Wednesday, May 25, 2016

உற்சாகமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்!

பாபாவை தரிசிப்பது பூர்வ புண்ணியத்தினால் மட்டுமே சாத்தியமாகும். அது இல்லாதவர்களால் பாபாவை தரிசிக்க இயலாது. நீங்கள் பாபாவை தரிசனம் செய்ய வந்திருக்கிறீர்கள், பாபாவை வணங்குகிறீர்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் பூர்வ புண்ணியம்.
தனது பக்தர்களுக்கு பாபா அனுபவத்துடன் ஞானத்தையும் சேர்த்து தருவார். இதனாலேயே சீரடியில் காலை வைக்கிற சிந்தனையாளர்கள் துக்கப்படுவதில்லை என்கிறது சத்சரித்திரம்.  அவர்கள் துக்கம் ஒரு முடிவுக்கு வந்து, அவர்கள் மேல் நிலைக்கு உயர்த்தப் படுகிறார்கள்.  பாபா தரும் அனுபத்தையும் அதைத் தொடர்ந்து வருகிற ஞானத்தையும் பெற்றுக்கொள்ள ஒருவருக்கு ஆர்வம் தேவைப்படுகிறது. உங்களுக்கு பக்தியிருந்தால் பாபா மீது ஆர்வம் வரும். அந்த ஆர்வம் வந்துவிட்டால் உங்கள் இருவருக்கும் இடையே பரஸ்பர நட்பு உண்டாகும். அதன் பின் அவர் உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு வழிநடத்திச் செல்வார்.
இதனால்தான் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்கு வரும் பக்தர்களிடம், உற்சாகமாக நாம சங்கீர்த்தனை செய்யுங்கள், உரத்த குரலில் அவரது திருநாமத்தைக் கூறுங்கள் என்று வலியுறுத்துவேன். சோம்பேறிகளுக்கு பாபா உதவி செய்யமாட்டார் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறிவிடுகிறேன்.
காரணம் என்னவெனில், நீங்களோ நானோ முக்தியடையவும், மோட்சம் பெறவும் பாபாவிடம் வரவில்லை. இந்த வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கிற கஷ்டங்கள் தீரவும், மனதின் ஏக்கம் தீரவும், கோரிக்கை நிறைவேறவும்தான் வந்திருக்கிறோம்.
கஷ்டங்களும், ஏக்கமும், துயரங்களும் நமது முன்வினைப் பாவத்தாலோ, பெற்றோர் செய்த பாவத்தாலோ, நாம் இப்போது செய்த மறைமுகப் பாவங்களாலோ ஏற்பட்டவை. இவை அனைத்தும் தீர வேண்டும் எனில் உற்சாகமாக பிரார்த்தனை செய்யவேண்டும்.
வேகமான ஓடையானது எப்படி தன் எதிர்படுகிற அனைத்தையும் இழுத்துக்கொண்டும், தள்ளிவிட்டும் தடைகளைத் தாண்டி ஓடுகிறதோ அப்படி உங்களின் பிரார்த்தனையின் வேகம் இருக்க வேண்டும்.
ஆதிசேஷன் தன் ஆயிரம் நாவுகளாலும் அடங்காப் பெருமூச்சுடன் பகவான் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பார் என்பார்கள். உங்களது பிரார்த்தனையில் ஓர் அனல் இருக்க வேண்டும். அப்போதுதான் பாவம், பிரச்சினை, துயரம், மனக்குறை போன்றவை அனைத்தும் அதில் எரிந்து சாம்பலாக முடியும். இந்த சூடு எப்படியிருக்க வேண்டும் எனில், கொதிக்க வைத்த தண்ணீர் சுடுவதைப் போல இருக்கக்கூடாது. எரிந்து கொண்டிருக்கிற விறகுக் கட்டைச் சுடுவதைப்போலிருக்கவேண்டும்.
கொதிக்கிற நீரை வைத்து பக்கத்திலுள்ள எதையும் பற்றவைக்கமுடியாது, ஆனால் கொள்ளிக்கட்டையால் மற்றவற்றைப் பற்றவைத்துவிட முடியும். உங்கள் உற்சாகம் கொள்ளிக்கட்டையைப்போல இருக்கவேண்டுமே தவிர, கொதிக்கிற நீராக இருக்கக்கூடாது.
நீங்களே நான் சொல்வதிலுள்ள உண்மையை ஆராய்ந்து அறிந்து தெரிந்துகொள்ளலாம். உற்சாகமாகப் பிரார்த்தனை செய்தால் உடனடிப் பலனைப் பெறலாம். உடனடிப் பலனைப்பெற, தனியாக அமர்ந்து சாயிராம் சாயிராம் என உற்சாகமாகக் கூறிக்கொண்டே இருங்கள். கூட்டத்துடன் இருக்கும்போது அவரது நாமாக்களை தோத்திரம் செய்யுங்கள். அவரது கல்யாண குணங்களைப் புகழ்ந்து பேசுங்கள் அப்போது உடலில் ஒரு பரவச உணர்வு உண்டாவதையும், தீர்வு உடனடியாகக் கிடைப்பதையும் உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...