Sunday, May 22, 2016

என்ன பாய்ஜாபாயி! சௌக்கியமாக இருக்கிறாயா.....

அந்தக் காலத்தில் ஷீர்டி ஒரு மிகச்சிறிய கிராமமாகத்தான் இருந்தது. அங்கே ஒரு வேப்பமரத்தடியில் திடீரென்று ஒருநாள் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். பதினாறு அல்லது பதினேழு வயதிருக்கும் என்று தோன்றியது அவனைப் பார்த்தால். கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.
அந்த இளைஞன் முகத்தில் தென்பட்ட சாந்தமும் பொலிவும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதவையாய் இருந்தன. பார்க்கும் அனைவரையும் கட்டி இழுக்கும் இனந்தெரியாத ஓர் ஆன்மிக வசீகரம் அவன் முகத்தில் குடி கொண்டிருந்தது. திடீரெனத் தென்பட்ட அவனைப் பார்க்கவென்றே அங்கே கூட்டம் கூடியது. இளம் வயதிலேயே ஞானிபோல் தோற்றமளிக்கும் இவன் யார்?

கணபதிராவ் கோட்டி படேல் என்பவரையும் அந்த இளைஞனின் வருகை பற்றிய செய்தி எட்டியது. அவர் தன் மனைவி பாய்ஜாபாயோடு அவனைக் காண வந்தார். அவன் தோற்றத்தைப் பார்த்ததும் தாய்மைக் கனிவு நிறைந்த பாய்ஜாபாயின் உள்ளம் உருகியது. என்ன பிள்ளை இவன்! தியானம், தவம் என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறானே? எப்போது சாப்பிட்டானோ என்னவோ? பாவம் பசிக்காதோ? வயிறு வாடும்படி விடலாமோ? உடம்பு என்னத்திற்காகும்?

"
இதோ வருகிறேன்என்று கணவரிடம் சொல்லிலிவிட்டு அவள் விறுவிறுவென்று வீட்டுக்கு ஓடினாள். அவசர அவசரமாக நான்கைந்து சப்பாத்திகளைச் செய்து, தொட்டுக்கொள்ள சட்டினியும் செய்து எடுத்துக் கொண்டாள். அவற்றோடு இளைஞன் இருந்த வேப்ப மரத்தடிக்கு ஓடினாள். அவன் கண்திறக்கும்வரை காத்திருந்தாள்.

""
மகனே! பசிக்காதா உனக்கு? எத்தனை நேரம் இப்படியே சிலைமாதிரி உட்கார்ந்திருப்பாய்? முதலில் இதைச் சாப்பிடு!'' என்று சப்பாத்தியையும் சட்டினியையும் இலையில் வைத்து அவனிடம் கொடுத்தாள்.

இளைஞன் அவளையே பரிவோடு பார்த்தான். ""என்ன பாய்ஜாபாயி! சௌக்கியமாக இருக்கிறாயா?'' என்று ஆதரவோடு விசாரித்தான்! கூட்டம் திக்பிரமித்தது. அவள் பெயர் அவனுக்கு எப்படித் தெரியும்?

""
முதலில் என் அண்ணா சாப்பிடட்டும். பிறகு நான் சாப்பிடுகிறேன்!'' என்ற அவன், ""அண்ணா, வா'' என உரத்துக் குரல் கொடுத்தான். அடுத்த கணம் எங்கிருந்தோ ஒரு பன்றி ஓடிவந்தது. மக்கள் கூடியிருப்பதைப் பார்த்து அது மிரண்டதாகத் தெரியவில்லை. அமைதியாக இரண்டு சப்பாத்திகளைத் தின்றுவிட்டு ஏதோ முக்கியமான வேலை முடிந்ததுபோல் மீண்டும் ஓடிப்போய் மறைந்துவிட்டது.

இளைஞன் நகைத்தவாறே மீதிச் சப்பாத்திகளையும் சட்டினியையும் சாப்பிட்டான். பிறகு, ""பாய்ஜா பாயி! நீ மிக நன்றாகச் சமையல் செய்கிறாய். உன் கணவர் கணபதிராவ் கொடுத்து வைத்தவர்தான்!'' என்றான்!

அதற்குப் பிறகு பற்பல நிகழ்ச்சிகள் மிக வேகமாக நடந்தன. ஒருநாள் கண்டோபா கடவுள் ஒரு அடியவனிடம் "சாமி" பிடித்தது. ஜனங்கள் அவரை, "தெய்வமே இவ்விளைஞனின் தந்தை யார்? அவன் எப்போது வந்தான் என்பதை நீர் தயவுசெய்து விசாரியும்" எனக் கேட்கத் துவங்கினர். அவர் ""இந்த இளைஞன் யார் என நான் அறிவேன். உடனடியாக இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்ப மரத்தடியைத் தோண்டுங்கள்!'' என்றார். எல்லாரும் திகைத்தார்கள்.  இளைஞன் நடப்பதை வேடிக்கை பார்க்க வசதியாகத் தள்ளி அமர்ந்தான். வேப்பமரத்தடி தோண்டப்பட்டது.

அதற்குள், அருகேயிருந்த ஒரு புற்றிலிலிருந்து ராஜநாகம் ஒன்று சடாரென வெளிப்பட்டது. எல்லாரும் பதறிப்போய் தள்ளி நின்றார்கள். இளைஞன் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. ""நாகம்மா, வா வா'' என அன்போடு அவன் அழைத்தான். அவனை ஒரு சுற்றுச் சுற்றி வலம்வந்த அது பின்னர் அவனை நமஸ்கரிப்பதுபோல் தரையில் தலையைத் தட்டி வணங்கி மறுபடியும் புற்றுக்குள்போய் பதுங்கிக் கொண்டது.

மக்கள் தைரியம் பெற்று மீண்டும் வேப்ப மரத்தடியைத் தோண்டலானார்கள். என்ன ஆச்சரியம்! வேப்பமரத்தடியின் கீழ் ஒரு குகை தென்பட்டது. நிலத்தின் அடியே இருந்த அந்தக் குகைக்குள் நான்கு அகல் விளக்குகள் தனித்தனி மாடங்களில் அப்போதுதான் ஏற்றி வைக்கப்பட்டது போல் சுடர்விட்டு எரிந்துகொண் டிருந்தன. புத்தம் புதிதாய்ப் பூத்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தின்மேலே, ஒரு ஜெபமாலை வைக்கப்பட்டிருந்தது. மனோகரமான ஊதுபத்தி நறுமணம் அந்தக் குகை முழுவதிலும் கமகமவெனக் கமழ்ந்து கொண்டிருந்தது.

மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். இதெல்லாம் என்னவென்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கான விளக்கங்களெல்லாம் கட்டாயம் அந்த இளைஞனுக்குத் தெரிந்துதான் இருக்கும். இளைஞனிடமே விளக்கம் கேட்டார்கள்.

அவன் சிரித்தவாறே சொல்லலானான்:

""
இது என் குருவின் சமாதி. முற்பிறவியில் இவர் என் குருநாதராய் இருந்தார். இந்தக் குகையை நீங்கள் எதுவும் செய்யவேண்டாம். அது இருந்தபடியே இருக்கட்டும். மண்போட்டு முன்போலவே மூடிவிடுங்கள். ஆனால் இந்த வேப்ப மரத்தின் வெளியில் விளக்கேற்றி வையுங்கள். வியாழக்கிழமைதோறும் ஊதுவத்தி ஏற்றி வழிபடுங்கள். இந்தச் செயல்கள் காரணமாக இந்த கிராமத்திற்கு மங்கலங்கள் பெருகும். நீங்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ்வீர்கள். நான் சொன்னபடிச் செய்வீர்களா?''

இளைஞனைப் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இருகை கூப்பி வணங்கினார்கள். அவன் என்ன சொன்னாலும் உடனே செய்யவேண்டும் என்றல்லவா மனதில் தோன்றுகிறது? எல்லாரும் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார்கள்.

""
சரி; அவரவர், அவரவர் இல்லம் செல்லுங்கள். நான் இங்கேயே இன்னும் சற்று நேரம் தியானம் செய்யவேண்டும்!''  இளைஞன் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தான். அவனைவிட்டுப் பிரிய மனமில்லாமல் பொதுமக்கள் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இல்லம் நோக்கி நடந்தார்கள். பாய்ஜாபாயி, "இரவில் தன்னந் தனியே இந்தக் குழந்தை இங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கப் போகிறதே? இறைவா! எந்த ஆபத்தும் வராமல் இவனைக் காப்பாற்று' என்று வேண்டிக்கொண்டாள். இறைவனைக் காப்பாற்ற வேண்டுமென்று இறைவனிடமே வேண்டிக்கொள்ளும் அவள் பேதமையை என்னென்பது!

மறுநாள் அதிகாலை இளைஞனை மீண்டும் தரிசிக்கும் ஆவலிலில், எழுந்தவுடன் ஓடோடி வந்தாள் அவள். வேப்ப மரத்தடியை ஆவலோடு பார்த்தாள். இளைஞன் வந்து சென்ற சுவடோ, குகையைத் தோண்டிப் பார்த்து மறுபடி மூடிய சுவடோ எதுவுமே அங்கே இல்லை. புற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட அந்த ராஜநாகம் மட்டும் தலையைத் திருப்பி அவளை ஒரு பார்வை பார்த்து, பின்னர் சடாரென புற்றுக்குள்ளே ஒடுங்கியது.

அதற்குப் பல வருடங்கள் கழிந்த பின்னரே அந்த இளைஞன் ஷீர்டிக்கு மீண்டும் வந்தான். பிறகு அங்கேயே இருந்தான்.

அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ..... ஜெய்.

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...