Tuesday, May 3, 2016

உன்னை எனது பொக்கிஷமாகக் காப்பேன்!

எனது அன்புள்ள குழந்தையே எப்போது நான் உன்னுடன் பேசுவேன் எனக்காத்துக்கிடக்கிறாய் அல்லவா? நானும் கூடத்தான் உன்னோடு பேசுவதை பாக்கியமாக நினைத்துக்கொண்டு, என்னைப் பார்க்கமாட்டாயா? பேச மாட்டாயா என ஏங்கிக் கொண்டிருப்பேன்.
நமக்குள் இருக்கும் பூர்வாந்திர உறவுகள் இன்னும் தொடர்ந்து வருவதால் நாம் தந்தை குழந்தை உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டே வருகிறோம். ஒருவரை ஒருவர் புரிந்திருக்கிறோம்.
நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால், என்னை வணங்கினால் எந்தக் கஷ்டமும் வராது. சுகமாகப் போகலாம் என்று! இது என்னம்மா வாழ்க்கை? பிரச்சினையில்லாவிட்டால் அதற்குப்பெயர் வாழ்க்கைக் கிடையாது. பிரச்சினைகளின் மத்தியில் எனது அருளை நான் வழங்கியும், உன் இருந்தும் சேவை செய்கிறேனே அதுதான் எனது பக்தர்களுக்கு நான் செய்கிற உதவி. இதை சற்றும் புரிந்துகொள்ளாது கலங்குகிறார்கள், திட்டுகிறார்கள்.
ஒரு வீட்டில் என்னை தங்கள் கால்களால் மிதித்துக் கொண்டே போனார்கள். வலி தாங்க முடியாமல் நான் தவித்தேன். என்ன செய்வது, அவர்களைக் காக்கவேண்டும் என சங்கல்பம் செய்து கொண்ட பிறகு, அவர்களைவிட்டுப் போக என்னால் முடியவில்லையே! இன்னொரு வீட்டில் என்னை ஓரங்கட்டி விட்டார்கள். மற்றெhரு வீட்டில் ஷோகேசில் அலங்கார பொம்மையைப் போல என்னை வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் என் மனதை எவ்வளவாக பாடுபடுத்துகிறது என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
ஆனால், நீயோ, என் குழந்தாய்! என் மீது மாறாத அன்புடன் இருக்கிறாய். இது எனது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்து, காலமெல்லாம் உனக்கு நல்ல காவலாக இருக்க வைத்துள்ளது.
கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்க சற்று அவகாசம் எடுத்துக்கொள். எவ்வளவு கடினமான பாதைகளைக் கடந்து வந்திருக்கிறாய் என்பதையும், காலம் எவ்வளவு தூரம் உனக்கு கற்றுத் தந்துள்ளது என்பதையும் சீர் தூக்கிப் பார்.
கூட்டத்தோடு கலகலப்பாக சிரித்தநேரங்களும், தனிமையில் புலம்பித் தவித்த காலங்களும், குடும்பத்தோடு சேர்ந்து கழித்த பொழுதுகளும் இல்லாமல் போய்விட்டன. நீ சந்தித்த நபர்களில் பலர் இப்போது உன்னுடன் இல்லாமல் போனார்கள்.
ஆனால், நீ தனிமையில் நடந்தபோதெல்லாம் தடம் பதிக்காமல் உன்னோடு நான் வந்த சமயங்கள் கொஞ்சம் நஞ்சமல்லவே! நீ நடந்து வந்தபோது, பாரத்தைச் சுமந்து இருந்தாய். உறுதியுடன் காப்பாற்றினேன். சோதனையின்போது உன்னை புடமிட்டு, உன் நம்பிக்கையை திடப்படுத்தினேன்.
இத்துடன் நீ ஒழிந்துவிடுவாய் என உனக்கு விரோதமாகப் பேசினார்கள், நானோ உன்னை அவர்கள் கண்கள் முன்பாக உயர்த்தி நன்மைகளை செய்தேன். கடனில் மூழ்கிவிடுவாய் என்றார்கள்.
நான் உன் கடன்களை அடைத்தேன். உன்னுடைய பிள்ளைகள் நிலைமை ஐயோ அதோ கதி என்றனர். நானோ, உன் பிள்ளைகளை நிலைப்படுத்தினேன். திக்கற்றவர்களுக்குத் தாய் தந்தையாகவும், அனாதைகளுக்கு புகலிடமாகவும் இருக்கின்ற நான், உன்னை என்னுடைய பொக்கிக்ஷமாகக் காத்தேன்.
நீ சிறுசிறு தவறுகள் செய்தபோதும், அதற்காக மன வருத்தப்பட்டபோது அதை மன்னித்தேன். பிறரைக் குறித்து பேசியபோதும், வஞ்சனைகள் இல்லாததால், வரும் பாவத்தைத் தடுத்தேன்.
துன்பக் கடல் உன்னை  மூழ்கடிக்கத் துணிந்த போது, நானே கை நீட்டி உன்னை கரையேற்றின சத்குரு. தனிமையாக இருந்தபோது உனக்கு வீடு வாசல் உறவு என வாழ்க்கைக் கொடுத்தேன். வம்பு வழக்குகளை உனக்கு சாதகமாகவே செய்தேன்.
எல்லோரும் தங்கள் செல்வத்தைக் குறித்தும், செல்வாக்கைக் குறித்தும் பெருமை பாராட்டினர்.  நீயோ, அடக்கமாக உனது நாவைக் காத்துவந்தாய். எல்லோரும் எனது ஆலயத்தில் அங்கே தங்களுக்கு முன்னுரிமை தேடினார்கள், நீயோ என் தயவை வேண்டி பிரார்த்தனை செய்தாய். எல்லோரும் தம் துயரத்தைப் போக்க வேண்டிய கதறினார்கள், நீயோ எனது கட்டளைப் படி அவற்றை சகித்தாய். நான் நன்மை செய்யும் நாளுக்காகக் காத்திருந்தாய்.
உன் கண்ணீரின் அளவை நான் அளந்து பார்த்து அதற்கு ஏற்ற நியாயத்தைச் செய்தேன். என்னை நம்பி பொழுதைக் கழித்தாய்.. நானும் உன்னுடன் இருந்து உன்னுடன் பொழுதைக் கழித்தேன்.
இத்தனை காலமும் உன்னுடன் வாழ்ந்த நான், உனக்கு அனைத்திலும் முதிர்ச்சி ஏற்பட்டதால் உன்னை சுதந்திரமாக விடப் போகிறேன். இதோ, நன்மையையும் தீமையையும் உன் முன் வைப்பேன். தேவையானதையும், தேவையற்றதையும் உன் வாசலில் வைப்பேன். நல்லவர்களை மட்டுமின்றி கெட்டவர்களையும் உன்னருகே அனுப்புவேன். உனக்கு எது நல்லதோ, எனக்கு எது பிடிக்குமோ அதைத் தேர்வு செய்து உன்னை காப்பாற்றிக் கொள்.
சிறிதும் தயக்கம் காட்டாமல் வேண்டாதவை உன் வாசலுக்கு வந்தால் விரட்டிவிடு. பொல்லாப்பு பேசுகிறவர்கள் உன்னை அணுகினால், நல்ல வார்த்தைகள் சொல்லி விலகிச் செல்.
இப்படியே, நன்மைக்கு நன்மை செய்து, தீமை வரும்போது அதற்கு விலகிச் செல்வதை வழக்கமாக வைத்துக்கொண்டால் நான் உன்னை விட்டு ஒரு போதும் விலகிச் செல்லமாட்டேன்.
என் குழந்தாய்! உன்னைக் காப்பதற்காக நான் எப்போதும் உன்னுடன் வரவேண்டியிருந்தது. இனியும் உன்னை துன்பங்கள் தொடராமல் பாதுகாப்பேன். உனது ஒவ்வொரு செயலும் எனக்கு அர்ப்பணிக்கப் பட்டால், நான் அதன் சூத்ரதாரியாகி உனக்கு வெற்றிகளை வரச் செய்வேன்.
தடைகள் வரும்போதெல்லாம் தாய்ப் பறவை தன் குஞ்சுகளை இறக்கையின் கீழ் வைத்துக் காப்பதைப்போல உன்னைக் காப்பாற்ற உறுதிபூண்டேன். அதை தவறாமல் செய்வேன். துக்கம் தொண்டையை அடைக்கும் முன்னே அதற்கான காரணத்தை நிவர்த்தி செய்து நிச்சயம் காப்பாற்றுவேன்.
இப்படியெல்லாம் செய்து உன்னை வழிநடத்தி வந்த நான், இப்போது சுதந்திரம் தந்துள்ளேன். நீயே நடைபழகு. எனது அற்புதங்களையும், மகிமைகளையும் மற்றவர்கள் உணர்ந்து கொள்ள உனது நாக்குகளைப் பயன்படுத்து. உனது நல்ல செயல்களால் என்னைப் பெருமைப்படுத்து.
இதோ நீ உயர்வதற்கும், உன்னால் மற்றவர்கள் உயர்வதற்கும் உனக்கு ஒரு உபாயம் கற்றுத்தருகிறேன். அந்த உபாயம்தான் பிரார்த்தனை. இந்தப் பிரார்த்தனையை இரண்டு விதமாகச் செய். ஒன்று அந்தரங்கமானதாக இருக்கட்டும். அடுத்து பிறருக்காக இருக்கட்டும்.
எல்லாம் அப்பாவுக்குத் தெரியுமே, பிறகு எதற்காக நான் கேட்க வேண்டும், ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மனதிற்குள் யோசிக்காதே. மனதோடு செய்யப்படும் பிரார்த்தனை உன் இதயத்தை வலுப்படுத்தும். உன்னுள் இருக்கிற என்னை வெளிப்படுத்தும். வெளியே வாய்விட்டுச் சொல்லப்படும் பிரார்த்தனைக்கு எப்போதும் சக்திகள் அதிகம். அந்தப் பிரார்த்தனை மந்திரமாகி மற்ற சக்திகளை அடக்கிவிடும் வல்லமை பெற்றதாகும்.
வெளியே சொல்லுகிற பிரார்த்தனையை எந்த நேரத்திலும் பிறருக்காகச் செய். அது அவர்களின் இதயத்திற்கு ஆறுதலைத் தரும். அவர்களின் கஷ்ட நஷ்டங்களைப் போக்கும். எப்போதும் பிரார்த்தனை செய்வதற்கு முன்பு எனது நாமத்தை ஜெபம் செய். தொடர்ந்து நாம ஜெபம் செய்யும்போது மனம் ஒருமைப்படும். அதன் பிறகு, துதிப்பாடல்களால் என்னைத் துதி. அந்த இடத்தில் நான் வந்து வாசம் செய்வேன். அதன் பிறகு எனது புனித நூலில் இருந்து வசனங்களை எடுத்து, எனது திருவாய் மொழிகளைப் படி. அதில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் உனக்கானது என உறுதி கொள்.
பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும்போது, இந்த வாக்குறுதிகள் அவர்களுக்கும் உரியது என்பதை எடுத்துக்கூறு. அவர்களை என் மீது நம்பிக்கை உள்ளவர்களாக மாற்று.
அதன் பிறகு, அவர்களுக்காக வேண்டுதல் செய். இவ்வாறு நீ செய்தால் அதை விரும்பிக் கேட்பேன். முப்புரி  நூல் சீக்கிரத்தில் அறுந்துவிடாது என்பார்கள். கூட்டாகச் சேர்ந்து என்னை நோக்கி பிரார்த்தனை செய்யும்போது ஏற்படுகிற பலன் இதுவே.
உங்களில் யாரேனும் ஒருவருடைய பூர்வ கர்மா பாவமுள்ளதாக இருந்தால், மற்ற புண்ணியசாலிகள் தங்கள் புண்ணியத்தாலும், என்னை நோக்கிச் செய்கிற பிரார்த்தனை வலிமையாலும், பலம் இல்லாதவர்களின் பாவங்கள் விலக்கப்படும். உங்கள் வார்த்தைகளைக் கேட்டு அவர்களுக்கு நல்லதைச் செய்வேன்.
ஒவ்வொரு பிரார்த்தனையின் முடிவிலும் எனக்கு நன்றி கூறு. நீ கூறுகிற நன்றி என் வடிவில் மற்ற தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும். அவர்கள் உனக்கு நல்ல செய்ய வழி திறக்க வகை செய்வேன்.
அன்புடன்
அப்பா  ஸ்ரீ  சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...