Wednesday, May 18, 2016

சீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவி




தாமோதர் வாமன் அட்வாலே என்கிற தாமு அண்ணா
இவர் தாசகணுவின் வளர்ப்பு மகன். சாயி பாபா பற்றிய கீர்த்தனைகளைப் பாடுவதிலும், மகான்களின் வாழ்க்கை சரிதத்தைத் தொகுத்துத் தந்தவருமான தாசகணுவுக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு ஒரு வளர்ப்பு மகன் அமைந்தார். அவர் பெயர் தாமோதர் வாமன் அட்வாலே என்கிற தாமு அண்ணா.
இவர்களின் சந்திப்பு பூனாவில் நிகழ்ந்தது.  வழக்கமாக பூனாவுக்கு தாசகணு வந்தால், ஜாகேஸ்வரி லேன் என்ற இடத்தில் வாமன் ராவ் என்கிற பக்தரின் வீட்டில்தான் தங்குவார்.
ஒருமுறை தாசகணு அந்த வீட்டின் ஜன்னல் பக்கத்தில் நின்று தெருவை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தெருவில் ஒன்பது வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கோரமாக அழுவதை கவனிக்க நேர்ந்தது.
அந்த பிராமண சிறுவன் பல வீடுகளில் சென்று பிக்ஷை எடுத்துத் திரும்பிக் கொண்டிருந்தான். வரும் வழியில் அந்தச் சிறுவனை குதிரை வண்டிக்காரன் ஒருவன் தொட்டுவிட்டான். அந்தக் காலத்தில் தீண்டாமை அதிகமிருந்தது; தானும் தனது உணவும் தீட்டுப் பட்டதாக நினைத்த அந்தச்சிறுவன் உணவை வீசியெறிந்துவிட்டு அழுது கொண்டிருந்தான்.
இதைப் பார்த்து திகைப்படைந்த தாசகணு, பூனா போன்ற நகரங்களில்கூடவா இத்தனை ஆச்சாரத்துடன் வாழ்கிறார்கள் என நினைத்த படி, வெளியே வந்து அந்த சிறுவனை அழைத்தார். அவனைப் பற்றி விசாரித்து குஹாகர் என்ற கிராமத்திலிருந்து வேதம் படிக்க பூனாவுக்கு அந்தச்சிறுவன் வந்திருப்பதை அறிந்துகொண்டார்.
தாமு அண்ணா உணவைப் பற்றி எப்போதும் கவலைப்பட வேண்டாம் என புத்திமதி கூறி, தன்னுடன் சாப்பிட அழைத்தார். அந்தச் சிறுவனும் மகிழ்ச்சியுடன் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டான். அவனது தலையையும் உடலையும் இதமாக வருடிக் கொடுத்த தாசகணு அவனை தன்னுடன் வைத்துக்கொண்டார்.
இந்தச் சிறுவன் அழகாக எழுதுவான், இனிமையாகப் பாடுவான். உன்னுடைய குரல் மலைகளில் ஏறி ஒலிக்கிறது என்று தாசகணு பாராட்டுவது வழக்கம். 1905 ம் ஆண்டு வாக்கில் மகான்களின் வாழ்க்கை வரலாறான அர்வசின் பக்தி லீலாம்ருத் என்ற புத்தகத்தின் கடைசி பாகத்தை அவர் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொல்லச் சொல்ல தாமோதர் எழுதித் தந்தான்.
தாசகணு பாடும்போது தாமோதர் அருகிலிருந்து ஒத்தெடுத்துப் பாடுவான். அவனுடைய குரலும் இசையும் மற்றவர்களை மயக்கிவிடும் அளவுக்கு இருந்தது. அவன் தாசகணுவின் வளர்ப்பு மகனாகவும் சீடனாகவும் விளங்கினான். தனது கீர்த்தனைக்கு பாராட்டுகள் வந்தால் அதை தாமோதர் தான் செய்ததாக அவர் மீது ஏற்றிச் சொல்வார் தாசகணு.
இந்தப் பையன் தன்னுடன் இருப்பதைவிட நானாவிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினத்த தாசகணு, நானாவிடம் பேசி அகமத் நகருக்கு அனுப்பி வைத்தார். ஒருமுறை நானாவும் தாமோதரும் சீரடிக்கு வந்தபோது, தாசகணுவின் மகனை நீ எதற்காக வைத்திருக்கிறாய்? அவரிடம் திருப்பி அனுப்பு, அவர் பார்த்துக்கொள்வார் என்றார் பாபா.
தாசகணுவிடம், “உன் மகனை நானாவிடம் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்? அவனை நீயே கவனித்துக்கொள்என்று கூறிவிட்டார். மகனை அழைத்துக்கொண்டார். மகன் சீடனானான்.
தாசகணு கீர்த்தனைகள் எழுதினால், அதை தாமோதர் அழகாகப் பாடுவான். இதன் மூலம் இருவர் புகழும் வளர்ந்தது. தாமோதரின் கீர்த்தனையைக் கேட்ட பாபாவின் கண்களில் இருந்து பரவசக் கண்ணீர் புறப்பட்டதைப் பற்றி காகா தீட்சித் தனது டைரியில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருமுறை டாக்டர் மகாபால் அவரது மனைவி உட்பட பெரிய கூட்டம் பாபா முன்னர் திரண்டு இருந்தது. அப்போது பாபா, தாசகணுவிடம் உனது மகனுக்கு டாக்டர் மகாபாலின் மகளைத்திருமணம் செய்து வைக்கலாமே என்று கூறினார். பாபா வார்த்தையைத் தட்டாமல் டாக்டர் மகாபால் தனது மகள் கமலாவை தாமோதருக்குத்திருமணம் செய்து கொடுத்தார். கமலாவுக்கு ராதா என பெயர் மாற்றப்பட்டது.இவர்களுக்கு அனந்த ராவ் என்ற மகன் பிறந்தான்.
யாரும் எதிர்பாராமல் தாமோதருக்கு காசநோய் வந்தது. தாசகணு மகராஜ் எவ்வளவோ சிகிச்சை செய்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்தி அவர், மகனையும் மருமகளையும் பண்டரிபுரம் அழைத்துச் சென்று ஒரு குடிசை கட்டிக் கொடுத்து அதில் தங்க வைத்தார்.
மகனது படுக்கைக்கு அருகில் ஒரு மணி கட்டப்பட்டிருக்கும். அந்த மணியை அடித்தவுடன் தாசகணு உடனடியாக வந்துவிடுவார்.
இப்படியே நாட்கள் நகர்ந்தன. 1924  ம் ஆண்டு அதிகாலையில் மகனின் படுக்கையிலிருந்து மணி ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. தாகசணு மகராஜ் ஓடிப் போய் நின்றார். மகனின் படுக்கையைச் சுற்றி நிறைய பேர் கூடியிருந்தார்கள். மகனோ சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.
தாசகணுவைப் பார்த்ததும் எழுந்து அவரது பாதங்களில் தலை சாய்த்தான். சாய்ந்த தலை நிமிரவேயில்லை. பாதங்களின் மீதே உயிர் பிரிந்திருந்தது.
மகனின் மறைவுக்குப் பிறகு தாசகணு மகராஜ் தனது மருமகள் ராதாவையும் பேரன் அனந்தராவையும் நேர்த்தியாக கவனித்துக் கொண்டார். தனது பேரன் சந்நியாசம் ஏற்கவேண்டும் என தாசகணு விரும்பினார். ஆனால் தாசகணுவும் ராதாவும் உயிருடன் இருந்தவரை அனந்த ராவ் சந்நியாசம் ஏற்கவில்லை.
எங்கிருந்தோ வந்தவனை மகனாக்கி, அவனுக்காக வாழ்ந்த தாசகணு மகராஜ் அவர்களின் இடத்தைத்தான் சிவநேசன் சுவாமிகள் சமாதி மந்திருக்காக வாங்கினார்கள். அதில்தான் சிவநேசன் சுவாமிகள் சமாதி மந்திர் உள்ளது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...