Friday, May 27, 2016

கணவனோடு சேர்ந்து வாழ்!


லெண்டித் தோட்டத்தில் பாபா ஒரு வேப்பமரத்தையும் அரசமரம் ஒன்றையும் சேர்த்து நட்டார். இரண்டையும் முறுக்கி முறுக்கி விட்டு அதை வளர்த்தார். இன்னமும் அது சீரடியில் இருக்கிறது.
அந்த மரங்களைப் பார்க்கும்போது வேப்பமரம் வேறு, அரச மரம் வேறு. இரண்டையும் ஒன்றாக எதற்காக நட்டார்? என நினைக்க வேண்டும். அரச மரம் சிவனது பிம்பம், வேம்பு அம்பாளின் பிம்பம்.  இந்த இரண்டு மரங்களும் ஒன்று சேரும்போது மிக்கப் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
இப்படித்தான் வேப்ப மரமான பெண்ணையும், அரச மரமான ஆணையும் ஒன்று சேர்த்து வாழ்க்கையைப் புனிதப்படுத்துகிறார் பாபா.
பாபாவால் இணைக்கப்பட்ட இளம் தம்பதியர் இன்று மிகக் கேவலமான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கணவனை மனைவி புரிந்து கொள்வதில்லை, மனைவியை கணவன் மதித்து நடப்பதில்லை. இரண்டு பேரின் பெற்றோர்களின் தலையீடுகளும் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுவந்து அவர்களை பிரிவின் விளிம்புக்குக் கொண்டு செல்கிறது.
ஆணோ, பெண்ணோ உண்மையான சாயி பக்தராக இருந்தால் சாயிபாபா நம்மை அழைத்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு சகிப்புத் தன்மை உள்ளவராக மாறவேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் இழப்புகளைத் தவிர்க்கமுடியாது.
என்னிடம் பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம்,  எந்த நன்மையையும் செய் யாத சாயிபாபாவை நம்பிக்கொண்டிருப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது? எனக் கேட்டேன்.
எனக்கு நிச்சயம் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறதுஎன ஆணித்தரமாக அந்தப் பெண்மணி கூறினார்.
பக்கத்தில் அமர்ந்திருந்த பக்தர்களை சுட்டிக்காட்டி, இவர்கள் அனைவரும் பாபாவின் தீவிர பக்தர்கள்தாம். ஆனால் ஒருவரும் சுகமாக இல்லை.  கஷ்டத்திலும் கடனிலும் பிரச்சினையிலும் தான் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இவர்களுக்கே செய்யாத பாபா உனக்கு எப்படிச் செய்வார் என நம்புகிறாய்?” எனக் கேட்டேன்.
எதுவும் எனக்குத் தெரியாது, ஆனால் பாபா நன்மை செய்வார் என்று நம்புகிறேன்என்றார் அந்த இளம் பெண்.
தாயே, பிரச்சினை என நீ ஓடிவந்ததும் உனக்கு நன்மை செய்துவிட பாபா பைத்தியக்காரன் கிடையாது. அப்படியிருந்தால் பிரச்சினையுள்ள அனைவரும் பாபாவிடம் வந்திருப்பார்கள். பிரச்சினை தீர்ந்திருக்கும். எல்லோரும் பிரச்சினை தீர பாபாவிடம் வந்திருப்பார்களே! பாபா ஒரு போதும் அப்படி செய்யமாட்டார்என்றேன்.
நீ சாயி பக்தையாக இருப்பதால் சிலவற்றை கற்றுத் தருகிறேன், புரிந்துகொள். பரப்பிரம்மமாகிய பாபா, குஷ்ட ரோகி ஒருவன் தன்னுடன் இருக்க அனுமதித்து, அவனுடைய கால்களைக் கழுவி விடும் சேவை செய்தார்.
எல்லோரும் வெறுத்து ஒதுக்குகிற ஒருவனை தன்னுடன் வைத்துக்கொண்டு விருப்பத்துடன் சேவை செய்கிறார் என்றால் என்ன பொருள்?
யாரையும் வெறுக்காதே! எல்லோரிடமும் மிக அன்பாக நடந்துகொள் என்பது. உன் கணவன் இந்த பாகோஜி என்ற குஷ்டரோகி போல இருப்பானா? உனது மாமியார் இப்படிப்பட்ட நபராக இருப்பாளா? இருந்தாலும் அவர்களை நேசித்து வா.
கணவன் கண்டுகொள்ளவில்லை, தன் அம்மா பேச்சைக் கேட்கிறான், அந்த அம்மாவோ தினம் உன்னை கொடுமைப்படுத்துகிறாள் என்பதுதான் உனது பிரச்சினை.
நாங்கள் கஷ்டப்படுகிறவர்களாக இருந்தும் எதற்காக பாபாவை நம்புகிறோம் தெரியுமா?
பாபா சொன்னார்: ஒரு இலைகூட என் அனுமதி யின்றி அசைவதில்லை என்று. அப்படியானால் வாழ்க்கையில் நடக்கிற நல்லதோ கெட்டதோ அவருடைய அனுமதியோடுதான் நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அதனால் நம்புகிறோம்.
உன்னை வசைபாடுகிறவர்கள் உனக்கு நன்மை செய்கிறார்கள், அவர்களைப் போன்ற நல்ல உபகாரிகளை உலகம் முழுக்கத் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். நமக்கு உபகாரம் செய்யவே பிறரை வைத்து திட்டவைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? எல்லாவற்றிலும் நம்மைப் பக்குவப்படுத்துகிறார் என்று அர்த்தம்.
நீ நம்பிக்கையோடு இரு, பொறுமையோடு இரு. அப்படியிருந்தால் இந்தப் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லிக்கொடுத்தார். ஆயிரம் காலத்துப் பயிரான வாழ்க்கை நலமாக மாறும் என்ற நம்பிக்கையில் நாம் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதே அவர் சொல்லிக் கொடுத்ததன் பொருள். இதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
எத்தனையோ ஆண்டுகாலம் வாழவேண்டிய வாழ்க்கையை எதற்காக இவ்வளவு சீக்கிரமாக முடித்துக்கொள்ள நினைக்கிறாய்? உன்னை பிறர் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிற நீ, மற்றவர்களை எந்தளவுக்கு புரிந்துகொண்டு விட்டாய்? எல்லாவற்றுக்கும் காலம் பிடிக்கும்.
என்ன நடந்தாலும் சகித்துக்கொண்டு பொறுமையாக இரு. காலம் ஒருநாள் மாறும், நமது கவலை கஷ்டங்கள் எல்லாம் தீரும். கூடவே உனக்கு அனுபவம் அதிகமாக வரும், அதன்பிறகு உன்னை எதுவும் பாதிக்காது எனக் கற்றுக்கொடுத்தார்.
இப்போது நீ அனுபவிக்கிற எதுவும் நிலையானது அல்ல, ஆகவே அமைதியாகப் போனால் எல்லாம் கடந்துபோகும், பிரச்சினையும் கடந்துபோகும் எனக் கற்றுத்தருவதாலேயே நாங்கள் எந்தக்கஷ்ட நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் அவர் பாதங்கள் மீது நம்பிக்கை வைத்து நடக்கிறோம்.
மகளே, உன் வாழ்க்கையில் கணவரோடு ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் நீயும் அவரும் மட்டும் காரணமல்ல. சூழல், சுற்றம், பெற்றோர் என்ற மும்முனைத் தாக்குதலே காரணம். இதற்கு பதிலாகிவிடுவதால் நீங்கள் இத்தகைய கசப்பான அனுபவங்களைப்பெறுகிறீர்கள்.
ஆண்களுக்கு சொல்லிக்கொடுத்துப் புரியவைக்க முடியாது என்பதால்தான் பெண்களுக்கு புத்திமதியை சொல்லித் தருகிறார்கள்.
என்னதான் சம்பாத்தியம், சுயகவுரவம் அப்படியிப்படி என இருந்தாலும் பின்னாளில் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாக்கப்படுவது பெண்தான். எனவேதான் அக்கறையோடு இந்த புத்திமதிகளை ஆரம்பத்திலேயே சொல்லிவைக்கிறோம்.
கணவனோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை விட்டுவிடு. அவனுடைய நிலைமை மாறுவதற்கு என்ன காரணம் என்பதை யோசித்துப் பார். தாயாரின் பொசஸ்ஸிவ்நெஸ் காரணமாக இருக்கும். நேற்று வந்த நீ அவர்களது பிள்ளையை வலையில் வீழ்த்திவிட்டாய் என்ற உள்ள உணர்வின் வெளிப்பாடுதான் வெறுப்பாக, வசையாக, கோபமாக மாறி உன்னைத் துரத்தும் அளவுக்குப்போய் விடுகிறது.
எனவே யார் உனக்குப் பிரச்சினை தருகிறார்களோ முதலில் அவர்களை சரிசெய்ய முயற்சி செய். அது சாத்தியப்படாதது போல இருக்கும். காலம் செல்லச்செல்ல இவை மாறும். இந்த மாற்றத்தை நீ முதலில் ஏற்படுத்துஎன்றேன்.
மாமியாரிடம் மட்டும் அல்ல, வேலையிலும் இதே நிலைதான். உங்களைப் பிடிக்காத உயர் அதிகாரி அல்லது உங்களை மட்டம் தட்ட நினைக்கும் அதிகாரி, உங்களை ஒழிக்க நினைக்கும் சக தொழிலாளி என யாராக இருந்தாலும் எப்போதும் உங்களை குறை சொல்லிக் கொண்டும், உங்களைப் பற்றி புகார் சொல்லிக் கொண்டும் இருந்தால் உடனடியாக பயந்துவிடாதீர்கள்.
எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கும் என்பதை நினைத்து அதை சகித்துக்கொள்ளக்கற்றுக்கொள்ளுங்கள்.
பாபா உங்கள் பொறுமையை அளவீடு செய்து பார்ப்பார், வேதனைகளை கவனிப்பார். உங்களை கொடுமைப்படுத்துகிறவர்கள் தலையில் நிரந்த பாதிப்பை ஏற்படுத்தி சோர்வடையச் செய்து விடுவார். உங்களுக்கு இதைவிட நல்ல வேலையை தருவார். பயப்பட வேண்டாம்.
வேலைக்காக நீ படைக்கப்படவில்லை, ஆனால் உனக்காக வேலை படைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடமில்லாவிட்டால் என்ன? அடுத்த இடம் உனக்குத் தயாராக இருக்கிறது.. ஆனால் இப்படி அடிக்கடி இடம் மாறுவது நல்லதல்ல. சிறிது காலம் பொறுத்துக்கொள்.
எதையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் அதை அப்படியே விட்டுவிடு.. இப்படி நடந்தால் உன் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...