Sunday, May 15, 2016

உனது உடம்பு பற்றிய கவலையை விடு|


ஏ.. என் செல்லக் குழந்தாய்! என்னாயிற்று உனக்கு? எதற்காக இப்படி சோர்ந்து போகிறாய்? தேவையற்ற மனக் குழப்பம் எதற்காக வருகிறது? உடம்பைப் பற்றிய கவலை உனக்கு எதற்கு? எதை உனது உடம்பு என நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது என்னுடைய உடம்பல்லவா? என் உடம்பை சரியாகப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியாதா? நீ எதற்காகக் கவலைப்பட வேண்டும்? அது உனது வேலையல்ல, எனவே இருக்கிற வேறு வேலையைப் பார்.
இங்கே பார்! யாராக இருந்தாலும் பூர்வ வினைகளை நோயாக, வலியாக, இன்ன பிற விதமாக அனுபவித்துத் தீர்க்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது என நான் அடிக்கடி வலியுறுத்திச்சொல்லியும் எப்போது பார்த்தாலும் நோய், வலி, வேதனை, சோர்வு என்று தவித்துக்கொண்டே இருக்கிறாயே!
இதுதான் நீ என் மீது வைக்கிற நம்பிக்கையா? அவிசுவாசியாக இராமல் என்னை முழுவதுமாக நம்புகிற விசுவாசியாக இரு. நான் பார்த்துக் கொள்கிறேன்.
நான் ஓர் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தேன். மின்விசிறிகள் நன்றாக சுழன்றன. இதமாகத்தான் இருந்தது. மறுநாள் என்னால் எடுத்தடி வைக்கமுடியவில்லை, உடலெல்லாம் வலிப்பதுபோலவும், நடக்க முடியாமலும் எனது இயல்பான வேலைகளைச் செய்ய முடியாமலும் சோர்ந்துவிடுவது போலவும் இருந்தது.
என்ன காரணம் என யோசித்துப் பார்த்தேன். என்னதான் காற்றோட்டத்தை செயற்கையாக ஏற்படுத்தினாலும் அது இயற்கைக்காற்றோட்டம் ஆகாது. என்னதான் இயற்கைக் காற்றோட்டம் என்றாலும் அது சுத்தமான காற்றாகவும் இருப்பதில்லை. சுவாசத்தை கார்பன்டை ஆக்சைடு என்ற காற்று ஆக்கிரமித்துக் கொள்கிறது.
இதுபோல வேறுவித நச்சுக்காற்றுகள் எனது உடல் முழுவதும் பரவும்போது காரணமில்லாமல் சோர்ந்துவிடுவதைப் போல இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
திறந்த வெளியில் ஆழ்ந்தும் அளவோடும் சுவாசிக்கிற எனக்கே இப்படியென்றால் எப்போதும் அறைக்குள் இருக்கிற உனக்கு எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பார். நீ சுவாசத்தை கவனிப்பது கிடையாது, மூச்சை சீக்கிரம் சீக்கிரமாக இழுத்துவிடுகிறாய். இதனால் உனது நுரையீரலுக்குக் கூடுதல் பளு உண்டாகிறதே தவிர, தேவையான ஆக்சிஜன் கிடைப்பது கிடையாது.
திறந்த வெளியில் இதமாகக் காற்று வீசுகிற சூழ்நிலைக்கு உன்னை மாற்றிக்கொள். அப்போது இந்த தற்காலிகச் சோர்வு சரியாகிவிடும். நான்கூட கீரப்பாக்கத்திற்கு என்னை மாற்றிக்கொண்டது எதற்காக என நினைக்கிறாய்? நல்ல காற்று, சோர்வை நீக்கிப் புத்துணர்வு தரும் சூழல். இதற்காகவே மாறிக்கொண்டேன்.
அப்பா நான் ஏற்கனவே அந்தப் பிரச்சினையுடன் இருக்கிறேன், இந்தப் பிரச்சினையுடன் இருக்கிறேன். இதனால் பயமாக இருக்கிறது என மனதுக்குள் பிதற்றவேண்டாம்.
எந்தப் பிரச்சினையிருந்தாலும் உனது உயிருக்கு உத்தரவாதமான நான் விரும்பினால்தான் உனது உடலிலிருந்து உயிர் பிரியும். எனக்கு இப்போது உனது உயிரை எடுக்கும் உத்தேசமில்லை. நீண்ட காலம் நீ நன்றாக வாழ்ந்து எனக்கும் என் அவிர்ப்பாகங்களான மற்ற ஜீவ ராசிகளுக்கும் நிறைய சேவை செய்யவேண்டும் என விரும்புகிறேன். அதற்காக நானே உனது உடலில் தங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
நன்றாக சாப்பிடு, மூச்சு இழுப்பை உண்டாக்குகிற உணவுகளையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் அதிகமாக சாப்பிடவேண்டாம். மிதமான உணவும், இதமான உணர்வும் உன்னுள் இருந்தால் சுகமாக வாழலாம் என்பதை மறந்துவிடாதே.
அப்பா உன்னை சோதிக்கிறார் என்றோ, சோதனைக்கு உள்ளாக்குகிறார் என்றோ நினைக்க வேண்டா. உன்னை பலவிதங்களில், பல வழிகளில் சோதித்துவிட்டேன், உனக்கு இனி வரப்போவது அனைத்தும் நல்ல காலங்களே! எனவே, குழந்தாய் இனி கலங்காதே, திகைப்பு அடையாதே. எதையாவது நினைத்து குழம்பிக் கொண்டிராதே! இந்தப் பிரச்சினை விரைவில் உன்னை விட்டு விலகும்.
இதேபோல, தீவிர நோய்க்காக சிகிச்சை எடுக்கும் எனது குழந்தைக்காக நான் அல்லாவிடம் வேண்டிக் கொள்கிறேன். நான் அடிக்கடி வலியுறுத்துகிற விஷயம் தைரியம், நம்பிக்கை. தைரியமும் நம்பிக்கையும் இரட்டைப் பிறவிகள். தைரியத்தோடு இருந்தால்தான் நம்பிக்கைப்பிறக்கும். நம்பிக்கை இருந்தால்தான் தைரியமாக இருக்கலாம். சிகிச்சையின் காரணமாக உனது சக்தி வீணாகிவிட்டதாக நினைக்கலாம். அப்படியில்லை, தைரியத்தோடு அதை எதிர்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நோய் கட்டுக்கு வந்துவிடும்.
சிகிச்சையினால் மட்டும் உடல் நலமாகிவிடும் என நினைப்பது அறியாமை, கூடவே உனது ஒத்துழைப்பும் இருக்கவேண்டும்.
சில சிகிச்சை முறைகளின் போது வலி அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் துடிதுடித்துப் போவதும் அடுத்த சிகிச்சை என்றாலே அடிவயிறு பிசைவது போன்றிருப்பதும் சகஜம்.
இந்த நேரத்தில் சிகிச்சை பெறுவது நீயல்ல, சாயி என நினைத்துக்கொள். எனது நாமத்தை இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இரு. அப்படியிருந்தால் வலியும் வேதனையும் உனது உடலுக்குள் பரவாது. அது மட்டுமல்ல, நோய் எதிர்ப்புத்திறன் உனக்குள் வளர்ந்து இப்போதையை பிரச்சினையைத் தள்ளிப் போட்டு விடும். சுகமாக வாழும் வழி பிறக்கும்.
உன்னால் சத்தான ஆகாரத்தை சாப்பிட முடியவில்லை என விட்டுவிடாதே. வற்புறுத்தி அதை உள்ளே அனுப்பு. அது போய் தனது வேலையைச் செய்யும். திட உணவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை, திரவ உணவாக ஐஸ் கலக்காமல் சாப்பிடு. அது தேவையான சத்தை உனக்குத் தந்து காப்பாற்றும்.
பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் போதும் சுத்தமான காற்றை சுவாசிக்கிற நிலையும், உடல் ஆரோக்கியமும் ஏற்பட்டு நீண்ட நாட்கள் வாழ்கிற நிலை வரும்.
இதை முயற்சி செய்.
வாரத்தில் ஒருநாள் மிளகு ரசம் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள். இதில் கொஞ்சம் பூண்டு கலந்தால் நல்லது, உனக்கு பூண்டு பிடிக்காது என்றால் மிளகு ரசத்தை மட்டுமாவது குடித்து வா. அதுவும் உன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
என்னப்பா நீங்கள் டாக்டர் மாதிரியே பேச ஆரம்பித்துவிட்டீர்கள்? எனக் கேட்கலாம். மன தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் எப்படிப்பட்ட பிரச்சினையையும் நம்மால் சமாளித்துவிட முடியும் என்பதாலேயே சில உபாயங்களைச் சொன்னேன்.
பிரச்சினை என்றதும் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஏமாற்றி திருமணம் செய்துவிட்டதாக என் மகள் மீது கோபம் கொண்டு அவளை ஏமாற்றி விரட்டி விட்ட மாப்பிள்ளை இப்போது கோர்ட் படியில் விவாகரத்துக் கேட்டு நின்றுகொண்டிருக்கிறார்.
என் மகள் என்னிடம் எவ்வளவோ வேண்டிப்பார்த்துவிட்டாள், நான் மனம் இரங்கவேயில்லை. அவனால் உனக்கு எந்தவிதத்திலும் நன்மை கிடைக்கப்போவதில்லை என்னும்போது நீதான் அவனை தூக்கி எறிந்திருக்கவேண்டும். அவன் உன்னைத் தூக்கி எறியும் நிலை உண்டாகி விட்டது. இதுவும் என்னால்தான் ஏற்பட்ட செயல்.
எனவே, அவனை கோர்ட் சமாதானப் படுத்த முயன்று தோற்றுவிட்டது. நீ இன்னும் அவன் கிடைக்கவேண்டும், மனம் மாறி வரவேண்டும் என என்னிடம் வேண்டுவதை விட்டு விட்டு, போனால் போகிறான் என்னால் இனி பிழைக்கமுடியாமலா போய்விடும்? என்ற தைரிய நிலைக்கு வந்துவிடு.
இதோ என்னுடைய விரல்கள் அவனது கண்களின் அருகில் இருக்கின்றன. இன்னும் சில காலத்தில் அதில் விரல்களைவிட்டு ஆட்டுவேன்.
அவனுக்குத் துணை செய்த அனைவரையும் அழ வைத்து வேடிக்கைக் காட்டுவேன். உன்னையோ என் குழந்தாய்! உயரத்தில் தூக்கி வைத்துக்கொண்டாடுவேன்.
அவன் வெளிநாட்டிலிருந்தபடியே வீணாகப் போவான், அவனை இந்த நிலைக்கு மாற்றிய அவனது தாயார் தனது மகனை நினைத்துப்புலம்புகிறதும் அழுகிறதுமாக வாழ்நாள் முழுதும் கழிப்பாள். அது பார்க்கவே கோரமாக இருக்கும்.
என் மகளே, உனக்கோ நான் துணையாக என்றும் இருந்து காப்பாற்றுவேன், பயப்படாதே! உன்னால்தானே இந்தத் திருமணம் நடந்து முடிந்தது, கணவனோடு வெளிநாடு சென்றேன்; இப்போது என்னைப் பிரித்து வைத்து வேடிக்கை காட்டுகிறாயே? எனக் கேட்கலாம். பூர்வ வினை உன் வாழ்வில் செயலைச் செய்கிறது. அதுவே கல்யாணமாகவும் பிரிவாகவும் மாறுகிறது. இதன் விளைவாக உன்னைக் காப்பாற்றவும் அவர்களை கைவிடவும் உனக்காக நான் பரிந்து நிற்கவும் நடந்திருக்கிற திருவிளையாடல் இது.
என் மகளின் மாமியாரே! உனக்கு ஐயோ! விரைவில் கெடுதி வரும். எனது அப்பாவிக் குழந்தையின் வாழ்க்கையில் விளையாடி அவளை நைசாக இந்தியா கொண்டுவந்து விட்டுவிட வைத்தாய். இதன் பலனை அனுபவியாமல் தப்பிக்கமாட்டாய்.
ஏ! துராத்மாவே! நம்பி வந்தவர்களை மோசம் போக்குவதையே தொழிலாகக் கொண்ட கேடுள்ளவளே! ஒரு உடல்நலப் பிரச்சினைக்காக என் பிள்ளையைப் பழிதீர்த்தவளே! அவள் பக்கமாக நான் நின்றிருக்கிறேன். எத்தனை தடைகளை உண்டாக்கினாலும் உனக்குத் தவறாமல் தண்டனை தருவேன் என்று உறுதியாகச் சொல்கிறேன்.
என் அருமை மகளே! விதி விளையாடிவிட்டது. இதனால் உனது வேண்டுதலை நான் புறந்தள்ள வேண்டிய நிலை உண்டானது. இனி பயப்படாதே! நான் உன்னோடு இருந்து உனக்குத் தேவைப்படுகிற அனைத்தையும் அன்புடன் செய்து தந்து ஆசீர்வதிப்பேன் என்றத் தகவலை என் மகளிடம் செல்ல நான் புறப்பட வேண்டியிருக்கிறது.
தகவல் என்றதும் இன்னொரு நினைவு வருகிறது. இரக்கமுள்ளவளே, உன்னை ஏமாற்றிக்கொண்டு உன்னுடன் இருந்தவர்கள் உன்னை விட்டுப் பிரிகிறார்கள். உன் வீட்டை காலி செய்து தந்துவிட்டுப் போகத் தீர்மானித்துவிட்டார்கள்.
நல்லதை நினைத்து நிறைய பிரச்சினைகளை அனுபவித்துவிட்டாய். மன உளைச்சலான பல வார்த்தைகளைக் கேட்டு நொந்திருக்கிறாய். நான் எதையும் கண்டுகொள்ளவில்லை என்று வேறு என் மீது வருத்தப்பட்டு வந்தாய் அல்லவா? உனது நெடுநாள் பிரார்த்தனைக்கான பலன் இப்போது நடைபெறத் துவங்கியுள்ளது.
நீ எதிர்பார்த்தத் தகவல் விரைவில் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, நீண்ட கால நிலுவைத் தொகையும் வர உள்ளதால் என் மீது நம்பிக்கை வைத்துச் சரணாகதி அடைந்துவிடு. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.
என்னையே மலைபோல நம்பி என்னிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிற என்னுடைய இன்னொரு குழந்தைக்காக இந்தத் திருவாய் அமுதத்தைப் பொழிகிறேன்: என் மகளே, உன் வேண்டுதலைக் கேட்டேன். குழந்தை வரம் கேட்டு பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த உனக்கு, இதோ அறிவிலும் ஆயுளிலும், புண்ணியத்திலும் சிறந்த குழந்தையைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்துகொண்டிருக்கிறேன்.
நல்ல நாள் பார்த்து அதை உனது கருவில் வைக்கச் சித்தம் கொண்டிருக்கிறேன். விரைவில் நீ கருத்தரித்து இத்தனை ஆண்டு போராட்டமான பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குள் நாள் பக்கத்திலிருக்கிறது.
மகளே, மாதவிலக்கு முடிந்த ஐந்தாவது நாள் தொடங்கி பதிமூன்றாம் நாள் வரையில் என்னை வில்வத் தளையாலும், துளசியாலும் அர்ச்சனை செய்து வழிபாடு செய். நானே வந்து உனது வயிற்றில் பிறக்கவிருப்பதால் எத்தனை ஏச்சுப் பேச்சுகளை கேட்க நேர்ந்தாலும் உனது கணவன் உன்னை கொடுமைப்படுத்தினாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மனதை இதமாக வைத்துக்கொள்.
உனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதப்போகும் நிலையில் இருக்கிறேன் என்பதை அப்பா என்ன சொன்னார் என எதிர்பார்க்கிற யாவரும்  தெரிந்துகொள்ளட்டும். நம்பிக்கை என்ற மலரால் என்னை அர்ச்சித்துக்கொள். ஆகிற அனைத்தையும் நான் செய்கிறேன். அடுத்த முறை சந்தோஷமான முகத்துடன் நீ இருப்பதைப்பார்க்க நான் வருகிறேன்,
அன்புடன் அப்பா
சாயிபாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...