Wednesday, May 18, 2016

கவி காளமேகம்

திருஆனைக்கா கோவில் பரிசாரகன் வரதன் அசதியால் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான். இரவு கோவிலை வலம் வந்த அன்னை அகிலாண்டேஸ்வரி, வரதன் அர்ப்பணிப்புடன் செய்யப்படும் சேவையில் மகிழ்ந்து, அவனுக்கு அருள் புரிய வேண்டி அவன் வாயில் தான் தரித்திருந்த தாம்பூலத்தை உமிழ்ந்தாள். அப்போது முதல், மூடனாக இருந்த வரதன் கவி பாடும் ஆற்றல் பெற்று கவி காளமேகம் ஆனான்.

அந்நாளில் திருசீரபுரம் எனப்பட்ட திருச்சிராப்பள்ளியை, தெலுங்கு அரசர்களின் பிரதிநிதியாக திருமலைராயன் என்பவன் அரசாண்டு வந்தான். அவனுக்கு உதவியாக கோனேரிராயன் எனற தளபதி, எல்லையான சமயபுரத்திலிருந்து பொருப்பு வகித்து வந்தான். கோனேரிராயன் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவனாக இருந்தாலும், தமிழ் மீது பற்று கொண்டு, கற்று, நேசித்தான்.

ஒருநாள் கோனேரிராயன் பொற்றாமரையில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டிடையன் ஓலை ஒன்றைப் படித்துக்கொண்டு இருந்ததைக்கண்டு அதனை வாங்கிப் படித்தான்.

"பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்!"

கோனேரிராயனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. பெருமாள் கருடவாகனத்தில் உலா வருதல், இப்படி நகைச்சுவைக் கவிதையாகப் பாடப்பட்டிரு்தது. அந்த ஆட்டிடையனை, ஓலை யார் எழுதியது என்று வினாவினான். ஆட்டிடையன், தெரியவில்லை ஐயா. கீழே கிடந்தது. இன்னொன்றுகூட உள்ளது என்று மற்றொரு ஓலையைக் கொடுத்தான். கோனேரிராயன் அதை வாங்கிப் படித்தான். அதில்சிவபெருமானை கேலி செய்து பாடப்படடிருந்தது.

"
நச்சரவம் பூண்ட தில்லைநாதரே, தேவரீர்,
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும்-உச்சிதமாம்
காளமேன், குஞ்சரமேன், கார்கடல் போல் தான்முழங்கும்
மேளமேன், ராஜாங்க மேன்?”

கோனேரிராயன் விழுநது, விழுநது சிரித்தான். அந்த ஆட்டிடையனிடம், மேலும் ஓலைகள் கிடைத்தால் என்னிடம் கொண்டு வந்து கொடு. ஒவ்வொரு ஓலைக்கும் ஒரு பொற்காசு தருவேன் என்றான்.

மறுநாள் அந்த ஆட்டிடையன் மற்றொரு ஓலையைக் கொண்டுவந்து கொடுத்தான். கோனேரிராயன் அதை வாங்கிப் படித்தான். அதில்முருகப்பெருமானை கேலி செய்து பாடப்படடிருந்தது.

"
அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறான்; ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை."

கோனேரிராயனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. நாலுவரி வெண்பாவில் அழகான பாடல்களைப் பாடிய அந்தக் கவிஞனைக்காண ஏங்கினான். ஒருநாள் மாறுவேடத்தில் திருஆனைக்காவில் நகர் சோதனைக்காக வந்து கொண்டிருந்த போது, சிலேடைக் கவிகள் பாடி, மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருந்த காளமேகததைக் கண்டுபிடித்து விட்டான். பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு, காளமேகத்தை சமயபரத்துக்கு அழைத்து வந்து அவையில் சரியாசனம் தந்து கௌரவித்தான்.

இருவரும் உயிர் நண்பர்களானார்கள். கோனேரிராயன், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் இரண்டிலுமே, காளமேகத்தைக் கலக்காமல் எதுவும் செய்வதில்லை. இதே சமயத்தில், கந்தாடை ராமானுஜம் எனும் வைணவரின் சூழ்ச்சியால், திருமலைராயன் கொல்லப்பட, கந்தாடை ராமானுஜத்தை முறியடித்து கோனேரிராயன் திருசீரபுரத்து அரியணையைக் கைப்பற்றினான்.திருவரங்கம் கோவிலின் நிர்வாகத்தை சீர்படுத்தினான். கோனேரிராயனின் எல்லா செயல்களுக்கும் காளமேகம் துணை நின்றான்.

சில வருடங்களில் தெலுங்கு மன்னர்களால் கோனேரிராயன் கொல்லப்பட, அந்த துக்கம் தாங்காமல் காளமேகமும் உயிரை விட்டான்.

கோனேரிராயனுக்கு துணைபுரிவதற்காக அரசியலில் தீவீர நாட்டம் கொண்டதால், அந்த அற்புத புலவனால் சிலேடைப்பாடல்கள் பாட முடிந்ததேயன்றி, காவியங்கள் ஏதும் படைக்க இயலவில்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.

நன்றி எழுத்துச் சித்தர் திரு. பாலகுமாரன் அவர்களின் "ராஜ கோபுரம்"

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...