தர்ம நாயக்கர் பெருங்களத்தூர் சாயி பாபா பிரார்த்தனை மையம் அமைக்க இடம் தந்தவர். இவருடைய கனவில் வந்த பெருமாள், தாயார் இல்லாமல்
தனித்திருக்கிறேன். என்னுடன் சீக்கிரம் தாயாரை
சேர்ப்பித்து வைக்கச் சொல் எனக் கூறினாராம். அவருடன் கீரப்பாக்கம் மலைக்குச் சென்றேன்.
“நிறைய வேலைகள் நடந்துள்ளது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு
சீக்கிரம் தாயாரை பெருமாள் இருப்பிடம் சேர்த்துவிடுங்கள்”
எனக் கூறினார்.
குரோம்பேட்டை ரமா அம்மையார் கீரப்பாக்கம் மலைக்கு வந்தபோது, தாயாரை பிரதிஷ்டை செய்வது பற்றிக்
கூறினேன். மறுநாள் திருப்பதி சென்ற அவரது கணவர் கூட்ட
நெரிசல் காரணமாக பெருமாளை தரிசிக்க இயலாமல் தாயாரை மட்டுமே சேவித்துத் திரும்பியிருந்தார். அவர் கொண்டுவந்திருந்த தாயாரின் பிரசாதத்தை ரமா அம்மையார் எனக்களித்து இது தாயார் பிரசாதம் என லட்டுகளோடு சேர்த்து வழங்கினார்.
அன்றிரவு உறக்கம் வராமல் தவித்தேன். மலை மேல் அமர்ந்து மூன்று மாதங்கள் கூட முற்றாக முடியவில்லை, இதற்குள் உனக்குத் தாயார் துணை கேட்கிறது. நினைவு தெரிந்த நாள் முதல் தாயார் துணையின்றி இந்த உலகத்தில் நான் அனாதையாகக்
கிடந்தபோது எனக்குத் தாயார் வேண்டும் என நீ ஏன்
நினைக்கவில்லை?
தாயே, நீ யார் என்றே எனக்குத் தெரியாது. உன் கணவர் வந்து
மூன்று மாதங்கள் ஆனதும் மூன்று யுகங்கள்
முடிந்துவிட்டதைப் போல, அவருடன் சேர்ந்து வாழத் துடிக்கிறாய். எனக்குப்பிரசாதம் அனுப்பிவைக்கிறாய்.
அமர்ந்திட இடம் அமைத்துக் கொண்டாய்..
எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது.
இத்தனைக் காலம் நீ எங்கே இருந்தாய்? நீ இல்லாமல் நான் பட்ட அவமானங்கள் எத்தனை? இழந்த இழப்புகள் எத்தனை?
சந்தித்த கேலிகள் எத்தனை? இரவு நேரங்களில் தலையணையில் முகம் புதைத்து
அம்மா அம்மா எனக் கேவிக்கேவி அழுத காலங்கள் உன் காதுகளில் விழவில்லையா? மகனே, இதோ நானிருக்கிறேன் என்று உனக்குச் சொல்லத்
தெரியவில்லையா? இன்று மட்டும் அக்கறையோடு பிரசாதம், லட்டுகள், விசாரிப்புகள் என ஏன்? என்னை ஆட்கொண்ட இறைவனுக்கு கோயில்
எடுக்க நான் பிரயத்னம் செய்கிறவேளையில்,
இடையில் வந்து இடத்தைப் பிடித்துக்கொண்டு இப்போது உரிமை கொண்டாடும் நீங்கள் இதுகாறும் எங்கே சென்றீர்கள்?
எனது இறைவனுக்காக எழுப்பிய கோயிலில் வந்து குடியமர்ந்துகொண்டு, என்னை மேலும் துன்பத்திலாழ்த்துகிறீர்கள்.
நான் உறக்கமின்றி தவிக்கிறேன் எனப்
புலம்பினேன்.
அந்த வியாழக்கிழமை காலையில் பெருங்களத்தூர் சக்திவேல்&
வந்தனா தம்பதியர்
வீட்டுக்கு வந்தார்கள். வாசலில்
நின்றபடி, “சாய் ராம் இதோ உங்களுக்கு உரிய பத்திரம்,
இதை பெற்றுக்கொள்ளுங்கள்”
என்று கூறினார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன இது?” எனக்கேட்டேன். வந்தனா,
வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “ஒருநாள் நீங்கள் எங்களிடம், பாபாவுக்கு இடம் கொடுங்கள்
எனக் கேட்டீர்கள். இதைக்கேட்டு எங்களுக்கு
அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், இருபது ஆண்டுகளுக்கு முன்பு
பெண் குழந்தை பிறந்தபொழுது என்
தந்தையார் அந்தக்குழந்தையின் எதிர்காலத்துக்காக சேர்க்கச்சொல்லி மாதத் தவணையில்
ஒரு மனை வாங்கித்தந்தார். அதைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை. பாபா இதையும் கேட்கிறாரே” என்று அதிர்ந்துபோனோம்.
தரலாமா? வேண்டாமா? என யோசித்துக்கொண்டிருந்தபோது, அன்றைய இரவே நான் ஆசையோடு வளர்த்த வண்ண மீன்
இறந்து விட்டது. தடைகள் தோன்றுவதை
உணர ஆரம்பித்தேன். எங்கள் குழந்தையை பாபா பார்த்துக்கொள்வார், இதை அவருக்கே தந்து விடலாம் என கணவரிடம் பேசி இருவரும் சம்மதித்து இந்த இடத்தை தங்களிடம் தருகிறோம்!” என்றார்கள்.
நான் எப்போது கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. அவரிடம்,
“மகளே, உன் சிரத்தையை, பக்தியை அளவிட பாபா ஏதோ
கேட்டிருப்பார். நீ வருந்தாதே, இந்த இடம் எனக்கு இப்போது தேவையில்லை. எப்போது தேவைப்படுகிறதோ அப்போது கேட்டு வாங்கிக் கொள்கிறேன். உத்தமமான பக்தியைக் காட்டினீர்கள்
சிறப்பாக வாழ்வீர்கள்!” என வாழ்த்தி அனுப்பினேன்.
கோயிலுக்குப் பிரார்த்தனைக்கு வந்தபோது, சீதா அம்மா என்ற சாயி பக்தை
ஆவடியிலிருந்து வந்திருந்தார். ஒரு துண்டுச்
சீட்டில், “நீங்கள் என்னை அம்மா என்று
அழைக்கும்போதும், உபசரிக்கும்போதும் என் மகன் இறக்கவில்லை, இருக்கிறான் என்ற உணர்வே
ஏற்படுகிறது, என்னை மறந்துவிடாதே மகனே!” என எழுதித்தந்தார். படிக்கும்போதே கண்ணீர் கசிந்தது.
அயப்பாக்கம் பார்வதி அம்மாவின் மகன் மனோகரன் காலமான பிறகு,
பார்வதி அம்மா அழும் போதெல்லாம் “நான் தான் இருக்கிறேனே எதற்காக அழுகிறீர்கள்?”
என்பேன். அம்மாவும்
என்னைப்பார்க்கும்போது தன் மகனைப் பார்க்கிற நிறைவு ஏற்படுவதாகக் கூறுவார். நான் தனியனில்லை, தாய்மார்களுக்குத் தனையன்
என்பதையும், பல தாய்களாக என்னை அவன்
தாங்கிப் பிடிப்பதையும் உணர்த்துகிறான் இறைவன் என்பதைப்புரிந்து சமாதானம்
அடைந்தேன்.
சாயி பாபாவை அப்பா என அழைப்பேன். ஆனால் அவரது மடியில் தலைசாய்த்துப் படுக்கும் போது தாய் மடியின் சுகம் கிடைக்கும். (என் வீட்டில் ஐந்தரை அடியில் பாபா கீரப்பாக்கம் செல்வதற்காக வந்திருக்கிறார்). தாயும் தந்தையும் தனிப்பெரும் குருவுமாக வந்து வாய்த்திருக்கிறார் பாபா என்பதே மிகப் பெரும் பாக்கியம் எனக்கு.
நான்கு நாட்கள் கழித்து திருவேற்காடு மாலினி அம்மாவும் அவரது துணைவர் சூர்யபாபுவும் போன் செய்து, அய்யா, இந்த சனிக்கிழமை எங்களுடன் வந்தால்
பாபாவுக்கு நான் தருவதாக சொன்ன இடத்தைத்
தந்துவிடுவோம் எனக்கூறினார்கள். வருவதாகச் சொன்னேன், போக முடியவில்லை.
மீண்டும் மாலினி போன் செய்து, “நாளைக்கு யுகாதி பண்டிகை, எங்களுக்கு விடுப்பு. நீங்கள் வந்தால் மணவூரில் நாங்கள் வாங்கிய இடத்தை ஒப்படைத்து விடுகிறோம்” என்றார்கள்.
பாபா தனக்குக் கோயில் அமைக்கத் தரும் வாய்ப்பை ஏற்றுப் புறப்பட்டேன். என்னோடு ஆறுமுகம் வேணுகோபால் ஆகியோர் வந்தனர்.
செல்லும் வழியில் மலைப்பட்டு என்ற இடத்தில் முரளிதர சுவாமிகள்
அமைத்துள்ள ஆசிரமத்தையும் இறைவனையும் தரிசனம் செய்தோம். இராம பக்த அனுமன் விஸ்வரூபியாகக் காட்சி தரும் அந்த தலத்தை தரிசித்து அழகிய வடிவில் காட்சி தரும் பெருமாளையும் தரிசித்து வெளியே வரும்போது மனம் வருந்த ஆரம்பித்தது.
இறைவா, உன்னை வெட்ட வெளியில் மலையில் தனித்து விட்டிருக்கிறேன்; இங்கே மந்திர ஒலியில் அழகிய நிலையில் இருக்கிறாய். இதைக்காணும்போது
எனக்கு துன்பமாக இருக்கிறது எனப் புலம்பினேன்.
நேற்று பெருமாளையும் தாயாரையும் கோபித்த நான், இன்று அவர்களுக்காக இரங்கித் துன்பப்படுவது ஏன்? என மனம் கேட்டது. கோபத்தை வேறு யாரிடம் வெளிப்படுத்த முடியும்? நான் துன்பப்படுகிறவர்களின் பிரதிநிதி. துன்ப நேரத்தில் கூப்பிடும்போது காதை அடைத்துக்கொள்ளாமல் வந்து காப்பாற்ற வேண்டிய கடமையை அம்மையப்பர் நடத்த வேண்டும் எனக் கோபிக்கிறேன்,
அவ்வளவுதான்.
திருவள்ளூர் - கடம்பத்தூரையும் கடந்து திருத்தணி அருகே அமைந்திருக்கிறது மணவூர். சிவபெருமான் ஆணைக்கு இணங்க தென்னாடு வந்த
அகத்தியர் 108 தலங்களில் சிவ பார்வதி மணக்கோலம் காணும் வரம் பெற்றிருந்தார். இந்த ஊரில்
அந்தக் காட்சி கிடைத்ததால் திருமணவூர்
என்று பெயர் பெற்று, காலப்போக்கில் மணவூராயிற்று.
மணவூர் சென்று, மாலினி& சூர்ய பாபு தம்பதியரை தரிசித்து
மனையுள்ள இடம் சென்றேன். பின்னாளில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ள இடம். விபூதி பிடித்தபோது, நீ விரும்பினால் இங்கு அமர்வேன் என்ற வாக்கியம்
வந்தது. விரும்புகிறேன் என்று கூறி,
அவர்களை
ஆசிர்வதித்து, இந்த இடத்தை தேவைப்படும்போது எடுத்துக்கொள்வதாகக் கூறினேன்.
அவர்களுக்குப் பிரதிபலன் என்ன எனக் கேட்டபோது இன்னொரு பெரிய வீட்டைக் காட்டி,
இது அவர்களுடைய
எதிர்கால வீடு என்ற பதில் வந்தது. இதை
அவர்களிடம் தெரிவித்துவிட்டு, அவர்களையும் வழியனுப்பிய பிறகு அங்கிருந்த வேப்ப மரத்தடியில் நின்றேன்.
ஆறுமுகம் வேணுகோபால் இருவரையும் அழைத்து,
இந்த இடத்தில் சிறிய அளவில் ஒரு பாபா கோயில் கட்டும் பொறுப்பை உங்கள் கைகளில்
ஒப்படைக்கிறேன். நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன்.
அடுத்த சில நாட்களில் பெருங்களத்தூர் லலிதா மாமியினுடைய கணவர் என்னை சந்தித்து திருப்பெரும்புதூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இடம் இருக்கிறது, பாபா ஆலயம் அமையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
திசையெங்கும் சாயி கோயில் அமைய பகவான் திருவருள் செய்கிறார்; நீங்கள் பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள். நீ விரும்பினால் எதையும் உனக்குத் தருவேன் என்று பாபா தருகிறார்.
பெற்றுக்கொள்ள நாம் நம்மை தகுதியுடன் வைத்துக்கொள்ள
வேண்டும்.
No comments:
Post a Comment