ஏற்கனவே கொடுத்தாகிவிட்டதே!

2011ம் ஆண்டு அச்சிடப்பட்ட ஸ்ரீ சாயி தரிசனம் என்ற புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்தவர் ஒருவர் கொடுத்தார். அதைப் படித்துவிட்டு பெருங்களத்தூர் பாபா பிரார்த்தனை மையம் வந்து சென்றேன்.
சாயி வரதராஜன் அமர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். எனக்கு அவர் மீதும் புத்தகத்தின் மீதும் நம்பிக்கை வரவில்லை. ஏனெனில், அவர் சாதாரணமானவராக இருந்தார் என்பது ஒரு பக்கமிருக்க, அடிக்கடி பிரார்த்தனை செய்தவர்களிடம் கிண்டல் செய்வதுபோலப்பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு சீரியஸ்னெஸ் அந்தப் பிரார்த்தனையில் இல்லை என்பது போல் தெரிந்ததால் நான் அந்த பிரார்த்தனையில் ஆர்வம் காட்டவில்லை.
அவர் என்னிடம் உங்களுக்கு எதற்காகப்பிரார்த்தனை செய்யவேண்டும் எனக் கேட்டார்.
என் மருமகளுக்கு ஆறு ஆண்டுகளாகக்குழந்தை பாக்கியம் இல்லாததைப் பற்றிச்சொன்னதும், “அவ்வளவுதானே! இதற்காக ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள்? இதோ உடனே தந்துவிட்டால் போயிற்று!என்று கூறினார்.
என்னது இது? பாபாகூட இவ்வளவு வேகமாக சொல்லமாட்டார் போலிருக்கிறதே! இந்த ஆள் இப்படிச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுகிறார் என நினைத்துக்கொண்டேன்.
அவர் உதியை மந்திரித்து இதை உனது மருமகள் சாப்பிடக்கொடு, உடனடியாக நிற்கும் என்று கூறினார். அதை வாங்கிக்கொண்டேன். ஆனால் அதை என் மருமகளிடம் தரவில்லை. உண்மையில் சொல்லப்போனால் குப்பைக்கூடையில் போட்டுவிட்டேன்.
எவ்வளவோ சிகிச்சை செய்தும் குழந்தைப்பேறு கிடைக்காத நிலையில் இவர் தருகிற இந்த விபூதி எப்படி குழந்தை தரும் என நினைத்துக்கொண்டேன்.
இரண்டு நாட்கள் கழித்து எனது அண்ணி வழி உறவினர் ஒருவர் போன் செய்து, பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் போய் வந்த பிறகு தனது மகள் கருத்தரித்திருப்பதாகவும், போய் பார்த்துவிட்டு வா என்றும் சொன்னார்.
அவருடைய மகள் குழந்தையில்லாததால் பல கொடுமைகளை மாமியார் வீட்டில் அனுபவித்து வந்தது எங்களுக்குத் தெரியும். எனக்குக்குழப்பமாக இருந்தது. அதே சமயம் குப்பைத்தொட்டியில் விபூதியைப் போட்டது நினைவுக்கு வரவில்லை. எங்கோ வைத்திருக்கிறேன், மறதியாக உள்ளது என நினைத்து வீடு முழுக்க தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. எதேச்சையாக குப்பையை அப்புறப்படுத்த நினைத்து அதை திறந்தபோது விபூதி இருந்தது தெரியவந்தது. அதை எப்படி மருமகளிடம் தருவது என நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.
ஒரு மாதம் கழிந்த நிலையில் என் மருமகள், பெருங்களத்தூர் போய் வரலாம் எனக் கூப்பிட, நான் மீண்டும் அங்கு வந்தேன்.
இப்போதும் சாயி வரதராஜன் பக்தர்களுக்கு சிரிப்பு மூட்டிக்கொண்டிருந்தார். அவர் பேசும் போது சொன்னார், என்னுடைய தர்பார் கேலியும் கிண்டலுமாக இருக்கும், ஆனால் விஷயம் என்னவோ நடந்துவிடும். இதுதான் பாபாவின் திருவாக்கு. நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள் என்றால், இனிதான் நடக்கும் என்றில்லை. ஏற்கனவே நடந்தாயிற்று.. ஒரு பார்மாலிட்டிக்காக வந்து போகிறீர்கள்... அவ்வளவுதான் என்றார்.
நான் அவர் முன்பு வந்து அமர்ந்தபோது, என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர், குழந்தைதானே! ஏற்கனவே கொடுத்தாகிவிட்டதே, திரும்ப எதற்காக வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். எனது மருமகள் தன்னை அறிமுகம் செய்துகொண்ட போது, பயப்படாமல் போ அம்மா என்று சொன்னார்.
போய் வந்த இரண்டு வாரம் கழித்து, அத்தை எனக்கு தள்ளிப் போயிருக்கிறது என்றாள். மருத்துவரிடம் அழைத்துப் போனபோது அவள் உண்டாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
நான் நம்பாதபோதே, பாபா என் மருமகளுக்கு குழந்தைப் பேற்றை தந்திருக்கிறார். திரும்ப வந்தபோது அதை உறுதி செய்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.
மிக எளிமையாகத் தெரிகிற இந்த நபரிடம் நிச்சயமாக பாபாவின் சக்தியிருக்கிறது என்பதை புரிந்துகொண்டுவிட்டேன். அதன்பிறகு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரது ஆலோசனைக் கேட்டுத்தான் செயல்படுவேன். இப்போது நாங்கள் நன்றாக இருக்கிறோம்.

உமாமகேஸ்வரி,
அம்பத்தூர், சென்னை

Powered by Blogger.