Friday, May 20, 2016

மகளே, உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன்


திருநெல்வேலி ரெட்டியார் பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் 10-4-2016 அன்று கலந்துகொண்டேன். ஒருநாள் முன்னதாக பாபா மாஸ்டர் அவர்கள் அம்மாவுடனும் பஞ்சநாதன் பாண்டியன் போன்ற பக்தர்களுடனும் கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.
பெரியவர் தோத்தாத்ரி மிகச்சிறந்த நிர்வாகி என்பது அவர் ஏற்பாடு செய்திருந்த விதத்தில் இருந்து தெரியவந்திருந்தது.
கூட்டுப் பிரார்த்தனைக்கு முன்பதிவு செய்திருந்தார். குழந்தையில்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவோர், நோயாளிகள், குடும்பப் பிரச்சினை உள்ளவர்கள் எனத் தனித்தனியாகப் பிரித்து அமர வைத்திருந்தார்.
விழா நிகழ்ச்சியை பாபா மாஸ்டர் துவக்கி வைத்து பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். அதையடுத்து மரம் நடுவிழா நடைபெற்றது. பாபா மாஸ்டர் தனது திருக்கரங்களால் மரம் நட்டார். எனது பங்கிற்கு ஆலயத்தின் முன் பக்கம் வேப்பமரத்தை நட்டேன். ரெட்டியார்பட்டி ராதா மாதவன் தனது கைகளால் கோயிலின் தலவிருட்சமாக அரசமரம் நடவேண்டும் என்ற எனது வேண்டுகோள்படி அம்மையார் அரச மரத்தை நட்டார்.
நான் விழாவுக்கு வந்திருப்பதாக பலர் நினைக்கலாம், ஆனால் எனது மகள் ராதாவின் பக்தி மற்றும் அவரது நிலையை எண்ணி, அவரைப் பார்க்கவே வந்திருக்கிறேன், அவரது கைகளால் இந்த மரத்தை நட்டால் நான் மிக மகிழ்ச்சியடைவேன். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த அம்மா வின் நினைவோடு இந்த மரம் காலம் காலமாக இங்கே விளங்கும். இந்த மரத்தின் அடியில் குரு பாதுகாவும், ராகு கேது விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வழி செய்யப்பட வேண்டும்.
யாரெல்லாம் இந்த மரத்தின் அடியில் உள்ள பாதுகாவையும் விக்கிரகங்களையும் வணங்கிச்செல்கிறார்களோ அவர்களுக்கு இறையருள் கூடி சர்ப்ப தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகும். நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவார்கள்என ஆசீர்வதித்தேன்.
எனது ஆசீர்வாதம் பாபாவின் ஆசிர்வாதமாகும் என பாபா மாஸ்டர் ஆசி கூறி வழி மொழிந்தார். வந்திருந்த ஒவ்வொரு சாயி பக்தரும் அமைதியாக, பொறுப்பாக நடந்துகொண்ட விதம் மனதை மிகவும் தொட்டது.
பாபா மாஸ்டரை பக்கத்தில் வைத்துக் கொண்டு நான் பிரார்த்தனை செய்தேன். இதேபோன்ற நிகழ்வு அவர் என்னுடன் சீரடி வந்திருந்த சமயத்தில் நடைபெற்றது.
அக்டோபர் 2011ல் ஐயா என்னுடன் வந்த போது கூட்டுப் பிரார்த்தனை சமார் பதினைந்து மணி நேரம் நடந்தது. மகாகணபதி மந்திரில் பிரார்த்தனை தொடர்ந்தபோது, தலையிருக்க வால் ஆடலாமா? என்று கேட்டார்கள்.
வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரும், சாயி அருளை நிரம்பப் பெற்றவருமான பாபா மாஸ்டர் பக்கத்திலிருக்க, இளையவரான சாயி வரதராஜன் இப்படி அருளாசி வழங்கிப் பிரார்த்தனை செய்யலாமா என்பதுதான் கேள்விக்கான காரணம்.
அய்யா இருக்கும்போது பேசக்கூடாது என நினைக்காதீர்கள், ஐயா இருக்கும்போதுதான் நான் பேசவேண்டும். தலை (பாபா மாஸ்டர்) இருந்தால்தான் வால்(சாயி வரதராஜன்) ஆடும். தலையில்லாமல் வாலால் தனியாக ஆடமுடியாது என்று விளக்கம் கொடுத்தேன்.
நமது பிரார்த்தனை நிறைவேறவேண்டும் என்ற உண்மையான விருப்பம், தனது பிள்ளை தன் எதிரில் பிறரால் பாராட்டப்படுகிறான் என்ற முழு திருப்தி, நன்றாக வரட்டும் என்ற பரிபூரண மனம் ஆகியவை பாபா மாஸ்டரைத் தவிர வேறு யாருக்கும் வராது. அவர் பக்கத்தில் அமர்ந்து இதை கவனிப்பது என்பது என்னைப் பொறுத்த வரை பாபா என் அருகிலிருந்து கவனிப்பது போன்றது. ஆகவே, அருகிலிருந்த சூழலை மறந்து உற்சாகமாகப் பிரார்த்தனை செய்து கொண்டு வந்தேன்.
எல்லோரும் பிறரது கர்மா தன் மீது விழுந்துவிட்டால் என்ன ஆவது என பயந்து ஓடுவார்கள். ஆனால் நானும் பாபா மாஸ்டரும் அப்படி ஓடமாட்டோம். இறைவன் அழைப்பு பிறர் முன் மரியாதை தேடுவதற்காக தரப்பட்டதல்ல. பிறரது கர்மாக்களை ஏற்றுச்சுமப்பதற்காக.
இதுதான் அடியார்களுக்கு தரப்பட்டது. இதைத்தான் நான் உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்க வந்த ஆட்டுக்குட்டிஎன்றார் இயேசு.
இந்த தேகம் விழத்தான் போகிறது. அது பிறருக்காக விழட்டுமே என்ற நோக்கில் நாங்கள் பிரார்த்தனை செய்ய வந்திருக்கிறோம். தகுதி உள்ளவர்கள் பாரங்களைச் சுமத்தலாம் எனக் கூறினேன்.
ரெட்டியார்பட்டி ஆலயம் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. எதிர்காலத்தில் மிகப்பெரிய பரிகாரத் தலமாக மாறும். இந்த ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தது மிகப் பெரும் பாக்கியம்.
விழா முடிந்தபிறகு அவர்களது குல தெய்வக்கோயில் சென்று தரிசித்தது பாக்கியம். ராதா அம்மா& மாதவன் ஐயா வீடு, வசந்தி அம்மா வீடு ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினோம். கடைசிவரை ஓய்வு எடுக்காமல் களப்பணி செய்த தோத்தாத்திரி, வேண்டாம் என வற்புறுத்தியும் ரயில் நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டுச் சென்றார்.
என்னுடன் எப்போதும் உதவிக்கு வருகிற ஆறுமுகம், ஸ்ரீதரன் ஆகியோர் ஐயாவின் உயர்ந்த குணங்களைப் பற்றி சிலாகித்துப்பேசியபடி வந்தார்கள். இவ்வளவு பெரிய மனிதன் உங்களை, எனது குருஜி என உயர்த்தி பேசுகிறார், வார்த்தைக்கு வார்த்தை உங்களால்தான் உயர்ந்தேன், அருளில் சிறந்தேன், இந்த ஆலயங்கள் ஐயாவின் ஆலயங்கள் எனக் கூறிக்கொள்கிறார். இந்தப் பெருந்தன்மை யாருக்கும் வராது எனப் பாராட்டினார்கள்.
அந்த ஆலயத்தை நிர்வகிக்கும் பக்தர்களை ஐயா தோத்தாத்திரி அறிமுகம் செய்த விதம், ஒவ்வொரு பக்தரும் வரிசையில் இருந்து ஆசி பெற்ற விதம் ஆகியவற்றைப் பாருங்கள், நெல்லை மக்கள் ஒழுக்கத்திற்குப் பெயர் பெற்றவர்கள் என்பதற்குச் சான்றாக நிற்கிறது என்றார்கள்.
என்னுடைய கவனம் எல்லாம் ஆவுடையார் கோயிலில் பிரார்த்தனை செய்தபிறகு ஒன்பது ஆண்டுகளாகக் குழந்தைப் பேறற்ற தம்பதிக்கு குழந்தை உண்டாகியிருப்பதும், ஐந்தாண்டுகளாக உறக்கமில்லாத பெண்மணிக்கு பிரார்த்தனைக்குப் பிறகு உறக்கம் உண்டானதும் போன்ற அற்புதம் இங்கும் நடைபெறவேண்டும். பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அனைவரும் பாபாவின் ஆசிக்கு உரியவர்களாக வேண்டும் என்பதுதான்.
சமீபத்தில் ஒரு தகவல் வந்தது. சாயி வரதராஜனுடன் இருந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வந்த ஒருவரின் பின்னால் இப்போது நிறைய பேர் சென்றுவிட்டார்கள், அவரை தவிர்த்திருக்கக்கூடாது, உனக்கு பத்து சதவீதம் சாயி வரதராஜனுக்கு ஐம்பது சதவீதம் என பிசினஸ் டீல் பேசியிருந்தால் கூட்டம் குறைந்திருக்காதுஎன்று யாரோ சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.
பிரார்த்தனை என்பதும் பக்தி என்பதும் பிசினஸ் என நினைக்கிற காலக்கட்டத்தில் இருக்கிறோம். கூட்டம் சேர்க்கிற நிகழ்ச்சியாக நடக்கிறது.
நாம் நிறைய பேரைப் பார்த்து அனுபவப்பட்டு இருக்கிறோமே! சுவாமி அழைப்பது பிறருக்கு பயன்படுவதற்காக என்பதை உணராமல் பக்தியால் பலன் அடைந்தவர்களை சுயநலவாதிகளாக மாற்றுகிற நிலைதான் வியாபார உடன்பாடு. எனக்கு அதில் விருப்பம் கிடையாது. மனம் போன போக்கில் திரிந்துகொண்டிருக்கிற எனக்கு கூட்டம் எதற்கு? தனியாக கோட்பாடு எதற்கு?
சாயி வரதராஜன் உருவாக்குகிற கோயில்களின் தொடர்ச்சிதான் சாலிகிராமம் பாபா கோயில், ரெட்டியார் பட்டி பாபா கோயில் என தோத்தாத்ரி நினைப்பதும் பேசுவதும் அவருடைய குரு பக்திக்கு அடையாளம். என் மனம் சிறிதும் நோகக் கூடாது என நினைக்கிறார்; இதனால் அவருடைய வம்சம் வாழும். பாபா அவரது பக்கத்தில் இருந்து ஆசிர்வதிப்பார்.
ஸ்ரீ சாயி வரதராஜனின் தாய்வீடு மைலாப்பூர் சாயி பாபா ஆலயம். தங்கராஜ், செல்வராஜ், பேராசிரியர் திருவள்ளுவன், உதிபாபா மாணிக்கம், பாபா மாஸ்டர் அருணாசலம், சிட்லப்பாக்கம் நாகராஜ பாபா,எனது மனம் நிறைந்த தந்தை ஜாலி மோகன் ஆகியோரின் தொடர்ச்சி நான். எனது தொடர்ச்சி தோத்தாத்திரி போன்ற சாயி பக்தர்கள்.
நான், எனது முன்னோடிகளிடம் பிசினஸ் டீல் பேசவில்லை, எனக்குப் பின்னால் வரும் பிள்ளைகளிடமும் பேசமாட்டேன்.
எதற்காக அழைக்கப்பட்டேனோ அதை நிறைவேற்றிக்கொண்டே போகிறேன். வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் என்னைச் சார்ந்த யாவரும் எனது பிள்ளைகள், அவர்களது வாக்குப் பலிதம் ஆகி, பாபாவின் பெயர் ஓங்கும். என் வழியைப் பின்பற்றி தனியாகச் செயல்படும் ஒருவன் எனக்கு எதிரியல்ல, துரோகியும் அல்ல. என்னால் வளர்க்கப்பட்ட ஒன்றை தன் பங்குக்கு வளர்க்கும் என் பங்காளி. ஆகவே, யாராயினும் எனது ஆசிக்கு உரியவர்கள். திக்கெட்டும் சாயி முழக்கம் என்பது தனியொருவனால் சாத்தியப்படாது. இப்படி கிளைகள் விட்டுப் பெருகும்போதுதான் நடைபெறும்.
எனது கிளைகள் இந்த நாட்டை மூடுகிற காலம் நிச்சயம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனது மகள் அஜீதா நாகர் கோயிலில் பாபாவுக்கு இன்னொரு புதிய ஆலயத்தை உருவாக்குகிறாள். விழுப்புரம் விக்கிரவாண்டியில் கோயில் உருவாகிறது.
திருநெல்வேலி கோயில் உருவாகி, பெரிய அளவில் வளரட்டும் என்பதே எனது விருப்பம். இந்த இடத்தில் நிறைய அற்புதங்கள் நடந்து பக்தர்களால் இக்கோயில் பேசப்படும். என் மன விருப்பத்தை சாயிபாபா நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.

ஸ்ரீசாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...