மகராஜரே! உம்முடைய கிருபையின் பலத்தால், நாங்கள் இதுவரை செய்த வினைகளாலும், செய்யத் தவறிய வினைகளாலும் பின்னிக்கொண்ட வலையை அறுத்து எறியுங்கள். தீனர்களையும் பலவீனர்களையும், துக்கத்திலிருந்தும்
வேதனையிலிருந்தும் விடுவித்து அருளுங்கள்.
நிர்மலமான சாயி ராயரே! தீங்கு விளைவிக்கும் வாக்கு வாதங்களையும் சர்ச்சைகளையும் உமது கருணையால் நிர்மூலமாக்கி விடுங்கள். நாக்கு நாமஜெபம் செய்வதிலேயே இனிமை
காணட்டும்.
சங்கற்பங்களும் விகற்பங்களும் என் மனத்திலிருந்து அழிந்து
போகுமாறும், உடல், உற்றார், உறவினர், சொத்து, சுகம், இவை அனைத்தையும் நான் அறவே மறந்து போகுமாறும்
இதயத்தில் இறையன்பைப் பொங்கச் செய்வீராக.
மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்து போகுமாறு உம் நாமஸ்மரணமே
எந்நேரமும் மனத்தில் ஓடட்டும். என்னுடைய மனம்
அலைபாய்வதையும் சபலத்தையும் தொலைத்துவிட்டு
சாந்தமாக ஒருமுகப்படட்டும்.
உங்களுடைய நிழலில் எங்களுக்கு இடம் கிடைத்தால் அஞ்ஞானமாகிய
இரவு மறைந்துபோகும். உமது பிரகாசமான ஒளியில்
சுகமாக வாழ்வதை விட வேறு என்ன எங்களுக்குத்
தேவைப்படும்?
எங்களை முதுகில் தட்டியெழுப்பி தேவரீர் ஊட்டிய சரித்திரமாகிய அமிருதம் சாமானியமான நற்செயலா என்ன? தங்கள் சரித்திரத்தின்
அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கும் போது எங்களுக்கு அற்புதங்களைச் செய்யுங்கள்.
எங்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பல ஆண்டுகளாக கடன்காரர்களாக எங்களைத்திகைக்க வைக்கும் கொள்ளைக்காரனுக்காக வேண்டிக்கொள்கிறேன். இதோ இன்று நாளை என ஆண்டுக் கணக்கில் எங்களை அலைக்கழித்து நிம்மதியைக் கெடுத்துவிட்ட அவன் மீது கவனம் வையுங்கள். அவனிடம் சிக்கிக் கொண்ட பெரிய தொகையை எங்களுக்குத் திருப்பிக் கொடுத்து வாழ்க்கையில் மனநிம்மதியைத் தாருங்கள்.
சாயிநாதா! எவ்வளவு நிம்மதியாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. தேவையில்லாதவர்களின் நயவஞ்சகப்
பேச்சைக் கேட்டு பணத்தை இழந்து மானம்போகும் அளவுக்கு
இன்று தலை குனிவுடன் வாழ்கிறோம்.
எங்களுக்கு நல்ல உணவும் நல்ல உறக்கமும்
இல்லை. ஐயனே, இன்னும் எத்தனை நாட்களுக்கு நாங்கள் இந்த நரக வேதனையை அனுபவிப்போம். எத்தனை பிரார்த்தனை?
எத்தனை வேண்டுதல்?
அத்தனையும் தங்களால்
கேட்கப்படவேயில்லையே!
சாயி குருவே, பகல் முடிந்து இரவு வந்து வைத்த பொருட்களைத் தடவித் தேடுவதைப் போல, பகலிலேயே நாங்கள்
வழிதெரியாமல் திகைக்கிறோம். கைப்பொருளை
இழந்து கதறுகிறோம். உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் இத்தனை ஆண்டுகளைக் கழித்துவிட்டோம். இதோ இன்னும் சற்று காலம்தான்
எங்களால் தாக்குப் பிடிக்கமுடியும்.
அதற்குள் எங்களை மீட்டு எடுத்துவிடுங்கள்.
பேய்க்கும் பெருங்கடலுக்கும் இடையில் மாட்டிக்கொண்டவர்களைப்
போல தவிக்கிறோம். எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்
பிரபு!
நாங்கள் நம்புகிற சாயிநாதர் எங்களைக் காக்கட்டும், எங்கள் சத்குரு எங்களுக்குச்
சேரவேண்டியதை மீட்டுத் தரட்டும். வஞ்சக மனத்தவர்கள் எங்கள் வழியிலிருந்து விலகிச் செல்லட்டும். இறைவா இந்த வேண்டுதலை தங்கள் இதயத்தில் பதிவு செய்துகொண்டு எங்களைக் காத்து அருளுங்கள்.
சாயி தேவரே, கொடுத்ததைக் கேட்கும்போது, அவர்கள் வாயிதா வாங்குகிறார்கள். எங்களைக்கேவலமாகப் பார்க்கிறார்கள். அவர்களோ மிக நல்ல உணவு உண்டு நல்லமுறையில் வாழ்ந்து வருகிறார்கள். நன்மைக்கு பதிலாக துன்பத்தை அறுவடை செய்கிறோம். உபகாரத்திற்கு பதில் அபகாரத்தை சுமந்து அல்லல் படுகிறோம். அல்லலைக் களைந்து ஆதரிப்பீராக.
No comments:
Post a Comment