வரும்வரை தாம் இருக்குமிடத்திலேயே உட்கார்ந்துகொண்டு காத்திருப்பார். 
 தாத்யா பாடீல் பாபாவின் அக்குளுக்குக்கீழ் கைகொடுத்து எழுந்திருப்பதற்குக் கைலாகு கொடுத்த பிறகுதான், பாபா சாவடிக்குச் செல்வதற்குக் கிளம்புவார்.  தாத்யா பாடீல் பாபாவை மாமாவென்று அழைத்தார். அவர்களுடைய பரஸ்பர பிரேமை அவ்வாறு இருந்தது. அவர்களிடையே நிலவிய நெருக்கமான உறவிற்கு ஈடிணையே இல்லை. 
  உட­ன்மேல் எப்பொழுதும் அணியும் கப்னி, அக்குளில் இடுக்கப்பட்ட ஸட்கா, கைகளில் புகையிலையும் சிலீமும், தோளின்மேல் ஒரு துணி. பாபா இவ்வாறு தயாரானவுடன் தாத்யா பாடீல் அவருக்கு ஒரு ஜரிகைக்கரை போட்ட அழகான சால்வையை அணிவிப்பார். 
  சுவரோரமாக விறகு குச்சிகள் ஒரு கட்டாக இருக்கும். பாபா தமது வலக்கால் கட்டைவிரலால் அதை அப்பொழுதுக்குப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்.  உடனே தமது வலக்கையால் ஜுவாலையை அணைத்துவிடுவார். அதன் பிறகே சாவடிக்குப் போகக் கிளம்புவார்.  ஸாயீ கிளம்பும்போது இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆரம்பிக்கும். தீவட்டிகளும் சந்திரஜோதிவாணங்களும் நான்கு பக்கங்களிலும் ஏற்றப்படும். 
 வில் போன்று வளைந்தும் வட்டமாகவும் பலவிதமான வடிவமைப்புகளில் அமைந்த, சிறிய மற்றும் பெரிய கொம்புகள் ஊதப்படும். சிலர் எக்காளம் ஊதினர். சிலர் ஜால்ராவாலும் சிலர் சேகண்டியாலும் தாளம் போட்டனர். கைத்தாளம் போட்டுக்கொண்டு வந்தவர்கள் அநேகம்.  மிருதங்கங்களையும் வீணைகளையும் 'ஜண்ஜண்’ என்றொலி­த்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் பிரேமையுடன் வரிசைவரிசையாகப் பஜனையுடன் சேர்ந்து ஊர்வலமாக நடந்தனர். ஸாயீ நாம கோஷம் வானைப் பிளந்தது.
  சிலர் பதாகைகளை  நிலைதவறாது கவனமாகப் பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் நடந்தனர். சிலர் கருடன் சித்திரம் வரையப்பட்ட கொடிகளை ஏந்திப் பெருமையுடன் நடந்தனர். இவ்வாறாக, மக்கள் அனைவரும் சந்தோஷமாக பஜனை பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். 
       சகல ஜனங்களும் மிக்க மகிழ்ச்சியுடன், பறக்கும் பதாகைகளுக்கும் உரத்த மேளதாளச் சத்தத்திற்கும் கொம்புகளின் சத்தத்திற்கும் சியாம்கர்ண செய்த குளம்படிச் சத்தத்திற்கும் ஜயகோஷச் சத்தத்திற்கும் இடையே, ஊர்வலமாகச் சென்றனர்.
    இவ்வளவு ஆரவாரத்திற்கும் இன்னிசை வாத்தியங்களின் பேரொ­லிக்கும் நடுவே பாபா மசூதியை விட்டுக் கிளம்புவார். அவர் படியை மிதித்தவுடன் வாயில்காப்போர் பாபாவுக்குக் கட்டியங்கூறுவர். சேகண்டிகளும் மிருதங்கங்களும் கஞ்சிராக்களும் பக்கவாத்தியங்களாக ஒ­க்க, சிலர் வீணை வாசித்தனர்; சிலர் சப்ளாக்கட்டையால் தாளம் போட்டனர்; பக்த மண்ட­ பஜனை பாடியது. பக்த சம்மேளனம் பிரேமையால் பொங்கியது. 
       பல பக்தர்கள் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்திக்கொண்டு ஆனந்தமாக ஊர்வலத்தில் நடந்து வந்தபோது, சிலர் பாபாவின் இருபக்கங்களிலும் சாமரத்தால் தலைக்குமேல் விசிறிக்கொண்டு வந்தனர்.
  சிலர் முன்னோடிகளாகச் சென்று ஒற்றையாகவும் இரட்டையாகவும் நடைவிரிப்புகளை விரித்தனர். பாபா விரிப்பின்மீது மெதுவாக நடந்துசென்றார். சிலர் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டனர். சிலர் சவரியால் அவருக்கு விசிறினர். 
  தாத்யா ஸாஹேப் இடக்கையைப் பிடித்துக்கொள்வார். மஹால்ஸாபதி வலக்கையைப் பிடித்துக்கொள்வார். பாபு ஸாஹேப் ஜோக் ஒரு பெரிய குடையை பாபாவின் தலைக்குமேல் உயரமாகப் பிடித்துக்கொள்வார். இவ்வாறு பாபா சாவடியை நோக்கி ஊர்வலமாகச் செல்வார். 
   சியாம்கர்ண என்ற பெயர்கொண்ட தாமிரவர்ணக் குதிரை எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுக் கால்களில் கட்டிய சதங்கைகள் 'ஜண்ஜண்’ என்றொ­க்க வழிவகுத்துக்கொண்டு நடந்துசெல்லும். 
 அதிகாரக் கோலேந்திகள் அவ்வப்பொழுது ஸாயீ நாம கோஷம் செய்துகொண்டு முன்னால் சென்றனர். குடையேந்துபவர் பெரிய குடையொன்றை ஏந்திச் சென்றார். சிலர் சவரிகளை ஏந்திச் சென்றனர். 
வாத்தியங்கள் இன்னிசை முழங்கின. பக்தர்கள் பாபாவுக்கு ஜயஜயகோஷம் கர்ஜித்தனர். இவ்வாறு பக்தர்களின் கூட்டம் நடந்துசென்றபோது அதிகாரக் கோலேந்திகள் அவ்வப்பொழுது ஜயகோஷத்தில் பிரேமையுடன் கலந்துகொண்டனர். 
 ஹரிநாமமும் அவ்வப்பொழுது கர்ஜிக்கப்பட்டது. பக்தர்களின் சம்மேளனம் சேகண்டி, மிருதங்கம், ஜால்ரா இவற்றின் ஒ­லிகளுக்கேற்ப நடைபோட்டுச் சென்றது. 
  ஊர்வலம் தெருமுனையை அடையும் சமயத்தில், ஆனந்தமாக ஜயஜயகோஷம் போட்டுக்கொண்டு ஸாயீக்கு முன்னால் செல்லும் பஜனைகோஷ்டி நிற்கும். 
   சேகண்டிகள், ஜால்ராக்கள், டோலக்குகள் போன்ற வாத்தியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒ­ரேப் பக்தி பாவத்துடன் பாடப்பட்ட பஜனை இசையின் ஆரவாரம் உச்சக்கட்டத்தை எட்டும். ஸாயீ நாம கோஷம் இவற்றையும் மீறி ஒ­க்கும். 
   பஜனை இசையால் கிளர்ந்த ஆனந்தம் நிரம்பியவர்களாய் இருமருங்கிலும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் ஆண்களும் பெண்களும் எழுப்பும் ஸாயீ நாம கோஷம் வானைப் பிளக்கும். 
    அவர்களுக்கு மே­ருந்த வானமே இசையால் நிறைந்தபோது மக்கட்கூட்டம் அகமகிழ்ச்சியால் பொங்கியது. இவ்விதமாகச் சாவடி ஊர்வலம் அனைவரும் கண்டு அனுபவிக்கவேண்டிய கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த விழாக்கோலத்திற்கும் சோபைக்கும் ஈடிணையே இல்லை. 
  சாவடியின் முன்பாக பாபா நின்றபோது அவருடைய திருமுகத்தின் சோபை, உருக்கிய பொன் போன்றும், உதயகாலத்திலும் அஸ்தமனகாலத்திலும் வானை நிரப்பும் சூரியனுடைய பிரபையைப் போன்றும் செந்நிற ஒளி வீசியது. 
  அந்நேரத்தில் அவருடைய திருமுகத்தி­ருந்து வீசிய ஒளி உதயசூரியனின் பிரபையை ஒத்திருந்தது. இக் காட்சி, பிரபஞ்ச சக்தியே அவருடைய திருமுகத்தில் ஒளியாக வீசியது போன்றிருந்தது. இந்த லாபத்தை யாராவது விட்டுவிடுவார்களா என்ன.
   அந்த சமயத்தில் அவரை தரிசனம் செய்தவர்கள் தன்யர்கள். அவர் வடக்கு நோக்கி யாரையோ கூப்பிடுபவரைப்போல ஒருமுனைப்பட்ட மனத்துடன் நின்றபோது அவருடைய திருமுகம் செந்நிறத்தில் ஜொ­லித்தது. 
   இன்னிசை வாத்தியங்களின் முழக்கத்திற்கு நடுவே மஹராஜ் ஆனந்தம் நிரம்பியவராகத் தம்முடைய வலக்கையை மேலும் கீழுமாக மீண்டும் மீண்டும் ஆட்டுவார். 
   பக்தர்களில் சிரேஷ்டராகிய ஹரி ஸீதாராம் தீக்ஷிதர் ஒரு வெள்ளித்தட்டு நிறையப் பூக்களை வைத்துக்கொண்டு பாபாவின்மேல் மறுபடியும் மறுபடியும் பூமாரி பொழிவார். 
     இவ்வாறாக, காகாஸாஹேப் தீக்ஷிதர் 'குலால்’ (சிவப்பு வர்ணப் பொடி) கலந்த ரோஜாக்களைப் பிரேமையுடன் பாபாவின் சிரத்தின்மீது மீண்டும் மீண்டும் பொழிவார். 
   குலால் கலந்த ரோஜாக்களை அவர் பொழியும்போது கஞ்சிராக்களும் ஜால்ராக்களும் சேகண்டிகளும் பேரிகைகளும் ஒருசேர ஒ­த்து ஆரவாரம் செய்யும். 
       கிராமமக்களும் பாபாவின் பக்தர்களும் பிரீதியுடன் தரிசனம் செய்ய வந்தனர். அந்த வேளையில் பாபாவின் திருமுகம் உதயகால சூரியன் உதித்ததுபோல் செந்நிற ஒளியால் அற்புதமாக ஜொ­லித்தது.
   அந்தத் தேஜோவிலாஸத்தைப் பார்த்தவர்களின் கண்கள் வியப்பால் விரிந்து மலர்ந்தன. அவர்களுடைய மனம் பிரேமையால் உல்லாசமடைந்தது; உலகியல் துன்பங்கள் அனைத்தும் ஒழிந்ததுபோல் உணர்ந்தனர். 
   ஓ!, பாலசூரியனைப் போன்ற அந்த திவ்விய தேஜசும் அற்புதமுந்தான் என்னே! அவருக்கு முன்னால் பேரிகைகள் நெடுநேரம் முழங்கின.  வடக்குப் பார்த்தவாறு, ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் தம்முடைய வலக்கையை மேலும் கீழும் மீண்டும் மீண்டும் ஆட்டிக்கொண்டே பாபா நிற்பார். 
       பாபாவின் திருமுகவொளிவட்டம் அப்பொழுது தாழம்பூவின் நடுப்பாகம்போல் கொஞ்சம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறமாக ஜொ­லிக்கும். இந்த அழகை சொற்களால் வர்ணிக்க இயலாது; கண்களால் பார்த்துத்தான் அனுபவிக்கமுடியும்.
 
       மஹால்ஸாபதி ஆவேசம் பிடித்து நடனமாட ஆரம்பித்த பிறகும், பாபா ஒருமுகமான நிலையி­ருந்து கலையாதது அனைவர்க்கும் ஆச்சரியத்தை விளைவித்தது.
 
    ஊர்வலத்தில் மஹால்ஸாபதி பாபாவின் கப்னியின் நுனியைப் பிடித்துக்கொண்டு அவருக்கு வலப்பக்கத்தில் நடந்து வருவார். பாபாவின் இடப்பக்கத்தில் தாத்யா கோதே பாடீல் ஒரு லாந்தரைக்  கையில் பிடித்துக்கொண்டு வருவார். 
   ஓ!, அந்த உற்சவந்தான் எவ்வளவு அற்புதமானது! அந்தப் பிரேமபக்தி எவ்வளவு உன்னதமானது! அந்தக் கோலாகலத்தைக் காண்பதற்குச் சான்றோர்களும் செல்வர்களும் அங்கு ஒன்றுகூடினர். 
பாபாவின் சந்திரவதனம் பொன்னிற ஒளியுடன் ஜொ­லித்த காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அங்கிருந்த மக்கள் அதைக் கண்கொட்டாமல் பார்த்தனர்; ஆனந்தத்தால் நிரம்பினர். 
 எல்லையற்ற பிரேமபக்தியாலும் இதயத்தை மூழ்கடித்த ஆனந்தத்தாலும் நிரம்பியவர்களாய் மக்கள் இருமருங்கிலும் மெதுவாக ஊர்வலத்தில் நடந்தனர். 
 வருங்காலத்தில் யாருமே இந்தக் கோலாகலமான சாவடி ஊர்வலத்தைக் கண்களால் காணமுடியாது. அந்த நாள்கள் கடந்துவிட்டன; அக் காலம் மலையேறிவிட்டது. பழைய நினைவுகளை அசைபோட்டு மனத்தைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். 
   இவ்விதமாக, வாத்தியங்களின் இன்னிசைக்கும் அவ்வப்பொழுது எழும்பிய ஜயகோஷத்திற்கும் இடையே, பாபா சாவடியி­ருந்த ஆசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெய்வங்களுக்குரிய உபசாரங்கள் செய்யப்பட்டன. 
      தலைக்குமேல் வெள்ளைத் துணியொன்றால் கூரை போன்ற விரிப்பு கட்டப்படும். தொங்கும் சரக்கொத்து விளக்குகளும் சாதாரண விளக்குகளும் ஏற்றப்படும். பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் விளக்குகளின் ஒளி பிரதிப­லிக்கும். சாவடி பார்ப்பதற்கு ஜகஜ்ஜோதியாகக் காட்சியளிக்கும்.
        பின்னர் பக்தர்கள் ஒன்றுசேர்ந்து சாவடிக்குள் செல்வர். தாத்யா, பாபாவின் ஆசனத்தைத் தயார் செய்துவிட்டு பாபாவைக் கையைப் பிடித்து அழைத்துவந்து உட்காரவைப்பார்.
 
    சாய்ந்து உட்காருவதற்காக, பஞ்சடைக்கப்பட்ட நீண்ட திண்டுடன் விளங்கிய இந்த உன்னதமான ஆசனத்தில் பாபா அமர்ந்தவுடன் அவருக்கு மேலாக ஒரு நீளமான அங்கவஸ்திரம் அணிவிக்கப்படும். 
       மகிழ்ச்சி பொங்கும் இதயத்துடன் திவ்வியமான ஆடைகளை அணிவித்தபின் மக்கள் பக்தியுடன் பூஜை செய்வர். அவருக்கு மாலைகளை அணிவித்தபின் ஆரத்திப் பாட்டை உரக்கப் பாடுவர். 
        மணம் கமழும் சந்தனத்தை இடுவர். கைகளில் வாசனை திரவியங்களைப் பூசுவர். அழகான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவிப்பர். கடைசியாக, ஒரு கிரீடத்தைத் தலைமேல் பொருத்துவர். 
.   சிலசமயங்களில் பொன்னாலான கிரீடம்; சிலசமயங்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டதும் மயிற்பீலிகை­ செருகப்பட்டதுமான தலைப்பாகை. தொண்டைக்கு நேராக வைரமும் மாணிக்கமும் அணிவிப்பர். 
        பிறகு கழுத்திற்கு நல்முத்துமணிமாலைகளை அணிவிப்பர். தீபங்களின் ஒளியில் இவ்வழகான ஆடைகளும் அணிகலன்களும் ஜொ­லித்த அழகே அலாதியானது.
      நெற்றியில் நறுமணம் கமழும் கஸ்தூரியால் கறுப்பு நிறத்தில் ஒற்றைக்கோடு நாமம் இடப்படும். நடுவில் வைஷ்ணவ குல சம்பிரதாயத்தையொட்டி ஒரு கறுப்புநிற வட்டப் புள்ளியும் இடப்படும். 
  நுணுக்கமான தங்கச்சரிகை வேலைப்பாடு நிறைந்த, விலையுயர்ந்த, கத்தரிப்பூ நிற அங்கவஸ்திரம் நழுவினால், இரண்டு பக்கங்களி­ருந்தும் ஜாக்கிரதையாகவும் யாரும் அறியாதவாறும் பக்தர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டது. 
       அதுபோலவே, தங்கக்கிரீடத்தையோ தலைப்பாகையையோ பின்னாலி­ருந்து பக்தர்கள் மேலுக்காகவும் ஜாக்கிரதையாகவும் முறைபோட்டுப் பிடித்துக்கொண்டனர்.
 
      தப்பித்தவறித் தலையி­லிருக்கும் பளு தெரிந்துவிட்டால், பாபா அதைத் தூக்கி எறிந்துவிடுவார் என்பதே பக்தர்களுடைய பயமும் விசாரமும். ஆயினும், பாபாவின் தலையில் மகுடம் அணிவிக்கவேண்டும் என்ற எல்லையில்லாத பிரேமையும் ஆசையும் அவர்களுக்கு இருந்தது.
 
     சர்வாந்தர்ஞானியான பாபாவுக்கா அவர்களுடைய தந்திரம் தெரியாமலி­ருக்கும்? பக்தர்களின் உற்சாகத்திற்கு இடமளித்து, விருப்பப்பட்டே பாபா மௌனமாக இருப்பார்.
     பிரம்மானுபவத்தில் மூழ்கியவருக்கு தங்கஜரிகை வேய்ந்த அங்கவஸ்திரம் எதற்கு? உண்மையான சாந்தியின் சோபையால் ஒளிர்பவருக்கு மணிமகுடம் என்ன அழகு சேர்க்கும்? 
     ஆயினும், பக்தர்கள் பாபாவுக்கு நானாவிதமாக அலங்காரங்கள் செய்தனர்; நெற்றியில் மனோஹரமான சந்தனத் திலகம் இட்டனர்; குங்குமப் பொட்டும் இட்டனர். 
     சிலர் வைரம் கட்டிய முத்துமாலைகளைக் கழுத்தில் அணிவித்தனர். சிலர் நெற்றியில் திலகமிட்டனர். இவ்வாறான சின்னச் சின்ன விஷயங்களை அனுமதித்து பாபா அவர்களுக்குச் செல்லம் கொடுத்தார். 
     எல்லாச் சிங்காரிப்புகளும் முடிந்து, முத்து மாலைகள் கழுத்தில் ஜொ­லிக்க, தலைமேல் மகுடம் வைக்கப்பட்டவுடன் வீசிய சோபை காண்பதற்கு மிக அற்புதமாக இருந்தது. 
        நானாஸாஹேப் நிமோண்கர் குஞ்சலங்கள் தொங்கும் மஞ்சள் நிறத் துணிக்குடையை பாபாவின் தலைக்குமேல் பிடித்துக்கொண்டு பிடியுடன் சேர்த்துக் குடையைச் சக்கரம்போல் சுழற்றிக்கொண்டேயிருப்பார். 
        பாபுஸாஹேப் ஜோக்(எ) குருவின் பாதங்களை அலம்பியபின் அர்க்கியம் பாத்யம் ஆகிய உபசாரங்களை மிகுந்த பக்தியுடன் செய்வார். பிறகு விதிமுறைகளின்படி பாபாவுக்குப் பூஜை செய்வார். 
       முன்னால் ஒரு வெள்ளித்தட்டை வைத்து அதில் பாபாவின் பாதங்களை எடுத்துவைத்து மிகுந்த மரியாதையுடன் தம்முடைய இரண்டு கைகளாலும் அலம்புவார். 
      குங்குமப்பூக் குழம்பைப் பேலாவில் எடுத்துக்கொண்டு குழம்பை பாபாவின் கைகளுக்குப் பூசுவார். பின்னர் உள்ளங்கையில் ஒரு பீடாவை வைப்பார். ஈதனைத்தையும் பாபா புன்னகை மலர்ந்த முகத்துடன் பார்த்துக்கொண் டிருப்பார். 
      அரியணையில் பாபா அமர்ந்திருக்கையில் தாத்யாவும் மற்றும் சிலரும் பாபாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்க உதவி செய்வர். பிறகு அவருடைய பாதங்களை மரியாதையுடன் வணங்குவர். 
      சாவடியின் தரை பல தடவைகள் தேய்த்துப் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டு ஸ்படிகம் போல் நிர்மலமாக மின்னியது. ஸாயீயின் அன்பில் கட்டுண்டவர்களாக சிறுபிள்ளைகளி­ருந்து வயோதிகர்கள்வரை எல்லாரும் அங்கு வந்தனர்.
 
     பாபா அவ்வாறு 'காதியில்’  (அரியணையில்) சாய்ந்துகொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கையில் இருபுறங்களிலும் சவரிகளும் (சாமரங்களும்) விசிறிகளும் வீசப்பட்டன. 
     பிறகு, மாதவராவ் புகையிலையைக் கசக்கிச் சிலீமைத் தயார் செய்வார். அதைத் தாத்யா பாடீ­டம் கொடுப்பார். தாத்யா சிலீமை உறிஞ்சிப் புகையைவைத்துக் கொடுப்பார். 
        புகையிலையில் ஜுவாலை வந்தவுடன் தாத்யா சிலீமை பாபாவின் கையில் கொடுப்பார். ஒருதடவை புகைத்த பிறகு, பாபா சிலீமை மஹால்ஸாபதியிடம் கொடுப்பார். 
       சிலீம், புகையிலை தீர்ந்துபோகும்வரை மஹால்ஸாபதி, சாமா (மாதவராவ்), தாத்யா, என்று மாற்றி மாற்றிச் சுற்றிவரும். 
     அந்தச் சிலீம் மஹா பாக்கியசாலி­. உயிரற்ற ஜடப்பொருளாக இருந்தபோதிலும் எவ்வளவு பாக்கியம் பெற்றது அந்தச் சிலீம். உயிருள்ளவர்களாகிய நம்மாலும் சிலீமின் சேவைக்கு இணையாக சேவை செய்யமுடியுமோ? 
      சிலீம் மஹா கடினமான தவத்தைச் செய்த பொருளாகும். சிறுவயதில் அது காலால் மிதித்துத் துவைத்துத் துவம்சம் செய்யப்பட்டது. பிறகு வெயி­ன் காய்ச்சலைத் தாங்கிக்கொண்டது. கடைசியாகச் சூளையில் அக்கினிப் பிரவேசமும் செய்தது.
 
     பாபாவின் கையால் தொடப்படும் பாக்கியத்தைப் பெற்றது. மறுபடியும், எரியும் புகையிலையின் சூட்டைப் பொறுத்துக்கொண்டது. சூளையி­டப்பட்ட பிறகு, செம்மண் பூசப்பட்டு மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டாலும், பின்னர் பாபாவின் உதடுகளால் முத்தமிடப்படும் கௌரவத்தைப் பெற்றது. 
     கற்பூரமும் குங்குமப்பூவும் சந்தனமும் சேர்த்து அரைத்த குழம்பை பக்தர்கள் பாபாவின் கைகளில் பூசுவர். கழுத்தில் பூமாலைகளை அணிவித்து கைகளில் ஒரு பூச்செண்டையும் அளிப்பர். 
    சதா புன்னகைபூத்த முகத்துடன், மிகுந்த பிரேமையுடனும் தயையுடனும் பக்தர்களை நோக்கியவருக்குத் தம்மைச் சிங்காரித்துக்கொள்வதில் என்ன அபிமானம் இருந்திருக்கமுடியும்? பக்தர்களைத் திருப்திசெய்வதற்காகவே இவையனைத்தையும் பாபா ஏற்றுக்கொண்டார். 
     பக்தியென்னும் விலைமதிப்பற்ற ஆபரணத்தை அணிந்து சாந்தியென்னும் அழகில் மூழ்கியவருக்கு, மாலைகளாலும் மணிகளாலும் செய்யப்பட்ட உலகநடையான அலங்காரத்தில் என்ன நாட்டம் இருந்திருக்க முடியும்? 
        துறவின் உருவாக வாழ்ந்தவருக்கு மரகதக் கற்களாலான அட்டிகை எதற்கு? ஆயினும், பக்தர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டபோது அவர்களுடைய களிப்பு நாட்டத்தைத் திருப்திசெய்வதற்காகக் கழுத்தில் அவற்றை அணிந்துகொள்வார்.
 
       மரகதம் இழைத்த தங்கச் சங்கி­களும் பதினாறு சரம் முத்துமாலைகளும் அன்றலர்ந்த தாமரைகளுடன் சேர்ந்து அவருடைய கழுத்தை அலங்கரித்தன. 
      மல்லி­கையும் முல்லையும் துளசியும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைகள் அவருடைய கழுத்திலி­ருந்து கால்வரை நீண்டு புரண்டன. கழுத்தைச் சுற்றி முத்தாலான ஆபரணங்கள் அபூர்வமாக ஜொ­லித்தன. 
      அவருடைய மார்பில் தங்கப்பதக்கம் பதிக்கப்பட்ட மரகத அட்டிகை தவழ்ந்தது. நெற்றியில் இடப்பட்ட கறுப்பு நிறத் திலகம் அழகுக்கு அழகு சேர்த்தது. 
      அவர் ஒரு சிறந்த வைஷ்ணவரைப்போல ஜொ­லித்தார். தலைக்குமேல் குடை சுழன்றது; சாமரங்கள் வீசின. தங்கச்சரிகைக்கரை போட்ட சால்வை போர்த்தியிருந்தார். அவரை எப்படிப் பக்கீர் என்று சொல்லமுடியும்?
 
     மங்கள வாத்தியங்கள் பின்புலத்தில் முழங்க, ஜோக்(எ)தான் பெரும்பாலும் ஐந்து விளக்குகள் பிரகாசமாக எரியும் ஆரத்தியைச் சுற்றுவார். 
     ஐந்து வித உபசாரங்களுடன் கூடிய பூஜை முடிந்த பிறகு, பளபளக்கும் பெரிய பஞ்சாரத்தித் தட்டை பத்திரமாக எடுத்து ஐந்து திரிகளையும் கற்பூரத்தையும் ஏற்றி பாபாவுக்கு ஆரத்தி சுற்றுவார். 
     ஹாரதி நடந்து முடிந்த பிறகு எல்லா பக்தர்களும் ஒவ்வொருவராக வந்து பாபாவுக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். பின்னர் தம் தம் வீடுகளுக்குச் செல்வர்.
      சிலீம், அத்தர், பன்னீர் இவற்றை பாபாவுக்குக் கொடுத்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, தாத்யா பாடீல் வீட்டிற்குக் கிளம்பும் சமயத்தில் பாபா அவரிடம் சொல்வார், ''என்னைக் கவனித்துக்கொள். போவதாக இருந்தால் போ. ஆனால், இரவில் அவ்வப்பொழுது என்னை விசாரித்துக்கொள்.”
       ''சரி” என்று உறுதி கூறிவிட்டுத் தாத்யா சாவடியை விட்டுத் தமது இல்லம் நோக்கிச் செல்வார். 
     இவ்வாறாக எல்லா ஜனங்களும் சென்ற பிறகு, பாபா தம்முடைய கைகளாலேயே படுக்கைச் சுருளை எடுத்து ஒவ்வொரு வேட்டியாகச் சீர்செய்து பல படலங்களைப் பரப்பித் தம்முடைய படுக்கையைத் தாமே தயார் செய்துகொள்வார். 
      சுமார் அறுபது - அறுபத்தைந்து வெண்ணிறத் துணிகளை ஒன்றன்மேல் ஒன்றாக விரித்து அதன்மீது பாபா படுத்துக்கொள்வார். 
      இவ்வாறாக, சாவடியின் கதை எவ்விதம் நடந்ததோ, அவ்விதமாகவே இதுவரை எடுத்துரைக்கப்பட்டது.      இந்த ஸாயீயின் மஹிமை ஆழங்காணமுடியாதது. நான் சுருக்கமாகச் சொல்ல நினைத்தாலும் அது எல்லையில்லாமல் என்னை இழுத்துக்கொண்டே போகிறது. குருதர்மம் (குருநெறி) எல்லையற்றதன்றோ!
      எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...